அகனின் பார்வை நிதானமாய் அந்த வீட்டினை அளவெடுத்தது. எண்ணங்களின்  இடுக்களில் பழைய ஞாபகங்கள் வந்து போக, அதை நினைவுகளாகவே தனக்குள் சேமித்துக் கொண்டவன், வேகமாய் மாடியேறி தனது அறைக்குள் சென்றான். அவன் இல்லாவிட்டாலும் அவனின் அறை அப்படியே தான் இருந்தது. மேலே சென்றவன் சில நிமிடங்களிலேயே கீழே வந்தான்.

“என்னாச்சு கார்த்தி? இப்போத்தான வந்த? அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட? குளிச்சுட்டு வாப்பா, சாப்பிடலாம்” என்றார் சுகந்தி வேகமாய்.

“அதெல்லாம் வேண்டாம்” என்பதைப் போல் தலையாட்டியவன், கண்களை மூடி சற்று நிதானித்து, ஒரு சிறு தலையசைப்புடன் கிளம்பிவிட்டான். அவன் பார்வையின் தீர்க்கமும், நடையின் வேகமும் அங்கிருந்தவர்களை பேச்சிழக்க வைத்திருந்தது.

“அண்ணா இது நிஜமாவே நம்ம கார்த்திதானா? எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்? அப்படியே அகல்யா அண்ணியை ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இருக்கான்” என்றார் சுகந்தி.

“ஆமா சுகந்தி. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு” என்றார்.

“வந்தவன் இப்படி வந்த தடம் கூட தெரியாம கிளம்பிட்டானே ண்ணா. இன்னும் கோபத்தோட தான் இருக்கானா? அப்படி என்ன அவனுக்கு நம்ம மேல கோபம்?” என்றார் சுகந்தி ஆற்றாமையுடன்.

“இத்தனை வருஷம் கழிச்சு, வீட்டுக்கு வந்தானேன்னு சந்தோஷப்படு சுகந்தி. கல்யாணம் ஆகிட்டா கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவான்” என்றவர்,

“அங்க அவன் பாட்டி வீட்டுக்குத்தான் போறான்னு நினைக்கிறேன். நாம எல்லாரும் நாளைக்கு கிளம்பனும். காலையில சீக்கிரமே கிளம்புற வழியைப் பாருங்க, ரேவதி உனக்கும் தான்” என்றார்.

“சரிங்க” என்றார் ரேவதி.

பழனியில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் இருந்தது அந்த ஜமீன் வீடு. வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பார்வையில் மிடுக்குடனும், நடையில் கம்பீரத்துடனும் அனைத்தையும் மேற்பார்வையிட்டபடி பேரனின் வரவுக்காக வாசலில் காத்திருந்தார் சந்தான லட்சுமி.

அகன் கார்த்திகேயனின் கார் உள்ளே நுழைந்தது தான் தாமதம்,

“தாமரை கார்த்தி வந்துட்டான் பாரு, ஆரத்தி எடுத்துட்டு வா” என்று குரல் கொடுக்க, அடுத்த நிமிடம் ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார் தாமரை. அந்த வீட்டின் மூத்த மருமகள், சேதுராமனின் மனைவி.

அங்கிருந்த அலங்காரங்களையும், ஆட்களையும் சுற்றி வேடிக்கை பார்த்தபடியே இறங்கிய அகனை சிறுபிள்ளை போல் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் சந்தான லட்சுமி. மகளின் மறுவடிவம் அல்லவா அவன்.

அவரின் மனம் அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும். ஒரு சிறு புன்னகையுடன் அவரைத் தானும் அணைத்துக் கொண்டான்.

“எப்படிப்பா இருக்க? நகுலனாவது அப்பப்போ வந்துட்டு போறான்? நீ பாட்டியை மறந்துட்ட? அதான் வராமையே இருந்துட்ட? நகுலன்  கல்யாணத்துக்குக் கூட வரலை” என்று குறைபட்டுக் கொண்டார்.

“அதான் இப்போ வந்துட்டேனே” என்பதைப் போல் அவன் புன்னகைக்க, அவன் புன்னகைக்கு பின்னால் இருந்த வலியை அவர் உணராமல் இல்லை.

“என்ன தாமரை பார்த்துட்டே நிக்கிற? ஆரத்தியை எடு” என்று சொல்ல, அவரும் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் ஆரத்தி சுற்றி அவனை வரவேற்றார்.

“எப்படி இருக்கப்பா கார்த்தி” என்றபடி வந்த சேது ராமன் அவனை அணைத்துக் கொள்ள, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்களின் அன்பும் அரவணைப்பும்  அவனை சற்று நெகிழ்த்தியிருந்தது.

திருமணமே வேண்டாம் என்று இருந்தவனை சந்தான லட்சுமி தான் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்திருந்தார். அவனை சம்மதிக்க வைத்து ஊருக்கு வர வைப்பதற்குள் அவர் படாதபாடு பட்டுவிட்டார்.

அகன் கார்த்திகேயன் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பி விட மாட்டான். அமைதியும், அழுத்தமும் அதிகம். அது அவனின் குணமாகவே மாறிவிட்டிருந்தது.

அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் அவனை ‘ஆ’ வென்று பார்த்திருந்தனர். அதிலும் அவர்கள் வீட்டில் பல வருடங்களாக வேலை செய்யும் மரகதம் அம்மாவோ உரிமையுடன் வந்து அவனின் கையைப் பிடித்துக் கொண்டார்.

“அகல்யா பாப்பாவையே நேர்ல பார்த்த மாதிரி இருக்கும்மா. முதல்ல தம்பிக்கு சுத்தி வைக்கனும். பாருங்க எல்லார் கண்ணும் தம்பி மேல தான் இருக்கு” என்றார் சந்தான லட்சுமியிடம்.

“ஆமா மரகதம், இன்னைக்கு அதை மறக்காம பண்ணிடனும்” என்ற சந்தான லட்சுமிக்கு பெருமை பிடிபடவில்லை.

சந்தான லட்சுமிக்கு மூன்று பிள்ளைகள். அகல்யா,சேதுராமன்,புவியரசு. சேதுராமன்- தாமரை தம்பதியருக்கு குழந்தைச் செல்வங்கள் இல்லை. புவியரசு – வசந்தி தம்பதியினருக்கு ஒரே பையன், பெயர் ஹரீஷ்.

அகல்யா உயிருடன் இல்லாததால் மகள் வயிற்றுப் பேரன்களின் மீது அதீத பாசம் சந்தான லட்சுமிக்கு. குழந்தைகள் இல்லாத சேதுராமனுக்கும் தன் அக்கா பிள்ளைகளின் மீது அளவு கடந்த பாசம். நகுலன் அனைவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்வான். ஆனால் அகன் கார்த்திகேயன் அவ்வளவு எளிதில் யாருடனும் ஒட்டும் ரகமில்லை.

“நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பா. எல்லாத்தையும் அப்பறம் பேசிக்கலாம்” என்றார் சந்தான லட்சுமி.

ஒரு சிறு தலையசைப்புடன், வேக நடையுடன் மாடியேறி சென்றவனை இமைக்காது பார்த்திருந்தார் சந்தான லட்சுமி.

“என்னாச்சும்மா?” என்றார் சேது கவலையாய்.

“எப்படி இருக்க வேண்டிய பையன்? ஏன் இப்படி யாருமில்லாத மாதிரி இருக்கணும் சேது? அவன் என்ன நினைக்கிறான், என்ன பண்றான்னு ஒன்னும் புரியலை. இப்பவாவது மனசு இறங்கி வந்திருக்கானே, அந்த  மட்டுக்கும் சந்தோசம்” என்றார்.

“இப்பவும் உங்க பிடிவாதத்துல தான் வந்திருக்கான் ம்மா. கல்யாணம் ஆகப் போற சந்தோஷமே அவன் முகத்துல இல்லை. கட்டிக்க போற பொண்ணைப் பார்க்கனும்னு நினைக்கலை. அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட நம்மகிட்ட கேட்கலை. நம்ம தான் வற்புறுத்தி பண்ணி வைக்கிற மாதிரி இருக்கு. கட்டாயத்துக்காக பண்ணி வச்சுட்டு நாளைக்கு ஏதாவதுன்னா என்னம்மா பண்றது?” என்றார் கவலையாய்.

“எல்லாம் நல்ல படியாவே நடக்கும்னு நம்புவோம் சேது” என்றவர் மனதிற்குள்ளும் அந்த கவலை இருக்கத்தான் செய்தது.

கவலை ஒரு புறம் இருந்தாலும் பேரனின் திருமணத்தில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் சந்தான லட்சுமி. திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்க, இப்போதிருந்தே தினமும் நூறு பேருக்கு சமையல் என்று ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வசந்திக்கு தான் உள்ளுக்குள் கடுப்பு. புவியரசிடம் புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தார்.

“உங்கம்மா மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காங்க? இதையெல்லாம் நீங்க கேட்க மாட்டிங்களா?  என்ன இருந்தாலும் கார்த்தி இந்த வீட்டு வாரிசு கிடையாது. நம்ம பையன் ஹரீஷ் தான் இந்த வீட்டு வாரிசு. ஆனா, உங்க அக்கா பையன் தான் வீட்டுக்கு வாரிசுன்ற மாதிரி எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்காங்க. பார்க்குறவங்க என்ன நினைக்க மாட்டாங்க? ஏற்கனவே அந்த கார்த்தி பையனுக்கு திமிர் அதிகம். நகுலன் மாதிரி கிடையாது. இத்தனை நாள் ஊர் பக்கம் வராதவனை வம்பா வர வச்சு இதெல்லாம் தேவையா?” என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்த புவியரசிற்கு மூச்சு வாங்கியது.

“கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசு வசந்தி” என்றார்.

“என்ன நக்கலா? நான் பேசுறது இப்போ உங்களுக்கு நக்கலாத்தான் தெரியும். போகப் போகத்தான் புரியும். வசந்தி நீ சொன்னது தான் சரின்னு ஒரு நாள் வந்து என் முன்னாடி நிப்பிங்க பாருங்க, அப்போ வச்சிக்கிறேன் உங்களை” என்று பொருமித் தள்ளிக் கொண்டிருந்தார் வசந்தி.

வீட்டின் வாரிசான தன் மகனை விட, இறந்து போன நாத்தனாரின் பிள்ளைகளுக்கு அந்த வீட்டில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக எப்போதும் வசந்திக்கு மனக் குறை உண்டு. அதிலும் அகன் கார்த்திகேயன் என்றால் அவருக்கு சுத்தமாக ஆவதில்லை.