“பிரச்சனை நாம நினைச்ச அளவுக்கு சின்னது இல்லை போலயே?” என்றவளின் முகம் விளையாட்டுத் தனத்தில் இருந்து சட்டென்று மாறியிருந்தது. அதுவரை ஏதோ சிறு பிரச்சனை என்று எண்ணியிருந்தவள், அப்போது தான் நிலைமையை கவனித்தாள்.
“என்னாச்சு ராஜ குரு, சட்டுன்னு டெரரா மாறிட்டிங்க” என்றான் புரியாமல்.
“உன்னால கேட்டு சொல்ல முடியுமா முடியாதா?” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதற்கு அவசியமே இல்லை என்பதைப் போல் ஒலித்தது வசந்தியின் அக்கா குரல்.
“இப்ப நானே சொல்றேங்க, இந்த கல்யாணம் நடக்காது. வாயும் பேசாது, காதும் கேட்காது, இப்படி ஒரு பையனை வச்சிருக்க உங்களுக்கே இவ்வளவு தெனாவெட்டு இருக்கும் போது, என் பொண்ணுக்கு என்னங்க குறை? இன்னைக்கு சரின்னாலும் மாப்பிள்ளைங்க கியூல நிப்பாங்க” என்றவரின் குரல் ஓங்கி ஒலிக்க, அப்போது தான் தாராவிற்கு விஷயம் புரிந்தது.
அவரை சொடக்கிட்டு அழைத்தவள்,
“கல்யாணத்தை நிறுத்துறிங்கன்னா அதை மட்டும் பேசுங்க. இன்னொரு தடவை அகனோட குறையைப் பத்தி ஏதாவது பேசுனிங்க, கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன், ஜாக்கிரதை” என்று எச்சரித்தாள்.
“தாரா சும்மா இரு. நீ உள்ள போ முதல்ல” என்றார் வேணி.
“அம்மா அவங்க அகனைப் பத்தி இப்படி கமான்ட் பாஸ் பண்றாங்க. அதைக் கேட்டுட்டு சும்மா இருக்க சொல்றிங்களா?” என்றாள் கோபமாய்.
“அவன் என் பிரண்ட். அவனைச் சொன்னா எனக்கு கண்டிப்பா எறியும். அதுக்கு இப்போ என்னாங்குறிங்க?” என்றாள்.
“தாரா உன்னை உள்ள போகச் சொன்னேன்” என்று வேணியின் குரல் உயர அவரை முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.
“கார்த்திகா கிளம்பு, இந்த மட்டும் உன்னோட வாழ்க்கை தப்பிச்சதே பெரிய விஷயம். உங்க சித்தி இருக்கா நல்லா பார்த்துப்பான்னு வந்ததுக்கு அவளால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டா” என்றார்.
“அக்கா நான் என்ன பண்ணேன். நான் தான் ஆரம்பத்துலையே வேண்டாம்னு தான சொன்னேன். நீ தான் கேட்கலை. இப்போ குத்துதே குடையுதேன்னா நான் என்ன பண்ண முடியும்?” என்றார் வசந்தி.
“என்ன பெரியம்மா இதெல்லாம்” என்ற பூமிநாதன் கூட கலங்கி நின்றார்.
“வயசான காலத்துல இதையெல்லாம் பார்க்கனும்னு இருக்கு பூமி. இனி என்ன நடக்கும்? எப்பவும் போல கிளம்பி ஆஸ்திரேலியா போய்டுவான். இனி எத்தனை வருஷம் கழிச்சு வருவானோ? இல்லை வராம அங்கயே இருந்திடுவானோ? தெரியலை” என்றவர் வேதனையுடன் அமர, பூமிநாதனுக்கு பாவமாய் இருந்தது.
அறைக்குள் சென்ற தாராவோ, ஜாடியை அவன் கீழே போட்டு உடைக்கும் போது அவன் கண்களில் தெரிந்த வேதனையைத் தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.
அன்று இரவிற்குள் திருமணம் நின்ற செய்தி பரவலாக பரவியிருக்க, அதிலும் அகன் ஒரு பைத்தியக்காரன் என்றும் அதை மறைத்து அவர்கள் தங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர் என்றும் வசந்தியின் அக்கா சொந்த பந்தங்களிடம் சொல்லியிருக்க, அகன் பைத்தியம் என்றே முடிவு செய்து விட்டனர் அனைவரும்.
அலங்கார விளக்குகள் மட்டும் ஜொலிக்க, உள்ளிருந்தவர்கள் அனைவரும் வேதனையுடன் இருந்தனர்.
“அப்போ அண்ணாக்கு கல்யாணம் நடக்காதாம்மா?” என்று இனியா ரேவதியிடம் கேட்க,
“அமைதியா இரு இனியா” என்று அதட்டியிருந்தார் ரேவதி.
அறைக்குள் சென்ற அகனோ வெளியே வரவேயில்லை.
பூமிநாதனும் வேணியும் தோட்டத்தில் அமர்ந்திருக்க, அவர்களிடத்தில் வந்த தாரா, தந்தையின் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்.
“என்னாச்சுடா?” என்றார் பூமி.
“அகனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் டாடி. இந்த கார்த்திகா என்ன பொண்ணு டாடி, அவங்க அம்மா சொன்ன உடனே ஒரு வார்த்தை கூட வாயைத் திறந்து பேசாம அவங்க பின்னாடியே போயிட்டாளே” என்று குமைந்தாள்.
“விடுடா நாம பேசி என்னாகப் போகுது?” என்றார். பேசிக் கொண்டிருந்தவர் தன் சட்டையில் ஈரம் படருவதைப் பார்த்து அதிர்ந்தவர்,
“தாராம்மா..!” என்றார்.
“என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை டாடி. அகன் இப்படி இருந்தா எனக்கு என்னமோ மாதிரி பீல் ஆகுது. எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா அவன்கிட்ட போய் ஆறுதல் சொல்லச் சொல்லி மனசு பரபரக்குது. போகவா டாடி?” என்றாள் கலங்கிய விழிகளுடன்.
பூமிநாதன் தவிப்புடன் மனைவியைப் பார்க்க, மகளின் வார்த்தையில் வேணியோ எதுவும் சொல்லத் தோன்றாமல் இருந்தார்.
“ஆறுதல் இப்போதைக்கு மட்டும் சொல்லத் தோணுதா? இல்லை ஆயுசுக்கும் சொல்லத் தோணுதா தாரா?” என்றார்.
“அப்பா” என்று அதிர்ந்து அவர் முகம் பார்த்தாள் தாரா.
“இல்லை, இப்போ இந்த ஆறுதல் பரிதாபத்துல வந்ததா? இல்லை பாசத்துல வந்ததான்னு தெரியனுமில்லம்மா. இப்போ தெரியாத குறைகள் எல்லாம் வாழ்க்கையில பின்னாடி பெருசா தெரிய வாய்ப்பிருக்கும்மா. எங்களுக்கு இருக்குறது ஒரே பொண்ணு. வரம் இருந்து தவம் இருந்து பெத்த பொண்ணு. அவளுக்கு எல்லாத்தையும் சரியா பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறதுல தப்பில்லையே?” என்றார்.
“அப்பா” என்றவளுக்கு பேச்சே வரவில்லை. அவரின் வார்த்தைகளை மறுத்துப் பேசியும் அவளுக்கு வழக்கமில்லை.
அமைதியாய் இருந்தவளின் முகம் திருப்பியவர்,
“எங்க ஆசை முக்கியம் தான், ஆனா அதுக்கு மேல எங்க பொண்ணோட விருப்பம் தான் எங்க விருப்பமும். உன்னால சமாளிக்க முடியும்னா, உன்னால முழு மனசா இந்த உறவை ஏத்துக்க முடியும்னா எங்களுக்கும் ஓகே தாம்மா” என்றார் பூமிநாதன் தெளிவாய்.
“டாடி” என்று அவர் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டவள் அழுது தீர்த்தாள்.
“என் பொண்ணுக்கு இப்படியெல்லாம் அழுகத் தெரியும்னே எங்களுக்கு இன்னைக்குத்தான் தெரியும். இல்லையா வேணி. எப்பவும் மத்தவங்களைத் தான அழ வைப்பா? இன்னைக்கு என்ன புதுசா?” என்றார்.