அத்யாயம் 7:

சந்தான லட்சுமி காலையில் அவர் கொடுத்து அவள் வாங்க மறுத்த அதே செயினை மறுபடியும் அவளுக்கு குடுக்க முறபட,

“ஜ்வெல் பாக்ஸ் மாதிரி இருக்கு பாட்டி” என்றாள் மறுப்புடன்.

“காலையில குடுத்த செயின் தான்டா உள்ள இருக்கு. கண்டிப்பா இதை நீ வாங்கிக்கிட்டே ஆகணும்” என்றார்.

“பாட்டி ப்ளீஸ்” என்றாள் மறுக்கும் குரலில்.

“பூமி இப்போ தாராவை வாங்கிக்க சொல்லப் போறியா இல்லையா?” என்று பூமிநாதனை மிரட்டியிருந்தார் லட்சுமி.

“எதுக்கு பெரியம்மா இதெல்லாம்?” என்றார் அவர்.

“தாராவும் எனக்கு பேத்தி மாதிரி தானப்பா. அவளுக்குச் செய்ய எனக்கு உரிமை இல்லையா?” என்றார்.

“தாரா வாங்கிக்கடா” என்றார் பூமி.

அவள் சங்கடமாய் பார்க்க, பாட்டியின் பின்னால் நின்றிருந்த அகனோ அவளை உறுத்து விழித்திருந்தான். நீ வாங்கியே ஆக வேண்டும் என்ற காட்டாயம் அவன் பார்வையில் இருந்தது.

“அடேய் பம்பரக்கட்ட மண்டையா, நீ முறைச்சா நான் பயந்துடுவேனா? நாங்கெல்லாம் தண்ணிப் பாம்புக்கே தண்ணி காட்டுவோம்” என்று சிலுப்பியபடி திரும்பிக் கொண்டாள்.

அகன் கோபமாய் அவளை நெருங்க, தாரவோ பட்டென்று பாட்டி கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.

“அந்த பயம் இருக்கட்டும்” என்பதைப் போல் அவன் புருவத்தை ஏற்றி இறக்க,

“திமிரு புடிச்சவன்” என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டான்.

அகன் அவன் சார்பாக பரிசுப் பெட்டியை நீட்ட, அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள், அவனிடம் எந்த பிகுவும் பண்ணாமல் வாங்கிக் கொண்டாள். அவனின் பரிசை அவள் இயல்பாக ஏற்றுக் கொண்டது ஏனோ அவனுக்கு இதமாக இருந்தது.

கார்த்திகாவும், வசந்தியும் அந்த பரிசுப் பெட்டியை சந்தேகமாய் பார்க்க, அதைப் பார்த்த தாராவோ வேண்டுமென்றே அங்கேயே வைத்து அதைப் பிரித்திருந்தாள். பரிசாய் அதில் இருந்தது என்னவோ ஸ்டெதஸ்கோப் தான். அதைப் பார்த்தவளின் முகம் மலர,அதன் பிராண்ட் நேம் பார்த்தவளுக்கு அவன் அவசரமாய் இதை வாங்கவில்லை என்பது மட்டும் புரிந்திருந்தது.

“தேங்க்ஸ் அகன்” என்றாள் உள்ளார்ந்து.

அவன் தலையாட்டி புன்னகைத்த  விதத்தில் பாவம் அவள் நெஞ்சம் தான் புண்ணாகிப் போனது.

அதற்கடுத்து நடந்து எதுவும் தாராவின் நினைவில் இல்லை. அவள் சிந்தை முழுவதும் நிரம்பியிருந்தவன் அகன் மட்டுமே.

திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தடல்புடலாய் நடந்து கொண்டிருந்தது.

சரியாக இரண்டு நாட்கள் இருக்கும் போது நகுலன் தன் மனைவி மகிமாவுடன் வந்து விட்டிருந்தான்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வசந்தி- புவியரசுவின் மகன் ஹரீஷும் வந்துவிட, வீடு முழுவதும் ஆட்கள் தான்.

வந்தவுடன் தனது குடும்பத்தினரை பாசமாக நலம் விசாரித்த நகுலனை அனைவரும் வாஞ்சையுடன் பார்க்க, அகனோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

இத்தனை வருடங்கள் கழித்து நேரில் பார்த்த தம்பியை,“கார்த்தி” என்றபடி  பாசமாக வந்து அணைத்துக் கொண்டான் நகுலன். அகனும் பெரிதாய் ரியாக்ட் செய்யாமல் அண்ணனை அணைத்துக் கொண்டான்.

“லீவ் கிடைக்கலைடா. இல்லைன்னா ஒன் வீக்குக்கு முன்னமே வந்திருப்பேன். சாரிடா கார்த்தி” என்றான் நகுலன்.

“தம்பி மேரேஜ்க்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்ததுக்கு நீங்க இப்படி பீல் பண்றிங்க. அப்படி பார்த்தா உங்க தம்பி நம்ம மேரேஜ்க்கு வரவே இல்லை. ஆனா, அதுக்காக அவர் பீல் பண்ண மாதிரி தெரியலையே?” என்றாள் மகிமா வெடுக்கென்று.

அவளின் பேச்சில் கார்த்தி சட்டென்று நகுலனை விட்டு இரண்டடி தள்ளி நின்று கொண்டான்.

“என்ன காரணம்னு நான்தான் உன்கிட்ட தெளிவா சொன்னேனே மகி. அப்பறமும் ஏன் அவனை ஹெர்ட் பண்ற மாதிரி பேசுற?” என்று நகுலன் மனைவியை கடிந்து கொண்டான்.

“அவரை ஹெர்ட் பண்றதுக்காக சொல்லலை நகுல்.  நடந்ததென்னவோ அதைத் தான் சொன்னேன்” என்றாள் மகிமா.

“சரி சரி வந்த உடனே இதையெல்லாம் பேசணுமா?” என்ற சந்தான லட்சுமி,

“எப்படிப்பா இருக்க நகுல்? வேலையெல்லாம் எப்படி போகுது? அப்பப்போ ஊருக்கு வந்துட்டு போகலாம் இல்லையா? கல்யாணத்துக்கு அப்பறம் முன்ன மாதிரி நீ வர்றதே இல்லையே?” என்றார் லட்சுமி விடாமல்.

“வேலை கொஞ்சம் அதிகம் தான் பாட்டி. இனி கண்டிப்பா அடிக்கடி வந்துட்டு போறேன்” என்று வாக்குறுதி குடுத்தவன், அப்போது தான் கார்த்தியின் கையில் இருந்த கட்டைக் கவனித்தான்.

“டேய் கார்த்தி? என்னடா ஆச்சு? ஏன் கையில கட்டுப் போட்டிருக்க?” என்றான்.

“அது ஒண்ணுமில்லை நகுலா. கண்ணாடி கையில பட்டிருச்சு. வேற ஒண்ணுமில்லை. நீங்க போய் பிரஷ்ஷாகிட்டு வாங்க” என்று சுகந்தி நாசூக்காய் அவர்களை அனுப்பி வைத்தார். கார்த்தி தந்தையிடம் நடந்து கொண்ட விதத்தை அறிந்தால் அவனுக்குத் தான் கோபம் வந்துவிடுமே.

அவர் சொன்னதை நகுலன் நம்பவில்லை என்பதை அவன் முகமே சொல்லியது.

“இங்க ஒரு பெரிய மனுஷன் வந்திருக்கேனே? என்னை யாருக்கும் தெரியலை. மேரேஜ்  பண்ணவங்க, மேரேஜ் பண்ணப் போறவங்க இவங்களைத் தான் உங்க  கண்ணுக்குத் தெரியுது. அதனால எனக்கும் சீக்கிரம் மேரேஜ் பண்ணி வைங்க” என்றான் ஹரீஷ் சோபாவில் அமர்ந்து சாவகாசமாய்.

“அடிங்க..! காலேஜ் படிக்கிறப்பவே உனக்கு கல்யாணம் கேட்குதா? ராஸ்கல்” என்று லட்சுமி அவனை ஒரு போடு போட்டவர்,

“எப்படிடா இருக்க கண்ணா?” என்றார்.

“எனக்கென்ன பாட்டி, தாத்தா நிறைய ஆஸ்தியை சேர்த்து வச்சிருக்கார். நீ நிறைய அன்பை சேர்த்து வச்சிருக்க? மை மம்மி நிறைய ஆத்திரத்தை சேர்த்து வச்சிருக்காங்க. சோ எனக்கென்ன குறை? ஜம்முன்னு இருக்கேன்” என்றவன் அப்போது தான் தாராவைப் பார்த்தாள்.

“யாரு பாட்டி இந்த சூப்பர் பிகர்” என்றான்.

“லூசுப் பயலே நான் உனக்கு சிஸ்டர் முறையாகனும்” என்றாள் தாரா பல்லைக் கடித்துக் கொண்டு.

“பூமிநாதன் பொண்ணுடா. உனக்கு அக்கா முறையாகனும்” என்றார் லட்சுமி.

“ஹாய் அக்கா..! பை தி வே ஐ ஆம் ஹரிஷ். இந்த சமஸ்தானத்தின் அரசன் நான் தான்” என்றான் சிரிப்புடன்.

“பார்த்தா அப்படி தெரியலையே? சமஸ்தானத்துக்கு சமோசா விக்க வந்த மாதிரி இருக்கியே?” என்றாள் தாராமல் சிரிக்காமல்.

“என்னது? சமோசா விக்கிறவனா? யக்கோவ், எனக்கு குருவா நீங்க? அடியேனை சிஷ்ய பிள்ளையா ஏத்துக்கோங்க. உங்களை சாதாரணமா எடை போட்டது இந்த அடியேன் செய்த பிழை அரச குருவே” என்றான் ஹரிஷ்.

“சரிசரி பிழைச்சுப் போ” என்று அவள் அருள்பாலிக்க, ஏனோ இவர்களின் பிணைப்பைக் கண்ட அகனுக்கு எரிச்சலாய் வந்தது. காரணமே இல்லாமல் தாராவை முறைத்து வைத்தான்.

“இப்ப எதுக்கு இந்த கோபத்து பிறந்த கொரில்லா என்னை முறைக்கிறான்?” என்று எண்ணியவள் வாயை மூடிக் கொண்டாள்.

“அவ கூட உனக்கென்ன பேச்சு வேண்டி கிடைக்கு ஹரீஸ்? இந்த வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது” என்று வசந்தி மகனை மிரட்ட,

“இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல!” என்று நொந்து கொண்டவன், தாராவிடம் போகிற போக்கில் தலையாட்டிவிட்டு சென்றான்.