அக்காவின் அறைக் கதவு அடை பட்டிருக்கவுமே தன் பெரியம்மாவிடம் போய் சத்தம் போட்டான் ரவி. அவனது பாட்டியும் வந்து விட்டார்.

“எனக்கு தெரியும்டா அந்த கடங்காரனை பத்திதான் இங்கேயும் பேச போறேன்னு, என்ன சொன்னான் உங்கிட்டன்னு எங்கள்ட்ட வந்து குதிக்கிற, பாரதி வாழ்க்கை நாசமா போனதே அவனாலதான்” என அரற்றினார் சொர்ணம்.

“நாசம் ஆக்கினதே நீங்க எல்லாரும்தான்” என கோவப் பட்டான் ரவி.

கோசலைக்கு எப்படி ரவியை சமாளிக்க என தெரியவில்லை. மூன்று வருடங்களாக அவனை பார்க்கிறாரே.

அவரது கணவரும் தவறிப் போன பின் இந்தக் குடும்பத்தை விட்டுக் கொடுத்து விடாமல் முன்னின்று அனைத்தையும் பார்ப்பவர்கள் சீனுவும் ரவியும்தான். ரவி ஒருதலை பட்சமாக எப்போதுமே பேச மாட்டான், தவறென தெரிந்தால் வெளிப்படையாக சொல்லி விடுவான். சமாளிக்க எதுவும் காரணம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்.

மகளின் வாழ்க்கையில் தவறிழைத்து விட்டோமோ என இப்போதுதான் நினைத்து பார்க்கிறார் கோசலை. அதிலும் தங்களின் அனைத்து தவறுகளையும் உணரவில்லை, மாப்பிள்ளையிடம் நயமாக பேசி இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும், அதை விடுத்து சண்டையாக்கியிருக்க கூடாது என்பதாக மட்டுமே அவரின் எண்ணம்.

“ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்ட்டிங்ல அக்கா இங்க வந்தா, பிரச்சனைய சரி பண்ணி வாழ வச்சிருந்தா நீங்கல்லாம் பெரியவங்க, அதை விட்டுட்டு அக்காவோட பத்து வருஷ வாழ்க்கையை கெடுத்திட்டீங்க” என குற்றம் சொன்னான் ரவி.

பாட்டி அவர் பாட்டுக்கும் பேச, அக்கா இருந்த அறையின் கதவை தட்டினான் ரவி.

பட்டென திறந்து கொண்டு வந்த பாரதியின் முகமே சரியில்லை, “லீவ் கேன்சல் பண்ணிட்டேன், நான் கிளம்பறேன்” என சொல்லி நிற்காமல் சென்று விட்டாள்.

அவனிடமிருந்து தப்பித்து செல்வது போலவே இருக்க, உடனடியாக மேலும் பேச வேண்டாம் என கருதி அப்படியே விட்டான் ரவி.

சீனு அரசு உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டவர். இப்போது ஸ்டேஷனரி ஷாப் வைத்திருக்கிறார், ரவியை நிதானமாக செயல்பட சொல் என மனைவியிடம் சொல்லி விட்டு அவரும் அவரது கடைக்கு சென்று விட்டார்.

ரவியின் தங்கையும் கல்லூரி சென்றிருக்க, அவனுக்கு நேரம் மெதுவாக சென்றது.

கணேசனுக்கு சொல்லும் விதமாக உருப்படியாக ஏதும் நடக்கவில்லைதான், ஆனாலும் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாரே என எண்ணி அவருக்கு அழைத்தான். பாரதி வேலைக்கு சென்று விட்டதாகவும் மாலையில் பேசுகிறேன் எனவும் சமாளிப்பாக சொன்னான்.

“உங்க பேச்சை கேட்டுகிட்டு நான் இங்கேயே இருந்தது தப்பு, பெத்த பொண்ணை ஒம்போது வருஷமா நேர்ல பார்க்காம இருக்க தகப்பனோட தவிப்ப உங்களால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா நீங்களும் அந்த குடும்பத்து பையன்தானே? அதை யோசிக்க மறந்திட்டேன். திரும்பவும் என் பொண்ணை எனக்கு தெரியாம எங்கேயாவது ஒளிச்சு வைக்க நினைக்கிறீங்களா? யார் தடுத்தாலும் நான் என் பொண்ணை பார்க்க நாளைக்கு அங்க வரத்தான் போறேன்”

“ஸார் ஸார்… நிதானம் இழந்து பேசாதீங்க, அப்படி செய்ய எனக்கு என்ன அவசியம்? இல்லை அப்படி செய்றவன் எதுக்கு ஷஷ்டி பத்தி  உங்கள்ட்ட சொல்லணும்?” என ரவி கேட்கவும், அமைதியாகி விட்டார் அவர்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க” என சொல்லி வைத்து விட்டான் ரவி.

கணேசன் பாட்டுக்கும் கிளம்பி வந்து விட்டால் பாட்டி ஏதாவது பேசுவாரோ, அக்காவும் கோவ படுவாளோ, இன்னும் சிக்கலாகி போகுமோ என ரவிக்கு யோசனை. ஆகவே அவரை இங்கு வர விடாமல் பார்த்துக் கொள்ளும் படி எச்சரிக்கை செய்ய தண்மதிக்கு அழைத்தான்.

முதல் முறை முழு ரிங் சென்றது. அவளுக்கு இன்று  விடுமுறை என்பது அவனுக்கு தெரியும், ஆகவே சற்று நேரம் பொறுத்து இன்னொரு முறை அழைத்தான். அதுவும் ஏற்க படாமல் போகவும் எங்கேயும் வெளியில் சென்று விட்டாளோ என நினைத்து, ‘கால் மீ’ என செய்தி அனுப்பி வைத்தான்.

சித்தப்பா சொன்னதன் காரணமாகத்தான் அவனது அழைப்பை ஏற்கவில்லை தண்மதி. ஆனால் குற்ற உணர்ச்சியானது. நானே தேடிப் போய்தானே உதவி கேட்டேன். இப்போது இப்படி செய்வது தவறு என நினைத்தவள் அடிக்கடி அவனது செய்தியை எடுத்து பார்த்து விட்டு அழைப்பதா வேண்டாமா என தடுமாறிக் கொண்டிருந்தாள்.

சமையலில் பிஸியாகி விட்டார் பூர்ணிமா. ரவியின் நண்பர்கள் யாரும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் இல்லை. ஆதலால் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்தவன் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு அழைத்து அவனுடன் உரையாடி நேரத்தை கழித்துக் கொண்டிருந்தான்.

தண்மதியிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஒரு முக்கியமான கால்’டா” என நண்பனிடம் சொல்லி விட்டு அவளது அழைப்பை வேகமாக ஏற்றான்.

“இன்னிக்கு லீவ்தானே உனக்கு, என் கால் ஏன் அட்டெண்ட் பண்ணல, வெளில இருக்கியா?” என விசாரித்தான்.

“இல்லை வீட்லதான் இருக்கேன், வேலையா இருந்திட்டேன்” பொய் என்பதால் அவளின் குரலில் உறுதியில்லை.

“ஏன் உன் வாய்ஸ் டல்லா இருக்கு மதி?”

“அப்படிலாம் இல்லையே” வேகமாக சொன்னாள்.

அவனுக்கு அவளின் செயல் என்னவோ விந்தையாக இருந்தது. ஆனாலும் அதைப் பற்றி கேட்காமல் கணேசனிடம் பேசியதை சொன்னான். “கண்டிப்பா ஒரு வாரத்துல ஷஷ்டிய உன் சித்தப்பா மீட் பண்ணலாம், இங்க நிலைமை ஓகேவா இல்லை, அதனால இப்ப இங்க வர விட்ராத” என்றான்.

“சித்தப்பாவும் பாவம் இல்லையா?”

“ம்ம்… எந்த குழப்பமும் ஏற்படாம நிரந்தரமா ஒரு தீர்வு வேணும்னுதான் நான் வெயிட் பண்ண சொல்றேன்”

“சரி, நான் என்னால முடிஞ்ச வரை பார்க்கிறேன். ஆனா இது சம்பந்தமா இனிமே சித்தப்பாகிட்டேயே பேசிக்கோங்க”

“என்ன… என்ன சொல்ல வர்ற?”

“அது… சித்தப்பாகிட்டேயே பேசிட்டா பெட்டரா இருக்கும்னு…”

“உன்கிட்ட பேச வேணாம்னு சொல்றியா?” என நேரடியாக கேட்டு விட்டான்.

அவளுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது.

“தப்பா சொல்லலை, நான் படிச்சிட்டு இருப்பேன், உங்க கால் அட்டெண்ட் பண்ண முடியாம போகும், அதுக்கு சித்தப்பாகிட்டேயே பேசிடலாம்னு… ஹ்ஹான் எனக்கும்தான் இதுல என்ன முடிவெடுக்க என்ன செய்யன்னு ஏதும் தெரியாதில்ல…” சரியாக சொல்லத் தெரியாமல் பேசினாள்.

அவளின் பதட்டம், தயக்கம், மாமா என அழைக்காதது என அனைத்தையும் கணக்கிட்டு கொண்டவன், “உன் சித்தப்பா உன்னை என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னாரா?” என சரியாக கேட்டான்.

ஒரு நொடி விக்கித்து போனவள், “இல்லையில்லை… சித்தப்பாவை தப்பா நினைக்காதீங்க” என்றாள்.

“சரி, நீ படி” என சொல்லி வைத்து விட்டான்.

இன்னும் சரியாக பழகவே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் என்ன சந்தேகம் வந்தது அவருக்கு? முதலடி எடுத்து வைப்பதற்குள் முட்டுக் கட்டை போட்டு விட்டாரே என ஆதங்கமாக நினைத்தான் ரவி.

தண்மதியிடம் இப்போது தன் விருப்பத்தை சொல்லும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அவள் திருமணத்துக்கு தயாராகும் வரை காத்திருக்கத்தான் நினைத்தான்.

அந்த காத்திருப்பு சமயத்தில் அவள் வேறு யாரையும் விரும்பி விட்டால்? என்ற கேள்வி எழாமல் இல்லை. என்னவோ அவனுக்காகவே அவள் என அவனுள் ஆழமாக ஒரு நம்பிக்கை.

‘ஸாரி, தப்பா எடுத்துக்காதீங்க’ என செய்தி அனுப்பினாள் தண்மதி.

நெற்றியை தடவிக் கொண்டு, வருத்தமான புன்னகையுடன், ‘இட்ஸ் ஓகே’ என பதில் அனுப்பினான்.

மகனுக்கு தேநீர் கொடுக்க வந்த பூர்ணிமா, “அவ்ளோ சீரியஸா யார் கூட சாட் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டார்.

அம்மாவை நிமிர்ந்து பார்த்தவன், “உன் வருங்கால மருமக கூட” என்றான்.

“யாரு… நீ! நிஜமா சொல்றேன் அப்படி யாரையாவது பார்த்து வைடா, பொண்ணு கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு, இதுல இண்டர்காஸ்ட் மேரேஜ் பண்ணினவங்க பையன் வேறயா நீ? ரொம்ப கஷ்டம்” என சொல்லி சென்றார்.

சமீபத்தில் திருமண பேச்சை எடுத்த போது, இப்போது வேண்டாம் என அசிரத்தையாக மறுத்திருந்தவன், யாரையும் காதலிக்கவில்லை என சொல்லியிருந்தவன் திடீரென காதலில் விழுந்திருப்பான் என அவரும்தான் எப்படி நினைப்பார்?

அம்மா சென்ற திசையை சிறு சிரிப்புடன் பார்த்து விட்டு, கைப்பேசியை பார்த்தான். மீண்டும் ‘ஸாரி’ என அனுப்பியிருந்தவளுக்கு, ‘எத்தனை ஸாரி? ரிலாக்ஸ் மதி’ என அனுப்பினான்.

அவளுக்குத்தான் மனம் பாரமாகி விட்டது. உதவியவரை நான் உதாசீனம் செய்கிறேனோ என தோன்றி விட, அழுகை வரும் போலானது.

அவள் ‘டைப்’ செய்வது செயலியில் தெரிந்தது, வெகு நேரமாக ‘டைப்பிங்’ என்றே காண்பித்தது, ஆனால் அவனுக்கு எந்த செய்தியும் வந்து சேரவில்லை.

தாடையில் கை வைத்து கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளது தவிப்பு புரிந்தது.

“ஹேய் உன்னை தப்பாலாம் நினைக்கவே இல்லை. கில்ட் ஆகாத, என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது. கணேசன் ஸார் சொல்றது போல நீ இதுல தலையிட்டுக்க வேணாம், நான் உனக்கு கால் பண்ண மாட்டேன், நீயும் என்கிட்ட பேச வேணாம். ஆனா நீ என் மாமா பொண்ணுதான், அதுல மாற்றமில்லை. இப்போ படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு” என வாய்ஸ் நோட் அனுப்பி வைத்தான்.

அதை கேட்டவளுக்கு அப்படியொரு சமாதானமாக இருந்தது. கைப்பேசியை தள்ளி வைத்தவள், “ச்சே ரொம்ப நல்ல மாமா” என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.