“அரச்சனை யாரு பேருக்குன்னு சொல்லுங்கோ…” என்று கோயில் குருக்கள் கேட்க,
“சித்தார்த்… பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி சுவாமி…” என சொல்லி அர்ச்சனை கூடையை நீட்டியிருந்தாள் வைஷ்ணவி.
காலையில் எழுந்து வழக்கமாகச் செல்லும் வேலைகளுக்குத் தம்பியை அனுப்பிவிட்டு தன்னவனின் பிறந்ததினம் என்பதால் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள்.
வழக்கமாக செல்லும் வேலைகள் என்றால், தினமும் காலையில் சில வீடுகளுக்கு நியூஸ் பேப்பர், பால் பாக்கெட் போடும் வேலையைப் பகுதி நேரமாகப் பார்ப்பாள். அந்த வேலைகளுக்கான பொறுப்பைத் தான் அவள் தம்பி பிரதீப்பிடம் தந்திருந்தாள்.
அர்ச்சனை முடிந்து, சுவாமியை கண்ணார தரிசித்துவிட்டு வீடு வந்தவளிடம், “என்னம்மா இன்னைக்கு திடீர்ன்னு இடை நாளுல கோயிலுக்கு…” என விசாரித்தார் அன்னை லலிதா.
“சும்மா தான்மா…” என மழுப்பலாகச் சொன்னவள், “தம்பி வந்துட்டானாம்மா?” என அவசரமாகப் பேச்சை மாற்றினாள்.
“ஹ்ம்ம் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருக்கான்… உனக்கும் நேரம் ஆகுது சீக்கிரம் கிளம்பிட்டு சாப்பிட வா…” என்று சொன்னதும், தப்பித்தால் போதும் என நழுவியவள், வேகமாகக் கல்லூரிக்குக் கிளம்பி வந்தாள்.
“தலையை வேற இன்னும் சரியா துவட்டலை போல… சரி நீ இட்லி சாப்பிட்டுக்கோ… தம்பி பழைய சாதம் சாப்பிடட்டும். அப்பறம் ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது…” என்று அன்னை சொன்னதும்,
“சரிம்மா…” என்றவள் எண்ணி இரண்டே இட்லியைத் தட்டில் எடுத்துக்கொண்டு, உண்ணத் தொடங்கினாள்.
“எனக்கும் பழைய சாதம் இருக்கு. கூட ரெண்டு இட்லி போதும். தம்பியும் ரெண்டு தான் எடுத்துப்பான். நீ இன்னும் ஒன்னு எடுத்துக்கோ…” என லலிதா இன்னொரு இட்லியை வைக்க வர,
“அம்மா… போதும் மா… கோயில்ல பொங்கல் வேற தந்தாங்க…” என்று அவசரமாக மறுத்து விட்டாள்.
லலிதா வருத்தமாகச் சிரித்துக் கொண்டார். அந்த பொங்கல் எந்த மூலைக்குக் காணும் என்று அவருக்குத் தெரியாதா என்ன? மகள் மறுப்பது தங்களுக்காக எனப் புரிந்து, தங்களின் வறுமையை எண்ணி பெருமூச்சு வந்தது. சட்டமாய் சுவற்றில் புகைப்பட சட்டத்தினுள் தொங்கிக் கொண்டிருந்த தன் கணவர் நடராஜை மௌனமாக ஏறிட்டு பார்த்தார். மனம் கனத்து போனது. கணவர் இல்லாத வாழ்வில் குழந்தைகளுக்குச் சரியாக உணவளிக்கக் கூட முடியாத குடும்பத்தின் வறுமை நிலை அவரை மனதளவில் மிகவும் நோகடித்தது.
அதற்குள் மகன் உணவுண்ண வர, அன்னையின் கவனம் அவனில் பதிந்தது.
வைஷ்ணவி உணவை முடித்துவிட்டு அன்னை, தம்பி இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வேகமாகப் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கத் தொடங்கினாள்.
“சண்டை போட்டு ஒரு மாசம் ஆச்சு… இப்ப போயி நம்மளா பேசினா முறுக்கிப்பானே… பிறந்தநாள் மட்டும் வராம இருந்திருந்தா அவன் செஞ்ச வேலைக்கு இன்னும் ரெண்டு வாரம் சுத்த விட்டிருப்பேன்” தன்னவனை எண்ணி செல்லமாகச் சலித்துக் கொண்டே கல்லூரிக்குப் பயணித்தாள்.
அவளது புத்தகப்பையில் துயில் கொண்டிருக்கும் பரிசு வேறு அவளுக்கு உள்ளுக்குள் பூரிப்பைத் தந்து கொண்டே இருந்தது.
சித்தார்த் அவளுக்காக இதுவரை நிறையச் செய்திருக்கிறான். இன்று தான் முதல்முறையாக அவள் அவனுக்கென்று பரிசு தருகிறாள். அவன் செய்ததில் இது இம்மி கூட சேராது என்றபோதும், கொடுப்பதில் அவளுக்கு ஒரு அலாதி சந்தோசம். அவளுடைய சுய சம்பாத்தியம் ஆயிற்றே!
கல்லூரியை அடைந்ததும் ஆசையாக அவனை தேடி அலைந்தாள். கடந்த ஒரு மாதமாக அவன் கண்ணிலேயே படாமல் சுத்தலில் விட்டதை நினைக்கையில் இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. ‘இப்ப பாரு நீயா தேடி போற நிலைமை’ என தன்னை தானே கேலி செய்து கொண்டாள். அவனிடம் தோற்பதில் அவளுக்கு எந்த சுணக்கமும் இல்லை. இதுகூட சுகமாகத் தான் இருந்தது.
அதோ! அந்த மரத்தின் அருகே இருக்கிறான். மிகவும் ஆசையாக அவனைத் தேடிப் போனாள்.
அங்கே அவனது பிறந்தநாள் கொண்டாட்டம் தான் போய்க்கொண்டு இருந்தது.
‘ஐயோ! இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்…’ தன்னையே கடிந்து கொண்டவள், சற்று வேகமாக அவ்விடம் நடந்தாள்.
ஹப்பா! பிறந்தநாள் புத்தாடையில் தன்னவன் காதநாயகனே தான்! என்ன அழகு! எவ்வளவு கம்பீரம்! உதட்டில் உறைந்து போன சிறு புன்னகையோடே அவனை நெருங்கியவளின் கரங்களுக்குள் அவனுக்காக வாங்கி வந்திருந்த வெள்ளி காப்பு!
வாகாக துப்பட்டாவில் சுழற்றி வைத்து யார் பார்வைக்கும் புலப்படா வண்ணம் மறைத்திருந்தாள்.
சித்தார்த் மீது அவன் நண்பர்கள் கூட்டம் கேக்கை பூசி அவன் முகத்தையே வண்ணம் அடித்து வைத்திருந்தார்கள்.
சித்தார்த் சற்று நேரத்தில் இவளைக் கவனித்து விட்டான். வரவேற்பு புன்னகை கூட இல்லாமல் அலட்சியமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
‘பாருடா! கோபமாம்… சார் செய்யற அடிதடிக்கு கோபம் வர வேண்டியது எங்களுக்கு…’ அவனுக்கு பிறந்தநாள் என்பதாலேயோ என்னவோ அவன்மீது துளி கோபத்தைக் கூட இழுத்து பிடிக்க முடியவில்லை.
சேட்டை செய்யும் பிள்ளையை ரசிக்கும் பாவனையோடு தான் அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் அவன் தோழி ஒருத்தி, “சித்து… எனக்கு பர்த்டே கேக் வேணும்…” என்று கொஞ்சலாக கேட்டபடி அவன் ஒருபக்க காலரைப் பிடித்து இழுக்க, வைஷ்ணவியின் நடை சட்டென்று நின்று போனது. அவள் பார்த்த காட்சியில் முகம் கோபத்தில் ஜிவுஜிவுவென சிவந்து விட்டது.
தோழியாக கேக்கை கேட்கலாம். இப்படி காலரை இழுத்து, சித்தார்த்தின் முகத்தில் அப்பியிருந்த கேக்கின் நறுமணத்தை சுவாசித்தபடி தன் முகத்தை அவன் முகத்தருகே நெருக்கமாக எடுத்துச் சென்று… அந்த காட்சி நிச்சயம் நட்பின் எல்லைக்குள் அடங்காது.
சித்தார்த்தை அந்த கோலத்தில் காணவே பற்றிக்கொண்டு வந்தது. உஷ்ண மூச்சுக்களால் யாரைப் பொசுக்க எனப் புரியாமல் கடுப்போடு நின்றிருந்தாள்.
அவனே நாசூக்காக விலகி விடுவான் என்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, “ஸ்ஸ்ஸ் ஸ்ரீ… விட்டா கன்னத்துல இருக்க கேக்கை எடுத்துப்ப போல…” என கண் சிமிட்டி சொல்லியபடி, அவள் இரு தோள்களையும் உரிமையாகப் பற்றி தன்னை விட்டு மெல்ல விலக்கி நிறுத்தியவன், கேக் ட்ரேயில் மிச்சம் மீதியிருந்த கேக்கில் கொஞ்சத்தை வழித்து எடுத்து அவளுக்குச் சிரிப்போடு ஊட்டி விட்டான்.
“சோ… ஸ்வீட்… உன்னை மாதிரியே…” என்று சொன்ன அந்த ஸ்ரீ, அவள் கையாளும் கொஞ்சம் கேக்கை அள்ளி அவனுக்கு ஆசையாக ஊட்டி விட்டாள்.
இல்லை இல்லை அதை ஊட்டி விட்டது என்ற வரையறையில் சேர்க்க முடியாது. இருவரும் விரலை மாற்றி மாற்றிச் சப்பிக்கொண்டனர். பார்த்திருந்த வைஷ்ணவிக்கு அருவருத்துப் போனது.
தன் மீது உள்ள கோபத்தில் தன்னை வெறுப்பேற்ற இப்படி நடந்து கொள்கிறானோ என்று எண்ணி தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாலும், மனம் சிறகொடிந்த பறவை போலத் துடி துடித்துக் கொண்டிருந்தது.
மேற்கொண்டு ஓர் எட்டு வைக்கவும் அவளால் முடியவில்லை. தன் உரிமையை மற்றவர்கள் பறித்துக் கொண்டது போல வலி.
‘ம்பச்! அவன் கோபம் உனக்குத் தெரியாதா?’ என முயன்று தன்னை நிதானப் படுத்திக் கொண்டவள், “ஹேப்பி பர்த்டே சீனியர்…” என்று சொல்லி மேலும் ஒரே ஒரு எட்டு மட்டும் தான் எடுத்து வைத்தாள்.
முயன்று வருவித்த உற்சாக குரலில், அவள் என்ன முயன்றும் தடுக்க முடியாமல் வலி விரவி கிடந்தது.
ஆனால், அங்கொருத்தி நிற்பதாகக் கூட சித்தார்த் சட்டை செய்யவில்லை.
பார்வையால் கூட அவளைத் தீண்டாமல், “இன்னைக்கு லன்ச் ட்ரீட் என்னோடதுடா…” என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் நிராகரிப்பு வலித்தது. கண்ணில் நீர் கோர்க்கும் போல ஆகிவிட, தலையைக் குனிந்து அதை மறைத்துக் கொண்டாள்.
“நீ பேசாம இருடா…” என்று சித்தார்த் கிஷோரை எரிந்து விழுந்தான்.
“டேய் மச்சி என்னடா?” என இன்னொரு நண்பனான விக்னேஷும் வைஷ்ணவிக்கு பாவம் பார்த்து வர, அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்,
வைஷுவை நோக்கி, “ஹே என்ன வேணும் உனக்கு? எதுக்கு இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க?” என காய்ந்தான்.
அவன் கடுமை எப்பொழுதுமே அவளுக்கு அலர்ஜி… அவன் எகிறிக்கொண்டு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அடங்கிப் போய்விடுவது தான் அவளுக்கு வழக்கம். அப்படி அவன் சாதித்த விஷயங்கள் நிறைய நிறைய… அவனது அசைன்மெண்ட்ஸ் முதல் இதழொற்றல் வரை!
இன்றும் அவன் கோபத்தில் தன்போல அவளுள் சிறு நடுக்கம். தனியாக எதிர்கொள்ளும் போது தோளணைத்து, “பயந்தாங்கொள்ளி…” என சீண்டி சிரிப்பான்.
இன்று தான் இத்தனை பேரின் நடுவில் முதல்முறை அவனது கோபத்தை எதிர்கொள்கிறாள்.
“என்ன குனிஞ்சு நின்னு என்ன தேடிட்டு இருக்க? ஒரு மாசமா கண்ணுலயே படாம ஓடினவ தான? இன்னைக்கு எதுக்குடி வந்த?” என்று கத்தினான்.
ஒரு மாதமாக அதிகம் தேட வைத்து விட்டோம் என்று வைஷ்ணவிக்குப் புரிந்தது.
ஆனாலும் அவனை எப்படி சீர்படுத்த என்று அவளுக்குப் புரியவில்லை. எல்லா விதத்திலும் ரொம்பவும் நல்லவன் தான். என்ன இந்த அராத்து வேலைகளை மட்டும் விட்டால் பரவாயில்லை. ரொம்பவும் ராவடி செய்வான். தட்டிக்கேட்க ஆள் இல்லாமல் திரியும் கோயில் காளை போல ரொம்பவுமே அடாவடித்தனம்! அதைக்கொண்டே பெரும் சண்டை!