அத்தியாயம் 3 :

“அய்யோ பார்க்குறானே! பார்க்குறானே!” என்று வேகமாய் மறுபுறம் திரும்பிக் கொண்டவளுக்கு இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது.

“என்னா பார்வைடா சாமி? எப்பவும் பொண்ணுங்க தான் இப்படி ஆளை மயக்குற பார்வை எல்லாம் பார்ப்பாங்க. இங்க என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறான்?” என்று தனக்குத் தானே அவள் பேசிக் கொண்டிருக்க,

“தாராம்மா, இதை கார்த்தி தம்பிக்கு குடுத்துட்டு வந்துடுடா” என்ற பூமி நாதனின் குரலில் கோபமாய் திரும்பினாள்.

“இவருக்கு மகளோட மனசைப் பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா?ஏற்கனவே மனசு மத்தளமா அடிக்குது. இதுல மறுபடியும் முதல்ல இருந்தா?” என்று நொந்து கொண்டாள்.

“என்னம்மா யோசனை?” என்றார் பூமி.

“உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லப்பா” என்றவளை அவர் கேள்வியாகப் பார்க்க,

“எனக்கு வயசு என்னாச்சு?” என்றாள்.

“அது, இருபத்திநாலு முடிய இன்னும் ரெண்டு நாள் தான்மா இருக்கு” என்றார் எதார்த்தமாய்.

“இருபத்தி அஞ்சு வயசு ஆகப் போகுதே? பெத்த புள்ளைக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணனும்னு நினைப்பிருக்கா உங்களுக்கு? இப்படி எல்லார் கல்யாணத்துக்கும் சமைக்கிறிங்களே, மக கல்யாணத்துக்கு சமைக்கணும்னு எண்ணம் இருக்கா உங்களுக்கு?” என்றாள் கடுப்புடன்.

“என்னடா சொல்ற? நீதானடா இப்போதைக்கு கல்யாணத்தை பத்தி பேச்சே எடுக்கக் கூடாதுன்னு ஆர்டர் போட்ட? நானும் அம்மாவும் எவ்வளவு கெஞ்சுனோம்?” என்றார் பாவமாய்.

“ஆமால்ல..! அப்படி வேற சொன்னேனோ?” என்றவள் தந்தையின் முகத்தைப் பார்த்து பக்கென்று சிரித்து விட்டாள்.

“டாடி நான் சும்மா கிண்டல் பண்ணேன், உடனே ஜாதகத்தை தூக்கிட்டு கிளம்பிடாதிங்க. என்ட்ரன்ஸ் ரிசல்ட் வரணும், நான் பிஜி பண்ணனும் இப்படி இன்னும் எவ்வளவு கனவு இருக்கு” என்றவள் அகனுக்கான உணவை எடுத்துக் கொண்டாள்.

“நான் போய் அந்த AP க்கு குடுத்துட்டு வந்திடுறேன். என்ன அவனைப் பார்த்தா மட்டும் தான் மைன்ட் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகுது டாடி” என்றாள்.

“நிஜமாவே உனக்கு கார்த்தி தம்பியை பிடிச்சிருக்காடா தாரா?” என்றார் யோசனையுடன்.

“ஆமா டாடி, பேசாம அவனைக் கடத்திருவோமா? அங்கிள் ஹீரோயினா மாறிடவா?” என்றாள் சீரியசான முகத்துடன்.

“அங்கிள் ஹீரோயினா?”

“ஆமா டாடி! ஆன்ட்டிக்கு ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ. அப்போ அங்கிள் ஹீரோயின் கரெக்ட் தான?” என்றாள்.

பூமி நாதன் மகளை இப்போது நன்றாக முறைக்கத் தொடங்கினார்.

“சரிசரி கோபப்படாதிங்க டாடி. என்ன இருந்தாலும் அவன் இப்போ என்னோட பிரண்ட் லிஸ்ட்ல வந்துட்டான். சோ இனி சைட் அடிக்க மாட்டேன். அடுத்த வாரம் அவனுக்கு கல்யாணம். அதை மறப்பேனா?” என்றவள் அவனைத் தேடி சென்றாள்.

“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன். உனது உணவு, அதை நான் எடுத்துக் கொண்டு வந்தேன்” என்று பாடியபடி மாடியேறிவளை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் வசந்தி.

அவனின் அறைக்கதவு மூடியிருக்க, கதவை இரண்டு முறை தட்டினாள் தாரா. கதவு திறப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.

“உள்ள என்னதான் பண்றான் இந்த பம்பரக்கட்ட மண்டையன். கதவைத் திறக்க இவ்வளவு நேரமா?” என்று அவள் முனுமுனுக்க,

“கதவைத் தட்டினா அவன் எப்படி திறப்பான் லூசே! அவனுக்குத் தான் காது கேட்காதே” என்று அவள் மனசாட்சி எடுத்து சொல்ல,

“ஆமால்ல..! அப்பப்போ இதை வேற நான் மறந்திடுறேன். இப்போ எப்படி அவனைக் கூப்பிடுறது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கதவைத் திறந்திருந்தான் அகன் கார்த்திகேயன்.

அறைக்குள் நுழைந்தவள் அவனை சந்தேகமாய் பார்த்தாள்.

“கேட்காதுன்னு சொன்னாங்க, நான் தட்டினது எப்படி கேட்ருக்கும்? எப்படி சரியா கதவைத் திறந்தான்?” என்று அவனை யோசனையுடன் பார்த்து வைத்தாள்.

“என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தி.

அவளோ புரியாமல் குழப்பத்துடன் நிற்க, அவன் தன் அலைபேசியின் திரையை அவளிடம் காட்டினான். அவன் அறைக்கு வெளியே இருந்த காமிராவில் அவள் வந்து நிற்பது பதிவாகியிருந்தது.

“ஹோ..! கொஞ்ச நேரத்துல உன்னை சந்தேகப்பட்டுட்டேன்டா பம்பரக்கட்ட மண்டையா?” என்று அவள் கீழே குனிந்து முனுமுனுத்தாள்.

அவன் ஓசிடி பிரச்சனையின் காரணமாக அந்த அறையே அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஒரு தூசி தென்படவில்லை.

“இதென்ன மியூசியம் மாதிரி இருக்கு?” என்றவளின் எண்ணவோட்டம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவள் முன் சொடக்கிடவும் தான் நிஜத்திற்கு வந்தாள்.

“ஹாங்..! சொல்லுங்க அகன்” என்றாள்.

அவளின் அகன் என்ற அழைப்பில் சட்டென்று அவன் முகம் இறுகியது. அவன் குடும்பத்தினருக்கு அவன் எப்போதும் கார்த்தி மட்டுமே. அவனை அகன் என்று அழைக்கும் ஒரே ஜீவன் அகல்யா மட்டுமே. அவருக்கு பிறகு இவள் தான் அப்படி அழைத்திருக்கிறாள்.

“இங்க வச்சுட்டு போங்க தாரா. நான் சாப்பிட்ட பிறகு செர்வன்ட் வந்து எடுத்துப்பாங்க” என்று அவன் மொபைலில் டைப் செய்து காட்ட,

“ஓகே..! பட் வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டு முடிச்சுடுங்க” என்றவள் கிளம்ப எத்தனிக்க,

அவளை அழைக்க முற்பட்டவன், அவளின் கையைப் பிடித்து தடுத்திருந்தான். அவன் தொடுகையில் விதிர்விதிர்த்தவள் சட்டென்று கையை இழுத்துக் கொண்டு அவனைப் பார்த்து முறைக்க,

“நீங்க இன்னும் சாப்பிடலைன்னு தெரியுது. என் கூட லஞ்ச் ஷேர் பண்ணுங்களேன். நம்ம பிரண்ட்ஸ் ஆனதை செலிபரேட் பண்ணுவோம்” என்று அவன் டைப் செய்து காட்ட,

“நீ இவ்வளவு கஷ்ட்டப்பட்டு டைப் பண்ணி எல்லாம்  காட்ட வேண்டாம். நீ கண்லயே பேசு ராஜா. அதான் எனக்கு நல்லா புரியுதே. சும்மாவே இவனைப் பார்த்தா ஹார்மோன்ஸ் எல்லாம் கதக்களி ஆடும். இப்போ இது வேறையா?” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்தாள். அவனுக்குப் புரிய கூடாது என்பதற்காக  முகத்தை குனிந்து கொண்டு புலம்பிக் கொண்டிருக்க, அவனோ நமட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான்.

“செலிபரேட் பண்ணலாம் தான், ஆனா பாருங்க நான் உங்களுக்கு மட்டும் தான் எடுத்துட்டு வந்தேன். இதுல எப்படி ஷேர் பண்றது. இதெல்லாம் எனக்குப் பத்தாது. அது மட்டுமில்லாம, இதுல இருக்குற ஐட்டம்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப அலர்ஜி. எனக்கெல்லாம் சோறு சோறு, குழம்பு குழம்பு, ரசம் ரசம்னு  தான் செட்டாகும். இந்த ஆஸ்திரேலியன் ஐட்டம்ஸ் எல்லாம் எனக்கு செட்டே ஆகாது” என்றாள்.

வந்த சிரிப்பை அடக்கியவன், அவளை விடாமல் கையைப் பிடித்து அங்கிருந்த டேபிளின் முன் அமர வைக்க,  அவளுக்கோ இதயம் எக்குத் தப்பாய் துடிக்கத் தொடங்கியது.

அவளுக்கு ஒரு பிளேட்டில் வைத்துக் கொடுத்தவன், தனக்கும் எடுத்துக் கொள்ள, அதுவரை அவனைத் தான் பார்த்திருந்தாள் யுகந்தாரா.

அவன் கை விரல் நகங்களில் கூட ஒரு சிறு அழுக்கில்லை. அவன் பரிமாறிய விதமே அவனின் ரசனைத் தன்மையை உணர்த்தியிருந்தது. உணவைக் கூட ஒரு நேர்த்தியுடன் பரிமாறியிருந்தான்.

அவன் பழக்கம் போல் கால்மேல் கால்போட்டபடி சாப்பிட,

“இந்த மன்மத துரை சாப்பிடுறப்பக் கூட கால்மேல கால் போட்டுத்தான் உட்காருவாரோ?” என்று நொடித்துக் கொண்டவள்,

“சாப்பிடும் போது இப்படி உட்காரக் கூடாது. அது சாப்பாட்டை அவமதிக்கிற மாதிரி. நேரா உட்காருங்க அகன்” என்றாள் அவன் முகம் பார்த்து.

ஒரு சின்னப் புருவச் சுருக்கத்துடன் அவளைப் பார்த்தவன், அதிகமாய் பிகு செய்யாமல் நேராய் அமர்ந்து சாப்பிட,

“பார்றா, திமிர் பிடிச்சவன் சொன்ன உடனே கேட்டுகிட்டான்” என்று எண்ணியவள் அவனுக்கு முன்பே சாப்பிட்டு முடித்திருந்தாள்.

“உங்க லஞ்ச்க்கு ரொம்ப நன்றி. கீழ வாங்களேன், என்னோட லஞ்ச்சை ஷேர் பண்றேன்” என்றாள்.

“இன்னும் சாப்பிட போறியா?” என்பதைப் போல் அகன் பார்த்து வைக்க,

“அப்பறம் இதெல்லாம் என்னோட சிறு குடலுக்கு கூட பத்தாது. என்னோட அப்பா வகை வகையா சமைச்சுப் போட்டு வஞ்சனையே இல்லாம வக்கனையா சாப்பிட்டு வளர்ந்தவ நானு. எனக்கு இதெல்லாம் பத்தாது. வந்தா வாங்க, இல்லைன்னா இருங்க. நான் என் டாடி கூட சாப்பிட்டுக்குவேன்” என்றவள் சிட்டாய் பறந்து விட்டாள்.

அவனின் அறைக்கு வெளியே சென்று நெஞ்சில் கை வைத்து உதடு குவித்து மூச்சை வெளியிட்டுக் கொண்டிருந்தவளை அலைபேசியின் திரையில் சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“கிரேசி கேர்ள்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.