“இனி என்ன ஆசை? அதுதான் ஏற்கனவே வந்தாச்சே.” அபர்ணா கூலாகச் சொல்ல,

“என்ன டி சொல்ற?” எனப் பதறி அடித்து எழுந்து உட்கார்ந்தான்.

“ஆமாம், எனக்குப் பிரியட்ஸ் எப்பவும் மூன்னு நாள் முன்னாடியே வரும். இந்தத் தடவை அதுக்கும் மேல பத்து நாள் ஆச்சு. இன்னும் வரவே இல்லை.”

“அபர்ணா, உனக்கு நல்லா தெரியுமா? ஆசை காட்டி ஏமத்தாத டி.” ராமிற்கு அப்படி ஒரு சந்தோஷம், இல்லையென்றால் அவனால் தாங்க முடியாது.

“அதுக்கு ஒரு வழி இருக்கு.” என்றவள், வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை எடுத்து வந்து காட்டினாள்.

“ஏற்கனவே பார்த்திட்டியா?”

“இல்லை, உங்களோட சேர்ந்து பார்க்கனும்ன்னு இன்னும் பார்க்கலை.”

“இப்ப பார்க்கலாமா?”

‘இல்லை காலையில தூங்கி எழுந்ததும் பார்ப்போம்.”

“எனக்கு அதுவரை தூக்கமே வராதே.”

“காலையில பார்த்தா தான் கரெக்டா தெரியும். பேசாம படுங்க.”
அவள் அருகில் படுத்து அனைத்துக் கொண்டவன், “ஏன் இத்தனை நாள் சொல்லலை?” என அவள் முகம் பார்த்தான்.

“சொல்ற மாதிரியா இந்த வீட்டோட நிலைமை இருந்துச்சு? நீங்க அத்தையைப் பார்ப்பீங்களா? இல்ல என்னைப் பார்ப்பீங்களா?”அவள் சொல்வது உண்மை தான்.

“உங்க அம்மாகிட்ட சொன்னியா?”

“எனக்கு உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும். அதனால யார்கிட்டயும் சொல்லலை.”

மனைவியின் அந்தப் பதிலில், அவள் தன் மீது வைத்திருக்கும் காதல் புரிய, அவள் நெற்றியில் இதமாக இதழ் ஒற்றினான்.

“நமக்கு என்ன பேபி டி பிறக்கும்?”

“ம்ம்.. அனேகமா புலிக் குட்டியோ… சிங்க குட்டியோ தான் பிறக்கும். அந்தக் காட்டில தான உருவாச்சு. நான் வேற எப்பவும் அதை நினைச்சிதான் பயந்திட்டு இருப்பேன்.”

அபர்ணா சொன்ன பதிலை கேட்டு ராம் மனம் விட்டுச் சிரித்தான். “நீ அந்தக் காட்டை மட்டும் மறக்க மாட்ட இல்ல.”

“பொண்ணுனா புலிக் குட்டி, பையன்னா சிங்க குட்டி ஓகே வா…” அபர்ணா கேட்க,

“ஹே… அதை விடு டி லூசு, உன்னை மாதிரி அழகா ஒரு பொண்ணு பிறக்கும் பாரு.” என்றான்.

“எனக்கும் பொண்ணு தான் பிடிக்கும். நிறைய ஷாப்பிங் பண்ணலாம். ஆனா உங்களை மாதிரி பையன் பிறந்தாலும் ஓகே தான். உங்க அம்மாவுக்காக நீங்க எப்படி அழுதீங்க. என்னால அதை மறக்கவே முடியாது.”

“அவங்க ரொம்பக் கஷ்ட்டபட்டுடாங்க அபர்ணா… அதுதான் அவங்களுக்கு மேலும் கஷ்ட்டம் வரும் போது, தாங்கவே முடியலை.”

“விடுங்க, இனிமே அவங்களை ஹப்பியா வச்சுக்கலாம்.”

“அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு அபர்ணா. இந்த வீட்டுக்கு அபர்ணாவை விட வேற யாரும் நல்ல மருமகள் வந்திருக்க முடியாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்க.”

“அப்படியா?” எனக் கேட்டவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

இருவரும் பேசி பேசியே பொழுதை கழித்து விட்டு, தாமதமாகத்தான் உறங்கினார்கள். இருந்தாலும், ராம் மனதில் குழந்தையைப் பற்றியே எண்ணம் இருக்க… காலையிலேயே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.

அவன் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வந்தவன், அபர்ணாவை எழுப்பிக் குளியல் அறை அனுப்பினான். அவள் சிறிது நேரம் சென்று குரல் கொடுக்க, அங்கே ஆவலாகச் சென்றான்.

அப்போது தான் கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தில் ஒரு கோடு விழுந்து, அடுத்தக் கோடு விழ ஆரம்பித்தது.

“ஹே…” என அபர்ணா குதிக்க.

“குதிக்காத டி.” என்றவன், மகிழ்ச்சியில் அவளைக் கட்டிக் கொண்டான்.
இருவருக்கும் சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. திரும்ப அறைக்குள் வந்து உட்கார்ந்து கொண்டனர்.

“நீ போய் அம்மாகிட்ட சொல்றியா?”

“என்னால முடியாது, எனக்கு வெட்கமா இருக்கு?”

இப்படியே இருவரும் பேசி பேசியே நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தனர்.

பிறகு குளித்து விட்டு இருவரும் சேர்ந்தே கீழே இறங்கி வந்தனர். ஹாலில் கார்த்திக்கும் அகிலாவும் அலுவலகம் செல்ல தயாராக இருந்தனர். ஸ்வர்ணா டைனிங் ஹாலில் உட்கார்ந்து இருந்தார்.

“என்ன ரெண்டு பேர் முகத்திலேயும் பல்பு எரியுது.” கார்த்திக் கேட்க,

“அம்மா வீட்ல ஸ்வீட் இருக்கா?” என ராம் கேட்டான்.

“எதோ ஸ்வீட்டான விஷயம் சொல்லப்போறியா?” கார்த்திக் சொன்னதும், எல்லோரும் அவனை ஆவலாகப் பார்த்தனர்.

“அம்மா, உங்களை இனி எப்பவும் பிஸியா வச்சுக்க, நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி வாண்டு வரப் போகுது.” என ராம் சொல்ல… ஸ்வர்ணாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

“நான் எதிர்பார்த்தேன். நான் நினைச்சதையே நீ சொல்லிட்ட” என்றவர், சமையல் அறைக்குச் சென்று சக்கரை கொண்டு வந்து, இருவர் வாயிலும் போட்டார்.

கார்த்திக்கு புரியவில்லை… அகிலா அவனிடம் மெதுவாக விஷயத்தைச் சொல்ல…

“ஹே…. குட்டீஸ் வரப் போகுதா.” என்றவன் ராம்மை சந்தோஷமாக அனைத்துக் கொள்ள, அகிலா அபர்ணாவை அனைத்து வாழ்த்து சொன்னாள். ரொம்ப நெகிழ்ச்சியான தருணம் அது.

“நாம இதைக் கொண்டாடனும்.” கார்த்திக் சொல்ல, “கண்டிப்பா.” என்றான் ராம்.

வெளியே போகலாம்?” என இருவரும் திட்டமிட…

“அதெல்லாம் இந்த நேரத்தில அலையக் கூடாது. வெளியேவும் சாப்பிட கூடாது. மதியத்துக்கு நான் விருந்து சமைச்சு வைக்கிறேன். எல்லோரும் வீட்லயே கொண்டாடுவோம்.” என்றார் ஸ்வர்ணா.

கார்த்திக்கும் அகிலாவும் மதியம் வந்துவிடுவதாகச் சொல்லி அலுவலகம் சென்றனர்.

ராம்மும் அபர்ணாவும் சாப்பிட அமர, அபர்ணா வழக்கம் போல மூன்று இட்லி உண்டுவிட்டு எழுந்து கொள்ள, “நீ உட்காரு, உன் டயட் எல்லாம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வச்சுக்கோ. நீ இவ்வளவு கொஞ்சமா சாப்பிட்டா, வயித்துப் பிள்ளைக்கு எப்படிப் பத்தும்.” என்றவர், மேலும் இரண்டு இட்லிகளை, அவள் தட்டில் வைத்தார். அபர்ணாவும் மறுக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டாள்.

“நீ அபர்ணாவை கூடிட்டு போய் அவங்க வீட்ல போய் விஷயத்தைச் சொல்லிட்டு, அப்படியே அவங்க அம்மாவையும் அழைச்சிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடுங்க. நான் சமையல் ரெடி பண்றேன்.”

“நீங்க எப்படி மா தனியா பண்ணுவீங்க? உடம்புக்கு எதாவது இழுத்து விட்டுக்காதீங்க.” ராம் பயப்பட….

“நானா செய்யப்போறேன். அதுதான் ஆளுங்க இருக்காங்க இல்ல… அவங்களை வச்சுப் பார்த்துகிறேன். நீங்க சீக்கிரம் போயிட்டு வாங்க. அப்படியே அபர்ணா வீட்லயும் மதிய சாப்பாடுக்கு வர சொல்லிடு.”

ஸ்வர்ணாவிடம் இப்போது ஒரு ஆளுமை வந்திருக்க, அதை ஒடுக்க வேண்டாம் என நினைத்த அபர்ணா, “அவங்க விருப்பபடி விடுங்க” என்றாள் ராம்மிடம்.

இருவரும் காலையிலேயே சேர்ந்து வந்து நிற்க, சுகன்யாவுக்கு ஆச்சர்யம். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

“உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்தோம்.” ராம் சொல்ல, சுகன்யா மகளைப் பார்த்தார்.

“நீங்க பாட்டியாகப் போறீங்க. இனிமே கொஞ்சம் மேக் அப் எல்லாம் கம்மி பண்ணிக்கோங்க.” என்றால் அபர்ணா சிரித்தபடி.

“எனக்குத் தெரியும், நீ என்கிட்டே ஒரு வாரமா சரியா பேசலை… அப்பவே எனக்குச் சந்தேகம்.” என்றார் சுகன்யா மகிழ்ச்சியாக.

அபர்ணா எழுந்து அவரைக் கட்டிக் கொண்டாள். “சாரி மா, நீங்க கேட்டு என்னால இல்லைன்னு சொல்ல முடியாது. அதுதான் பேசலை. ராம்கிட்ட நேத்து நைட் தான் சொன்னேன்.”

“எனக்குப் புரியும் அபர்ணா, எல்லோருக்கும் அவங்க புருஷன்கிட்டே தான் முதல்ல சொல்லனும்ன்னு இருக்கும். நீ பீல் பண்ணாத. உங்க அப்பா ரொம்பக் குஷி ஆகிடுவார். இனி அவரைக் கையில பிடிக்க முடியாது. அவர்கிட்ட வீட்டுக்கு வந்ததும்தான் சொல்லணும்.”

ராம் அவரிடம் ஸ்வர்ணா அவர்களை வீட்டிற்கு அழைத்ததைச் சொல்ல, சுகன்யா ஸ்ரீகாந்திடம் ,மதியம் சாப்பிட அபர்ணா வீட்டிற்கு வந்துவிடும் படி மட்டும் சொன்னார். அங்கே வைத்து நேரில் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தார்.

மூவருமாக மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவர் சோதித்துப் பார்த்து விட்டுக் கர்ப்பத்தை உறுதி செய்தார். வழக்கமாகக் கொடுக்கும் எல்லா ஆலோசனைகளையும் கொடுத்து அனுப்பினார். பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

ஸ்வர்ணா வந்து சுகன்யாவை வரவேற்றவர், களைப்பாக இருந்த அபர்ணாவிடம் பழசாறு கொடுத்துக் குடிக்கச் செய்து, “இனிமே பகல்ல நீ கீழ இருக்கிற ரூம்லயே இரு. நைட் மட்டும் படுக்க மாடிக்கு போ.” என்றவர், “இப்ப போய்க் கொஞ்ச நேரம் படு.” என்றார்.

சுகன்யாவும் ஸ்வர்ணாவும் பேசிக் கொண்டு இருக்க, அபர்ணாவும் ராம்மும் அறையில் ஓய்வு எடுத்தனர். மதியம் எல்லோரும் சேர்ந்து உணவு அருந்தினர்.

அபர்ணாவின் தந்தைக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அவருக்கு அபர்ணாவே குழந்தையாகத் தெரிவாள், அவளுக்கு ஒரு குழந்தை என்றதும், அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

வீட்டிற்குக் கிளம்பும் சமயம், “நாங்க அபர்ணாவை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய்ப் பார்த்துக்கடுமா. இந்த நேரம் ரெஸ்ட் எடுக்கனுமே.” என அவர் ஸ்வர்ணாவை கேட்க,

“இங்க மட்டும் நான் வேலையா பா பண்ண போறேன். நான் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்.” என்றாள் அபர்ணா.

இப்போதுதான் ஸ்வர்ணா சரி ஆகிக்கொண்டு இருக்கிறார், இப்போது அவரை விட்டு செல்ல வேண்டாமே என நினைத்துதான் அப்படிச் சொன்னாள்.

“அவளுக்குத் தெரியும், பார்த்துப்பா வாங்க.” எனச் சுகன்யா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்றார்.

புது வரவு அந்த வீட்டிற்குள் வருவதற்குள்ளேயே நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்னும் வந்துவிட்டால்…