“அவங்க பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்மா” என்றார். அவள் அவரை சங்கடமாக பார்க்க,
“எல்லாத்தையும் கேட்டுட்டுத் தான் வந்தேன்” என்றார் சந்தான லட்சுமி நிதானமான குரலில்.
“கோபமில்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் பாட்டி. கொஞ்ச நேரத்துல நானே சரியாகிடுவேன். சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க, நீங்க அகனுக்கு அலையன்ஸ் பார்த்ததை இன்னும் கொஞ்சம் பெட்டரா பார்த்திருக்கலாம்” என்றாள் மனதில் உள்ளதை மறைக்காமல்.
‘எனக்கும் புரியுது தாரா. ஆனா, அவனுக்கு இருக்குறப் பிரச்சனையைக் காரணம் காட்டியே வந்த சம்பந்தம் எல்லாம் தட்டிப் போயிருச்சு. அவனும் கல்யாணமே வேண்டாம்னு உறுதியா இருந்தான். அதான் இங்க வரவே யோசிச்சான். இப்போ எல்லாமே என்னோட பிடிவாதத்துல தான் நடக்குது” என்றார்.
“எப்படி பாட்டி? அகனுக்கு இந்த பிரச்சனை பிறந்ததுல இருந்தே இருக்கா?” என்றாள் கவலையாய்.
“இல்லமா..! என் பொண்ணு அகல்யா இறந்ததுக்கு அப்பறம் தான் இப்படி ஆய்டுச்சு. அவனோட பத்து வயசு வரைக்கும் நல்லா பேசி, துறுதுறுன்னு இருந்த பையன் தான். அகல்யாவுக்கு கார்த்தின்னா உயிரு. எல்லா அம்மாவுக்கும் தலைப் பிள்ளை மேல தான் பாசம் அதிகம் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, அகல்யாவுக்கு கார்த்தி மேல தான் பிரியம் அதிகம். இவனும் அகல்யாவை விடாம அவ பின்னாடியே தான் சுத்திட்டு இருப்பான். ஒருநாள் கூட பிரியாம இருந்தவனுக்கு அவ ஒரேடியா பிரிஞ்சு போவான்னு தெரியலை. அந்த அதிர்ச்சியில பேச்சும் நின்னுடுச்சு, காதும் கேட்காம போய்டுச்சு. நாங்களும் பார்க்காத வைத்தியமில்லை. ஒரு கட்டத்துக்கு மேல அவன் இதையெல்லாம் வேண்டாம்னு சொல்லி, எல்லாத்துல இருந்தும் ஒதுங்க ஆரம்பிச்சுட்டான்.
என் பேரன்களுக்கு தாய் இல்லாம போய்டக் கூடாதுன்னு தான், தயாளனுக்கு அவங்க வீட்ல இன்னொரு பொண்ணை பார்த்தப்போ சரின்னு சொன்னேன். ரேவதியும் தயாளனுக்கு ரெண்டாம்தாரமா வாக்கப்பட்டு வந்தா. ரேவதியை குறையெல்லாம் சொல்ல முடியாது. நகுலன் அவகூட ஒட்டிகிட்டான். ஆனா கார்த்தி தான் ரேவதிகிட்ட ஒட்டவே மாட்டேன்னு சொல்லிட்டான். எப்பவும் சிடுசிடுப்பு, யாரைப் பார்த்தாலும் கோபம்னு நாளுக்கு நாள் அவன் வெறுப்பு வளர்ந்துட்டே தான் போச்சு. அதுலயும் தயாளனை சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சுட்டான். படிப்பு முழுக்க ஹாஸ்ட்டல்ல தான் இருந்து படிச்சான். அவன் சகஜமா இருக்குறது என்கிட்டே மட்டும் தான்டா” என்றார் கலங்கிய கண்களுடன்.
“அம்மாவோட இழப்பு அவரை அப்படி மாத்தியிருக்கலாம் பாட்டி. அப்பவே நீங்க இதை சரி பண்ணியிருக்கணும். இதை ஒரு வகையான பைபோலார் டிசார்டர்னு கூட சொல்லுவாங்க” என்றாள் கவலையாய்.
“அகல்யா இறந்த துக்கத்துல கார்த்தியை கவனிக்காம விட்டுட்டோம் தாரா. அந்த குற்ற உணர்ச்சி மனசுக்குள்ள இப்பவும் இருக்கும்மா” என்றார்.
நிம்மதியாக இருக்க வேண்டிய முதுமைக் காலத்தில் அவருக்குள் நிறைய மன அழுத்தம் இருப்பது தாராவிற்கு புரிந்தது.
“நீங்க ரொம்ப யோசிச்சு உங்களை வருத்திக்காதிங்க பாட்டி. நான் பார்த்த வரைக்கும் அகன் ரொம்ப ஸ்ட்ராங் பெர்சனா தான் தெரியறாரு. அவரோட சின்ன வயசு பிரச்சனைகளை தாண்டி வந்திருப்பார்னு தான் நினைக்கிறேன்” என்று தனக்கு ஆறுதல் கூறியவளை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் சந்தான லட்சுமி.
“அவனுக்கு மட்டும் ஒரு நல்லதைப் பார்த்துட்டா நான் நிம்மதியா சாவேன் தாராம்மா. என்ன பாவம் செஞ்சமோ? பெத்த மகளை எனக்கு முன்னாடியே தூக்கிக் குடுத்துட்டேன். சேதுவுக்கு குழந்தை இல்லை. பேரனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை” என்ற லட்சுமியைப் பார்த்த தாராவிற்கு பாவமாய் இருந்தது.
“எது எப்படியோ என் பேரன் ஓவர் ஸ்மார்ட்டா இருக்கான்னு இப்படி ஒரு அழகான பொண்ணு சொல்லும் போது, அவனோட பாட்டி எனக்கு பெருமையாத் தான்டா இருக்கு” என்று லட்சுமி பதில் கொடுக்க,
“என்ன வேணி? நிஜமாவே தாரா நல்லா பேசுற. அவ பேசாம இருந்தாத்தான் ஒரு மாதிரி இருக்கும். இத்தனை நாள் அமைதியா இருந்த வீடு. இப்பத்தான் கலகலன்னு இருக்கு. தாராவை நீ எதுவும் சொல்லக் கூடாது பார்த்துக்கோ” என்றார் லட்சுமி.
“அய்யோ பெரியத்தை எல்லாம் நடிப்பு. அவ தான் எங்களை ஏதாவது சொல்லாம இருக்கணும். இன்னுமா இவளை நம்புறிங்க?” என்ற வேணியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் யுகந்தாரா.
“பாட்டி நான் உங்க பேரனை சைட் அடிச்ச விஷயத்தை டாடி மம்மிகிட்ட கன்வே பண்ணிட்டார். அதான் மம்மி வந்ததும் வராததுமா எனக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க. உங்களுக்குத் தான் புரியலை. பட் வேணி மகளான எனக்கு திவ்யமா புரிஞ்சது. நான் சொன்னது சரிதானம்மா” என்றாள் வேணியைப் பார்த்து.
வழக்கம் போல் மகளின் சாதூர்யத்தை நினைத்து பெருமைப்பட்ட வேணி,
“ஆமா” என்பதைப் போல் தலையை ஆட்டினார்.
“ஆங்..! அப்பறம் மம்மி மீட் மை சைட்… சாரி சாரி மை பிரண்ட் அகன் கார்த்திகேயன்” என்று அகனைக் காட்ட, அவனோ இவர்கள் வந்ததைக் கூட அறியாமல் தீவிராமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
யுகந்தாரா அவனையே இரண்டு நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று நிமிர்ந்தவன்,
“என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தி.
அங்கிருந்த மூவரும் அவர்களை ஆச்சர்யமாய் பார்க்க,
“அகன், ஷீ இஸ் மை மாம் வேணி பூமிநாதன்” என்றாள்.
எழுந்து அவர்களின் அருகில் வந்தவன், ஒரு புன்சிரிப்புடன் வேணியைப் பார்த்து தலையாட்ட, சந்தானலட்சுமியோ ஏதோ அதிசயத்தைப் பார்த்தவர் போல் ஆச்சர்யமாய் நின்றிருந்தார்.
“ஷாக்கைக் குறைங்க பாட்டி. எப்படி என்னோட ட்ரெயினிங்? வேற லெவல்ல” என்று கண் சிமிட்டியவளைப் பார்த்த லட்சுமிக்கு கண்களே கலங்கிவிட்டது. அகன் அவன் கூட்டை விட்டு வெளியே வந்திருப்பது லட்சுமியைப் பொறுத்தவரை சாதாரண விஷயமில்லை.
“அப்படியே அகல்யா அத்தாச்சியை பார்த்த மாதிரியே இருக்கு பெரியத்தை” என்றார் வேணி.
“நீ ஒரு ஆள் தான் பாக்கி வேணி. நீயும் இப்போ சொல்லிட்ட” என்ற லட்சுமிக்கு கண்ணீரையும் மீறி ஒரு சந்தோசம்.
“நீங்க போய் ரெஸ்ட் எடுங்கம்மா. நான் அப்படியே தோட்டத்தை சுத்திப் பார்த்துட்டு வந்திடுறேன். அப்பா நைட் டிபன் நீங்க செய்ய வேண்டாம். மாஸ்டர்ஸ செய்யச் சொல்லுங்க. அகனுக்கு மட்டும் பண்ணிக்கலாம்” என்று ஆர்டர் போட,
“அது எப்படிடா சரியா வரும். எனக்கொன்னும் கஷ்ட்டமில்லை” என்றார் பூமி.
“டாடி! டாக்டர் என்ன சொல்லியிருக்காங்க” என்றாள் அழுத்தமாய்.
“அந்த டுபாக்கூர் டாக்டருக்கு வேற வேலை இல்லைம்மா” என்று பூமிநாதன் சொல்ல,
“தகப்பா” என்று முறைத்தாள் யுகந்தாரா.
“அது யாருப்பா மடத்துக்குளத்துல டுபாக்கூர் டாக்டர். எனக்குத் தெரியாம?” என்று சந்தான லட்சுமி சந்தேகமாய் கேட்க,
“வேற யாரு பெரியத்தை? எல்லாம் இவ தான்” என்ற வேணியின் பதிலில் இப்போது அகனும் சேர்த்து திகைத்திருந்தான்.
“தாரா டாக்டரா?” என்றார் லட்சுமி.
“பாட்டி இதென்ன காந்தி செத்துட்டாரான்ற மாதிரி கேட்குறிங்க?” என்றாள் பாவமாய்.
“பூமி நீ கூட சொல்லவே இல்லை. நிஜமா எனக்குத் தெரியாதுடா தாரா” என்றார் லட்சுமி.
“நான் அவ்வளவு பெரிய டாக்டர் எல்லாம் இல்லை பாட்டி. இப்போதான் எம்பிபிஎஸ் முடிச்சு இன்டர்ன்ஷிப் முடிச்சிருக்கேன். என்ட்ரன்ஸ் எழுதியிருக்கேன். ரிசல்ட் வந்ததும் பிஜி ஜாயின் பண்ணனும்” என்றாள்.
“என்ன பூமி இது? டாக்டர் புள்ளைய கூட்டிட்டு வந்து வேலை செய்ய வச்சுகிட்டு இருக்க?” என்றார் கோபமாய்.
“பாட்டிமா, நான் டாடியைப் பார்த்துக்கத் தான் வந்தேன். நான் எங்க வேலை செஞ்சேன். நீங்க சொன்னிங்களேன்னு தான் அகனுக்கு எடுத்துட்டு போனேன். இல்லைன்னா நானாவது வேலை செய்றதாவது. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க?” என்றவளின் பேச்சில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
அவளையும் அவள் பேச்சினையும் புரிந்து கொண்ட அகனுக்கு, முதன் முறையாக மனதிற்குள் ஏதோ இடறியது.
“அவரே பல வருஷம் கழிச்சு வந்திருக்கார். அவருக்கு எப்படி தெரியும்? நீங்க வாங்க” என்றாள் மீண்டும்.
“சரிடா, நீ முன்னாடி போ. நான் என்னோட கண்ணாடியை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றார்.
யுகந்தாரா தோட்டத்தை நோக்கி செல்ல, அகனின் கால்களும் தன்னால் அவள் பின்னால் சென்றது.
வேகமாய் சென்றவள்,”அப்பா என் போன்” என்றபடி சட்டென்று திரும்ப, பின்னால் வந்த அகனின் மேல் மோதிய வேகத்தில் தடுமாறியவளை இடையோடு பிடித்து நிறுத்தினான் அகன்.
அவனின் நெருக்கமும், தன் இடையில் அழுத்தமாய் பதிந்திருந்த அவன் கரமும், அவளுக்குள் இனம்புரியாத அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. உடலில் அட்ரினல் தன் வேலையைக் காட்ட, பைட் ஆர் பிளைட் ஹார்மோனுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
சட்டென்று அவனிடமிருந்து விலகியவளுக்கு, தன்னை அடக்கி, தன் மனதையும் சேர்த்து அடக்குவது பெரும் பாடாய் இருந்தது.
இதழ்மூடிய சிரிப்புடன், அவன் இமைகளை மூடித் திறந்ததைப் பார்த்த யுகந்தாராவிற்கு “எங்கே அவன் தன்னைக் கண்டு கொண்டானோ?” என்ற சந்தேகம் வந்திருந்தது.
பார்க்காதவள் போல் அவனைப் பார்க்க, அவனோ இன்னும் அதே சிரிப்புடன் தான் அவளைப் பார்த்திருந்தான்.
“இவன் என்ன சிலுக்கு மாதிரி கிளுகிளுப்பு காட்றான். அவன் ஸ்டெடியா தான் இருக்கான். நான் தான் அப்பப்போ சிலிப் ஆகிடுறேன். தாரா நீ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது, ஸ்டெடி” என்று தனக்குத் தானே முனுமுனுக்க, அவள் முன் சொடக்கிட்டான் அகன்.
“என்ன?” என்றாள்.
“போகலாமா?” என்றான், ஒரு கையை முன்னால் நீட்டி.
“ம்ம்.. நீங்க முன்னாடி போங்க பிரண்ட்” என்றாள் ஒட்ட வைத்த புன்னகையுடன்.
“இவன் கல்யாணம் முடியிற வரைக்கும் என்னை என்கிட்ட இருந்து முதல்ல காப்பாத்தி வைக்கணும்” என்று நினைத்துக் கொண்டாள்.
முன்னே சென்ற அகனும், அவள் தன் மேல் மோதிய உணர்வில் இருந்து வெளி வரவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் இருந்தான். அது அவனின் முகத்திலும் தெரிய, மன அமைதி தந்த தேஜஸ் அவனை இன்னும் அழகனாக்கியிருந்தது.