அந்த இரவு நேரத்தில் வீடு வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவு உணவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த யுகந்தாராவிற்கு மனம் முழுவதும் அகனைப் பற்றிய யோசனைகள் மட்டுமே.
“இப்படி ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி, இந்த வருஷப் பிறந்த நாளை எந்த வருஷமும் மறக்க முடியாமே பண்ணிட்டான் இந்த AP” என்று நினைத்துக் கொண்டவள்,
“எதுக்காக இப்படி நடந்துக்கிறான்? அப்படி என்ன பிரச்சனையா இருக்கும்? பாட்டி சொன்ன பிரச்சனையையும் தாண்டி வேற ஏதோ காரணம் இருக்கும் போல இருக்கே? அது என்ன காரணமா இருக்கும்?” என்று தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தவளை, நிஜத்திற்கு மீட்டது பூமிநாதனின் குரல்.
“என்னடா தாரா? ஆழ்ந்த யோசனை போல?” என்று அருகில் வந்து அமர்ந்தார்.
“நான் உங்க மேல கோபமா இருக்கேன். என் பர்த்டேக்கு ஒரு ஷாப்பிங் கூட கூட்டிட்டு போகல நீங்க. என் கூட கோவிலுக்கு வரலை நீங்க. என்னை விட உங்க பெரியம்மா பேரன் கல்யாண வேலை உங்களுக்கு பெருசா போய்டுச்சு” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.
“பிறந்த நாள் என்னமோ இந்த மாசம் தான். நாம தான் போன மாசமே ஷாப்பிங் முடிச்சுட்டோமே?” என்றவர் சிரிக்க,
“அது போன மாசம் டாடி. இது இந்த மாசம்” என்றாள்.
“என் பொண்ணு கேட்டு மறுக்க முடியுமா? இப்ப வேணும்னா போவோமா?” என்றார் நிஜமாகவே.
“நீங்களே டயர்டா இருக்கீங்க. இனி உங்களை எப்படி அலைய வைப்பேன். சும்மா தான் வம்பிழுத்தேன் டாடி” என்றாள்.
“என் பொண்ணைப் பத்தி எனக்கு தெரியாதா?” என்ற பூமி நாதனுக்கு மதியம் வேணி கூறியது ஞாபகத்திற்கு வந்து சென்றது.
“கார்த்தி தம்பிக்கு இப்போ எப்படி இருக்கு தாரா? போய் பார்த்தியாம்மா?” என்றார்.
தந்தையையே ஆழ்ந்து பார்த்தவள்,
“நான் அகனை லவ் பண்ணிடுவேனோன்னு நீங்களும் மம்மியும் பயப்படுறிங்களா டாடி” என்றாள் அவரின் கண்களைப் பார்த்து.
“அப்பா அப்படி நினைப்பேனாடா?” என்றார்.
“நீங்க நினைக்கலைன்னா, அம்மா அப்படி நினைக்கிறாங்க. நான் சொல்றது சரிதான டாடி” என்றவளின் புத்திக் கூர்மையை மெச்சிக் கொண்டார்.
“இப்போ என் பொண்ணுக்கு என்ன வேணும்?” என்றார் அவரும் சுத்தி வளைக்காமல்.
“இப்ப வரைக்கும் எதுவும் வேண்டாம் டாடி. தேவைப்பட்டா கேட்குறேன்” என்றவளின் பதிலில் பூமிநாதன் மகளின் மனநிலையை உணர்ந்து கொண்டார்.
“இல்ல, எனக்கு எவ்வளவு வரன் வந்தது? ஏன் அம்மா சொந்தத்துல கூட எத்தனை பேர் கேட்டாங்க? அப்படி இருக்கும் போது உங்களுக்கு நெருங்குன சொந்தம்னு சொல்றிங்க? இவங்களுக்கு எப்படி என்னை தெரியாம போச்சு? இவங்களுக்கு ஏன் என்னை கேட்கனும்னு தோணலை?” என்றாள் தந்தையை நேர் பார்வையாய் பார்த்து.
“அது.. தாராம்மா” என்று அவர் தயங்க, தாராவிற்கு தான் அவரின் தயக்கத்திற்கான காரணம் புரியவில்லை.
“லட்சுமி பெரியம்மா அப்படி நினைக்கிற ஆளெல்லாம் இல்லம்மா. என்கிட்ட கேட்கத்தான் செஞ்சாங்க. நான்தான் சில காரணங்களால வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றார்.
“நீங்க வேண்டாம்னு சொன்னதுக்குக் காரணம் அகனோட பிரச்சனையா டாடி” என்றாள்.
“அய்யோ அப்படியெல்லாம் அப்பா யோசிப்பேனாடா. இது வேற காரணம்டா. இப்ப எதுக்கு அதெல்லாம்?” என்றவரின் பேச்சில் ஒன்றைப் புரிந்து கொண்டாள் தாரா. காரணத்தை தன்னிடம் சொல்ல தந்தைக்கு விருப்பமில்லை என்று.
“எப்பவும் நீங்க சில விஷயங்கள்ல ஒரு புதிரான புத்தகம் மாதிரி இருக்கீங்கப்பா. புதிருக்கான விடை தான் தெரியலை. சொந்தம்னு சொன்னிங்க. எந்த வகையில சொந்தம்னு சொல்லலை. இந்த வீட்ல நான் தான் எல்லாம் செய்வேன்னு உரிமையா செய்றிங்க. லட்சுமி பாட்டி கூட அவங்க பிள்ளைங்க மாதிரியே உங்க மேலயும் பாசம் காட்டுறாங்க. எனக்கு எப்படி யோசிச்சாலும் ஏதோ ஒரு விஷயம் புரிபடவே இல்லைப்பா” என்றாள் தெளிவாய்.
“தாராம்மா” என்று அவர் ஏதோ சொல்ல வர,
“அப்பாவும் பொண்ணும் இங்க உட்கார்ந்து என்ன பண்றிங்க? சாப்பிடலையா ரெண்டு பேரும். நீங்க சாப்பிட்டு மாத்திரை போட வேண்டாமா?” என்றபடி வேணி வர, அவர்களின் பேச்சு அப்படியே நின்றது.
“சாப்பிடாம எப்படி மம்மி? ஒரு மனுஷனுக்கு மூணு விஷயம் ரொம்ப முக்கியம். அது காலையில சோறு, மதியான சோறு, ராத்திரி சோறு” என்று அவள் முகத்தை சீரியசாய் வைத்துக் கொண்டு செல்ல,
“விளங்கிடும்” என்றார் வேணி.
“எது வயிரா?” என்றாள் தாரா.
“ம்கூம்..! உன் வாழ்க்கை” என்றார் வேணி.
“அது எனக்கே தெரியுமே?” வாயளந்து கொண்டிருக்கும் போதே அங்கு வந்திருந்தான் அகன். வலது கையில் கட்டுடன் வந்தவனை பார்வையால் வருடியவள்,
“பெயின் ஓகே வா அகன். ஹாஸ்பிட்டல் போகனுமா?” என்றாள் அக்கறையுடன்.
“தேவையில்லை” என்பதைப் போல் அவன் இமைகளை மூடித் திறந்தவன், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களைத் தாண்டி சென்றிருந்தான்.
“என்னாச்சு இவனுக்கு?” என்று யோசித்தவள் அவன் பின்னால் செல்ல முற்பட,
“எங்க போற தாரா? இந்த நேரத்துல எதுக்கு அந்த தம்பி பின்னாடி போற?” என்றார் வேணி.
“நீங்க எதை மீன் பண்ணி இப்படி கேட்குறிங்கம்மா?” என்றாள் இடுங்கிய பார்வையுடன்.
“இல்லடா, இந்த நேரத்துல கார்த்தி கூட பேசிட்டு இருந்தா பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க தாராம்மா” என்றார் வேணி.
“ம்மா..! நான் ஒன்னும் அவன் கூட தனியா எங்கையோ போய் பேசலை. அப்பறம் இது தோட்டம். சுத்தி எத்தனை பேர் இருக்காங்கன்னு பாருங்க. அன்ட் என்னோட அம்மா அப்பா நீங்களும் இங்க தான் இருக்கீங்க. மத்தவங்க தப்பா நினைக்கிறது இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறிங்க?” என்றாள் நேர் பார்வையாய்.
“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடா” என்றார் வேணி.
“நான் நினைக்கிறது இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறிங்க? நான் அகனுக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணும் போதும் இப்படித்தான் சந்தேகமா பார்த்துட்டு நின்னிங்க. நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு எனக்குத் தெளிவா தெரியுது” என்றாள்.
“விடுடா..! அம்மா பத்தி தான் தெரியும்ல. உன்னை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாதுன்னு அப்படி கேட்டுட்டா” என்றார் பூமிநாதன்.
அவர்கள் இருவரையும் ஆழ்ந்து பார்த்தவள் அடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்று விட,
“என்ன வேணி இதெல்லாம்?” என்றார் பூமிநாதன்.
“நான் என்னங்க பண்ணட்டும்? அந்த வசந்தி சாயந்தரம் கூட அப்படி பேசுறா? கார்த்திக்கு ஒண்ணுனா உன் பொண்ணு ஏன் துடிக்கிறா? அத்தனை பேர் பயந்து நிக்கிறோம். உன் பொண்ணு கொஞ்சம் கூட பயமில்லாம அவன் பக்கத்துல போறா? அவனை அடிக்கிறா? அவனும் அமைதியா இருக்குறான். இதையெல்லாம் பார்த்தா என்ன தோணும் எங்களுக்குன்னு? முகத்திற்கு நேராவே அப்படி கேட்குறாங்க? நான் என்ன பதில் சொல்லட்டும். இப்பவும் பார்த்துட்டு எதையும் பேசி வச்சிடக் கூடாதுன்னு தான் தாராவை வேண்டாம்னு சொன்னேன். அவளைப் பெத்தவ நானு, இதைக் கூட சொல்லக் கூடாதா?” என்றார் வேணி.
வேணிக்கு மற்றவர்கள் தன் மகளை குறை சொல்வதை பொறுக்க முடியவில்லை. தாராவிற்கு தாய் தன்னை நம்பாததை பொறுக்க முடியவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் பூமிநாதன் தான் மாட்டிக் கொண்டார்.
“உங்ககிட்ட என்ன பேசிட்டு இருந்தா?” என்றார் கணவரிடம்.
“சும்மா நிறுத்து வேணி. தாரா ஒன்னும் குழந்தை கிடையாது. அவ ஒரு டாக்டர். தனக்கு எது தேவை, தேவையில்லன்னு முடிவெடுக்குற அளவுக்கு அவளுக்கு அறிவு இருக்கு. கார்த்திக்குத் தான் கல்யாணம்றதும் அவளுக்கு மறக்காது. இனி இதைப் பத்தி பேசாம இருக்குறது தான் நமக்கு நல்லது” என்றார்.