“நானா உங்க அண்ணனை மாட்ட சொன்னேன், அவரே தான் வந்து வலிய வந்து இந்தா இந்தா ன்னு கழுத்தை கொடுத்தாரு, நான் என்ன பண்ண முடியும்”, என்று சொல்லி சிரித்தாள் .
“அடிப்பாவி” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி கீழே இறங்கியவன்,
பாதி தூரம் சென்றவுடன் ‘சேர்ந்து நடிக்க வேண்டியது தான் இருக்கு’, என்று நினைக்க,
‘அவளே நமக்காக தான் நடிச்சிட்டு இருக்கா’ என்ற யோசனையோடு ‘இப்படி ஒரு ப்ரன்ட் கிடைக்கிறது எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்’ என்று நினைப்போடு கீழே இறங்கி சென்றான்.
“சாப்பிட்டாளா டா” என்று கேட்டான்.
“கட்டாயப்படுத்தி கொஞ்சோன்டு சாப்பிட வச்சிருக்கு, மீதி நான்தான் சாப்பிட்டேன்”, என்று சொல்லிவிட்டு “இன்னும் ரெண்டு இட்லியை வைங்க எனக்கு வேணும்”, என்று சொல்லி, அவன் வந்து சாப்பிட துவங்கினான்.
அவனும் தலையில் கை வைத்தபடி அமர, “பிரயோஜனமே இல்ல, சாப்பிடு முதல்ல, சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் போய் உன் பொண்டாட்டியை சமாதானப்படுத்து, ஆத்தா மலைய இறங்குறதுக்கு எப்படியும் இன்னும் ரெண்டு நாளாவது ஆகும், தீபாவளிக்குள்ள மலை இறக்க பாரு”, என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.
சரணும் சாப்பிட்டு விட்டு மாடிக்கு செல்ல, அவன் அம்மா தான், “பால் எடுத்துட்டு போறியா டா” என்று கேட்டார் .
அடக்க முடியாமல் சிரித்து விட்டான் சிவா, “நல்ல ஆட்கள் தான் ஒன்னும் இல்லாத விஷயத்தை ஆளாளுக்கு பேசி அவளை டென்ஷனாகிட்டு, இவன் ட்ட பால கொடுத்து சமாதானப்படுத்தவா, பழத்தை கொடுத்து சமாதானப்படுத்தவா, பாருங்க , மலை ஏறினா ஆத்தா இறங்குவாளாக்கும், போங்க போங்க, போய் அவங்க அவங்க வேலைய பாருங்க, அவ இதுக்குள்ள தூங்கி இருப்பாளோ, இல்ல மொட்ட மாடில போய் உட்கார்ந்து இருக்கிறாளோ, போய் தேடு போ, உன் பொண்டாட்டிய”, என்று அவனை அனுப்பி விட்டு,
அம்மாவிடம் “போங்க போய் தூங்குங்க”, பாப்பாவ சீக்கிரம் தூங்க வைங்க, அல்லது என்கிட்ட குடுங்க”, என்று கேட்டான்.
அதுவும் பாட்டியின் மடியில் படுத்து கொண்டு,”பாட்டி கதை சொல்லுவாங்க, நான் அங்க போறேன்”, என்று சொல்லிவிட்டு சென்றது.
“போ இன்னைக்கு பாட்டி நல்ல கதை சொல்லுவாங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
சரண் மேலே வந்து பார்த்த போது அமைதியாக அவளின் இடத்தில் படுத்து இருந்தாள் மது, இவனும் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு சென்று அருகில் படுத்துவனுக்கு உறக்கம் வராமல் யோசனையில் இருந்தான்.
கண்முடி படுத்திருந்தாலும் தூங்க முடியாத மது அங்கேயும் இங்கேயும் திரும்பி படுக்க, சற்று நேரத்தில் அவளை இழுத்து தன் கைக்குள் அடக்கி பிடித்தவனோ, “மது நான் சொன்னது அந்த அர்த்தத்துல சொல்லல”, என்று சொல்ல
அவனிடமிருந்து விலகப் பார்த்தவளை அழுத்தமாக பிடித்துக் கொண்டு, “உனக்கு நான் ஹக் பண்ணிட்டு படுக்கணும், இல்லாட்டி நீ என் மேல சாஞ்சி படுக்கணும், அப்படின்னா தான் தூக்கமே வரும், எனக்கும் தெரியும் அதனால இப்ப தூங்கு, காலையில சண்டை போட்டுக்கலாம்”, என்று சொல்லி அவள் தலையை கோதியப்படி இறுக்கமாக அணைத்து பிடித்திருந்தான்.
அவன் சொன்னது போலவே, அவள் எப்போதும் அவன் கைகளுக்குள் தூங்கி பழக்கப்பட்டிருந்ததால், இப்போதெல்லாம் அவன் அருகில் இல்லாமல் அவளுக்கு தூக்கம் கூட வருவதில்லை.,
அந்த நிலையில் தான் யோசனையோடு படுத்திருந்தவளுக்கு அவனே வந்து எப்போதும் போல பிடித்துக் கொள்ள, இன்று இன்னும் அழுத்தமாக பிடித்திருந்தாலும் தூக்கம் நிம்மதியாக வந்தது.
அவன் பிடித்த சற்று நேரத்தில் உறங்கிப் போயிருந்தாள்.
விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், ‘சின்ன வார்த்தைக்கு கூட எவ்வளவு கோவம் வருது”, என்று யோசித்தவன், ஏதோ கோல்மால் பண்றாளோ’ என்றும் தோன்றியது.
சரி எதுவாக இருந்தாலும் நாளை பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவனும் கண்ணயர்ந்தான்.
அதிகாலை எழுந்தவுடன் அவன் நினைப்பு அதிகமாக இருந்தாலும், யோசனை என்னவோ, ‘என்ன செய்யலாம் என்று மட்டுமே, இன்னும் இவனிடம் சண்டையை நீடிக்க முடியாது, ஒரு நாள் சண்டை போட்டதற்கே சரண் மொத்தமாக சரண் அடைந்து விட்டான், இதில் இன்னும் கோபத்தை தூக்கி பிடித்து இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தால், நிச்சயமாக தாங்கிக் கொள்ள மாட்டான்’, என்பதை அறிந்தவள்., ‘இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்’ என்று முடிவு எடுத்தவள், அவன் கைகளில் இருந்து மெதுவாக எழுந்து வந்தாள்.
அவன் எப்போதும் போல நினைத்துக் கொண்டு மீண்டும் உறங்க துவங்கினான்.
சற்று நேரம் நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தவள், பின்பு வேகமாக குளியல் அறைக்குள் சென்று காலைக்கடன் முடித்து குளித்து கிளம்பியே வெளியே வந்தாள். அவள் வரும் போதும் அவன் தூங்கிக் கொண்டிருக்க மெதுவாக அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாள்.
கீழே செல்லும்போது சரணின் அம்மா மட்டும் காலை உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, வேகமாக ஓடி சென்றவள்,
“சாரி அத்தை கூட கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்” என்று சொல்லி விட்டு அவரோடு சமையலுக்கு உதவி செய்ய தொடங்கினாள்.
அவரோ அவள் முகத்தையே அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார்., அவளும் அவர் பார்ப்பது தெரிந்தாலும் எதுவும் தெரியாது போல அமைதியாக இருந்து கொண்டாள்.
அவருக்கோ ‘இவளிடம் எப்படி பேச்சை தொடங்குவது என்று நினைத்தாலும், வேண்டாம் ஏதாவது பேசப்போக, ஏதாவது கேட்க போய் அவள் மீண்டும் கோபப்பட்டு விடக்கூடாது’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
“அத்த நிலா தொந்தரவு எதுவும் செய்தாளா”,என்று கேட்டாள்.
“கதை சொன்ன உடனே சமத்தா இருந்துக்கிட்டா, இன்னும் தூங்கிட்டு இருக்காடா” என்று சொன்னாள்.
“சரி பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டு “சிவா எங்க” என்றாள்.
“அவன் வெளியே உட்கார்ந்து இருந்தான், என்ன விஷயம்” என்று கேட்டார்.
“ஒன்னும் இல்ல” என்று சொல்லி இவள் வேகமாக வெளியே சென்றாள்.
சிவாவின் ஃபோனை வாங்கியவள், “என் போனை கண்டுபிடிச்சீயா” என்று கேட்டாள்.
” இல்ல” என்று சொன்னான்.
அவன் போனில் இருந்து நந்தினிக்கு அழைத்தாள்,
நந்தினியோ “ஏன்டி உன் போன் சுவிட்ச் ஆஃப் ன்னு வருது”, என்று கேட்டாள்.
“அத அப்புறமா ஆன் பண்ணிக்கலாம், இப்போ ஒன்னும் அவசரம் இல்ல, நான் சொல்றத கேளு”, என்று சொல்லி விட்டு குறிப்பிட்ட இடத்தை நேரத்தை சொல்லி “இத்தனை மணிக்குள் நீ அந்த இடத்தில் இருக்கிற, அவ்வளவு தான்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு,
“சிவா சீக்கிரம் கிளம்பு, நம்ம அந்த டைமுக்கு அங்க போகணும்”, என்று சொன்னாள்.