கடந்து செல் காதலுடன்! 16 2 3222 கடுப்பாக போன் எடுத்து வீட்டு எண்ணுக்கு அழைத்தார். சம்யுக்தா தான் எடுக்க, “சாருக்கு பிரியாணி தான் வேணுமாம்” என்றார் குருமூர்த்தி. ஆரம்பிச்சுட்டான்! சம்யுக்தா நெற்றியை நீவிவிட்டு கொண்டவள், “பாட்டி இப்போதான் தூங்க போனாங்கப்பா. வெளியே இருந்து வாங்கி கொடுக்கலாமா?” என்று கேட்டாள். “இல்லைமா. பாதுகாப்பு இல்லை” என்று வைத்தவர், “கடைசியா கேட்கிறேன். இதை சாப்பிடுவியா மாட்டியா?” என்று கேட்டார். முடியாது என்று கை அசைத்தான் சேட்டைக்காரன். “என்னப்பா?” என்று கையில் உணவுடன் வந்த தந்தையிடம் கேட்டாள் சம்யுக்தா. “அவன் வேணும்ன்னு தான் பண்றான். இதை சாப்பிட மாட்டானாம்” என்றார். “வீட்ல சிக்கன் இருக்குப்பா” என்று சம்யுக்தா பார்த்து சொன்னவள், “யூ டியூப் பார்த்து செய்யவாப்பா?” என்று கேட்டாள். “நானே செய்றேன்” என்ற குருமூர்த்தி அவரின் தவறுக்கு பரிகாரத்தை தேட நினைத்தார் போல! “உங்களுக்கு தெரியுமா?” என்று சம்யுக்தா ஆச்சரியத்துடன் கேட்டபடி தந்தையை பின் தொடர்ந்தாள். “தெரியும்” என்ற குருமூர்த்தி மடமடவென சமையலை ஆரம்பித்தார். “மணி அங்கிள் சாப்பாடு எடுத்துட்டு கிளம்பிட்டார்ப்பா. உங்ககிட்ட போன்ல பேசுறேன்னு சொன்னார்” என்ற மகள், தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள். “வெங்காயம் நான் பார்த்துகிறேன். நீ புதினா கிள்ளி கொடு” என்று புதினாவை கொடுத்து, வெங்காயத்தை வாங்கி கொண்டார். குருமூர்த்தியை கிட்சன் அமைப்பில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தார். மகளுக்கு பிடித்தும் இருந்தது. பழக்கப்பட்டவர் போல் பொருட்களை கையாண்டதில், “எப்போ இருந்து நீங்க சமைக்கிறீங்கப்பா” என்று மகள் ஆச்சரியத்துடன் கேட்டாள். “தெரியலை. பாட்டிக்கு அடிக்கடி உடம்பு முடியாம போயிடும். கஞ்சி வைக்க தான் முதல்ல கத்துக்கிட்டேன். பாட்டி போனதுக்கு அப்புறம் முழுசா வெளியே தான். யாராவது கொடுக்கிறது, ஹோட்டல்ல சாப்பிடுறதுன்னு போச்சு. உன் அம்மா வந்ததுக்கு அப்புறம் தான் வீட்ல சாப்பாடு. அவகூட சேர்ந்து தான் இதெல்லாம் கத்துக்கிட்டேன்” என்றார் சாதாரணமாக. மகளுக்கு தான் முகம் வாடிவிட்டது. “முடிஞ்சுதா?” என்று குருமூர்த்தி கேட்க, “இதோப்பா” என்று சம்யுக்தா புதினா கிள்ளுவதற்குள் அவர் மற்றதை எல்லாம் முடித்துவிட்டார். குருமூர்த்தி பாத்திரத்தை அடுப்பில் ஏற்ற, சம்யுக்தா ஆர்வத்துடன் தந்தை சமைப்பதை பார்த்திருந்தாள். “நல்லா சமைக்கிறீங்கப்பா” என்று சம்யுக்தா வாசம் இழுக்க, “உன் அம்மாக்கு என் சமையல் பிடிக்கும். நீ குழந்தையா இருந்தப்போ நிறைய செஞ்சிருக்கேன். அப்புறம் வேலை அதிகமாகிடுச்சு” என்றார் குருமூர்த்தி. “ம்ம். அம்மாக்கு அடுத்து நீங்க இவருக்கு தான் சமைச்சிருக்கீங்கப்பா” என்று மகள் சொல்ல, “நீ சாப்பிட்டு தான் அவருக்கு” என்றார் தந்தை உடனே! “நானும் இன்னும் சாப்பிடலைப்பா. கண்டிப்பா எனக்கும் தான்” என்று சம்யுக்தா சொல்ல, “அவ்வளவு தான் முடிஞ்சிடும்” என்று குருமூர்த்தி வேகத்தை கூட்டினார். அப்படியும் பல நிமிடங்களை விழுங்கிவிட்டே, பிரியாணி தயாரானது. “லேட் நைட் சாப்பிட்டா கண்டிப்பா ஜீரணம் ஆகாது. அடங்காதவனுக்கு அப்படியென்ன பிடிவாதமோ?” குருமூர்த்தி சொல்ல, “நீங்க பேசிட்ட கோவம், அதான் இப்படி? சொல்ல முடியாதுப்பா, எனக்கு பிரியாணி வேணாம்ன்னு கூட சொல்ல வாய்ப்பிருக்கு” என்றாள் மகள். “அப்படி மட்டும் சொல்லட்டும். அடங்காதவனை தண்ணீக்குள் முக்கிடுறேன்” என்று கருவி கொண்டார் குருமூர்த்தி. நல்லவேளை அப்படி ஏதும் சொல்லவில்லை சர்வாச்சார்யா! “யார் சமைச்சது?” என்று மட்டும் சந்தேகமாக பார்த்தான். “ப்பா. இதை விட்டுட்டு வந்துட்டீங்க?” என்று சம்யுக்தா உணவுண்ண தட்டை எடுத்து வந்திருக்க, “நீயா சமைச்ச?” என்று அவளிடம் கேட்டான். “யார் செஞ்சா என்ன இப்போ? பேசாம சாப்பிடு” என்று குருமூர்த்தி வேகமாக சொன்னார். நான் தான் சமைச்சேன்னு சொன்னா சாருக்கு ஓவர் ஏத்தம் ஆகிடும்! அப்புறம் என் கெத்து என்னத்துக்கு ஆகிறது? அவர் கவலை அவருக்கு! “பார்த்தாலே நல்லா இருக்கிற மாதிரி தெரியலை. ஓய். நீ சாப்பிட்டு பாரு முதல்ல” என்று சம்யுக்தாவிடம் சொன்னான். “நல்லா இருக்கு. சாப்பிடுங்க” என்று அவனுக்கு பரிமாறினாள். “நான் நம்ப மாட்டேன்” என்று முரண்டு பிடிக்க, சம்யுக்தா அவன் தட்டில் இருந்தே ஓர் வாய் எடுத்து உண்டவள், “சூப்பரா இருக்கு” என்றாள். “அப்படியா சொல்ற?” என்றவன் உண்ண ஆரம்பிக்க, “ப்பா. நீங்களும் சாப்பிடுங்க” என்று சம்யுக்தா அவருக்கான உணவை பரிமாறினாள். “அதென்ன இவருக்கு மட்டும் தோசை?” என்று உடனே தட்டை கீழே வைத்தான். “அப்பா நைட்ல ஹெவியா சாப்பிட மாட்டார்” சம்யுக்தா சொல்ல, “சரிதான். வயசாகிடுச்சு இல்லை” என்றான் நக்கலாக. “ஓவரா பண்ணாத. ஒழுங்கா சாப்பிடு” என்று சம்யுக்தா தண்ணீர் வைக்கும் போது கண்களை உருட்டினாள். “நீயும் சாப்பிடும்மா. தட்டு இருக்கு இல்லை. ரொம்ப நேரம் ஆகிடுச்சு” என்று குருமூர்த்தி சொல்ல, சம்யுக்தாவும் பசியில் அங்கேயே உண்ண அமர்ந்துவிட்டாள். “ஓகே தான், சொல்லிக்கிற மாதிரி இல்லை. பாட்டி சமையல் இல்லை. நீயா சமைச்ச?” என்று சம்யுக்தாவிடம் கேட்க, “என் பொண்ணை சாப்பிட விடு” என்றார் குருமூர்த்தி. “உங்க பொண்ணு தட்டை பிடுங்கியா வைச்சிருக்கேன்” என்று இவன் பாய, “கேள்வி கேட்டுட்டே இருந்தா அவ உனக்கு பதில் சொல்வாளா? இல்லை சாப்பிடுவாளா?” என்று கேட்டார் குருமூர்த்தி. “எனக்கு பதில் சொல்லிட்டே சாப்பிடுவா? உங்களுக்கு என்ன? நீங்க முதல்ல பேசாம சாப்பிடுங்க” திரும்பி இவரையே அடக்கினான். “அப்பா. நீங்க சாப்பிடுங்க. சட்னி வைக்கவா?” என்ற சம்யுக்தா, “அந்த சட்னியை எடுங்க” என்று நல்லவனிடம் சொன்னாள். தனக்கு அருகில் இருந்த சட்னியை எடுக்காமல், “அவர் சாப்பிட்டு முடிச்சுட்டார்” என்றான். “உங்களை” என்று சம்யுக்தா எழுந்திருக்க போக, “நீ சாப்பிடும்மா. நானே எடுத்துகிறேன்” என்று அவனை முறைத்தபடி எடுத்து கொண்டார் குருமூர்த்தி. சம்யுக்தா அவனுக்கு பரிமாறி, தானும் உண்பதை பார்த்திருந்த குருமூர்த்தி வேகமாக அவர் உணவை முடித்துக்கொண்டு, நல்லவனுக்கு பரிமாற வந்தார். “உங்க கையால நான் சாப்பிட மாட்டேன். நீ வை” என்று சம்யுக்தா பக்கம் நகர்த்தினான். ‘என் மகளை தொந்தரவு பண்ணிட்டே இருக்கானே?’ தந்தைக்கு புசுபுசுவென வந்தது. ஆனால் என்ன செய்ய? எதிரில் இருப்பவன் சர்வாச்சார்யா ஆயிற்றே! சும்மாவே இவரை சீண்டுவான்! இதில் குருமூர்த்தி பேசியதற்கு சும்மா விட்டு விடுவானா? சம்யுக்தா ஆயாசத்துடன் தலையசைத்து கொண்டவள், முழுதாக தானே அவனுக்கு பரிமாறியபடி உண்ண, அவள் தட்டும் குருமூர்த்தியால் நிறைந்தது. என் பொண்ணை நான் சாப்பிட வைச்சுகிறேன் போடா! தந்தையின் அங்கலாய்ப்பு அது! திருப்தியாக உணவுண்டு முடிய, “ஸ்வீட் இல்லையா?” என்று கேட்டான். “இல்லை” என, “ம்ப்ச்” என்று சலித்து கொண்டான். “உடனே தூங்கிடாத. ஹாட் வாட்டர் வைச்சிருக்கேன். கொஞ்ச நேரம் நடந்துட்டு அப்புறம் தூங்கு” என்று குருமூர்த்தி சொல்ல, “என்ன திடீர்ன்னு உன் அப்பாக்கு என்மேல பாசம்?” என்று சம்யுக்தாவிடம் கேட்டான். “நீ வாம்மா” என்று குருமூர்த்தி இவனை முறைத்து மகளுடன் சென்றார். “உடனே தூங்கிடாத” என்று குருமூர்த்தி மகளுக்கும் சொல்ல, “படிக்கிறது இருக்குப்பா” என்ற மகள், அவள் அறைக்குள் செல்லும் முன், “ஸாரிப்பா” என்றாள். “நான் செஞ்சதும் சரியில்லை தான். நீ தூங்க போ” என்றார் குருமூர்த்தி. சம்யுக்தா நிம்மதியுடன் அறைக்குள் வந்து படிக்க அமர, வில்லங்கம் ஒன்று கதவை தட்டியது. “இப்போ எதுக்கு இங்க வரீங்க?” என்று ரகசிய வழியை திறந்த சம்யுக்தா கடுப்படிக்க, “ஸ்வீட் வேணும், வழியை விடு” என்றான் சர்வாச்சார்யா. “முடியாது. இங்கேயே இருங்க. எடுத்துட்டு வரேன்” என்று அறைக்குள் வந்து எடுக்க, “எனக்கு இதுதான் வேணும்” என்று அவளுக்கு பின்னிருந்து கை விட்டு எடுத்தான். “உங்களை அங்கேயே இருக்க சொன்னேன்” என்று சம்யுக்தா பல்லை கடிக்க, “சாப்பிட்டு போயிடுவேன். பொறு” என்று சாவகாசமாக அமர்ந்து கொண்டான். “இனி ரூமுக்கு வராத” என்று அவனிடம் சொல்ல நினைத்திருந்ததை சொல்லாமல் விட்டதன் பலன் தான் அவன் வருகை! “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சம்யுக்தா அவன் பக்கம் அமர, “ரோஹன் விஷயம் என்னாச்சு?” என்று கேட்டான். “தெரியலை. அவர் காலேஜ் வரலை” என்றாள். “ம்ம். அப்போ ஏதோ சரியில்லை. அதனால தான் நேத்து நைட் எனக்கு சாப்பாடு கொடுக்கலையா? நானும் என்னவோன்னு நினைச்சு வெய்ட் பண்ணி பார்த்துட்டு உன் ரூம்க்கு கூட வந்து தட்டுனேன், ஆனா நீ திறக்கலை” என்று உதடு பிதுக்கினான். சம்யுக்தாவால் அவனை பார்க்க முடியா உறுத்தல்! “ஹேய், என்ன, சில். உன் அப்பா எல்லாம் சரி பண்ணிடுவார்” என்று அவள் கை பற்றி கொண்டான். “ஸாரி” என்றாள் சம்யுக்தா கம்மிய குரலில். “அப்பா. கோவத்துல தான் உங்களுக்கு கொடுக்கலை” என்று உண்மையை சொன்னாள். “என்ன கோவம்?” அவன் கைகள் இனிப்பை வைத்துவிட்டது. “ப்ளீஸ்” என்று இனிப்பை எடுத்து நீட்ட, “நீ முதல்ல என்ன கோவம்ன்னு சொல்லு” என்றான். “அது, வேண்டாமே!” “சொல்லு“ “ப்ளீஸ். என்னை வைச்சு, பாஸ்ட்ல நடந்ததை வைச்சு ஒரு கோவம். அவ்வளவு தான்“ “நான் எங்க இதுல வந்தேன்?” “எனக்குமே முழுசா தெரியாது. எதனால, யார் காரணம்ன்னு தெரியலை. ஆனா இப்போ அப்பா புரிஞ்சுக்கிட்டார். நான் செஞ்சது சரி கிடையாதுன்னு சொன்னார், அதனால தான் அப்பாவே உங்களுக்கு பிரியாணி எல்லாம் சமைச்சார்?” என்று அவன் இறுகிய முகத்தில் வேகமாக சொன்னாள். “வேணும்ன்னே தான் எனக்கு சாப்பாடு கொடுக்கலை அப்படித்தானே?” “ப்ளீஸ். கோவம் வேணாம். ப்ளீஸ்” என்று அவன் கைகளை பற்றி கொண்டாள். ரோஷத்துடன் அவன் இனிப்பை உதறிவிட, சம்யுக்தா அந்த இனிப்பை கீழே விடாமல் பிடித்து கொண்டவள், “உண்மையை மறைச்சு வைக்கிறதுல எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை. அதோட பாதிக்கப்பட்டது நீங்க. உங்களுக்கும் தெரிஞ்சுகிற உரிமை இருக்கு. என் அப்பா தப்பு தான், ஆனா அதுல நிறைய பேருக்கு பங்கு இருக்கு” என்றாள். சர்வாச்சார்யா முகத்தை திருப்ப, அவன் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவள், “அவருக்கு நம்பிக்கை துரோகம் நடந்திருக்கு. என் அப்பாக்கு நான் மட்டும் தான். எனக்கும் அவர் மட்டும் தான். எனக்கு ஒண்ணுன்னா அவரால் எப்படி பொறுத்துக்க முடியும்? அவர் கோவத்தை காட்ட நினைக்கிறார். அது தப்பில்லை. ஆனா காட்ட வேண்டிய ஆள் வேறன்னு அவர் புரிஞ்சுக்கிட்டார். நீங்களும் அவரை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. ப்ளீஸ்” என்றாள் பெண். சர்வாச்சார்யா எதுவும் பேசாமல் இருக்க, “என் அப்பாக்காக நான் எத்தனை முறை வேணும்ன்னாலும் ஸாரி கேட்க தயாரா இருக்கேன். நீங்களும் பெரிய மனுசு பண்ணி எங்களை மன்னிச்சு விட்டுடங்களேன்” என்றவள், இனிப்பை எடுத்து அவன் உதட்டுக்கு அருகில் நீட்டினாள். வாங்கிக்கோ என்று அவள் கலங்கிய கண்கள் கெஞ்சியது. உனக்கு நாங்க அநியாயம் பண்ணிட்டோம் என்ற தவிப்பில் அவள் கலங்கி நிற்க, அவள் கண்ணீரில் இவன் தடுமாறி போனான். விசித்திரம்! என்ன நடக்குது எங்களுக்குள்ள? சர்வாச்சார்யா அவளை பார்த்தே இருந்தவன், என்ன நினைத்தானோ அவள் ஊட்டியதை வாய் திறந்து வாங்கி கொண்டான். “தேங்க்ஸ்” என்றவளின் கண்ணீர் வழிந்துவிட, சர்வாச்சார்யா அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான். ஏதோ? என்னவோ? விவரிக்க முடியா மாற்றம் அவர்களிடத்தில்!