வெளியே வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவளுக்கு ஏனோ கேள்விப்பட்ட விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வினாடிகளில் அவனை பற்றிய தவறான அபிப்பிராயத்தை வளர்த்தற்காக தன் மீதே அவளுக்கு கோபம் வந்திருந்தது.
‘செம்ம பிகரா இருக்கானேன்னு நினைச்சு முடிக்கலை, அதுக்குள்ளே அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு சொல்லிட்டாங்களே? ஆனா அவனைப் பார்த்தா அப்படி பிரச்சனை இருக்குறவன் மாதிரி தெரியலையே? பாட்டியா சொல்ற வரைக்கும் எனக்குக் கூட அப்படி தோணலையே?’ என்று தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
பூமிநாதான் சமையலில் ஒரு கண்ணும், மகள் மேல் ஒரு கண்ணுமாய் இருந்தவர், அவள் ஏதோ யோசனையில் இருக்கவும் வேகமாய் மகள் அருகில் வந்தார்.
“என்னாச்சு தாராம்மா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றார். யாரேனும் ஏதாவது சொல்லி விட்டார்களோ? என்று எண்ணம் அவருக்கு.
“அது ஒண்ணுமில்லைப்பா நம்ம AP இருக்காப்பிடில” என்று அவள் இழுக்க,
“அது யாருமா? எனக்கு தெரியாம AP?” என்றார் புரியாமல்.
“அதான்ப்பா நம்ம ஆஸ்திரேலியா பார்ட்டி, அவரைத்தான் சுருக்கி அப்படி சொன்னேன்” என்றாள் விளக்கமாய்.
“ஹோ, கார்த்தி தம்பியா? அவருக்கு என்ன?” என்றார் புரியாமல்.
“ஆளு பார்க்க நல்லா இருக்கானேன்னு ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் சைட் அடிச்சுட்டேன்ப்பா. அப்பறம் பார்த்தா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுறான்னு தோணுச்சு. அப்பறம் பாட்டி தான் சொன்னாங்க அவனுக்கு இருக்குற பிரச்சனையை? அதைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.
“மெதுவா பேசுமா? யார் காதுலையாவது விழுந்துட போகுது” என்றார்.
“சைட் மட்டும் தான்ப்பா அடிச்சேன். நான் என்ன லவ் பண்றேன்னா சொன்னேன்?” என்றாள் இடக்காய்.
“தாராம்மா, கார்த்தி தம்பி தான் மாப்பிள்ளை. அவருக்குத் தான் கல்யாணமே” என்றார் பூமி.
“எதே” என்றவள் சேரில் இருந்து வேகமாய் எழுந்திருந்தாள்.
அவளின் வேகத்தைப் பார்த்த பூமிநாதனுக்குத் தான் அதிர்ச்சி.
“பின்ன என்னப்பா? ஆள் செம்ம ஹேண்ட்சம்மா இருக்கானே? பேசாம சைட் அடிச்சு லவ் பண்ணலாமான்னு யோசிச்சேன். அதுக்குள்ளே அந்த பாட்டி அப்படி சொல்லிட்டு போறாங்க, நீங்க அவன்தான் மாப்பிள்ளைன்னு சொல்லி என் சின்ன இதயத்தை உடைச்சுட்டிங்க. அழகான பசங்க எல்லாம் இப்படி அவசரமா கல்யாணம் பண்ணினா என்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் பாவமில்லையா?” என்றாள் பூமியின் தோளில் கை போட்டபடி.
பூமிநாதன் மகளை முறைக்க,
“சரி சரி, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு முறைக்கிறிங்க? உங்களுக்கும் வயசாகிடுச்சு, மருமகனைத் தேடுற கஷ்ட்டம் வேண்டாமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் சொன்னேன் டாடி. மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை” என்றவள் சிரிப்பை அடக்க, அவளின் முக பாவனையில் பூமிநாதனோ வாய்விட்டே சிரித்திருந்தார்.
“சரி சரி ரொம்ப சிரிக்காதிங்க. நான் அவனை சைட் அடிச்சது தப்பில்லை. அதை உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க அது தான் பெரிய தப்பு. பேச்சு பேச்சா இருக்கணும். வீட்ல போய் வேணிகிட்ட வத்தி வைக்கக் கூடாது சொல்லிட்டேன் ஆமா” என்றாள்.
“என் பொண்ணு முதன் முதல்ல ஒரு பையனை சைட் அடிச்சிருக்கா. அதை என் பொண்டாட்டிகிட்ட சொல்ல வேண்டாமா?” என்றார் பூமி.
“உங்களை” என்று அவள் பல்லைக் கடிக்க, அவர்களுக்கு எதிரில் கையைக் கட்டியபடி நின்றிருந்தான் அகன் கார்த்திகேயன்.
“வா..வாங்க தம்பி” என்றார் பூமி சிறிது தடுமாற்றத்துடன்.
“அய்யோ, இவன் எப்ப வந்தான்? நாங்க பேசுனது எல்லாம் கேட்ருக்குமோ?” என்று நினைக்க,
“அவனுக்குத் தான் கேட்க முடியாதே? அப்பறம் எப்படி கேட்டிருப்பான்?” என்றது அவள் மனம்.
“இல்ல, அவன் எதிர்ல நின்னு பேசுனா அவனுக்குப் புரியும்னு பாட்டி சொன்னாங்களே?” என்றவளுக்கு ஆயாசமாய் வந்தது.
அவளின் முகத்தையே பார்த்தபடி நிதானமாய் நடந்து வந்தான் அகன்.
‘நீ நடந்தால் நடை அழகு, அழகு’ என்று அவளின் மனம் உள்ளுக்குள் பாட்டுப் படிக்க,
“ரொம்ப முக்கியம்? வந்த வேலையை மட்டும் பாரு தாரா. உன் சேட்டையை எல்லாம் உன் வீட்டோட வச்சுக்க” என்று அவளின் மனசாட்சி அறிவுறுத்தி அறிவுரை வழங்கியது.
அத்தனை அறிவுரையையும் மீறி, அவன் அருகில் வரும் போது மனதிற்குள் ஏதோ ஒன்று தடுமாறி தடம் புரண்டு கொண்டிருந்தது.
“எப்படி இருக்கீங்க கார்த்தி தம்பி? சின்ன வயசுல பார்த்தது?” என்றார் பூமி சிநேக பாவனையுடன்.
“நல்லா இருக்கேன்” என்பதைப் போல் அவன் இமைகளை மூடித் திறக்க, அவன் பேசவே வேண்டாம். முக பாவனையே போதும் என்பதைப் போல் இருந்தது அவனின் பதில் மொழி.
‘இந்த திமிர்பிடிச்சவன் வாயைத் திறந்து சத்தியம் பண்ணி சொன்னாலும், இவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு யாரும் நம்ப மாட்டாங்க. என்ன ஒரு கான்பிடன்ட் லெவல்’ என்று எண்ணியவளின் முகத்தில் அவளின் எண்ணங்களைப் படித்திருந்தான்.
“ஏதாவது வேணுமா தம்பி?” என்றார் பூமி.
அவனோ அவரிடம் பேப்பரை நீட்ட,
“என்னோட புட் எல்லாம் என்னோட ரூம்க்கே குடுத்து விட்ருங்க. எல்லாமே ஹைஜீனிக்கா இருக்கணும். எனக்கு ஓசிடி ப்ராப்ளம் இருக்கு” என்று தெளிவாய் எழுதியிருந்தான்.
தந்தையின் கரத்தில் இருக்கும் பேப்பரை அவருக்கு முன் படித்து முடித்திருந்தாள் யுகந்தாரா.
‘இன்னும் உனக்கு என்னென்ன பிரச்சனை தான்டா இருக்கு?’ என்று நொந்து கொண்டாள்.
“கண்டிப்பா தம்பி, இதையெல்லாம் சொல்லனுமா நீங்க. நானே என் கையால சமைச்சுத் தர்றேன். நானோ இல்லை தாராவோ உங்களுக்கு எடுத்துட்டு வந்து தர்றோம் தம்பி. இல்ல உங்களுக்கு வேற ஆப்ஷன் இருந்தாலும் சொல்லுங்க” என்றார் பூமி.
“ஓகே தான்” என்பதைப் போல் அவன் தலையை ஆட்ட,
“அப்பா” என்று பல்லைக் கடித்தாள் யுகந்தாரா.
அகனுக்கு தாராவின் கடுப்பு புரிந்தது. இதழோரம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, தாராவின் விழிகள் இயல்பு போல் வேடிக்கை பார்க்க, அவள் பார்வை போன திசையில் தானும் திரும்பிப் பார்த்தான் அகன்.
தயாளன் தான் குடும்பத்துடன் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். பரமேஸ்வரியும், சுகந்தியும் ஒரு லிட்டர் விளக்கெண்ணெயைக் குடித்ததைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு இறங்க, ரேவதியோ,இனியாவுடன் முகத்தில் எதையும் காட்டாமல் இறங்கினார்.
அவர்களைப் பார்த்த அகன் கார்த்திகேயனின் முகம் சட்டென்று இறுகியது. கைகளை மூடி உணர்வுகளை அடக்கியவன், முகத்தில் எதையும் காட்டாமல் நின்றான்.
“அண்ணா” என்று இனியா ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள, தங்கையை மெலிதாய் அணைத்தவனின் முகம் இயல்பாய் மாறியிருந்தது.
“வீட்டுக்கு வந்திங்களாமே? நான் காலேஜ்ல இருந்து வர்ற வரைக்கும் வெயிட் பண்ணியிருக்கலாம்ல” என்றாள் குறையுடன்.
அகன் அவளைப் பார்த்து புன்னகைக்க,
எட்டு வருடங்களாக வீடியோ காலில் மட்டுமே பார்த்த அண்ணனை இன்று நேரில் பார்த்த பரவசத்தில் நின்றிருந்தாள் இனியா.
அகனின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள் யுகந்தாரா. தன் வீட்டினரை கண்டவுடன் அவன் முகம் இறுகியது முதல், தங்கையின் முகத்தைக் கண்டு இயல்பாகியது வரை அனைத்தும் அவள் கண்களில் தப்பாமல் விழுந்திருந்தது.
“எப்படி இருக்கீங்க தயாளன்?” என்றார் பூமிநாதன்.
“நல்லா இருக்கேன் பூமி. நீங்க எப்படி இருக்கீங்க? வழக்கம் போல உங்களை இங்க பிடிச்சு வச்சுட்டாங்களா?” என்றார் தயாளன்.
“நம்ம வீட்டு விஷேஷத்துல நான் இல்லாமையா?” என்று பூமி சொல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரிக்கு எரிச்சலாக இருந்தது.
“விஷேஷத்துல சமைக்குறது தானப்பா உன் வேலையே?” என்றார் பரமேஷ்வரி.
பரமேஸ்வரியின் பேச்சை அகன் ரசிக்கவில்லை. அவன் முகமோ இறுகிக் கொண்டே போக,
“அது அப்பாவோட வேலை தான். வேலையைப் பார்த்தாத்தான பொழைக்க முடியும் பாட்டி” என்றாள் தாரா. அவள் பேச்சில் குத்தல் வழிந்தது.
“இது யாரு பூமிநாதா? உன் பொண்ணா? வாய் கொஞ்சம் அதிகம் தான் போலயே?” என்றார் பரமேஸ்வரி.
“என்ன செய்றதுங் பாட்டி? பொள்ளாச்சிக்காரங்கங் மாதிரி நயமா பேசத் தெரியலைங்களே?” என்றாள் அவரைப் போலவே.
அதற்குள் சந்தான லட்சுமி வந்துவிட, வேறு வழியின்றி தாராவை முறைத்துக் கொண்டு சென்றார் பரமேஸ்வரி.
“என்ன தாராம்மா இதெல்லாம்?” என்று கடிந்து கொண்டார் பூமி.
“நான் என்னப்பா பண்றது? சமையல் தொழில் என்ன அவ்வளவு கேவலமா? ரொம்ப ஹெர்ட் பண்ற மாதிரி பேசுறாங்கப்பா. நீங்க எப்படித்தான் எல்லாத்துக்கும் அமைதியா இருக்கிங்களோ?” என்றாள் சோர்வான குரலில்.
“இதுக்குத்தான் அப்பா உன்னை இங்க வேண்டாம்னு சொன்னேன். பாரு எதுக்கெடுத்தாலும் உனக்கு கோபம் வருதுடா. தொழில்ல இப்படியெல்லாம் பேசக் கூடாது தாராம்மா” என்றார் பொறுமையாய்.
“சாரிப்பா, இனி பேசலை” என்றவளின் வாடிய முகம் கண்டு, பூமிநாதனுக்கு தாங்கவில்லை.
“நீ வீட்டுக்கு கிளம்புடா தாரா” என்றார் பரிவாய்.
“அதெல்லாம் வேண்டாம். இனி நான் பேசலைப்பா” என்று முடித்துக் கொண்டவள், தனது போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் என்று அமர்ந்து கொண்டாள்.