பெற்ற மகளை இப்படி ஒளிந்து மறைந்து பார்க்க வேண்டுமா என அவருள் கோவமும் ஆதங்கமும் எழத்தான் செய்தது. அதை தனக்கு உதவி செய்து கொண்டிருப்பவனிடம் போய் காண்பிப்பது முட்டாள் தனத்தின் உச்சம் என புரிந்து, சரியென சொல்லி வெளியேறினார் கணேசன்.
இரவு வீடு திரும்பிய கணேசனின் மனமெங்கும் மகளே நிறைந்து கிடந்தாள். ரவி சொன்னது போலவே காணொளி அழைப்பில் அவளை காண்பித்திருந்தான். தன் பக்கம் காணொளி வேலை செய்யவில்லை என சொல்லி குழந்தையுடன் உரையாடியிருந்தான்.
அன்று பள்ளியில் நடந்த கதை சொல்லி, பெண் பிள்ளை பூமி அதிர நடக்காதே என்ற கொள்ளு பாட்டியிடம் சண்டையிட்டதை பகிர்ந்து, நேற்று பல் விழுந்து விட்டதை வாய் திறந்து காண்பித்து பட படவென பேசிய மகளை நேரில் காண உள்ளம் துடித்தாலும், ரவி சொன்ன காரணங்களை முன்னிட்டு நிதானமாக இருந்தார்.
அம்மாவிடம் பெரிதாக எதையும் சொல்லவில்லை கணேசன். பாரதி வீட்டை விட்டு செல்ல அம்மாவின் வாய்த் துடுக்கும் காரணம் என்பது மனதில் நிற்க, சட்டென அவரிடமிருந்து ஒதுங்கியிருந்தார். மகள் பிறந்ததை மறைத்து விட்டார்கள் என்பதையும் ஜீரணிக்க முயல்கிறார்.
சித்தப்பா எதை பற்றியும் வாயே திறக்காமல் போனதால் பாட்டியின் புலம்பல் தாள முடியாமல் என்னவென கேட்டு ரவிக்கு செய்தி அனுப்பினாள் தண்மதி. அவன் அழைத்தே விட்டான்.
கணேசனின் மனநிலை, ஷஷ்டி பேசியதை அவர் பார்த்தது என எல்லாம் சொன்னான்.
“சித்தப்பா எங்கள்ட்ட எதுவுமே சொல்லலை” என குறை பட்டாள் தண்மதி.
“அவர் நிலையை யோசி, பாவம் மனுஷர் ஷாக்லேருந்து இன்னும் வெளில வரலை. நீ கவலை படாத, சீக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடலாம்”
“ம்ம்… சித்திகிட்ட பேசலையா நீங்க?”
“வீக் எண்ட் போறேன்”
“ஓ” என்றவளின் குரல் மெலிந்திருந்தது.
“உன் சித்தப்பா மாதிரியே அவசர படக்கூடாது”
“இல்லையில்லை… நீங்க உங்க வசதி படி போய் பேசுங்க”
“ம்ம்… என்ன நீ மொட்டை மொட்டையா பேசுற. தாராளமா மாமான்னு கூப்பிடலாம்” என்றான்.
“அது…” என தயங்கினாள்.
“உன் பாட்டிகிட்ட கூட கேட்டு பாரு, அப்படித்தான் நான் உனக்கு முறை”
“ஐயோ அது எனக்கே தெரியும்”
“அப்புறம்?”
“சட்டுன்னு அப்படி கூப்பிட வரலை”
“கூப்பிட கூப்பிட பழகிடும்”
“ம்ம்…”
“இந்த மாதிரி ஒரு சிலபல்’ல பேசுறத விடேன். எதுவா இருந்தாலும் நல்லா ஓபனா தைரியமா பேசு, என்ன?”
“சரி”
“ப்ச்”
“சரி மாமா” என தயங்கி தயங்கி அவள் சொல்ல, ரவியின் முகத்தை பார்க்க வேண்டுமே.
அவனது நிலை தண்மதிக்கு என்ன தெரியும், யார் என கேட்டுக் கொண்டு வந்த பரமேஸ்வரியிடம் கைப்பேசியை கொடுத்து விட்டாள்.
திடீரென பாட்டியின் குரல் கேட்கவும் அவனது முகம் அஷ்ட கோணலாகி விட்டது. நொடிகளில் இயல்பாகி அவருக்கும் ஆறுதலும் நம்பிக்கையும் தரும் விதமாக பேசி விட்டு வைத்தான் ரவி.
அந்த சனிக்கிழமை கணேசனுக்கு இருப்பு கொள்ளவில்லை, பேச போவதாக சொல்லி நேற்று மாலையே ஊருக்கு புறப்பட்டு விட்டான் ரவி. ஆனால் எந்த தகவலும் சொல்லியிருக்கவில்லை.
மகள் இருப்பது தெரிந்த பின்னும் அவன் பேசட்டும் என ஏன் காத்திருக்க வேண்டும், எனக்கில்லாத உரிமையா என அவருக்கு தோன்றியது. இங்கே இருக்கவும் முடியாமல் மகளிடம் செல்லவும் முடியாமல் அவஸ்தை பட்டார் மனிதர்.
மனம் பொறுக்காத தண்மதி, “ரவி மாமா நேத்து நைட்தானே அங்க போயிருப்பாங்க? காலையிலேயே என்னன்னு சொல்லுவாங்க? ஈவ்னிங்குள்ள ரவி மாமா ஏதாவது சொல்வாங்க, அது வரை வெயிட் பண்ணலாம் சித்தப்பா, நீங்க ரிலாக்ஸா இருங்க” என்றாள்.
“என்ன… அவர் உனக்கு மாமாவா?” என நெற்றி சுருக்கினார் அவர்.
“அது… அவங்கதான் அப்படி கூப்பிட சொன்னாங்க” என்றாள்.
அவள் அவனது வீடு சென்றது குறித்து இப்போதுதான் விசாரித்தார். அவளும் மீண்டுமொரு முறை விவரித்தாள். சித்தப்பாவின் துளைக்கும் பார்வையே ஏதோ தவறு செய்து விட்டதை போல அவளை குன்றச் செய்தது.
அவளின் வாடிய முகத்தை கண்டவர், தோளில் தட்டி கொடுத்து, “சரி விடு, ஏதோ எனக்கு நல்லது செய்ய போய் தெரியாத்தனமா இவ்ளோ தூரம் பண்ணிட்ட. இனிமேலாம் எனக்கு தெரியாம இப்படி செய்யக் கூடாது” என்றார்.
“ஸாரி சித்தப்பா, என் ட்ரெஸ் கிழிஞ்சப்போ பஸ்லாம் ஏத்தி விட்டு அவங்க ஹெல்ப் பண்ணினாங்க, நல்லவங்கன்னு பட்டது, அதனாலதான்… சஞ்சனாவையும் துணைக்கு கூட்டிகிட்டுதான் போனேன் சித்தப்பா”
“நீ போனதே தப்பு, இதுல அடுத்த வீட்டு பொண்ணையும் சேர்த்து அழைச்சிட்டு போயிருக்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு உன்னை கேள்வி கேட்டா நல்லாருக்குமா?”
“ரவி மாமா” என ஆரம்பித்தவள், “அந்த ஸார்…” என சொல்லி, அதையும் கை விட்டு, “அவங்க நல்ல மாதிரியாதான் நடந்துகிட்டாங்க. நிஜமா அவங்க ரொம்ப நல்லவங்க சித்தப்பா” என உள்ளே போன குரலில் சொன்னாள்.
கணேசன் என்ன நினைத்தாரோ, அண்ணன் மகளை ஆழ்ந்து பார்த்தவர், “அந்த குடும்பத்து உறவை நெருங்கினோம்னா வருத்தமும் வேதனையும்தான் மிஞ்சும் பாப்பா, இனி மேனேஜர்கிட்ட நீ பேச வேணாம்” என்றார்.
“ஹையோ சித்தப்பா! நான் உங்களுக்காகத்தான் பேச போனேன்” பதறினாள் தண்மதி.
“ம்ம்… இனி என் சம்பந்தமா நானே பேசிப்பேன், நீ பேச அவசியம் இல்லைனுதான் சொல்றேன். அவரே கால் பண்ணினாலும் இனிமே பேச வேணாம்ன்னு கட் அண்ட் ரைட்’டா சொல்லிடு. சித்தப்பா சொல்றத கேட்பதானே, இதுல தலையிடாத, உன் படிப்புல மட்டும் கவனம் வைக்கணும், சரியா?” என அவர் கேட்க, சரியென தலையாட்டி விட்டு சென்றாள் தண்மதி.
சித்தப்பா தன்னை தவறாக நினைக்கிறாரோ என்பதை அவளால் தாங்கவே முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் தனியாக சென்று ஒரு மூச்சு அழுது முடித்து, முகம் கழுவி தெளிந்து வந்தவள் நல்ல பிள்ளையாக பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டாள்.
ரவி அவனது முகநூல் பக்கத்தில் ஏதோ பொதுவான போஸ்ட் போட்டிருப்பான் போல, இவள் அவனை பின்தொடர்வதால் கைப்பேசியில் அறிவிப்பு காண்பித்தது.
கைப்பேசியின் தலையில் கொட்டியவள் அதை ஓரமாக வைத்து விட்டு ஏதோ சூத்திரத்தை மனப் பாடம் செய்தாள். மனம் ஒன்றுவேனா என அடம் பிடித்தது.
புத்தகத்தை கவிழ்த்து வைத்து விட்டு அவனுடைய போஸ்ட் என்னவென பார்த்தாள்.
‘பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும், அவை மௌனம், எதிர்ப்பு, அங்கீகாரம்’ என்ற விவேகானந்தரின் பொன்மொழியை போஸ்ட் செய்திருந்தான்.
கமெண்ட் பகுதியில் அவனது நண்பன் ஒருவன், ‘அப்படியென்ன சாதனை செய்ய போற, யாரும் பொண்ணை ஓகே சொல்ல வைக்கணுமா? மே ஐ ஹெல்ப் யூ?’ என கேட்டிருந்தான். அதற்கு கீழே, கரெக்ட், இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்கடா நீ, போர் அடிக்குதா மச்சான் என நிறைய கிண்டல் செய்திருந்தனர்.
இவளும் ஒரு ‘லைக்’ தட்டி விட்டவள், சித்தப்பா பேசியதை நினைவில் வைத்து உடனேயே ‘லைக்’ போட்டதை நீக்கி விட்டாள்.
அவளின் ‘லைக்’ கண்டு லேசாக புன்னகை செய்த ரவி, அடுத்த நொடி அது காணாமல் போகவும் புரியாமல் விழித்தான்.
“இங்க சித்தப்பா தவிச்சிட்டு இருக்கார், அவர் என்னடான்னா fb ல பிஸியா இருக்கார்!” என சலித்துக் கொண்டாள் தண்மதி.
பக்கத்து வீட்டிலிருந்து சத்தமாக ஏதோ பாடல் ஒலித்தது. எழுந்து பின்பக்கம் சென்று விட்டவள் நிஜமாகவே படிப்புடன் ஒன்றி விட்டாள்.