வசந்தியை உறுத்து விழித்தவன், நேராக லட்சுமியின் அறைக்குள் செல்ல, தாய்மாமன்கள் இருவரும் அங்கிருக்க, வசந்தி சொல்வதில் உண்மை இருப்பதைப் போன்றே அகனுக்கும் தோன்றியது. வசந்திக்கும் அது தானே வேண்டும். அதனால் தானே சமயம் பார்த்து அவனிடம் விஷயத்தை கூறியிருந்தார்.

கார்த்திகாவின் பெற்றோரும் இருக்க, யாரையும் சட்டை செய்யாமல் லட்சுமிக்கு எதிரே வந்து கால்மேல் கால் போட்டு அமர்ந்தான். அவன் அமர்ந்த தோரணையில் கார்த்திகாவின் பெற்றோர் வாயைப் பிளக்க, தாய்மாமன்களோ அவனின் ஆளுமையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அகனின் பார்வை சந்தான லட்சுமியைத் துளைக்க, அவன் பார்வையில் அவன் கேள்வி உணர்ந்தவர்,

“கார்த்தி அது வந்துப்பா.. அகல்யாவுக்கு சேர வேண்டியதை மட்டும் தான் உன் பேருக்கு மாத்துறோம்” என்றார் மெதுவான குரலில்.

“அதுக்கு இப்போ என்ன அவசியமும் அவசரமும் வந்தது?”  என்று அவன் சைகையில் கேட்க,

“குடுக்கனும்னு முடிவானப் பிறகு எப்ப குடுத்தா என்னப்பா?” என்ற லட்சுமி மறந்தும் கார்த்திகா பெற்றோரின் நிபந்தனையை சொல்லவில்லை.

ஆனால் அவர்கள் அங்கு இருப்பதை வைத்து இரண்டும் இரண்டும் நான்கு என்று புரிந்து கொள்வதில் அவனுக்கு அவ்வளவு சிரமம் இருக்கவில்லை.

அவன் பார்வையில் இருந்த அழுத்தத்தில், அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மகிமாவுக்கு திகில் பரவியது.

“என்ன பார்வைடா சாமி!” என்ற மகிமா நகுலனை ஒண்டிக் கொண்டாள்.

வக்கீலின் முன் இருந்த பத்திரத்தை எடுத்து சுக்கு நூறாக கிழித்திருந்தான் அகன் கார்த்திகேயன். அவன் கிழித்த வேகத்திலேயே அவன் கோபம் தெரிய, மற்றவர்கள் வாயடைத்து நின்றனர்.

“எனக்கு யாரோட சொத்தும் தேவையில்லை. அப்படி சொத்தை எழுதிக் குடுத்தா தான் இந்த கல்யாணம் நடக்கும்னா அப்படி ஒரு கல்யாணம் எனக்குத் தேவையே இல்லை. இதை விட நீங்க என்னை அவமானப்படுத்தவே முடியாது பாட்டி. இந்த அகன் அந்த அளவுக்கு தரம் குறைஞ்சு போகலை. ஸ்டாப் த மேரேஜ்” என்று வேகமாய் எழுதிய பேப்பரை அங்கு வைத்தவன், அடுத்த நிமிடம் வேகமாய் அறையை விட்டுச் சென்றிருந்தான்.

கார்த்திகாவின் பெற்றோர் தான் அதிர்ச்சியாகி நின்றனர்.

“இவன் என்ன லூசா? வழிய வர்ற சான்சை வேண்டாம்னு சொல்லிட்டு போறான்?” என்று மகிமா கூட மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த அனைவரின் மனநிலையும் ஒரே மாதிரி தான் இருந்தது. அதிலும் பரமேஸ்வரி ஒரு படி மேலே போய்,

“என்னடி சுகந்தி? இவனுக்கு பைத்தியம் எதுவும் பிடிச்சிருக்கா என்ன? எந்த கேனைப் பயலாவது இப்படி வழிய வர்ற சொத்தை வேண்டாம்னு சொல்லுவானா? இவன் என்னடி இப்படி கூறு கெட்டவனா இருக்கான்?” என்று அலம்பாவித் தவித்தார்.

“எப்படியோ நான் நினைச்ச மாதிரியே வேண்டாம்னு சொல்லிட்டான்” என்ற வசந்திக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

“இதென்ன அத்தை மாப்பிள்ளை இப்படி சொல்லிட்டு போறார்?” என்றனர் கார்த்திகாவின் பெற்றோர்.

“அவன் இப்படி சொல்லுவான்னு தெரிஞ்சு தான் நான் அவன்கிட்ட சொல்லாம இருந்தேன். எல்லாம் ரெடி பண்ணிட்டு கல்யாணம் முடியவும் சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே எப்படி விஷயம் தெரிஞ்சதுன்னு தெரியலை” என்றார் லட்சுமி.

“இதெல்லாம் சரியில்ல அத்தை. அவர் என்னமோ இவ்வளவு அசால்ட்டா கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்லிட்டு போறார். இதென்ன விளையாட்டுக் காரியமா?” என்றனர்.

“ஏன்? நேத்து நீங்க கூடத்தான், சொத்தை எழுதலைன்னா கல்யாணம் நடக்காதுன்னு சொன்னிங்க. அப்போ தெரியலையா உங்களுக்கு? இது விளையாட்டு காரியம் இல்லைன்னு. இன்னைக்கு என் தம்பி சொன்ன உடனே இப்படி மாத்தி பேசுறிங்க?” என்றான் நகுலன்.

“நாங்க பொண்ணைப் பெத்தவங்க தம்பி. கல்யாணம்னு ஊர் முழுக்க பத்திரிக்கை அடிச்சு குடுத்திருக்கோம். இப்போ திடீர்ன்னு கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்றார் வசந்தியின் அக்கா.

“இப்போ என்னக்கா பிரச்சனை உனக்கு? சொத்து வரலையேங்குறது பிரச்சனையா? இல்லை கல்யாணத்தை நிறுத்துறதா?” என்றார் வசந்தி.

“ரெண்டும் தான்” என்றார் அவர்.

“இப்போ முடிவா என்ன சொல்ல வர்றீங்க?” என்றான் நகுலன்.

“கல்யாணமும் நடக்கணும், சொத்தும் என் பொண்ணு பேருக்கு வரணும். உங்க பேரனுக்குத் தெரியாம எழுதிக் குடுங்க” என்றார்.

“நான் சொல்றேங்க, கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது. உங்க எண்ணமெல்லாம் சொத்துமேல மட்டும் தான் இருக்கு. என் தம்பிக்கு கல்யாணமே நடக்கலைன்னாலும் பரவாயில்லை. இப்படி ஒரு குடும்பம் கண்டிப்பா வேண்டாம் அவனுக்கு” என்றான் நகுலனும் உறுதியாக.

“நகுலா கொஞ்சம் பொறுமையா இருப்பா. இவ்வளவு ஏற்பாட்டையும் பண்ணிட்டு கல்யாணத்தை நிறுத்தினா நல்லா இருக்காது. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றார் லட்சுமி.

“வேண்டாம் பாட்டி. கார்த்தி சொன்ன மாதிரி இது அவனை அசிங்கப்படுத்துற மாதிரி. அவனுக்கு குறை இருக்கு தான், இல்லைன்னு சொல்லலை. அதுக்காக இப்படி கீழ இறங்கிப் போய் கெஞ்சி இவங்க பொண்ணை முடிக்கிற அளவுக்கு அவன் ஒன்னும் தரம் தாழ்ந்து போகலை” என்று கோபமாய் சொன்னவன் அங்கிருந்து வெளியேறி ஹாலிற்கு வந்துவிட்டான். அவனின் பின்னால் கோபமாய் வந்த வசந்தியின் அக்கா,

“என்னமோ உங்க தம்பிக்கு பொண்ணுக் குடுக்க நான் நீன்னு போட்டி போட்டுட்டு நிக்கிற மாதிரி பேசுறிங்க தம்பி. சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க பதவிசா தான் பொண்ணுக் கேட்கணும்” என்றார்.

“தேவையில்லைங்க. அதான் கார்த்தி தெளிவா சொல்லிட்டானே” என்றான் நகுலன்.

“என்ன நகுலா இது? எப்ப இருந்து இப்படி பேசக் கத்துகிட்ட? எதுவா இருந்தாலும் பொறுமையா தான் பேசணும்” என்றார் தயாளன்.

“சாரிப்பா..! இருந்தாலும் எனக்கு இவங்களை, இவங்க வைக்கிற டிமான்ட்டை சுத்தமா பிடிக்கலை” என்றான்.

“என் பொண்ணுக்கு எவ்வளவு பெரிய கோடீஸ்வர சம்பந்தம் எல்லாம் வந்ததுன்னு தெரியுமா? வசந்தியோட மாமியார் கேட்டாங்கன்னு தான் நாங்க சரின்னு சொன்னோம். அவனவன் நல்லா இருக்குறவனுக்கே பொண்ணுக் கிடைக்காம அல்லாடுறான். நீங்க என்னமோ இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்றார் வசந்தியின் அக்கா.

“அந்த கோடீஸ்வர வீட்டுப் பையனுக்கே உங்க பொண்ணைக் குடுங்க. கார்த்திக்கு நாங்க வேற பொண்ணைப் பார்த்துக்கிறோம்” என்றார் சுகந்தி கோபமாய். தன் அண்ணன் மகனை இத்தனை பேர் முன்னிலையில் அவர்கள் இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவரால்.

“சுகந்தி” என்று தயாளன் அதட்ட,

“சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க அண்ணா..! நகுலன் சொல்ற மாதிரி எனக்கும் இது சரியா படலை. நம்ம கார்த்திக்கு குறை இருக்குங்குறதுக்காக இவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டனும்னு இல்லை” என்றார் சுகந்தி.

“இதெல்லாம் உங்க வேலையா?” என்றாள் மகிமா, வசந்தியிடம்.

“என்னமா என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று வசந்தி அவளிடம் எகிற,

“அதெப்படி கார்த்திக்கு கரெக்ட்டா விஷயம் தெரிஞ்சது. உங்களைத் தவிர இந்த வேலையை இங்க யாரும் பண்ணியிருக்க வாய்ப்பில்லை” என்றாள் மகிமா.

“ஆமான்னு சொன்னா என்ன செய்வ?” என்றவரின் கேள்வியில்,

“எல்லாம் நமக்கு மேல இருக்காங்க. இப்படி அக்கா மகன்னு கூட பார்க்காம கல்யாணத்தையே நிறுத்துற அளவுக்கு போய்ட்டாங்களே” என்ற மகிமா, வசந்தியிடம் உஷாராய் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

ஹாலில் நடக்கும் கூத்தையெல்லாம் மேலே நின்று வேதனையுடன் பார்த்திருந்தான் அகன் கார்த்திகேயன். மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச அன்பும் நம்பிக்கையும் அந்த நிமிடம் அவனை விட்டு சென்றிருந்தது.

பேச்சு முற்றி வாக்குவாதம் போய்க் கொண்டிருக்க, வாயில் வைத்த வடையுடன் உள்ளே வந்த தாரா இவர்களின் சண்டையில் அப்படியே நின்றாள்.

“ராஜ குரு என்னாச்சு?” என்றான் அவளுடன் வந்த ஹரீஷ்.

“டேய் ஹரீசு, என்னடா நடக்குது இங்க? நேத்து வரைக்கும் பாண்டவர் பூமியா இருந்த வீடு, இப்போ திடீர்ன்னு ரத்த பூமியா மாறியிருக்கு? நாம வடை சாப்பிட போன நேரத்துல அகனோட வாழ்க்கையே கொடை சாஞ்சிடுச்சு போலயே?” என்றாள் வடையை சாப்பிட்டவாறு.

“நான் தான் சொன்னேனே ராஜ குரு, எங்க அம்மா சதித் திட்டத்தை ஆரம்பிச்சிருப்பாங்கன்னு. இப்போ பாருங்க அவங்க செஞ்ச சதிக்கு விதி தான் காரணம்னு பழி போடுவாங்க” என்றான் ஹரீஷ்.

“விடுக்கா, கார்த்திகா தலையில என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும். எல்லாம் விதி, வேறென்ன சொல்ல?” என்று வசந்தி பேசி முடிக்க,

“எப்பிடிடா?” என்றாள் தாரா.

“இத்தனை வருஷமா பார்க்குறேன், எனக்குத் தெரியாதா?” என்றான்.

“இவ்வளவு பிரச்சனை நடக்குது? எங்கடா போனான் அந்த பம்பரக்கட்டை மண்டையன்?” என்றவள் அவனைத் துலாவ,

“அக்கா அப்படியே மேல பாருங்க” என்றான் ஹரீஷ்.

வடையை வாயில் வைத்தபடி அவள் மேலே பார்க்க, அகன் அவளைத் தான் முறைத்திருந்தான்.

“ஆத்தி..! அப்போ இவ்வளவு நேரம் நாம பேசினதை கவனிச்சிருப்பானே?” என்று எண்ணிக் கொண்டவள்,

“சமாளிப்போம்..! என்ன பண்ணிடுவான்” என்றவள்,

“என்ன வடை வேணுமா?” என்றாள்  சைகையில்.

அவனோ அங்கிருந்த அலங்கார ஜாடி ஒன்றை எடுத்து கீழே போட்டிருக்க, அது விழுந்து உடைந்த சத்தத்தில் பேச்சு சத்தம் நின்றிருந்தது.