அப்பா இல்லாத வாழ்க்கை அவர்களுக்குப் பழக்கமானது தான்! அம்மாவும் இல்லாமல் ஒரு வாழ்க்கையை மட்டும் அவனால் யோசித்தே பார்க்க முடியவில்லை. அம்மா விரைவில் குணமாகி வர வேண்டும். இன்னும் கொஞ்ச காலமாவது அவர்களோடு வாழ வேண்டும். இப்போதைய அவனது கோரிக்கை அது ஒன்றே ஒன்று தான்!
சில நொடிகள் கண்மூடி நின்றிருந்தவனை மிகவும் பரிட்சயப்பட்ட குரல்கள் கலைத்தது. “வீட்டை லீஸுக்கு விடலாம்ன்னு நான் யோசிச்ச முடிவு தப்பாப்பா?” நலுங்கி ஒலித்த குரல் பிரவீனுடையது.
எப்பொழுதும் பிரவீனின் குரல் இப்படி இறங்கி ஒலிக்காது. திருமணமானதிலிருந்து பார்த்திருக்கிறானே! தன்மான சிங்கம் போலத்தான் அவனது பேச்சு இருக்கும். மெல்லிய குரல் என்றாலும் திடமாக பேசுவான். பணமே இல்லாத நிலையிலும் சிறு உதவியைக் கூட உறுதியாக மறுப்பான்.
‘வெட்டி ரோஷம் பார்க்கிறார், பொறுப்பாக குடும்பம் நடத்தத் தெரியவில்லை’ என்றெல்லாம் தான் பிரவீனைப் பற்றி நந்தாவின் மதிப்பீடு!
“அதுக்கில்லைப்பா… இப்ப வீட்டுச் செலவுக்கு அந்த வாடகைப் பணமும் பென்சன் பணமும் தான் உபயோகமாகுது” என்று ராஜனின் குரல் அதைவிட ஓய்ந்து போய் ஒலிக்க, ஒரு நிமிடம் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது நந்தகுமாருக்கு.
அவனுக்கும் அவர்கள் நிதி நிலைமை தெரியும். பிரவீன் நிறைய கடன் வாங்கி விட்டான் அதை அடைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம் தெரியும். ஆனால், வீட்டு செலவுக்குக் கூட சரிக்கட்ட முடியாது என்றால்? அப்படியானால் அக்காவின் தொழில் லாபம் எங்கே போகிறது?
இத்தனை நாட்களும் பிரவீன் கடனுக்குக் கட்டிக்கொண்டு இருப்பதால், தொழில் லாபம் மொத்தத்தையும் மீண்டும் தொழிலிலேயே போட முடியாமல் அக்கா குடும்ப பொறுப்பை பார்த்துக் கொள்கிறாள் போல என்று எண்ணித் தான் தொழிலுக்குப் பணம் தேவை என்று கேட்கும் போதெல்லாம் கணக்கே இல்லாமல் வாரி இறைக்கிறான். அவன் இறைக்கும் பணத்தில் கொஞ்சமே கொஞ்சம் லாபம் எடுத்தாலே குடும்பம் நடத்த போதும் என்ற நிலை தான்! மீதி பணத்தை மீண்டும் தொழிலிலேயே போட முடிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவனிடமே மீண்டும் முதலீடு போடப் பணம் கேட்டு வரும்போது கடனுக்கும் கட்டிக்கொண்டிருக்கிறாள் போல என பரிவு எழ யோசிக்காமல் தந்து விடுவான்.
இப்பொழுது பார்த்தால்? தலையைச் சுற்றியது நாயகனுக்கு.
அமைதியாக அங்கிருந்த திண்டிலேயே அமர்ந்து கொண்டு மீதி பேச்சு வார்த்தைகளை உள்வாங்கினான். மரத்திற்கு ஒருபுறம் இவன் சற்று வெளிச்சம் குறைவான இடத்தில் இருக்க, அவர்கள் வெளிச்சம் இருக்கும் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
பிரவீன், “ஓ… நம்ம லக்ஷு குட்டிக்கு ஸ்பீச் தெரபி போதும் தானேப்பா. அதை வேணா நிறுத்திடலாமா?” என்று உள்ளே போன குரலில் கேட்க, ஸ்பீச் தெரபி தருமளவா குழந்தையிடம் பேச்சுவார்த்தைகள் குறைவு என்று யோசித்த நந்தகுமாருக்கு ஆம் என்று புரிந்தது. சமீபமாகத்தான் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுகிறாள் என்பதும் அவன் நினைவிற்கு வர ஏன் இதனைப்பற்றி அக்கா ஒன்றும் சொல்லவில்லை என்று குழம்பினான்.
“என்னப்பா இப்படி சொல்லற? சுரேகா வேற இந்த வருஷம் குழந்தையை ஸ்கூலில் விட்டே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறா. அதுக்குள்ள குழந்தை கொஞ்சம் பேசற அளவுக்கு வந்தா தானே நல்லா இருக்கும். இத்தனை நாளும் அவ கையில மொபைலை கொடுத்து கொடுத்து உட்கார வெச்சு பழக்கப்படுத்தி விட்டுட்டா. குழந்தை பாவம் எதுவும் சரியா பேச கூட மாட்டேங்குது” என்று ராஜன் கவலையோடு சொல்ல,
“அவகிட்ட நான் எதுவும் பேச முடியுமாப்பா? என்ன பேசினாலும் அம்மா வீட்டுக்கு போறேன்னு குழந்தையோட போயி அங்க உட்கார்ந்துக்கிறா. எனக்கு ரொம்ப அவமானமா இருக்குப்பா. அவ அடம் பிடிச்சு என்னை கடன்காரியாக்கினா, அவ தம்பிகிட்ட கையேந்தி என்னை கையாலாகாதவனாக்கிறா, குழந்தைக்காக நான் பொறுத்து தானே போகணும்” என்றான் இயலாமையுடன் கூடிய பெருமூச்சுடன்.
மனைவியை கணவன் பொறுத்துப் போவதா? சில மாதங்கள் தான் திருமண வாழ்வு என்றபோதும் ஒரு நொடி கூட இவ்வாறு நந்தா யோசித்ததில்லையே! ஏன் பெற்றவர்களின் வாழ்வில் இப்படியொரு விரக்தியை அவன் ஒரு நாளும் கண்டதில்லையே! ஆனால், அவன் தமக்கை மட்டும் ஒருவனை விரக்தியின் விழும்பில் நிறுத்தியிருக்கிறாள். நந்தாவின் நியாய மனம் வெதும்பியது.
“போனது போகட்டும் விடு. இன்னும் ரெண்டு மாசம் மட்டும் சமாளி. அதுக்குள்ள வர வாடகை பணத்தை வெச்சு லக்ஷு குட்டிக்கு ஸ்பீச் தெரபி தந்து முடிச்சிடலாம். குழந்தையும் மணி மணியா பேசிடுவா. நீ அதுவரைக்கும் சமாளி போதும்” என்றார் ராஜன் மகனிடம் கோரிக்கையாக.
“இன்னும் ரெண்டு மாசம் சுரேகா கண்ணுல மாட்டாம இதெல்லாம் செஞ்சு முடிக்கணுமா ப்பா… என்னவோ போங்க வாழ்க்கையே ரொம்ப நரகமா இருக்கு” என்று அவன் வேதனையோடு உரைக்க, பெற்ற தந்தைக்கும் மகனை இப்படி மாட்டி விட்டுவிட்டோமே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது.
“சரி விடுங்க… என் தலையெழுத்துக்கு நீங்க என்ன செய்வீங்க?” தந்தையின் வாட்டம் தாங்க மாட்டாமல் பிரவீன் சொல்ல, அவர்கள் குடும்ப சூழலை அறிந்து கொண்ட நந்தாவிற்கு மனம் பாரமாகிப் போனது. இவருக்கு உதவி தேவை என்று கோரிக்கை வைத்த மனைவி கண் முன் வந்தாள். அவள் கொஞ்ச மாதங்களில் கணித்த விஷயத்தை ஆண்டுக் கணக்கில் கவனிக்காமல் முட்டாளாக இருந்திருக்கிறோமே என்று எண்ணி நொந்து போனான்.
“சுரேகா நம்மளை தேட மாட்டாளா தம்பி? லக்ஷுவை ஸ்பீச் தெரபி கிளாஸ்ல இருந்து கூப்பிட போன உங்க அம்மாவை வேற இன்னும் காணோம்” என்று ராஜன் கவலையோடு சொல்ல,
விரக்தி சிரிப்புடன், “அவளுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கு. அவ கம்மல் அழகு, புடவை அழகு, கன்னம் அழகுன்னு எத்தனை வர்ணனை வந்திருக்குன்னு பார்க்கவே அவளுக்கு நேரம் இருக்காது, இதுல மகளை தான் தேட போறாளா? போங்கப்பா. எப்பவும் உங்ககிட்டயே குழந்தையை விட்டு வெச்சிருந்தா குழந்தை இந்த மாதிரி பேசாம இருந்திருக்க மாட்டா. சும்மா அவளைத் தூக்கிட்டு போயி கவனிக்காம விட்டு இப்ப பாருங்க குழந்தைக்கு மூணு வயசுன்னு பேருக்கு தான். ஆனா பார்க்க அப்படியா இருக்கா? ஏதாவது பேச தெரியுதா?” என்று பிரவீன் கவலையும் ஆதங்கமுமாகச் சொல்ல, நந்தாவிற்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
“விடுப்பா சரியாயிடும்” என்று சமாதானமாகச் சொன்னவருக்கும் தெரியும் சரியாகும் வாய்ப்பே இல்லையென்று!
“சரி அந்த பேச்சை விடுங்க… நீங்க சொன்ன மாதிரி ரெண்டு மாசம் அப்பறமே லீசுக்கு விட்டுடறேன் பா… ஒரு கடனையாச்சும் கட்டுனா தான் அவசர செலவுக்கு பணம் இருக்கும். பாவம் அனு தான் ரெண்டு மாசமா என்னோட கிரெடிட் கார்ட் பில் கட்டறா. வேண்டாம்ன்னு சொன்னா, ‘உங்களுக்கு முடியறப்ப திருப்பி கொடுத்த்துடுங்கண்ணா. கடன் அன்பை முறிக்கும் அதுனால கடன் எல்லாம் வசூலிக்காம விட மாட்டேன்னு’ சொல்லறாப்பா. எனக்கும் தம்பியோ தங்கச்சியோ இருந்திருக்கலாம்ன்னு சுரேகாவுக்கு எந்த சூழலிலும் சப்போர்ட் செய்யற நந்தாவை பார்த்து நினைச்சிருக்கேன். அந்த குறை தீர்க்க தான் அனு வந்திருப்பா போல, ஆனா அவளுக்கு கஷ்டம் தர மாதிரி இருக்கோமேன்னு நினைக்கவே மனசுக்கு பாரமா இருக்குப்பா” என்று பிரவீன் நெகிழ்ந்து போய் சொன்னபோது, நந்தா எழுந்தே நின்று விட்டான்.
பிரவீனின் பணத்தேவைக்கு உதவி செய்பவளா சுரேகாவிற்கு செய்வதை மறுப்பாள்?
நெற்றியில் பலமாக அறைந்து கொண்டான். அவளை முதலில் எப்படி நான் சந்தேகித்தேன்? அவள் சொன்னாளா நான் அத்தையிடம் இப்படிச் சொல்லி விட்டேன் என்று? அக்கா சொன்னால் அதை நான் அப்படியே நம்பி விடுவேனா?