கணேசன் முதல் முறையாக மகளை பார்க்க திருச்சிக்கு சென்று வந்து ஒரு மாதம் ஓடி விட்டது. இடையில் இரண்டு முறை அவர் மட்டுமாக அங்கு சென்று வந்திருந்தார். கடைசி முறை மனைவி மகளோடு வெளியிலும் சென்றிருந்தார்.
முதலில் மனைவியின் மீதான கோவத்தோடுதான் பாரதியை எதிர் கொண்டார் கணேசன். ஆனால் அவளின் முகம் பார்க்கும் நேரம், அந்தக் கோவத்தில் அத்தனை வீரியம் இல்லை.
மகள் பிறந்ததை ஏன் சொல்லவில்லை என கேட்கட்டும், பொங்கி விடலாம் எனதான் முடிவெடுத்திருந்தார் பாரதி. ஆனால் யோசிக்க யோசிக்க அவருக்கே அது சரியாக படவில்லை.
மனக் குழப்பத்தில் ஆலோசனை போல கேட்டிருந்த விஷயம் அது, அதற்காக அப்போதே சண்டை போட்டு விட்டார். கணேசனும் அது தவறென புரிந்துதான் சமாதானம் பேசி வெளியில் போகலாம் என்றிருந்தார்.
பாரதி அங்கேயே இருந்திருந்தால் கணேசனும் போக போக மனைவியின் எதிர்பார்ப்புகளை புரிந்து அதற்கு தக்க படி நடந்து கொண்டிருக்கலாம், எதற்கும் அவகாசமே இல்லாமல் போனது.
அப்போது நடந்தவைகளை குத்திக் காட்டும் நோக்கத்துடன் இல்லாமல் புரிதல் ஏற்பட வேண்டியே பேசினார் கணேசன். அதை ஒத்தே தன் வீம்பு பிடிவாதங்களை தள்ளி வைத்து விட்டு பேசினார் பாரதி.
முதல் சந்திப்பின் போதுதான் தடுமாற்றம், கலக்கம் எல்லாம். அதன் பின் எப்போது பார்க்கலாம் பேசலாம் என இருவருக்குமே மனம் எதிர்பார்க்க தொடங்கி விட்டது.
ஷஷ்டி தினமும் அப்பாவுக்கு காணொளி அழைப்பு செய்து விடுவாள். அப்படி மகள் மூலமாக கணவனும் மனைவியும் கூட ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
கணேசனும் பாரதியும் இப்போது மகள் இல்லாத பொழுதாக பார்த்து கைப்பேசியில் தனியாக பேசிக் கொள்கின்றனர்.
மனமொத்து போய் இணைந்து வாழவும் முடிவெடுத்து விட்டனர். இருந்த பின்னும் அதை செயல் படுத்துவதில்தான் இருவருக்குள்ளும் நிறைய கருத்து முரண்கள்.
பாரதிக்கு திருச்சியிலேயே நல்ல சம்பளத்தில் நல்ல வேலை, ஷஷ்டி கூட அந்தப் பக்கம் பெயர் பெற்ற சிறந்த பள்ளியில் பயில்கிறாள். இங்கு கிராமப் புறத்தில் வந்திருக்க பாரதிக்கு விருப்பமில்லை. கணேசனுக்கு ஊர்ப் பற்று என்றெல்லாம் ஏதுமில்லை, ஆனால் அம்மா, இங்கு படிக்கும் அண்ணன் மகள் இருவரையும் தனியாக விட்டு வர சம்மதமில்லை.
கணவன் மனைவிக்குள் என்ன நடக்கிறது என அம்மாவிடம் பகிர்ந்திருக்கவில்லை கணேசன். உள்ளதை சொன்னால் தனக்காக பார்த்து, அங்கேயே போகத்தான் சொல்வார் என்பதால் அமைதியாக இருந்தார்.
பரமேஸ்வரியோ பேத்தியை நச்சரித்து விடுமுறை நாளாக பார்த்து ரவியின் வீட்டுக்கு சென்று விட்டார்.
ரவி அன்று தனது வீட்டில் வைத்து தண்மதியை பார்த்தது. அதன் பின் அவளை கைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றான், அவள் அவனது அழைப்புகளை நிராகரிக்கவும் அதற்கு மேல் தொந்தரவு செய்யக் கூடாது என விட்டிருந்தான்.
பாட்டியின் பக்கத்தில் நின்றிருந்தாளே தவிர, ரவியை நிமிர்ந்து பாராமல் பார்வையை தழைத்திருந்தாள் தண்மதி.
அவளையும் கவனித்துக் கொண்டே பாட்டியை உள்ளே அழைத்து அமர வைத்தான் ரவி.
பாரதி தன் தம்பியிடம் எல்லாம் சொல்லியிருக்க, ரவியும் பாட்டியிடம் மறைக்காமல் சொன்னான்.
‘மகனை அங்கே அழைக்கிறாளா?’ என பரமேஸ்வரிக்கு கவலை வராமல் இல்லை. ஆனாலும் இதை இப்படியே இழுத்தடிக்க விரும்பாமல், “நான் சொல்லி அவனை அங்கேயே அவளோடவே போவ வைக்கிறேன் தம்பி” என்றார்.
“அது எப்படி சரியா வரும் பாட்டி, இங்க தனியா இருப்பீங்களா நீங்க? இல்லை அவங்களோட அங்க போகலாம்னு யோசனையா?” தண்மதியை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“அங்குட்டு போறதெல்லாம் சரியா இருக்காது. இவளுக்கு சீக்கிரம் கல்யாணத்தை பேசிடலாம், அப்புறம் நான் தனிக் கட்டை எங்குட்டு கெடந்தாலும்தான் என்ன?” என்றார் பாட்டி.
“ஆத்தா!” என கண்டிப்போடு அழைத்தாள் தண்மதி.
“சும்மான்னு இருடி, நீ தப்பு செய்யலைன்னாலும் அவன் தனியா கெடக்க நீதான் காரணம், இன்னும் அவன் வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணுவியா?” என கோவமாக கேட்டு விட்டார் பாட்டி.
தண்மதிக்கு அழுகை பொங்கி வர, எங்கே செல்வது எனத் தெரியாமல் மேலுதட்டை கடித்துக் கொண்டாள். மூக்கு சிவந்து துடித்துக் கொண்டிருந்தது.
“என்ன பாட்டி பேச்சு இது?” என கடிந்தான் ரவி.
“பின்ன என்னங்க தம்பி? நான் புள்ளைக்குன்னு பார்ப்பேனா, இவளை பார்ப்பேனா? இவ ஆம்பள புள்ளயா இருந்திருந்தா பொண்டாட்டி கூட இருக்க தயங்குவானா அவன்? பொம்பள புள்ளைய கருத்தா யார்கிட்டயாவது ஒப்படைச்சாதானே கணேசனோட கடமை முடியும்? இல்லைனா இப்பவும் பொண்டாட்டி வேணாம் வாழ்க்கை வேணாம்னு இங்குட்டே கெடந்து நாசமா போயிடுவான்” என கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னார்.
தண்மதிக்கு அங்கிருந்து சென்று விட்டால் தேவலாம் போலிருந்தது. ஆனால் எங்கு செல்வாள்? பாட்டியை தனியாக விட்டு வீடு போகவும் முடியாது, இந்த வீட்டை விட்டு வெளியேறி சாலையில் போயா நிற்க முடியும்?
அவளின் நிலையறிந்தவன், “நீ கொஞ்ச நேரம் டெரஸ்ல இரு, போ” என்றான்.
அவனது பக்கம் திரும்பாமல் எழுந்து கொண்டவள் வேகமாக வெளியேறி மொட்டை மாடிக்கு சென்று விட்டாள்.
அவள் அகன்றதும் பாட்டியை இவன் கோவமாக பார்க்க, அவரோ பேத்தியை இப்படி பேசி விட்டோமே என ஆதங்கப் பட்டு நன்றாக அழுதார். அதையும் அவன்தான் சமாதானம் செய்ய வேண்டியதானது.
“படிக்கிற புள்ளைக்கு சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வைப்பீங்களா பாட்டி? அவ இந்த வருஷம் இங்க இருக்கட்டும், மேல படிக்குறப்போ ஹாஸ்டல் பார்க்கலாம், கணேசன் ஸார் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. மூனு, நாலு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என எடுத்து சொன்னான்.
“அவளை ஹாஸ்டல்ல போடல்லாம் கணேசன் ஒத்துக்க மாட்டான். திடீர்னு எனக்கு என்னமாச்சும் ஆச்சுன்னா இவ கதி என்ன ஆவும்? புள்ளைய கணேசன் அவன் கூட வச்சுக்க செயாவும் அவ வீட்டு ஆளுங்களும் ஒத்துழைப்பு தர மாட்டாக” என பாட்டி சொல்லவும் சலுகையாக முறைத்தான் ரவி.
“ஐயையோ தம்பி! உங்களை, உங்களை பெத்தவகளை எல்லாம் குத்தமா சொல்லலை, நீங்கல்லாம் நல்லவகதான், அதுக்காக மதியை நீங்களா வச்சு பார்க்க முடியும்? கணேசன் பார்ப்பான், அத வச்சு அவன் நிம்மதி போற மாதிரி செய்வாக. நான் நல்லா இருக்கப்பவே அவளுக்கு நல்லது நடத்தி வச்சிடுவேன்” என்றார்.
ரவி எவ்வளவோ சொல்லிப் பார்த்தான், அவர் கேட்பதாக இல்லை. கணேசன் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் எனவும் கூறினான்.
“அவன் என்ன ஒத்துக்க கெடக்கு? பால்டாயில் வாங்கி ஒரு மொடக்கு குடிச்சா தானா வழிக்கு வருவான்” என அவர் சொல்லவும் அதிர்ந்து விட்டான்.
“ஒரு நல்ல இடம் வந்திருக்கு, அந்த பையனும் ரெண்டாம் தாரத்துக்கு பொறந்தவங்கிறதால இவ குறையை பெருசா எடுக்காம சரின்னு ஒத்துக்கிட்டு மேக்கொண்டு பேசுறாங்க. மலேசியாவுல டிரைவர் வேலை பார்க்கானாம், அடுத்த மாசம் நாட்டுக்கு திரும்பும் போது கல்யாணம் வச்சுக்க ரெடியா இருக்காக” என அடுத்த குண்டை தூக்கிப் போட்டார்.
‘சாதாரண பாட்டியே இல்லை இவர், சரியான சகுனி பாட்டி’ என அவனுக்கு நல்ல எரிச்சல்.
“டிரைவர் பையனான்னு சத்தம் போட்டான் கணேசன், இப்போதைக்கு கல்யாணம் இல்லைனும் அடிச்சு பேசினான், நான் விடுறதா இல்லை”
“அவ விருப்பம் இல்லாம கல்யாணம் செஞ்சு வைக்க முடியாது பாட்டி. பையன் குணம் பழக்கவழக்கம் என்ன ஏதுன்னு ஒன்னும் தெரியாம அவ வாழ்க்கையை கெடுக்க பார்க்குறீங்களா?” என சற்று கோவமாகவே கேட்டான்.
“என்னதான் தம்பி பண்ண சொல்றீக? உங்கப்பாகிட்ட கூட மாப்ள பார்க்க சொன்னேன், வாரவக பூரா இவ சங்கதி தெரிஞ்சு வேணாம்னு சொல்றாகளாம். ஒத்து வர்றவனை முடிக்க வேண்டியதுதான். அவ தலையில நல்ல எழுத்து எழுதியிருந்தா நல்லா வாழுவா, இல்லைனா நான் என்னத்த பார்த்து செஞ்சாலும்… ஐயையோ அவ நல்லா இருக்கட்டும்” என்ற பாட்டி ஏதேதோ தெய்வங்களின் பெயர்களை சொல்லி பேத்திக்காக வேண்டினார்.
நெற்றிப் பொட்டில் கை வைத்து கண்களை இறுக மூடி அவரின் பேச்சை சகித்துக் கொண்டிருந்தான்.
பாட்டி எதுவும் சொல்லட்டும், கணேசன் என்ன சொல்கிறார் என பார்ப்போம் என நினைத்தவன், “சாப்பிடுறீங்களா பாட்டி?” எனக் கேட்டான்.
“வீட்டுல சமைச்சு வச்சிட்டுத்தான் வந்தோம் தம்பி, அவளை கூப்பிடுங்க, நாங்க கெளம்பறோம். கணேசனுக்கு வேலைய மட்டும் அந்த பக்கம் மாத்தி வுட்ருங்க, அவன் குடும்பமா வாழட்டும்” என்றார்.
தான் அவளிடம் சமாதானம் சொல்லி அழைத்து வருவதாக சொல்லி மாடிக்கு சென்றான் ரவி.
ஒரு பாடு அழுது தீர்த்து முகம் கழுவி கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தண்மதி.
அவனை காணவும் சட்டென உடல் விரைக்க நேராக நின்றாள். அழுகையின் தடத்தோடு அவளை கண்டதுமே உருகிப் போகும் தனது உள்ளத்தை அவனால் தடுக்க முடியவில்லை.
“அன்னிக்கு உனக்கு ஷாக் ஆகிடுச்சுன்னு தெரியுது, அதுக்காக இப்படி என்னை அவாய்ட் பண்ணுவேன்னு நினைக்கல” என்றான்.
இந்த பேச்சை விரும்பாதவள் பதற்றம் கொண்டாள்.
“என் விருப்பத்தை சொன்னேன் மதி, நாளைக்கே கல்யாணம்னு சொல்லல. உனக்கு கல்யாண பேச்சு எடுக்கிறாங்க, உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சாதான் உன் சித்தப்பாட்ட நான் பேச முடியும்? நான் இருக்கேன் மதிக்கு, அவசர படாதீங்கன்னு சொல்ல முடியும்?” எனக் கேட்டான்.
“எவனோ மலேசியாலேர்ந்து வர்றானாம் உன்னை கட்டிக்க. விஷம் சாப்பிடுவேன்னு சொல்லி மிரட்டி உன்னை உன் சித்தப்பாவை எல்லாம் ஓகே சொல்ல வைக்க போறாங்க பாட்டி” என்றான்.
ஒரு நொடி அதிர்ந்து போனாலும் அவனிடம் ஏதும் சொல்லாமல் இரண்டடிகள் எடுத்து வைத்தாள்.