காதல் சூழ் உலகு – 11

திருமண வாழ்க்கையின் அஸ்திவாரம் நேசமும் அன்பும் அக்கறையும் மட்டும் தானா? எல்லாவற்றையும் விட நம்பிக்கை தானே அதிமுக்கியமான அஸ்திவாரம். அது இல்லாத உறவில் வேறு என்ன நிறைந்திருந்து என்ன பயன்?

அனுராதாவிற்கு கணவனின் சொற்களைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் எப்போதாவது உன் அக்காவிற்குப் பணம் தருவதில் எனக்கு விருப்பமில்லை என்று அவனிடம் சொல்லியிருக்கிறாளா? இல்லை சிறு செய்கையின் மூலமாவது அதை அவனிடம் உணர்த்தியிருக்கிறாளா?

அப்படியிருக்க அதெப்படி அவள் தமக்கை சொன்ன கூற்று சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறது? இதுதான் மனைவியின் மீது அவன் கொண்ட நம்பிக்கையா?

அழுகையை அடக்கியபடி வீடு வந்து சேர்ந்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. தங்கள் அறைக்குச் செல்வதற்கு விருப்பம் இல்லாதவளாய் சோபாவிலேயே சுருண்டு கொண்டாள். கலங்கிய மனம் வழக்கம்போல தந்தையைத் தேடியது. அவர் இல்லாத ஏக்கம் பலமாகத் தாக்கியது.

சோபாவின் விளிம்பில் கால்களை மடக்கிக்கொண்டு குறுகி அமர்ந்து அதிலேயே தலை சாய்த்து கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள்.

மருத்துவர், கனகதேவி மருந்துகளுக்குச் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்பதால் அவரின் நலத்தை உடனடியாக உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று நந்தகுமாரிடம் தெரிவிக்கவும் அவன் பரிதவித்துப் போனான்.

மயக்கம் வருமளவு விட்டிருக்கக் கூடாது அல்லது மயக்கம் என்ற நிலை வந்தபோதே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்த, வேலை செய்யும் அம்மாவை இருக்க வைக்கிறேன் என்று அத்தனை வாதாடியும் மறுத்த தன் அன்னையின் பேச்சிற்குச் செவி சாய்த்திருக்கக் கூடாதோ என்று இப்பொழுது வருந்தினான். நாளைக்குள் மருந்துகளுக்கு ஓரளவு அவரது உடல் கட்டுப்பட்டால் அபாய நிலை இல்லை என்றும் சேர்த்துச் சொல்ல, நந்தகுமார் வெகுவாக ஓய்ந்து போனான்.

நந்தகுமாருக்கு அன்னைக்கு என்னவாயிற்று என்று பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்க மனையாள் வீடு செல்கிறாள் என்று தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. அவள் அழுகை, ஏமாற்றம், துக்கம் எதுவும் பாதிக்குமளவு மனநிலையில் அவன் இருந்திருக்கவில்லை. அன்னைக்கு என்னவாகுமோ என்பதே அவனை துரத்திக் கொண்டிருக்க வெகுநேரமாக வேறு எதுவும் மூளையில் பதிய மறுத்தது.

அதுவும் மருத்துவமனையில் அன்னையைச் சேர்த்ததிலிருந்து அனு ரொம்பவும் வருந்திக் கொண்டிருக்க, சுரேகா அந்த நேரம் பார்த்து அவ்வாறு சொல்லவும் சரி குடும்ப அரசியல் போல… மனைவி ஏதோ சொல்ல அம்மா அதற்கு வருந்தி, அவரின் உடல்நிலை இப்படி ஆகியிருக்கும் போல என்று எண்ணித் தான் என்னவென்று அவளிடம் விசாரித்தான். இதற்கும் ஏற்கனவே மருகிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கருத்தில் கொண்டு அன்னையின் நிலைமை தெரிந்திருந்தும் கோபமாகக் கூட விசாரிக்கவில்லை.

அதற்கு அவள் சிறுபிள்ளை போல அழுததில் எரிச்சல் கூடியிருக்க அங்கிருந்து போகுமாறு சொல்லி விட்டான். அதற்கும் ரோசப்பட்டுக் கொண்டு உடனே கிளம்பி விட்டவள் மீது கோபம் தான்! சரி அவளுக்கும் அதிர்ச்சியும் கவலையுமாக இருக்கும் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டான்..

ஆனால், நேரம் ஆக ஆகத் தனியாக என்ன செய்கிறாளோ என்று இருப்பே கொள்ளவில்லை. அக்கா எண்ணச் செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தான், இங்கு என்ன நடக்கிறது என்பதில் கூட கவனத்தைச் செலுத்தாமல் கைப்பேசியில் மூழ்கியிருந்தாள்.

ஏனோ அத்தைக்கு எதுவும் ஆகிவிடுமோ? அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறதோ என்கிற பதைபதைப்பில் கண்ணீரில் கரைந்தபடி அமர்ந்திருந்த அனுராதா அவனது நினைவுக்கு வந்தாள்.

முதல்முறையாக சுரேகாவைப் பற்றி ஒரு விஷயம் அவனுக்கு உறுத்துகிறது.

நந்தகுமார் வெளியுலகம் தெரியாதவன் எல்லாம் இல்லை. ஆனாலும் உடன்பிறந்த பாசம் அவனைப் பல நேரங்களில் முறையாக மற்ற விஷயங்களைக் கவனிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அவனைப் பொறுத்தவரையிலும் அக்காவிற்கு இன்னும் நல்ல வரன் பார்த்திருக்கலாம். திருமணமான புதிதில் சுவிஸ் டூர், பெரிய அப்பார்ட்மெண்ட், சுரேகாவிற்கான தொழில் என்று பிரவீன், சுரேகாவின் வாழ்க்கை ஏறுமுகத்தில் தான் தொடங்கியது. ஆனால், அதன்பிறகான அவர்கள் வாழ்வின் திண்டாட்டம் பிரவீன் அகலக்கால் வைத்துவிட்டதை நந்தாவிற்கு உறுதிப் படுத்தியது.

அந்த பெரிய அப்பார்ட்மெண்ட் வாங்கும் திட்டமும் அத்தனை இக்கட்டிலும் மேலும் கடன் வாங்கி தொழில் தொடங்கும் திட்டமும் சுரேகாவுடையது என்பதை நந்தா யூகிக்கத் தவறியிருந்தான்.

அப்பார்ட்மெண்ட் வாங்கினால் தான் உன்னோடு வாழ வருவேன் என்று வயிற்றில் மகளோடு பிறந்த வீடு வந்துவிட்டவளைப் பெற்றோர்களின் கட்டாயத்தில் தான் பிரவீன் சமாதானம் செய்து அழைத்துப் போயிருந்தான். வேறு வழியில்லாமல் தன் சக்திக்கு மீறி அந்த அப்பார்ட்மெண்ட் வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தான். தொழில் தொடங்கியதும் கிட்டத்தட்ட அதேபோன்ற கதையினால் தான்! ஆனால், நந்தாவின் பார்வையில் சூழ்நிலை கைதியான பிரவீனின் திட்டமிடல் மோசம் என்று பதிந்து போனது.

அதன்பிறகு சுரேகா இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்குமளவு பொருளாதார நிலையில் பிரவீன் இல்லாமல் போகவே அவள் விவரமாக நந்தாவைச் சுரண்டத் தொடங்கி விட்டாள்.

ஏற்கனவே இப்படி ஒரு சிக்கலான மனிதனுக்கு அக்காவைத் திருமணம் செய்து வைத்து விட்டோமே என்ற குற்றவுணர்வில் இருந்த நந்தகுமாரும் கணக்கு பார்க்காமல் அக்காவிற்குச் செய்ய தொடங்கி விட்டான்.

சுரேகா தொழிலில் பெருமளவு கோட்டை விடுவதும், தனக்கு, தன் அலங்காரத்திற்கு, ஆடம்பரத்திற்கு என வஞ்சனை இல்லாமல் செலவு செய்வதும், ரீல்ஸ் போட்டு வியாபாரம் செய்கிறேன் என்று தன்போக்கில் இருப்பதையும் நந்தா கவனித்ததாகவே தெரியவில்லை. அதற்கு அவனுக்கு நேரமும் இல்லை பாவம்! தன் தொழில், அதன் வளர்ச்சி என மூழ்கி போயிருப்பவனுக்கு இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றி அக்கறை இருந்ததில்லை! ஒருவேளை அவன் பார்வைக்கு வந்திருந்தாலும் அது அக்காவின் விருப்பம் அவள் வேண்டும்படி விளம்பரம் செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிடும் ரகம் தான் அவன்!

ஆனால், இப்பொழுது அம்மா மருத்துவமனையில் இந்த நிலையில் இருக்கும்போது கைப்பேசியில் மூழ்கியிருந்த தமக்கையின் செய்கையில் வெகுவாக அதிருப்தி எழுந்தது.

எதையோ யோசித்தபடி நந்தகுமார் முன்னே நகர, அவனிடம் வேலை செய்யும் கணேஷ் எதிரில் வந்தான். இவன் கேள்வியாக ஏறிட, “அண்ணி முகமே வாடிப்போயிருக்கு. அவங்களை எதுக்கு இப்ப தனியா அனுப்பி விட்டீங்கண்ணா” என்றான் அனுவிற்கு பரிந்து.

நந்தா முறைக்க, “என்னவோ போண்ணா பாவம் விட்டா அழுதிருப்பாங்க. மூஞ்சி எல்லாம் ஒரு மாதிரி ஆயிடுச்சு” என்று இன்னும் அவளுக்காகவே பேச, “டேய்… போ… பாரு அங்க அக்கா தனியா இருக்காங்க, அவங்க கூட நில்லு போ. நான் இதோ கொஞ்ச நேரத்துல வந்துடறேன். கொஞ்சம் கால்ஸ் பேச வேண்டியிருக்கு” என்று சுரேகாவிடம் அவனை அனுப்பிவிட்டு, நெற்றியை தேய்த்தபடி கீழே இறங்கி வந்தான்.

இரவு நேரம்! மருத்துவமனை வளாகத்தில் ஓங்கி வளர்ந்திருந்த மரங்கள் சிலுசிலுவென்று காற்றை வீச ஆழ்ந்து மூச்செடுத்தபடி ஓரிரு நொடிகள் நின்றான். அவனுக்கு அந்த நேரம் அது மிகவும் தேவையாக இருந்தது.

அம்மா மீது அவனுக்குக் கோபமும் இருக்கும். கூடவே மரியாதையும் பாசமும் அதைவிட அதிகமாகவே இருக்கும். கோபம் எதற்கென்றால் அவர்கள் வீட்டின் பல முடிவுகளை அம்மா தான் தீர்மானிப்பார். இவர்களின் கருத்து அவரிடம் எடுபடாது. நந்தகுமாரின் திருமணமே அதற்குப் பெரிய சாட்சி!

ஆனால், அம்மாவின் அந்த ஆளுமை தான் குடும்பத்தைத் தாங்கி பிடித்தது. அவரின் தைரியமும் போராடும் குணமும் தான் குடும்பத்தை வளர்த்து விட்டது. எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். பிள்ளைகளின் நல்வாழ்விற்காக அயராது உழைத்தவர். அந்த மரியாதையும் பற்றும் அவனிடம் நிறைய நிறைய இருப்பதால், அம்மா மீது அவ்வப்பொழுது கோபம் தலை தூக்கினாலும் சீக்கிரமே அது பின்னுக்குப் போய்விடும்.