மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைந்துள்ள, கோயம்புத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான பொள்ளாச்சியில், சற்று வசதி படைத்தவர்கள் வசிக்கும் அந்த பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு.
வீட்டின் வரவேற்பறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தயாளனின் முகத்தில் ஏகத்திற்கும் எரிச்சல் மண்டிக் கிடந்தது. அவர் முகமே அவர் ஏதோ தீவிர யோசனையில் இருக்கிறார் என்பதை உணர்த்த, அதைத் தெரிந்து கொண்ட அவரின் தர்மப் பத்தினி ரேவதியோ அமைதியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வேடிக்கை பார்த்திருந்தார்.
மகன் வாயிலிருந்து உதிர்க்கப் போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார் பரமேஸ்வரி.
தயாளான் மிகுந்த கோபக்காரர். அவருக்கு எப்போதும் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி இருப்பாரா? என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயத்திற்குள் வந்து விடும்.
“இன்னும் எவ்வளவு நேரம் அண்ணா இப்படியே நடந்துட்டு இருப்பிங்க? ஏதாவது ஒரு முடிவை எடுத்துத் தான ஆகணும்?” என்றார் தயாளனின் தங்கை சுகந்தி.
“என்ன பண்றதுன்னு தெரியாமத்தான முழிச்சுகிட்டு இருக்கேன். இப்படி கேள்வியா கேட்டா என்ன அர்த்தம் சுகந்தி. இப்படி கேட்குறது எனக்கு பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?” என்றார் அதட்டல் குரலில்.
தங்கையின் கேள்வியில் தயாளன் சுகந்தியை முறைக்க, அதற்கு மேல் பேசினால் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று தெரிந்ததால் அமைதி காத்தார் சுகந்தி.
“அவ கேட்டதுல என்ன தப்பிருக்கு தயாளா? என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவங்க யாரு? ஏன் நம்மல்லாம் இல்லையா? செத்தா போயிட்டோம்,எல்லாரும் உயிரோட தான இருக்கோம்” என்றார் பரமேஸ்வரி.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதிக்கு எரிச்சல் மண்டியது.
‘உங்களுக்கு எப்படி அவன் பேரனோ, அதே மாதிரி அவங்களுக்கும் அவன் பேரன் தான். அவங்க பேரனுக்கு ஒரு நல்லதை செஞ்சு பார்க்கனும்னு அவங்க நினைக்கிறதுல என்ன தப்பிருக்கு?’ என்று கேட்டுக் கொண்டார் ரேவதி. மனதிற்குள் தான் கேட்டுக் கொண்டார். அப்படியெல்லாம் நினைத்ததை சட்டென்று அவரால் வெளியே பேசி விட முடியாது.
“அத்தை சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்மா. அவங்க என்ன பண்ண நினைக்கிறாங்களோ அதையே பண்ணட்டும். அவங்களுக்கு இல்லாத உரிமையா? என்னோட யோசனை எல்லாம் கார்த்தி எந்த பிரச்சனையும் பண்ணாம இருக்கனும்கிறது தான்” என்ற தயாளனை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தனர் பரமேஸ்வரியும் அவர் மகள் சுகந்தியும்.
“அப்போ, நாம மூணாவது மனுஷங்க மாதிரி அங்க போய் வேடிக்கை பார்க்கனுமா தயாளா?” என்றார் பரமேஸ்வரி.
“வேற வழி இல்லம்மா! நல்ல காலத்துலயே உங்க பேரனுக்கு என்னைக் கண்டா ஆகாது. எப்படியும் நான் சொல்ற பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கவும் மாட்டான். இவ்வளவு ஏன்? நான் சொன்னா அவன் கல்யாணம் பண்ணுவானான்னே தெரியலை. எப்படியோ அவங்க மூலமாவது அவனுக்கு ஒரு நல்லது நடந்தா சரித்தான்” என்றார்.
“நம்ம உரிமையை நம்ம விட்டுக் குடுக்குற மாதிரி இருக்குண்ணா. சும்மாவே அந்த வீட்ல இருக்குறவங்க நம்மளை மதிக்க மாட்டாங்க. இப்போ இன்னும் தொக்கா வச்சுக்க போறாங்க பாருங்க” என்றார் சுகந்தி.
“அப்படி ஏன் நினைக்கணும் சுகந்தி. அவங்க என்னோட மாமியார். அவனோட அம்மாவைப் பெத்த பாட்டி. அவங்களுக்கும் உரிமை இருக்குல்ல. நடந்த எதையும் மறந்துட்டு நீ பேசக் கூடாது. அவங்க பெருந்தன்மைக்கு முன்னாடி நம்மளால நிக்க கூட முடியாது” என்றார் தயாளன். ஏனோ அவர் பேச்சு பரமேஸ்வரிக்கு ரசிக்கவில்லை.
‘பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா! நீங்க தலைகீழா குட்டிக் கரணம் அடிச்சாலும் அந்தம்மா செய்றதைத் தான் செய்யும். என்னமோ இவங்க ஆலோசனை நடத்தி அந்தம்மா அதைக் கேட்டுட்டுத் தான் மறு வேலை பார்க்க போற மாதிரி’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்ட ரேவதி ஒரு பெருமூச்சினை விட,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தாச்சி” என்பதோடு முடித்துக் கொண்டார் ரேவதி. எப்போதும் அவரின் பதில்கள் இப்படியாகத்தான் இருக்கும்.
திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த சுகந்தி அண்ணன் வீட்டோடு இருந்து விட்டார். தயாளன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் வேறு திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதிக்கவில்லை.
தயாளனுக்கு முதலில் அகல்யாவுடன் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள். அவர்கள் சிறு வயதாக இருக்கும் போதே அகல்யா இறந்து விட, ரேவதி அவருக்கு இரண்டாம் தாரம். இரண்டாம் தாரமாய் வாக்கப்பட்டதற்கு அடையாளமாய் இனியா என்ற பெண் இருக்கிறாள்.
அப்போது சரியாக தயாளன் அலைபேசிக்கு அழைப்பு வர,
“சொல்லுப்பா நகுலா, எப்ப வர்றீங்க?” என்றார் எடுத்த எடுப்பில்.
அவனின் பதிலில் அவருக்கு கோபம் வர, கட்டுப்படுத்திக் கொண்டவர்,
“சரிசரி சீக்கிரம் வரப்பாருங்க நகுலா. உங்க பாட்டியைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே?” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
நகுலன்- தயாளனின் மூத்த புதல்வன். தந்தையின் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டவன். மகிமாவை காதலிப்பதாய் சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் அவளையே மணம் முடித்து வைத்ததில் மகனின் மனதில் மேலும் உயரத்திற்கு சென்றிருந்தார். அதற்கு பின்னால் இருந்த காரணத்தை பாவம் நகுலன் அறிந்திருக்கவில்லை.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சரியாக அங்கு வந்து சேர்ந்திருந்தான் அவன். இவர்களின் புலம்பல்களுக்கு எல்லாம் சொந்தக்காரன், நம் கதையின் நாயகன் அவன் தான் அகன் கார்த்திகேயன்.
வெளியே கார் நின்ற சத்தத்தில் எட்டிப் பார்த்த ரேவதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு வந்திருக்கிறான் அகன் கார்த்திகேயன். மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்றவன்,படித்து முடித்து அங்கேயே வேலையிலும் சேர்ந்து கொண்டான்.மருந்திற்கும் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. இடைப்பட்ட நாட்களில் ஒரு நாள் கூட அவன் பொள்ளாச்சி வீட்டிற்கு வந்ததில்லை. இன்று வந்து நின்றவனை கண்டு அவர் ஆச்சர்யப்பட்டதில் தப்பில்லை.
ஆறடி உயரத்தில், அறிவுக் கலையுடன், ஆளை அசரடிக்கும் அழகுடன் வந்து நின்ற அண்ணன் மகனைப் பார்த்த சுகந்திக்கு மனமெங்கும் சந்தோஷ அலைகள். தன் அன்னை அகல்யாவைக் கொண்டு பிறந்திருந்ததால் ஏற்கனவே அகன் நல்ல நிறம். ஆஸ்திரேலியா அவனின் நிறத்தை கூட்டியிருந்தது.
“ஆஸ்திரேலியால இருந்து வந்து ரெண்டு மாசமாச்சு. இப்போத்தான் இந்த அத்தையை பார்க்கனும்னு தோணுச்சா கார்த்தி” என்றார் சுகந்தி ஏக்கம் கலந்த கோபத்துடன்.
அகனின் மீது சுகந்திக்கு தனிப்பாசம். அது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அவரின் கேள்விக்கு இதழ் பிரிக்காத ஒரு சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்தான் அகன் கார்த்திகேயன்.
நடப்பதை எல்லாம் பார்த்த ரேவதிக்கு மயக்கம் வராத குறை தான். பிறகு அகன் சிரிக்கிறானே? இதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம் அல்லவா?
“இந்த பாட்டி ஞாபகமெல்லாம் உனக்கு வரவே இல்லையா கார்த்தி? அப்படி என்ன எங்க மேல கோபம்?” என்ற பரமேஸ்வரிக்கு கண்கள் கலங்க, அதை அவன் சட்டை செய்தது போலவே இல்லை.
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு மகனைப் பார்த்த தயாளனுக்கு பேச்சே வரவில்லை. மனதிற்குள் உணர்வுகள் கொப்பளிக்க, அவனுடன் பேச வேண்டும் என்ற ஆசையை உள்ளடக்கி அமைதியாக அவனைப் பார்த்திருந்தார்.
‘எங்கே தான் பேசினால் மீண்டும் வெளியே சென்று விடுவானோ?” என்ற அவரின் பயமும் காரணமாக இருக்கலாம்.
ரேவதியோ அவனிடம் பேசுவதற்கு முற்படவில்லை. அவருக்கு பேச வேண்டும் என்று தோன்றினாலும் அவன் பேச வேண்டுமே. இதுவரை அவன் ரேவதியிடம் பேசியதே இல்லை.ரேவதி அந்த வீட்டிற்கு வந்த புதிதில் நகுலன் அம்மா என்று ஒட்டிக் கொள்ள, அகன் அப்போது இருந்து இப்போது வரை ரேவதியிடம் விலகியே இருக்கிறான்.
வீட்டில் இருக்கும் அத்தனை பேரிடமும் ஒதுக்கம் காட்டுபவன், ஏனோ இனியாவிடம் மட்டும் ஒதுக்கம் காட்டுவதில்லை. அண்ணா என்று பின்னாலேயே சுற்றி வந்த இனியாவிடமிருந்து ஒதுங்கிச் செல்வது அத்தனை சுலபமான விஷயமாய் இருக்கவில்லை அவனுக்கு.