“அட!” என சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ… நான் தண்மதி” என இனிமையாக ஒரு பெண் குரல் ஒலித்தது.

குரல், பெயர் இரண்டையும் வைத்து சின்ன பெண்ணோ என நினைத்தவன், “சொல்லுங்க” என்றான்.

“மேட்ரிமோனியல்ல ஜெயபாரதின்னு வரன் பார்த்தேன்” என அவள் சொல்லவும், என்னடா இது, சின்ன பெண் சம்பந்தம் பேசுகிறாளே என்பது போல ஒரு நொடி விழிக்கத்தான் செய்தான் ரவி.

“லைன்ல இருக்கீங்கதானே ஸார், ஹலோ ஹலோ…” என்றாள் தண்மதி.

குரலை செருமிக் கொண்டவன், “வீட்ல பெரியவங்க  யாரும் இல்லியா பாப்பா?” எனக் கேட்டான்.

“ஏன் அங்கிள் கேட்குறீங்க? எனக்கு பாட்டி இருக்காங்க, அவங்க எப்படி பேச்சை ஸ்டார்ட் பண்றதுன்னு யோசிக்கிறாங்க, அதான் நான் பேசுறேன்” என்றாள் தண்மதி.

அவளது ‘அங்கிள்’ என்ற அழைப்பில் சின்ன  பாப்பாவேதான் என முடிவு செய்து விட்டவன், “என்ன பாப்பா படிக்கிறீங்க?” எனக் கேட்டான்.

“ஆத்தா… என்னைய பத்தி கேட்குறாங்க, சொல்லவா?” என அவள் யாரிடமோ விசாரிப்பது துல்லியமாக இவனது காதில் விழுந்தது.

சில நொடிகளில், “நான் பி எஸ் ஸி மேத்ஸ் தேர்ட் இயர் படிக்கிறேன் ஸார்” என்றாள் தண்மதி.

நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவன், “ஸாரிமா நான்தான் தெரியாம பாப்பான்னு கூப்பிட்டுட்டேன்” என்றான்.

“அது பரவாயில்லை அங்கிள், சித்தப்பா கூட அப்படித்தான் கூப்பிடுவாங்க. இருங்க என் பாட்டி பேசுறாங்களாம்” என சொல்லி அவனது பதிலுக்கு காத்திராமல் கைப்பேசியை தன் பாட்டியிடம் கொடுத்து விட்டாள்.

“நீங்க யாரு?” என பாட்டி கேட்க, “நீங்க பார்த்திருக்க பொண்ணு ஜெயபாரதி இருக்காங்களே அவங்க தம்பி” என்றான்.

“என்னது… தம்பியா? செயாவுக்கு ஏது தம்பி? ஒரு அக்காதானே இருக்கா?” என்றார் பாட்டி.

பாட்டியின் பேச்சு சரியாக புரியாமல், “உங்களுக்கு அக்காவை தெரியுமா?” என விசாரித்தான்.

“தெரியாம என்ன? என் மருமவதான் அவ, இம்புட்டு வருஷம் என் மவன் தனியா கெடக்கான், அவனை பத்தி ரோசிக்காம ரெண்டாம் கல்யாணம் பண்ண நினைக்கிறாளே அவ, யாரும் புத்தி சொல்ல மாட்டீங்களா? மொத நீ யாரு அவளுக்கு புதுசா வந்த தம்பி?” பாட்டி பட படக்க, மீண்டும் கைப்பேசி தண்மதியின் கைக்கு சென்று விட்டது.

“ஸாரி அங்கிள், என் பாட்டி அப்படித்தான், அவங்கள விடுங்க. சித்திய காண்டாக்ட் பண்ண முடியுமா? நேர்ல வந்து கூட பேசுறோம். என் சித்தப்பா எந்த தப்பும் பண்ணல, அவரோட அவங்க சேர்ந்து வாழணும்” என்றாள் அவள்.

ஜெயபாரதியின் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் என்பதை விளங்கிக் கொண்டவன், “அவங்களுக்குள்ள பிரச்சனை நடந்தப்போ நீ சின்ன பொண்ணு, உனக்கொன்னும் தெரியாது. நிறைய கொடுமை அனுபவிச்சு விவாகரத்து ஆனவங்ககிட்ட என்ன வந்து பேச போற, ஒழுங்கா படிக்கிற வழிய பாரு. என் அக்காவுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு நாங்கல்லாம் மெனக்கெட்டுட்டு இருக்கோம், ஏதும் பிராப்லம் உண்டாக்க நினைச்சா சரியிருக்காது” என நிதானமாக என்றாலும் கடினத் தொனியில் பேசினான்.

“என்ன அங்கிள்… என்ன கொடுமை அனுபவிச்சாங்களாம் சித்தி?” என கோவமாக கேட்டவள், உடனே கொஞ்சமாக தணிந்து, “அவங்களுக்கு நாந்தான் பிரச்சனை, என்னாலதான் சித்தப்பாவை வேணாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க. நான் என் சித்தப்பாவை விட்டு போயிடுறேன், அவங்கள திரும்பவும் இங்க வரச் சொல்லுங்க. ப்ச்… நீங்க அவங்க நம்பர் கொடுங்க அங்கிள் ப்ளீஸ், நான் அவங்களட்டேயே பேசிக்கிறேன்” என்றாள்.

“ப்ச், என் அக்காட்ட நீ பேசுறது பத்தி ஒரு முடிவுக்கு வரலாம், அதுக்கு முன்ன அந்த அங்கிள் போடறத கொஞ்சம் ஸ்டாப் பண்றியா?” என்ன முயன்றும் எரிச்சலடைந்து விட்டான் ரவி.

“அவளுக்கு அண்ணன் தம்பி யாரும் கிடையாது, தப்பா எவனுக்கோ போன் போட்ருக்க போற ஒழுங்கா பாருடி” என பாட்டி சொல்லிக் கொண்டிருக்க, “கொஞ்சம் சைலன்ட்டா இரு ஆத்தா” என அதட்டினாள் அவள்.

“உங்க சண்டையை பொறுமையா போடுங்க, நான் ஃபோன் வைக்கிறேன்” என்றான் ரவி.

“அங்கிள் அங்கிள்… வச்சிடாதீங்க” என அவள் சொன்ன விதத்தில் அவனது எரிச்சல் உச்சம் தொட, அழைப்பை துண்டித்தே விட்டான்.

மீண்டும் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வராமலிருப்பதற்காக அந்த எண்ணை தடையும் செய்து விட்டான்.

பத்து வருடங்களுக்கு முன்பே சட்டப் படி பிரிந்து விட்டவர்களை மீண்டும் இணைத்து வைப்பது பற்றியெல்லாம் அவனுக்கு எந்த யோசனையுமே இல்லை. இங்குள்ள கிளைக்கு செல்ல போகிறேன் என்றதுமே அக்காவின் வீட்டில் சல சலப்புகள் உண்டானதை அறிவான் அவன்.

இந்த பகுதியில் உள்ள ஏதோ ஊரை சேர்ந்தவர்தான் ஜெயபாரதியின் முன்னாள் கணவர் என அக்கா வீட்டில் சொன்ன போது, அதற்கும் தான் அங்கு வேலைக்கு செல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாக சொல்லியிருந்தான்.

பாரதிக்கு திருமணம் நடந்த போதோ அல்லது அவளின் மண வாழ்க்கை முறிந்த போதோ ரவி தமிழ்நாட்டிலேயே இல்லை. அந்த விவரங்கள் பெரிதாக அவனுக்கு தெரியாது. ஆகையால்தான் கொடுமைக்காரனாக சித்தரிக்க பட்டிருந்த அக்காவின் கணவனாக கணேசன் இருக்க கூடும் என்ற சந்தேகம் தற்சமயம் அவனுக்கு எழவில்லை.

“நான்தான் பேசிட்டு இருக்கேன்ல நடு நடுவுல என்ன சவுண்ட் கொடுக்கிற நீ, பாரு கால் கட் பண்ணிட்டாரு, என் நம்பரையும் பிளாக் பண்ணிட்டாரு போல”  என பாட்டியை திட்டினாள் தண்மதி.

பருவ வயதின் அழகோடு மாநிறத்தில் கோவத்தோடு நின்றிருந்த பேத்தியை அலட்சியமாக பார்த்த பரமேஸ்வரி, “நீ அந்த கதையை வுடுங்கிறேன். உன் சித்தப்பன்காரன்கிட்ட சரின்னு சொல்ல சொல்லு, ஆயிரம் பொண்ணு நான் பார்த்து கூட்டியாறேன்” என்றார்.

“பத்து வருஷமா ஒன்னும் பண்ணாம இப்ப வந்து பொண்ணு பார்க்க போறியா? சும்மான்னு இரு சொல்லிட்டேன்” என்ற தண்மதி, கல்லூரி பேருந்துக்கு நேரமாவதை உணர்ந்து வேக வேகமாக தன் நீளமான கூந்தலை வாரி பின்னலிட்டாள்.

தண்மதியின் தோழி சஞ்சனாவின் அண்ணனுக்கு பெண் பார்க்கிறார்கள். சஞ்சனாவின் வீட்டுக்கு இவள் சென்ற சமயம் அவளும் அவளது அம்மாவும் திருமண சேவைக்கான இணைய தளத்தில் வரன்களை பார்த்துக் கொண்டிருக்க, அப்போதுதான் ஜெயபாரதியையும் அந்த வரன்களின் வரிசையில் இவள் பார்க்க நேரிட்டது.

வயது அதிகம் என்பதாலும் மறுமணம் என்பதாலும் ஜெயபாரதியை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. சித்தப்பாவின் அறையில் அவரது மனைவியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறாள் தண்மதி. பெயர், வயது, மறுமணம் என அனைத்தையும் வைத்து தன் சித்திதான் என தெரிந்து கொண்டாள்.

சஞ்சனாவிடம் தனிமையில் விவரம் சொல்லி, ஜெயபாரதியின் பயோடேட்டாவை பெற்றுக் கொண்டாள்.

பாட்டியிடம் கைப்பேசி வழி விவரங்களை காண்பிக்க, ஜெயபாரதிதான் என பாட்டியும் ஊர்ஜிதப்படுத்தினார். தனக்காக வாழும் தன் சித்தப்பாவுக்கு நல்லது செய்கிறேன் என பாட்டியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு ரவியை தொடர்பு கொண்டாள்.

அது இப்படி தோல்வியில் முடியும் என அவள் நினைக்கவில்லை.

வெளியில் சென்றிருந்த கணேசன் வந்து விட, மருமகளை திட்டி புலம்பிக் கொண்டிருந்த பரமேஸ்வரி அமைதியாகி விட்டார்.

“பாப்பா… உனக்கு புடிச்ச மத்தி மீன் வாங்கிட்டு வந்திருக்கேன், நைட் நான் வர்றதுக்கு வெயிட் பண்ணாம நேரத்தோட சாப்பிட்ரு” என அண்ணன் மகளிடம் சொல்லிக் கொண்டே பையை அம்மாவிடம் கொடுத்தார் கணேசன்.

“யார கேட்டுடா கவிச்சி வாங்கிட்டு வந்த? நான் எப்பவோ மிளகு குழம்பும் கொத்தரங்கா பொரியலும் செஞ்சிட்டேன்” என்றார் பாட்டி.

“இன்னிக்கு புதன் கிழமை, அசைவம் வாங்குவேன்னு தெரியாதா? எதுக்கு அவசர பட்ட? வாங்கினத திருப்பி கொடுக்க முடியாது, சமைச்சிடு” என சொல்லி விட்டு குளிக்க சென்றார் கணேசன்.

ஏதோ சொல்லப் போன பாட்டியின் கையை இழுத்த தண்மதி, “கல்யாணம் பத்திதானே பேச நினைக்கிற? கொஞ்சம் சும்மான்னு இரு, சித்தியே சித்தப்பாவை தேடி வருவாங்க” என்றாள்.

“வுட்டுட்டு போயிட்டாடி அவ, வருஷம் பத்து ஆவுது”

“இவ்ளோ வருஷம் அவங்களும் தனியாதான் இருந்திருக்காங்க, சித்தப்பா கப்போர்ட்ல இன்னும் சித்தியோட ஃபோட்டோ இருக்குது”

“அதுக்கு?”

“உனக்கு எல்லாம் புரியும், ஆனாலும் நொய் நொய்ம்ப, நான் வர்றேன்” என சொல்லி புறப்பட்டு விட்டாள் அவள்.

ரவி ஏதோ முக்கிய அலுவலாக இருக்கும் போது வேறொரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அவன் ஏற்க, “ஹலோ அங்கிள்…” என்றாள் தண்மதி.

ஆயாசமாக நெற்றிப் பொட்டை பிடித்து, கண்களையும் மூடிக் கொண்டான் ரவிபிரகாஷ்.