அவனை எதிர்பாராமல் விறுவிறுவென காலை உணவோடு சேர்த்து மதியத்திற்கும் இன்னொரு அடுப்பில் ஏற்றியவள் மளமளவென வேலையைப் பார்க்க, அனைத்தையும் மலைப்பாய் பார்த்து நின்றான் சக்திவேலன். தன் மறுப்பையும் முகத்திருப்பலையும் உதாசீனப்படுத்தாமல் தன் போக்கில் சமையலறையை கட்டுப்பாடிற்குள் எடுத்துக்கொண்டு அவள் உரிமையாய் வலம் வருவதை தடுக்க முடியாதவனாய் தனக்குள்ளேயே போராடி நின்றான். மனம் புண்படும்படி பேசியாகிற்று, முகத்திற்கு நேரே கதவை சாத்தியாகிற்று எதற்கும் மசியாதவளை இனி கட்டுப்படுத்துவது தன்னால் இயலாத காரியம் என்று புரிந்து போனது.
அவளை இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளலாம்தான் ஆனால் மனம் இடம்கொடுக்கவில்லை. நொடிக்கு நொடி அவளின் அருகாமை அவனின் உறுதியை சோதித்து தகர்க்கும் விதமாய். எனினும் அவளது இருப்பும் தற்போதைய அவளது நிழலுகம் தங்கள் மீது படுவதும் ஒருவித ஒவ்வொமையும் அச்சத்தையும் கொடுத்தது நிஜம். அதனை எப்படி சமாளித்து தங்களை தற்காத்து கொள்ளப்போகிறோம் என்ற யோசனையே நடுக்கம் கொடுத்தது. இடையில் மகள் எழுந்து வந்துவிடுவாளோ என்று பார்வை வேறு அவ்வப்போது அறை பக்கம் சென்றுவந்தது. மகள் எழுந்து வந்து அழகியை பார்த்து கேள்வி எழுப்பினால் என்ன சொல்வது என்று பார்த்து நிற்க, அப்படி ஒரு சங்கடத்தை மகள் தரவே இல்லை. சமையலை முடித்துவிட்டு பூஜையறை எங்கு என்று தேடிச் சென்று இனிப்பு வைத்து நெய்வேத்தியம் செய்தவள்,
“விழிக்கு புடிச்ச சக்கரை பொங்கல் பண்ணி இருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. மதியதுக்கும் பேக் பண்ணிட்டேன். நைட்டுக்கு நீங்க வந்து செய்ய வேணாம். நானே வரேன்.” என்றவள் நொடி தயங்கி அறையைப் பார்த்துவிட்டு அவனை பார்த்தவள்,
“விழிக்கு என்னை அடையாளம் தெரியல.” எனும்போதே நா தழுதழுத்து உடைந்தது.
“திடீர்னு என்னை இங்க பார்த்தா என்ன சொல்லுவா?” கேள்வி போல் அவனை நோக்கியவள் பின் தெளிந்து, “நீங்க பயப்படுற விஷயத்தை அடியோட விட்டுட்டு சீக்கிரம் வருவேன் உங்ககிட்டயே.” உறுதி தொனித்த குரலில் வாக்களித்தவள் தாமதிக்காது அங்கிருந்து கிளம்பிவிட, நெஞ்சை நீவியபடி அமர்ந்துவிட்டான் சக்திவேலன்.
தான் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறது இதிலிருந்து எப்படி வெளிவருவது என்ற அழுத்தம் அப்போதே அவனை அழுத்தத் துவங்கியது. எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பானோ அலைபேசி சிணுங்கவும்தான் யோசனைகளிலிருந்து வெளிவந்து நேரத்தை பார்க்க பள்ளிக்கு நேரமாகியிருந்தது. ஐயோ என்று நெற்றியில் அடித்துக்கொண்டவன் வேகவேகமாக மகளை எழுப்பி குளிக்க வைத்து சீருடை அணிவித்து கிளப்பி உணவு உண்ண அமர வைக்க, அவள் சமைத்துவைத்து சென்றதை வெறுமையாய் பார்த்து நின்றான்.
“அப்பா…”
மகளின் குரலில் தயக்கத்தை தகர்த்தவன் காலை உணவை தட்டில் போட்டு வந்து கொடுக்க, சர்க்கரைப்பொங்கலை பார்த்ததும் மகள் கொடுத்த பாவனையில் அவன் உள்ளமும் சர்க்கரையாய் கரைந்தது. ஆசை ஆசையாய் அதனை எடுத்து உண்டவள் அவனை ஏறிட்டு கண்களை சுருக்கி கன்னங்கள் மின்ன புன்னகைக்க, ஆசையாய் அவளை அணைத்து கன்னத்தில் அழுத்த முத்தமொன்று பதித்தான்.
“சூப்பரா இருக்குப்பா… ம்ம்ம்… சூப்பர்… இன்னைக்கு சட்னி டேஸ்ட்டா இருக்கு. டெய்லி இப்படியே செய்ங்க.” என்று மகள் தட்டில் இருந்தவற்றை சப்பு கொட்டி ருசி பார்த்து நற்சான்றிதலுடன் கோரிக்கையும் வைக்க, அவன் முகம் அப்படியே சுருங்கிப் போனது. விவரம் தெரிந்து அன்னை சமைக்க உண்கிறாள். பிடிக்கத்தானே செய்யும். எதுவும் சொல்லாமல் அவனும் தனக்கு எடுத்துப்போட்டு அமர, அழகுராணி சமைத்ததில் ஒரு வாய் வைத்ததுமே அதன் சுவை நாவரும்புகளை மலரச் செய்து தொண்டை அடைத்தது. இழந்தது, இழப்பது அந்நொடி பெரிதாய் தெரிந்தது. பல வருடம் கழித்து அதே அன்புடன் அவர்களுக்காக அவள் செய்துவைத்துவிட்டு சென்றிருப்பது அவன் திடத்திற்கு பலவீனம் சேர்ப்பதாய்…
“நைட்டும் இதே சட்னி வேணும்.” என்று கயல் கேட்க, இரவு வருகிறேன் என்று சொல்லிச் சென்ற மனைவி மீண்டும் நினைவடுக்கில் வந்து மிரட்டினாள்.
தலையை உலுக்கிக்கொண்டவன் வேகமாக உண்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ஒருவித குழப்பமான மனநிலையுடன் மதியம் அவள் தயார் செய்து வைத்திருந்ததை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான். ஈசலாய் அவள் எண்ணங்கள் படையெடுக்க அதனோடே அன்றைய நாளை துவங்கினான் சக்திவேலன்.
…
“ஸ்கூல் முடிஞ்சி கேட் திறக்குற வரை அங்கேயே குத்தவச்சி உக்காந்திருப்பேனு பார்த்தா இந்த பக்கம் காத்தடிச்சிருக்கு. பாத்துமா கடல் காத்துல அடிச்சிட்டு போயிட போற.” தன்னை நோக்கி வியப்பாய் துவங்கி ஏளனத்தில் முடிக்கவும் முறைத்துப் பார்த்தாள் சக்தி.
“உங்களுக்கு இந்த ஏரியால என்ன வேலை மேடம்? இந்த பக்கமெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதா?” மீண்டும் சீண்டலாய் ஒரு பேச்சு.
“ப்ச்… என் முடிவை தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் இதென்ன பேச்சு குத்திக்காட்டுற மாதிரி? என்ன அர்த்தத்துல இப்படி பேசிட்டு இருக்கீங்க?” அலுப்பாய் நிமிர்ந்து அழுத்தமாய் எதிரிலிருந்த ராஜாவை பார்த்தாள் சக்தி.
தோளை குலுக்கிக்கொண்டு அலுங்காமல் அமர்ந்தவன், “உன் முடிவுல எனக்கு விருப்பம் இல்லைனு அர்த்தம்.”
“அதுக்கு நான் எதுவும் பண்ணமுடியாது.”
“விடுஞ்சும் விடியாதப்போ நீ அங்க போய் தூசி தட்டுனப்போவே தெரிஞ்சுடுச்சு உன்னை இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாதுனு.”
“தெரிஞ்சும் ஏன் இப்படி பேசணும்?” ஆயாசமாய் அவள் பார்க்க, பதில் இருந்தாலும் சொல்லப் பிடிக்கவில்லை ராஜாவுக்கு.
“சரி ரவி விஷயம் என்னாச்சு?” என்றவள் முகமே கவலை தோய்ந்திருக்க, ராஜாவும் சோர்வாய் பதில் கொடுத்தான்.
“இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை சக்தி. கவுன்சிலர் பக்கம் பிரஷர் கொடுத்துட்டு இருக்காங்க. மினிஸ்டரை பாக்க முடியுதான்னு பாக்கலாம்னு பார்த்தா அவங்க சைட் பிடி கொடுக்க மாட்டேங்கிறாங்க. சென்ட்ரல்ல யாரோ தான் இதுக்கு பின்னாடி இருக்கனும் இல்லைனா இவ்ளோ கெடுபிடி இருக்காது.” என்றதும் சக்தியின் முகம் யோசனைக்கு உட்பட்டு அடுத்தகட்டம் என்ன என்ற பிடிப்பின்றி சஞ்சலத்திற்கு அவள் முகம் தாவ,
“இப்படி அடுத்து என்ன பண்றதுனு தெரியாம பல தடவை பேஸ் தட்டி அதை கடந்து வந்திருக்கோம் சக்தி.” என்ற ராஜாவின் வார்த்தைகள் அவளை சற்று ஆசுவாசப்படுத்தியது.
அவசியமான நேரத்தில் தன் தேவையுணர்ந்து அவன் உதிர்க்கும் தூக்கிப்பிடிக்கும் வார்த்தைகளும் நான் இருக்கிறேன் என்ற வார்த்தைகளற்ற அவனின் இருப்பும் அவளை துவளவிடாமல் தாங்கிப்பிடித்திருக்க, இன்றும் அதே மாயத்தை செய்தன அவன் வார்த்தைகள். லேசாக தெளிந்த அவள் முகத்தை கண்ணெடுக்காமல் பார்த்தவன்,
“இதே மாதிரி நான் சொல்ற மத்த விஷயத்தையும் உன் மண்டையில ஏத்திக்கலாம் சக்தி.” அவள் குடும்பத்தை குறிப்பிட்டு அவன் பேச, உச்சு கொட்டினாள் சக்தி.
“எத்தனை முறை பாம்பு மாதிரி நீ உச்சு கொட்டுனாலும் பட்ட வேதனையெல்லாம் மறந்துட்டு உன் புருஷன் பின்னாடி நீ போறதுல எனக்கு உடன்பாடில்லை. இதை எங்க வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் நான் சொல்லத்தான் செய்வேன். உன் வலி வேதனையை கூடவே இருந்து பார்த்திருக்கேன் சக்தி.” என்றவன் குரல் அந்த நாட்களுக்கே அவன் நினைவுகள் சென்றுவிட்டதை பிரதிபலித்தது.
“என் வலி வேதனையை கூடவே இருந்து பார்த்த நீங்க நான் சந்தோசமா இருக்குறத பாக்க வேண்டாமா?” என்று சக்தி எழுப்பிய எதிர்கேள்வியே அவள் மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்று கோடிட்டு காட்டிவிட, அமைதியாய் அவளை பார்த்தான் ராஜா.
“வேண்டாங்குறவரை துரத்தி துரத்தி போறதால என் சுயமரியாதை ஒன்னும் செத்துடாது.” அவன் மனதை படித்தது போல் அவள் பதில் உரைத்துவிட, பொங்கிவிட்டான் ராஜா.
“விட்டா நீயே செத்திருப்ப. அப்போல்லாம் எங்க இருந்தாராம் உன் வீட்டுக்காரர்? கட்டுனவ எப்படியோ போகட்டும் கொள்கை, நேர்மை தான் முக்கியம்னு போனவனுக்கு எல்லாம் உன்னோட அன்பு ரொம்பவே அதிகம் சக்தி.”
“அந்த அன்பு தான் இத்தனை வருஷம் என் உயிரை புடிச்சி வச்சிருக்குனு உங்களுக்கு இன்னும் புரியாதது தான் ஆச்சர்யமா இருக்கு.” என்று அவள் தன் பிடியிலே நிற்க, வெறுத்துவிட்டான் ராஜா.
“சுயநலவாதி புருஷனுக்கு அடங்கிப் போறவளா நீ வேணும்னா மாறலாம். உன் நலம்விரும்புறவங்க எதிர்க்கத்தான் செய்வாங்க. உன்னோட கொள்கையும் குணத்தையும் தைரியத்தையும் பத்தி தெரிஞ்சவங்க இதை ஏத்துக்கணும்னு எதிர்பாக்காத.”
“உங்களுக்கு புடிக்கலைங்குறத்துக்காக அவரை சுயநலவாதின்னு சொல்லாதீங்க.”
“அவரை எனக்கு புடிச்சி என்ன ஆகுபோகுது? மனுஷன்னா தன் மேல உயிரை வச்சிருக்கவங்களை என்ன ஆனாலும் விடக்கூடாது. அதைத்தான் செஞ்ச நீ, அவரை இந்த உலகத்துல புடிச்சி வைக்க உன்னால முடிஞ்ச எல்லைக்கு போயிட்ட. நியாயமா என்ன பண்ணி இருக்கணும் அவரு?” என்று கேட்கவுமே அதில் இருக்கும் உண்மை அவளை சுட, முகம் திருப்பினாள்.
“மனசை தொட்டு சொல்லு அவர் அப்படி விட்டுட்டு போனது உன்னை பாதிக்கலைன்னு.”
அவன் பேச்சின் சாராம்சம் அன்புக்கு ஏங்கும் மனைவியாய் கணவனை விட்டுக்கொடுக்க முடியாமல், “யாரும் என் முடிவை ஏத்துக்கணும்னு நான் எதிர்பாக்கல.” பட்டென்று பேசிவிட, சுறுசுறுவென ஏறியது ராஜாவின் கோபம்.
“ஓ… அப்போ என் கருத்து எல்லாம் ஒருபொருட்டே இல்லைனு சொல்ற… சரிதான். நாந்தான் முட்டாள்தனமா சக்தி சக்தின்னு நீ உடஞ்சப்போ எல்லாம் தாங்கி தூணா நின்னிருக்கேன். ஆனா இன்னைக்கு உன்னை தூக்கிப்போட்ட உன் புருஷன் வந்ததும் நான் வேண்டாதவனா ஆகிட்டேன்ல. அப்போ அங்கேயே போ… விரட்டுவான் மான ரோஷம் இல்லாம நாய்க்குட்டி மாதிரி அவன் காலையே சுத்திட்டு இரு. இங்க என்ன பாக்கணுமோ எல்லாம் நான் பாத்துப்பேன். எடுத்த விஷயத்தை பாதியில நிறுத்துற பழக்கம் எனக்கில்லை.” என்றுவிட்டு விருட்டென அவன் கிளம்பிவிட, சட்டென மூண்டுவிட்ட விழி நீரை அடக்கும் பொருட்டு கண்களை இறுக மூடி சுவரோரம் சாய்ந்துவிட்டாள் சக்தி.
அழையா விருந்தாளியாக ராஜாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஊர்வலம் செல்லத்துவங்க, இடையிடையே சக்திவேலனின் உதாசீனமும் மேலெழும்பி சோர்வுற செய்வதாய். சந்தர்ப்ப சூழ்நிலையால் தடம்மாறி தனித்து விடப்பட்டவள் எதிர்கொண்ட இன்னல்களும் போராட்டமும் ஏராளம். மனதை தளரவிடாது ஒவ்வொன்றையும் கடந்தவளால் மனம் விரும்பியவனை கடக்க முடியமில்லை. அவனே முட்டுக்கட்டையாய் நிற்கையிலும் கூட அவனை விடமுடியவில்லை. அவன் எதிரில் தன்மானமும் சுயமும் அனாவசியம் என்றெண்ணி ஒளிந்து கொள்கின்றன. அவன் தானே நான் என்னிடமே எனக்கு என்ன கெளரவம் வேண்டிக்கிடக்கிறது என்று மூளையும் வக்காலத்து வாங்கி நிற்பதை ராஜாவுக்கு எப்படி புரிய வைக்க என்று ஓய்ந்து போனவளாய் தளர்ந்து அமர்ந்தாள்.
“உடம்புக்கு எதுவும் முடியலையா அக்கா? டல்லா இருக்கீங்களே…” என்று தன் தோள் தொடவும் திடுக்கிட்டு விழித்துப் பார்க்க, நிலா மண்டியிட்டு அவளருகே அமர்ந்திருந்தாள்.
“போனும்.” மீன் சந்தைக்கு செல்ல வேண்டும் என்பதே அப்போதுதான் நினைவு வந்தது. இவள் இல்லையென்றாலும் கடை இயங்கிக்கொண்டிருக்கும் என்பதால் தளர்ந்து அமர்ந்தாள் சக்தி.
அழகுராணி, சக்திவேலன், கயல்விழி குடும்பமாய் அழகான கிளிகளாய் இரம்மியமான சூழலில் இயைந்து இசைந்து செல்லும் காட்சியே சிலிர்ப்பூட்டுவதாய் கொஞ்சல் மீட்டுவதாய்.
“க்கா?” சக்தி தனக்குள் மூழ்கிப்போக, அவள் தோள் உசுப்பினாள் நிலா.
“ஹான்… சீக்கிரம் போய்டுவேன். எல்லாத்தையும் விட்டுட்டு போய்டுவேன்.” சக்தியின் குரலில் தெரிந்த உறுதி நிலாவை யோசிக்க வைத்தது. எல்லாத்தையும்னா எதை சொல்றாங்க என்று நிலா பார்க்க, நிகழ் உலகில் இல்லை சக்தி.
இருமுறை அக்கா என்று அழைத்துப்பார்த்து பதில் கிடைக்காமல் கிளம்பிவிட்டாள் நிலா. ஆனால் அவள் விதைத்த கற்பனையின் தாக்கத்தில் மோன நிலையில் சமைத்து உண்டு வீட்டை ஒதுங்கவைத்து மாலை எப்போது வரும் என விழி வைத்து காத்திருந்தாள். ஏதோ வயது பருவத்தில் காதல் கொண்டது போல் கனிந்து கிடந்த உள்ளம் பட்டாம்பூச்சியாய் துள்ளிக்குதித்து ஆவலாய் அவன் கடைக்கண் பார்வைக்கும் அரவணைப்புக்கு ஏங்கி காத்துக்கிடந்தது. சக்திவேலனை முதன்முதலில் சந்தித்தது, திருமணம் செய்துகொண்டது, மகள் பிறந்தது என்று இனிய நினைவுகளை அசைபோட்டு நேரத்தை கடத்தியவள் மாலை பள்ளி முடிந்து அவர்கள் வீடு வரும் நேரத்தை கணக்கிட்டு சக்திவேலன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றாள்.
வீடு பூட்டியிருக்க மாடிப்படியிலேயே அமர்ந்தவள் விழிகள் நொடிக்கொரு முறை கீழே சென்று வந்தது. அவன் வந்துவிட மாட்டானா என்ற ஆர்வம் மறைந்து வேண்டுமென்றே வரவில்லையோ என்ற தவிப்பு கூடி மனதோடு சேர்ந்து வெகுநேரம் அமர்ந்திருந்த காரணத்தினால் உடலும் சோர்ந்து தளர்ந்தது. இரவு நேரம் செல்லதான் அவன் தலை அவளுக்கு தென்பட்டது. பரபரப்பாக எழுந்தவள் உறங்கும் மகளை தோளில் போட்டுக்கொண்டு ஒருகையில் பைகளுடன் மேலேறுபவனை நோக்கி கீழிறங்கியவள் பையை தன்வசப்படுத்திக்கொண்டாள்.
“தூங்கிட்டாளா? இன்னும் சாப்பிடலையே.” தவிப்புடன் அவள் கேட்க, கண்டுகொள்ளாமல் அவளிடமிருந்த தன் பையை பிடுங்கி சாவியைத் தேட, அவன் கையிலிருந்து இலாவகமாக பையை உருவி சாவியை தேடியெடுத்து கதவை திறந்துவிட்டாள்.
எதிர்வினை ஆற்றாமல் சக்திவேலன் உள்ளே சென்று மகளை மெத்தையில் விட, பின்னோடே உரிமையாய் சென்றவள் ஒருகணம் தேங்கி நின்றாள். மகளின் உறக்கம் கலையாது பள்ளி சீருடையை விலக்கி இலகுவான உடை அணிந்துவிட்டான். உறக்கத்தில் கயல்விழி சிணுங்கி கண்ணை கசக்கி என்னவோ முணுமுணுத்து அதற்கு இவன் சமாதானமாய் கொஞ்சி என பார்க்கவே மனதை நிறைக்கும் நெகிழ்வான நிகழ்வு. அதை கண்டவளுக்கு என்னவோ அப்பாவும் மகளும் ஒன்றாகவும் தான் தனித்தும் இருப்பது போல் தோன்ற, அதுதானே உண்மை என்று மனம் இடித்துரைத்தது.
மின்விசிறியை சரியான வேகத்தில் வைத்துவிட்டு வெளியே வந்தவன் அவளையே அழுத்தமாய் பார்க்க, அதன் வீரியத்தில் நகர்ந்து அவனிடம் வந்தாள்.
“தினம் தினம் உனக்கு பயந்து இப்படி புள்ளையை தூக்கிட்டு ஊர் சுத்த முடியாது. தயவு செஞ்சு நீயே ஒதுங்கிடு.” அவளை சந்திக்கக்கூட விருப்பமில்லாதவன் போல் முகத்தை திருப்பி சுவரை வெறித்துப் பேச, வெதும்பியது அவள் மனது.
இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று கணித்தாளே அதற்காக அப்படியே ஒதுங்கிவிட முடியுமா? இரண்டாம் வாய்ப்பாய் அவள் உயிர் அவள் முன், விட்டுவிட மனமில்லை. எத்தனை காயப்பட்டலும் தன் குழந்தைப் பருவம் போல் தன் பிள்ளைக்கு இருக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்டவளாய் அழுத்தமாக பார்த்தவள் விடுவிடுவென அறைக்குள் நுழைந்து இனி இங்குதான் என்பது போல் கயல்விழியின் அருகில் சென்று படுத்துவிட்டாள். அதிர்ந்து விழித்த சக்திவேலனின் உள்ளம் யோசிக்கவும் மறந்து மரத்துப்போனது.