அங்கு சந்தானலட்சுமி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு செல்ல,

“என்னம்மா வீடே மாறியிருக்கு?” என்றார் சுகந்தி.

“சும்மாவே அந்த பொம்பளை பணக்காரத் திமிரைக் காட்டும். இப்போ கார்த்தி கல்யாணம் வேற? சொல்லவா வேணும்” என்றார் பரமேஸ்வரி.

“நம்ம வீட்டு பையன் கல்யாணத்துக்கு இப்படி மூணாவது மனுஷங்க மாதிரி வர வச்சுட்டாங்களே? பொண்ணைக் கூட போட்டோவுல காட்டினதோட சரி. எல்லாம் அண்ணன் குடுக்குற இடம்” என்று பொருமித் தள்ளிக் கொண்டிருந்தார் சுகந்தி.

“சரி விடு சுகந்தி. எது எப்படி இருந்தாலும் நகுலனுக்கும், கார்த்திக்கும் சொத்துல பங்கு தருவாங்களே. அதுக்காகவாவது அமைதியா தான் இருக்கணும்” என்றார் பரமேஷ்வரி.

அவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்திக்கோ உள்ளுக்குள் பற்றி எறிந்தது.

“அப்படி என்னங்ம்மா தீவிரமா பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டே விட்டார் வசந்தி.

“அது ஒண்ணுமில்லை வசந்தி. பொண்ணு வீட்டுக்காரங்க எப்போ வர்றாங்கன்னு பேசிட்டு இருந்தோம். உன்னோட அக்கா பொண்ணு தான வசந்தி. உனக்குத் தெரியாமையா இருக்கும்?” என்றார் சுகந்தி.

‘என் அக்காக்காரி என் பேச்சை எங்க கேட்குறா? என்னோமோ உலகத்துல கிடைக்காத சம்பந்தம் மாதிரி என் மாமியார் கேட்ட உடனே தலையை ஆட்டிட்டா. நான் எவ்வளவு எடுத்து சொன்னேன்? கேட்டாளா பாவி’ என்று மனதிற்குள் நினைத்தவர்,

“அவங்களும் இன்னைக்கு வந்துடுவாங்க சுகந்திக்கா” என்றார் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்.

“உன் அக்கா மகளுக்கு என் பேரன் கார்த்தியைக் கட்டிக்க குடுத்து வச்சிருக்கணும் வசந்தி. நான் பார்த்திருந்தா என் பேரனுக்கு இன்னும் நல்ல பொண்ணாவே பார்த்திருப்பேன்” என்று பரமேஸ்வரி அங்கலாய்ப்பாய் சொல்ல, கோபத்தில் புவியரசுவை முறைத்தார் வசந்தி.

‘இந்த பரமேஸ்வரி அத்தை சும்மாவே இருக்க மாட்டாங்களா? ஏற்கனவே என் பொண்டாட்டிக்காரி ஆடுவா. இவங்க இன்னும் கொளுத்திப் போட்டுட்டே இருக்காங்க” என்று நொந்து கொண்டார் புவியரசு.

“கார்த்திக்கு உங்களைப் பொண்ணுப் பார்க்க வேண்டாம்னு நான் சொல்லவே இல்லையே? சொல்லப் போனா உங்களால முடியாததுனால தான் நான் பார்த்திருக்கேன்” என்று அவரின் வாயை அடக்கியிருந்தார் சந்தான லட்சுமி.

“சபாஷ்” என்று மனதிற்குள் குதூகலித்தார் ரேவதி. அவரால் இப்படி பட்டென்று பேச முடியாதே.

“கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன்ம்மா” என்று தயாளன் பொறுமை இழக்கவும் தான், பரமேஸ்வரி வாயை மூடினார்.

“மத்த விஷயம் எல்லாம் பொண்ணு வீட்டுக்காரவங்ககிட்ட பேசிட்டிங்களா அத்தை” என்று ஒரு தயக்கத்துடன் லட்சுமியிடம் கேட்டார் தயாளன்.

“எல்லா விஷயமும் தெளிவா பேசிட்டேன் தயாளா.ஒரு பிரச்சனையுமில்லை” என்றார் லட்சுமி தீர்க்கமாய்.

“நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்” என்பதோடு முடித்துக் கொண்டார்.

அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்து சம்பாஷணைகளையும் கவனித்தபடி அமர்ந்திருந்த அகன் கார்த்திகேயனுக்கு எதுவோ சரியில்லை என்று உள் மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது.

இதோ அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பெண் வீட்டினரும் வந்திருந்தனர். அந்த வீடே ஆட்களின் வருகையால் கலைகட்டியிருந்தது. மணப் பெண் கார்த்திகா மிக அழகாக இருந்தாள்.

“நல்ல பொண்ணாத்தான் பார்த்திருக்காங்க. கார்த்திக்கு ஏத்த ஜோடி தான்மா. போட்டோல பார்த்ததை விட நேர்ல இன்னும் நல்லா இருக்கா. கார்த்தி, கார்த்திகா பேர் பொருத்தமும் நல்லா இருக்கு” என்றார் சுகந்தி.

அதிலும் வந்தவள் நேராக சந்தான லட்சுமியின் காலில் விழ, அவளின் செய்கையில் அனைவருக்கும் சந்தோசம்.

“கார்த்தி இது தான் கார்த்திகா” என்றார் சந்தான லட்சுமி.

“ஹாய்” என்றாள் அளவான சிரிப்புடன்.

அவனோ பதில் ஏதும் பேசாமல் அவளை பார்வையால் எடை போட்டான். பிறகு போனால் போகுதென்று தலையை லேசாக ஆட்டி வைத்தான்.

“ஏன் சிரிச்சா குறைஞ்சு போய்டுவானா உங்க அக்கா மகன்” என்று வசந்தி பல்லைக் கடிக்க, புவியரசுவின் நிலை தான் அங்கு திண்டாட்டம்.

“கல்யாணத்துக்குத் தான் இன்னும் ஒன்பது நாள் இருக்கே. அதுவரைக்கும்

பொண்ணும் இதே வீட்ல இருந்தா நல்லாவா இருக்கும்?” என்றார் பரமேஸ்வரி.

“அவ எனக்கு அக்கா பொண்ணு. வந்திருக்கிறது என்னோட அக்கா குடும்பம். இவரோட அக்கா குடும்பம் நீங்க இருக்கும் போது, அவங்க இருக்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றார் வசந்தி.

“வசந்தி கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று அடக்கினார் தாமரை.

“விடு வசந்தி, அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க. நாங்க வேணும்னா அவுட் ஹவுஸ்ல தங்கிக்கிறோம்” என்றார் வசந்தியின் அக்கா.

“நீங்க ஏன் அவுட் ஹவுஸ்ல தங்கணும். நீங்க இங்கயே தங்குங்க” என்றார் வசந்தி பிடிவாதமாய்.

“வசந்தி சொல்றது தான் சரி. அவுட் ஹவுஸ்ல தங்கினா அது மரியாதையா இருக்காது. இங்கயே தங்குங்க” என்றார் சந்தான லட்சுமியும்.

“சரிங்க அத்தை” என்றார் வசந்தியின் அக்கா. கார்த்திகாவோ வெகு பவ்வியமாய் அமர்ந்திருக்க, அகனின் பார்வையோ அவளையே துளைத்துக் கொண்டிருந்தது.

அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கார்த்திகா குனிந்து கொண்டாள். அவனை போட்டோவில் தான் பார்த்திருந்தாள். இப்போது நேரில் பார்த்ததும் அவன் மேல் அப்படி ஒரு மயக்கம் அவளுக்கு.

‘என்னமா இருக்கான்’ என்று நினைத்துக் கொண்டாள் கார்த்திகா.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தாள் யுகந்தாரா.

“பாட்டி லஞ்ச் ரெடி. நீங்க சொன்னிங்கன்னா செர்வ் பண்ண சொல்லிடுவோம். ஆல்ரெடி வெளிய வேலை பார்க்குறவங்களுக்கு பந்தி போயிட்டு இருக்கு” என்றாள் தகவலாய்.

“இங்க எடுத்துட்டு வந்து வச்சுடுங்கமா. நான் பரிமாறிக்கிறேன்” என்றார் தாமரை.

“அதான் அத்தனை பேர் வேலைக்கு இருக்காங்களே, நீங்க ஏன் பரிமாறனும்? பேசாம இருங்கக்கா” என்றார் வசந்தி.

“அது உங்க இஷ்ட்டம் சித்தி” என்றாள் தாரா.

“இதென்ன புதுசா சித்தி?” என்று வசந்தி ஆரம்பிக்க,

“நான் தான் முறை சொல்லி கூப்பிட சொன்னேன் வசந்தி. பூமிநாதன் வெளி ஆள் கிடையாது. நம்மளோட சொந்தம். நான் அவனுக்கு பெரியம்மா. அதான் எல்லாரையும் முறை சொல்லி கூப்பிட சொல்லியிருக்கேன்” என்றார்.

“உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் கூப்பிடலை. அப்படி உங்களை சித்தின்னு கூப்பிட்டே ஆகவேண்டிய கட்டாயம் எனக்குக் கிடையாது. ஏற்கனவே என் அம்மா வகையில எனக்கு நிறைய பாசக்கார சித்திங்க இருக்காங்க” என்றாள் தாரா பட்டென்று.

“இந்த பொண்ணுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்மா. வசந்தி எல்லாரையும் ஆட்டி வைப்பா. அவளுக்கே இவ ஆப்படிக்கிறாளே” என்றார் சுகந்தி.

“தாராம்மா, இப்படி பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல” என்று பூமிநாதன் ஒரு அதட்டலுடன் வரவும், வேறு வழியின்றி வாயை மூடினாள்.

அவள் முகத்தைத் தூக்கி வைத்திருப்பதைப் பார்த்த அகனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஏதோ சிறு குழந்தை பலூன் கேட்டு அடம் பிடிப்பதைப் போல் வைத்திருந்தாள் முகத்தை.

“விடு பூமி சின்ன பொண்ணு தான” என்று லட்சுமி தான் பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.

“தாராம்மா, கார்த்தி தம்பிக்கான மெனு எல்லாத்தையும் அவர் ரூம்ல வச்சுட்டு வந்திடுடா” என்ற தகப்பனை முறைத்தாள்.

“கார்த்திக்கு எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கணும். அவனுக்கு ஒசிடி பிரச்சனை இருக்கு பூமி” என்றார் லட்சுமி.

“தம்பி ஏற்கனவே சொல்லிடுச்சு பெரியம்மா” என்றார் பூமிநாதன்.

“சுத்தத்துக்கு பிறந்தவன்” என்று தாரா முனுமுனுக்க, அதை தெளிவாய் புரிந்து கொண்டான் அகன் கார்த்திகேயன்.

எப்போதும் அமர்ந்தாலும் அவன் கால்மேல் கால் போட்டு அமர்வது தான் வழக்கம். அது அவனின் பழக்கமாகவும் மாறியிருந்தது. ஆனால் அதைப் பார்த்த யுகந்தாராவிற்கு தான் அவன் திமிராய் நடந்து கொள்வதைப் போன்று இருந்தது.

அவனை முறைத்தவள்,

“அப்பா என்னால எல்லாம் கொண்டு போய் குடுக்க முடியாது. நான் உங்களைப் பார்த்துக்க தான் வந்தேன். நான் ஒன்னும் உங்க கேட்டரிங்ல சர்வன்ட் கிடையாது” என்றாள் கோபத்துடன்.

“சாரிடா, நான் பார்த்துக்கிறேன்” என்று பூமிநாதன் சட்டென்று அமைதியாய் சொல்லவும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“வசந்தி எல்லாருக்கும் அவங்க ரூமைக் காட்டுமா” என்று லட்சுமி சொல்ல, தன் அக்கா குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றார் வசந்தி.

தயாளனின் குடும்பத்தை தாமரை அழைத்துச் செல்ல, தாராவின் அருகில் வந்தார் சந்தான லட்சுமி.

“இங்க பாருடா தாரா, உன்னோட கோபம் எனக்கு புரியுது. ஆனா ஒரு விஷயத்தை நீ புரிஞ்சுக்கனும். பூமியோட குடும்பம் வெளி ஆள் கிடையாது. அவன் என் மகன் தான். நீயும் என் பேத்தி தான். நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு செய்றது வேலை செய்றதுல வராது. அது பாசத்துல செய்றது. கார்த்தி யார் கூடவும் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. அதுக்காகத்தான் உன்னோட உதவியைக் கேட்கிறேன். அவன் ஊரை விட்டு போயே எட்டு வருஷம் ஆச்சு. இப்போத்தான் மனசு இறங்கி வந்திருக்கான். அவன் மனசு நோகக் கூடாதுன்னு தான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணிட்டு இருக்கேன். தயவு செஞ்சு தப்பா மட்டும் நினைக்காதடா” என்றார் மீண்டும் தெளிவாய்.

“நான் இப்படி எல்லாம் இல்லை பாட்டி, ரொம்ப பிரண்ட்லி. ஆனா, உங்க வீட்ல இருக்குறவங்க என் அப்பாவையும் அவர் தொழிலையும் ஒரு மாதிரி நக்கலா பார்க்குற மாதிரி இருக்கு. அதான் டென்ஷன் ஆகிட்டேன். மத்தபடி தாரா கூல் பெர்சன் தான். நீங்க வேணும்னா டாடிகிட்ட கேட்டுப்பாருங்க” என்றாள் புன்னகையுடன்.

“இப்போ தாராவுக்கு சந்தோஷமா?” என்றார் லட்சுமி சிரிப்புடன்.

“ரொம்ப சந்தோசம் பாட்டிமா. விடுங்க உங்க பேரன் கல்யாணத்தை ஜமாய்ச்சுடுவோம்” என்றாள் உண்மையான மகிழ்ச்சியுடன்.

“அப்போ பாட்டி சொன்னா கேட்ப தான?” என்றார் பீடிகையுடன்.

“கண்டிப்பா, இல்லைன்னா எங்கப்பா டென்ஷன் ஆகுறாரே?” என்றாள் தாரா.

“அப்போ நீங்களும் இங்க தான் தங்கணும். வேணியை டிரைவரை அனுப்பி கூட்டிட்டு வர சொல்லிட்டேன். இது ஏற்கனவே எடுத்த முடிவு தான்” என்றார் லட்சுமி.

“பாட்டி அது” என்று இயலாமையுடன் தந்தையைப் பார்த்தாள்.

“நாங்க இருக்கோம் பெரியம்மா. நீங்க எதுக்கும் கவலைப் படாதிங்க” என்றார் பூமி நாதன்.

“அப்போ உங்க பேரனை என் கூட பிரண்ட் ஆக சொல்லுங்க. அப்போ தான் எனக்கு கொஞ்சம் கம்பர்ட்டபிளா இருக்கும்” என்றாள்.

அதுவரையில் அவர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியாக அவள் கேட்டது புரிந்தது.

அவனின் அருகில் சென்றவள்,

“ஹெலோ பாஸ், பிரண்ட்ஸ்” என்று கையை நீட்டினாள்.

அவளை உறுத்து விழித்தவன், அவளுக்கு கை கொடுக்காமல் எழுந்து செல்ல,

“திமிர் புடுச்சவன், உடம்பு முழுக்க திமிரு மட்டும் தான் இருக்கும் போல. இதுல இவனுக்கு பார்த்து பார்த்து பண்ணனுமாம்” என்று முனங்கிக் கொண்டே நிமிர்ந்தவள், எதிரில் அவனைப் பார்த்து திகைத்தாள்.

இதழோரம் பூத்த ஒரு மென் சிரிப்புடன் அவன் கையை நீட்ட,

“ஆத்தாடி ஆத்தா” என்று திகைத்தவள், அவனின் கையைப் பிடிக்க, இனம் புரியாத உணர்வலைகள் அவள் ஆழ்மனம் வரை சென்று ஊடுருவியது.

“இவன் சிரிப்புக்கு ஸ்ரீலங்காவையே எழுதிக் குடுக்கலாம் போலயே” என்று நினைக்க,

“ஸ்ரீ லங்கா அடுத்த நாடுடி” என்று மனசாட்சி கழுவி ஊற்றியது.

“இருந்துட்டு போகட்டும், யார் கேட்பா?” என்றவள் தனக்குள் நடத்திய பேச்சு வார்த்தையில் அவன் கையை விடாமல் இருக்க, அவள் முன் அவன் சொடக்கிட, அந்த சத்தத்தில் மீண்டவள், அவன் பார்த்த பார்வையில் சட்டென்று கையை விட்டாள்.

அவனோ அதே சிரிப்புடன் மாடியேறி செல்ல, அவனையே பார்த்திருந்த யுகந்தாரவிற்கு தான் இதயம் இடறியது.

‘பிரண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு இப்படி சைட் அடிக்கிறியே உனக்கு வெட்கமா இல்லை?” என்றது மனம்.

“அழகை ரசிக்கிறதுல என்ன தப்பு?” என்று மனதை சமாதானம் செய்தவள், அப்போது தான் பூமிநாதனும், லட்சுமி பாட்டியும் அங்கேயே இருப்பதைப் பார்த்தாள்.

பூமிநாதன் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க,

“சிரிச்சிங்க கொன்னுடுவேன்” என்றாள் தந்தையைப் பார்த்து.

“என்னாச்சுடா தாரா?” என்றார் லட்சுமி புரியாமல்.

“பாட்டி நானும் வந்ததுல இருந்து உங்க பேரனை சைட் அடிக்கிறேன். அதை தெரியாத்தனமா  இவர்கிட்ட சொல்லிட்டேன். அதான் இப்போ என்னைப் பார்த்து சிரிக்கிறார். ஒரு தகப்பன் செய்யிற செயலா இது?” என்றாள்.

இப்போது பூமிநாதன் நன்றாக சிரிக்க,

“டாடி பிளீஸ் டாடி” என்றவளுக்கு முகமெல்லாம் சிவந்து போனது.

“பெரியம்மா என் பொண்ணு இன்னைக்குத்தான் வெட்கமே படுறா?” என்றார்.

“வேணி வரட்டும் உங்களுக்கு இருக்கு கச்சேரி” என்று மிரட்டியபடி சென்று விட்டாள்.

“நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க பெரியம்மா. தாரா எப்பவும் அப்படித்தான். என்கிட்டையும் வேணிகிட்டையும் எதையும் மறைச்சதில்லை. அவளோட உலகமே நாங்க தான். சில நேரம் கொஞ்சம் துடுக்குத் தனமா பேசிடுவா” என்றார்.

“ரொம்ப அருமையா வளர்த்திருக்க பூமி. விகல்பம் இல்லாம மனசுல பட்டதை நேருக்கு நேரா பேசுறது எல்லாம் பெரிய வரம்” என்றார் லட்சுமிக்கு மகள் அகல்யாவின் நினைவு வர கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

‘பிரண்டாகலாம்னு கை கொடுத்தது தப்பா போச்சு. இன்னும் அவன் கைக்குள்ள கை இருக்குற மாதிரியே பீல் ஆகுதே” என்று புலம்பிக் கொண்டிருந்தவள், எதேச்சையாய் மேலே பார்க்க, அறையின் பால்கனியில் இருந்து அவளைத்தான் பார்த்திருந்தான் அகன் கார்த்திகேயன்.