ஞாயிறு என்பதால்.. கடையில் வேலை செய்யும் ஆட்கள் இல்லை.. சிவகுமாரின் நண்பர்தான் கடையை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். காலை நேரம் என்பதால் கூட்டமும் அவ்வளவாக இல்லை. சிவகுமார் வெளியே இருக்கும் ஸ்டூல்லில் அமர்ந்தார்.

நண்பரும் சிவகுமாரினை பார்த்ததும் “வாய்யா.. டீ குடிக்கனும்.. உன்னை நினைச்சேன்.. வந்துட்ட” என்றார். “உனக்கும் சொல்லவா.. வடை வேண்டுமா” என்றார்.

சிவகுமார் “டீ மட்டும் சொல்லுய்யா” என்றார்.

நண்பர் “என்ன குரலே கடுப்பாக இருக்கு காலை நேரத்தில்” என சொல்லிக் கொண்டே அருகில் இருந்த கடைக்கு.. “ஓவ் பாண்டி” என அழைத்து இரண்டு டீ என சைகை செய்தார்.

“என்னய்யா.. காலையிலேயே வந்துட்ட.. என்ன பொண்ணு ஏதாவது பேசிச்சா” என்றார்.

இரு குடும்ப விஷயங்களும், இருவருக்கும் அத்துபடி. அதனால் உரிமையாக கேட்டார்.

சிவகுமார் அமைதியாக இருந்தார். கடையில் வியாபாரம் ஒன்றிரண்டு நடந்தது. 

டீ குடித்தனர் இருவரும், அப்போதுதான் சிவகுமார் நடந்தவைகளை சொல்லினார். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கடை நண்பரும் “உங்க வீட்டம்மா சொல்கிறா மாதிரி ஜாதகம் பாருய்யா இப்போ.. உன் நினைப்பே சரின்னு இருக்காத.. உன் பெண்ணு பக்கமும் யோசி.” என்றார்.

சிவகுமார் “என்ன செய்வதுன்னு தெரியலை.. நாளைக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா..  என்ன செய்வது.. ஒன்னும் புரியலை..” என்றார்.

நண்பர் “உன் பெண்ணை தத்துக் கொடுத்தது உன்னை இன்னமும் உறுத்துகிறதுன்னு நினைக்கிறேன். உன் அண்ணன் வாழ்க்கைக்கு பிடிப்பு வேணும்ன்னு அவங்க கேட்க்கவும்தானே கொடுத்த.. அவளும் நல்லவிதமாகதானே வளர்ந்திருந்தாள். எதோ போதாதத நேரம்.. உன் அண்ணன் அண்ணியின் இறப்பு. அதற்காக நீ மனதில் அதேயே நினைத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகள் இருப்பது.. அதை மகளின் மேல் திணிப்பது நல்லா இல்லையோ.. ம்.. யோசிப்பா.. பொண்ணுக்கு வயது ஆகுதே யோசிச்சியா குமார்.” என்றார் பொறுமையான குரலில்.

மனையாளின் பேச்சும் நண்பனின் பேச்சும்.. மனதில் எதோ சலனத்தை ஏற்படுத்தியது சிவகுமாருக்கு.

அடுத்து நண்பரின் குடும்ப கதையும் பேசிவிட்டே.. வீடு வந்தார்.. சிவகுமார்.

ஒருமணி நேரம் கடந்திருந்தது. 

அன்னை, வர்ஷினியை உணவு உண்பதற்கு அழைத்தார்.. இப்போது தந்தை வீட்டிற்கு வரவும்.. வர்ஷினி “அப்பா சாப்பிடலாமா” என்றாள்.

தந்தைக்கு இன்னமும் யோசனை தீரவில்லை.. “நீ சாப்பிடும்மா.. நான் அத்தைக்கு போன் பேசிட்டு வரேன்” என்றார்.. நீண்டநாள் சென்று பெண்ணின் முகம் பார்த்து இயல்பாக கதைத்தார்.

வர்ஷினி அதிர்ந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் உண்பதற்கு சென்றாள்.

தன் நண்பர் சொன்னதை மனதில் அலசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தன் அக்காவிற்கு அழைத்தார். என்னமோ தந்தையாக மனது அலைபாய்கிறது. மனதில் முன்பே தோன்றிவிட்டது பெண்னை தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டுமென, இப்போது அவள் அயல்நாட்டில் வேலையில் இருப்பவரை விருபுகிறேன் என்றதும்.. மனது ஒத்துக் கொள்ள மறுக்கிறது. ஆனால், நண்பர் மனையாள் இருவரும் சரிதானே.. என பெண்ணின் விருப்பத்திற்கு தக்க பேச.. குழம்புகிறார்.. நான் ஒருவேளை தவறாக யோசிக்கிறேனோ என மீண்டும் வலியோடு ஒரு குழப்பம்.

அன்பின் மனம் குழம்பும் தானே.. தத்துக் கொடுத்த பெண் அனாதையாக அயல்நாட்டில் ஒருவாரம் இருந்ததை இன்னமும் அவரால் மறக்க முடியவில்லை.. அதற்காக இன்னமும் தன்னை அவர் மன்னித்துக் கொள்ளவில்லை. அதனால் நடுக்கம்.. குழப்பம்.. இன்னொரு கஷ்ட்டகாலம் பெண்ணுக்கு வந்திட கூடாதே.. என எண்ணம். அப்போதாவது நானிருந்தேன்.. வரும் காலத்தில் நான் இருப்பேனோ.. மாட்டேனோ.. என அல்லாடுகிறது அன்பின் மனம். பெற்றவர்களின் அன்பு சாஸ்வதமானது. 

அதனால் யாராவது நாலுபேர் சாட்சி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறது அவரின் மனம். ‘ஒன்றுமாகாது.. எல்லாம் சரியாக இருக்கும்.. நீ எந்த தவறும் செய்யவில்லை..’ என யாராவது தன்னை சார்ந்தவர்கள்.. நல்வாக்கு சொல்லட்டும்.. என எதிர்பார்க்கிறது பெற்றவர் மனம். அதில் நண்பர்.. அக்கா.. மனையாள் ஜோதிடர் என எல்லோரும் அடக்கம்.

அக்காவிற்கு அழைத்தார் சிவகுமார்.

அந்தபக்கம் அவர் எடுக்கவும்.. “அக்கா.. என்ன செய்யற.. சாப்பிட்டியா” என்றார்.

தமக்கைக்குதான் கொஞ்சநாளாக தம்பி மேல் கோவமாகிற்றே.. அதனால் “இல்ல டா.. சொல்லு” என்றார் எடுத்தவுடன்.. எப்படி இருக்க என ஏதும் கேட்க்காமல்.

தம்பி “மாமா எப்படி இருக்கார்.. வீட்டு பக்கமே காணோமேன்னு போன் செய்தேன்” என்றார்.

தமக்கை மீண்டும் கொந்தளித்தார் “எதுக்கு வரணும்.. வந்து அசிங்கபடவா.. போனவாரம் ஒரு கல்யாணத்திற்கு போயிருந்த போதுகூட கேட்டாங்க.. அந்த மாப்பிள்ளை வீட்டின் சொந்தக்காரங்க.. என்னமோ போடா, நல்ல இடம்..” என்றார் கோவம் தீரவில்லை என்பதை உறுதிபடுத்தும் வார்த்தைகளில்.

இப்போது தம்பி திருப்தியானார். ஆமாம் திட்டு வாங்கிட்டால்.. அவர்கள் மனதை கொட்டி தீர்த்துவிட்டால் நல்லதுதானே.. என திருப்தி. அமைதியானார்.

தமக்கை “சொல்லு சிவா.. என்ன விஷயம் காலையில் கூப்பிட்டிருக்க” என்றார்.

சிவகுமார் “அது க்கா.. நம்ம வர்ஷினி, அந்த சர்வேஷ்ன்னு ஒரு பையனை விரும்புகிறாள்..” என தொடங்கி எல்லாம் சொன்னார்.. “என்னால் அவளின் விருப்பத்திற்கு ஒத்துக் கொள்ள முடியலைக்கா.. மதுவும் மாப்பிள்ளையும் கூட சொல்றாங்க.. ஆனால், என்னால் ஏதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.” என நிறுத்தினார்.

தமக்கை “ஆமாம் ஊரு முழுக்க.. வந்த வரணைஎல்லாம் ‘வெளிநாடு’ அதனால் வேண்டாம் வேண்டாம் என  சொன்னேல்ல.. அதான்.. பொண்ணு அதே வேணும்ன்னு வந்து நிற்க்கிறா.. ம்.. என்னவோ போ.. இந்த காலத்து பெண்ணுங்களை ஒன்னும் சொல்றதுக்கில்ல” என்றார்.

தம்பிக்கு குழப்பம் அதிகமாகியது.

அக்கா “என்னடா சொல்றா உன் பொண்டாட்டி..” என்றார்.

“அவளை விடுக்கா.. அந்த சர்வேஷ் வீட்டிலிருந்து வராங்க.. இன்று” என்றார்.

அக்கா “டேய், அவ்வளவு தூரம் போயிடுச்சா” என்றார்.

“அக்கா, வர்ஷினி அன்றே சொல்லிவிட்டாள் க்கா. அதான் எனக்கு உடம்பு முடியாமல் போகிற்று.. அதான் எல்லாவற்றையும் நிறுத்திட்டேன்.” என்றார்.

“அதானே பார்த்தேன்.. இந்த வர்ஷினிக்கு இவ்வளவு தைரியம் ஆகாது டா” என்றார்.

தம்பி அமைதியானார்.

அக்கா “என்ன வேலை டா.. எங்கே இருக்கார் பையன்” என்றார்.

தம்பி சொல்ல சொல்ல.. அருகில் தன் மகனிடம் சொன்னார் ஸ்வீடன்.. வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் என.. மகனிடம் தகவல்.. அப்படியே பரிமாறினார்.

தொடர்ந்து தம்பியிடம் பேசத் தொடங்கினார்.

சற்று நேரத்தில், அருகில் இருந்த மகனும் “அம்மா.. நல்ல கம்பெனி நல்ல வேலை.. என்னவாம் உங்க எல்லோருக்கும்” என்றான்.

அது சிவகுமார் காதிலும் விழுந்தது.. அந்த ஈஸி சேரில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டார். சர்வேஷ் நல்ல வேலையில் இருக்கிறான் என நிம்மதி.. என்ன இருந்தாலும் பெண்ணின் வாழ்க்கையல்லவா.

சிவகுமாரின்  அக்கா “என்னமோ டா.. இதுதான் அவளுக்குன்னு இருந்தால் என்ன செய்வது” என்றார்.

சிவகுமார் “இல்ல அக்கா.. எனக்கு திருப்தியாக மாட்டேன் என்கிறது. திரும்பவும் ஏதாவது அவளுக்கு வந்துட்டா” என்றார்.

“டேய்.. ஆரம்பிக்கும் போதே அபசகுணமா பேசாதே. அதான் வராங்கல்ல.. அவர்கள் வந்து என்ன சொல்றாங்க பாரு..” என்றார்.

“நீ வா அக்கா.. எனக்கு என்னான்னே புரியலை.” என்றார்.

சிவகுமாரின் மருமகன் போனினை வாங்கி பேசினான்.. திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கு அவனுக்கு. அதனால் தைரியமாக திருமண விஷயம் பேசினான் “மாமா.. உங்க பயத்தில் அவள் வாழ்க்கை வீணாகிட போகுது. நீங்களும் பயப்பட வேண்டாம் மாமா.. நம்ம மது.. நம்ம செல்லு..(பேசுபவனின் தம்பி) எல்லாம் நல்லாதானே இருக்காங்க வெளிநாட்டில்.. என்ன பிரச்சனை.. பேசி முடிச்சி சீக்கிரம் டேட் பிக்ஸ் பண்ணுங்க.. மாமா..” என்றார்.

சிவகுமார் “ம்..” என்றார்.

போன் இப்போது அக்காவிடம் கைமாறியது.. “வர்ஷியையும் யோசிக்கணுமே டா.. அவள் இயல்பே சட்டென யாரோடவும் ஒட்டாமல் தனியாக நிற்பதுதானே. அவளே ஒருவனை பிடித்திருக்குன்னு சொல்றா.. பையனும் நல்ல வேலைன்னு சொல்றான் இவன். பேசி பார்ப்போமே டா” என்றார்.

தம்பி “எனக்கு தெரியலை அக்கா.. நீயும் மாமாவும் கிளம்பி இப்போதே வாங்க.. அவங்கிட்ட பேசுங்க.. வரீயாக்கா” என்றார்.. தத்தளிப்பவர் போல.

இன்னமும் தீரவில்லை அவருள் போராட்டம். ஆனால் பெண்ணின் விருப்பம்.. முன்னிற்கிறது. அதனால், சற்று குழப்பத்தில் என்றாலும் பேசி பார்க்க எண்ணுகிறார். 

பார்ப்போம்.. பெற்றவரின் சலனம் காற்றில்.. பற்றி எறியப் போகிறதா.. இல்லை, அதே காற்றில் பறந்து போகபோகிறதா என.