வர்ஷினிக்கு அடுத்து வந்த நாட்கள் சாதாரணமாக கடந்தது. ஹரிணி வைகுந்த் இருவரும் வீட்டில் இருக்க.. நேரமாக வீடு வருபவள் அவர்களோடு வெளியே சென்று வந்தாள்.
தந்தை தாய் இருவரும் வர்ஷினியோடு கிட்டதட்ட பேசவில்லை எனலாம். ஹரிணி இருப்பதால், வர்ஷினி கொஞ்சம் வீட்டில் இயல்பாக இருக்கிறாள்.. உணவு சமைக்கிறாள்.. ஹரிணிக்கு உடைகள் வாங்க வெளியே செல்லுகிறாள். இல்லையென்றால்.. அவளுக்கு வீடு கொஞ்சம் கசந்திருக்கும் போல.
நாளை விடுமுறை.. பிள்ளைகள் பீச் என கேட்டுக் கொண்டிருக்க.. பீச் ரெஸ்சார்டில் ஒருநாள் ஸ்டே.. என ஏற்பாடு செய்திருந்தாள். ஆனால், சிவகுமார் தான் வரவில்லை என்றுவிட்டார். விஜயாவிற்கும் செல்லுவதற்கு விருப்பமில்லை ஆனால், பேரபிள்ளைகளின் விருப்பத்திற்காக சென்றார்.
மாலையில் செக் இன்..
வர்ஷினி காரெடுத்தாள். ஹரிணி முன்பு அவளோடு அமர்ந்துக் கொண்டாள். பேசிக் கொண்டே வந்தாள்.. ஒருமணி நேரத்தில் ரெசார்ட் வந்தனர். மதிய உணவு முடித்து கிளம்பியிருந்தனர். வர்ஷினி, ரிசெப்ஷனில் பேசி போர்மலிட்டில் முடித்து, சாவியோடு வந்தாள்.
பட்டெரி வாகனம் வந்ததது.. நால்வரும் அமர்ந்தனர். சிலுசிலுவன காற்று உச்சு முடி கலைத்து வரவேற்க்க.. தங்களின் அறையை அடைந்தனர்.
விஜயா அமர்ந்தார். வர்ஷினி “அம்மா.. ஸ்கனக்ஸ் சாப்பிட்டு கடலுக்கு போலாம்மா.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புங்க” என்றாள்.
விஜயா பதில் சொல்லவில்லை.
ஹரிணி “பாட்டி.. ‘ம்’ தானே.” என்றாள்.
விஜயா எழுந்து கட்டிலில் சாய்ந்தபடி “நீங்க போயிட்டு வாங்க டா.. நான் சாப்பிட்டு அங்கேயே இருக்கேன்.. கடலில் நான் வந்து என்ன பண்ண போறேன்” என்றார்.
வைகுந்த் “பாட்டி, வா பாட்டி.. நீ கடல்கிட்ட உட்காந்துக்கோ” என பிடிவாதக் குரலில் சொன்னான்.
வர்ஷினி “ம்மா.. காற்று வாங்கு ம்மா.. விளையாட வேண்டாம்.. சும்மா பசங்களை பாரு” என்றாள், அன்னைக்கு மறுக்க முடியவில்லை.. ஏதும் பேசாமல் சாய்ந்து கண்மூடிக் கொண்டார்.
வர்ஷினி குழந்தைகள் இருவர் என மூவரும் கடலில் விளையாடி சலித்தனர். விஜயா அமர்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.
வர்ஷினி முகத்தில் எந்த நெளிவு சுளிவும் இல்லாமல் இயற்கையான புன்னகை நிறைந்திருக்க.. பிள்ளைகளோடு கடலாடிக் கொண்டிருந்தாள். அன்னை அவளிடம் இதற்கு முன்.. இதே போன்றான புன்னகையை கண்டதில்லை என மனதில் எண்ணிக் கொண்டே பெண்ணினை பார்த்திருந்தார்.
விஜயா அப்படியே தன் கணவருக்கு அழைத்தார்.. அவர் எடுக்கவும் “என்ன பண்றீங்க.. காபி போட்டு குடித்தீங்களா” என்றார்.
சிவகுமார் “இல்ல.. டீ கடைக்கு போறேன்.. நீ என்ன பண்ற” என்றார். மனையாளும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
வர்ஷினியின் போன் அழைத்தது இப்போது.. விஜயா “போன்..” என பேத்தியிடம் சொல்லிவிட்டு தன் பேச்சினை தொடர்ந்தார்.
ஹரிணி, ஓடி வந்தது மூச்சு வாங்க.. போனில் யார் அழைக்கிறார் என பார்த்து உடனே அந்த அழைப்பினை ஏற்றது “ஹாய் சர்வா” என பேசிக் கொண்டே வர்ஷினியிடம் சென்றாள்.
விஜயா கணவரோடு பேசிக் கொண்டிருந்தவர் இதை கவனிக்க.. அவரின் புருவம் ஆச்சர்யத்தில் உயர்ந்தது.. “ஹாய் சர்வா.. வா” என. பேத்தி எந்த சலனமும் இல்லாமல் “ம்.. நாங்க விளையாடிட்டுதான் இருக்கோம்.. பிட்ச்சர்ஸ் இன்னமும் எடுக்கலை.. ம், வர்ஷிகிட்ட கொடுக்கிறேன்’ என சொல்லி போனினை இப்போதுதான் வர்ஷினியிடமே கொடுத்தாள்.
விஜயா தன் கணவரோடு பேசிக் கொண்டிருந்தவர்.. அப்போதே அழைப்பினை துண்டித்துவிட்டு.. பேத்தியை கவனிக்கத் தொடங்கிவிட்டார். ஆக, சர்வேஷ் ‘அவனை நண்டுசிண்டுக்ளுக்கு கூட தெரிந்திருக்கிறது..’ என எண்ணினார்.
வர்ஷினி பிள்ளைகளோடு இப்போது செல்பி எடுக்கத் தொடங்கினாள்.
சூரியன் மேற்கில் மறையத் தொடங்க.. கடலில் கருநீல வானம் சூழ.. பால்வண்ண நிலவு மேலே வர தொடங்கியது.
அப்படியே வர்ஷினி அமர்ந்துக் கொண்டாள் மணல் பரப்பில்.. சிலுசிலுவென காற்று அவளை எங்கோ அழைத்துச் சென்றது.
பிள்ளைகள் ‘பசிக்குது’ என தொடங்க.. விஜயாதான் அவர்களை அறைக்கு அழைத்துச் சென்றார். வர்ஷினி அப்படியே அமர்ந்திருந்தாள். எதிர்காலம் பற்றியோ கடந்தக்காலம் பற்றியோ எந்த யோசனையும் இல்லை. ஏகாந்த அமைதிதான் அவளிடம்.
வர்ஷினி பொறுமையாக எழுந்து அறைக்குச் சென்றாள்.
அன்னையும் ஹரிணி வைகுந்த் மூவரும் ‘வெளியே எங்கே இருக்கிறோம்’ என செய்தி அனுப்பிவிட்டனர். அதனால் பெண்ணவள் பொறுமையாக குளித்துவிட்டு.. நல்ல உடை அணிந்துக் கொண்டு.. சில்ட்ரென்ஸ்க்கு என டிஜே பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது.. அந்த கார்டன் ஏரியாவில். அங்கே வந்தாள்.
ஹரிணி இவளை கண்டுக் கொண்டு அருகில் வந்தாள். இவள் வந்த நேரம் பழையபாடல் வரிசை தொடங்க.. நல்ல ஹிந்தி பாடல்.. ஹரிணி கைபிடித்து தன் சித்தியை ஆடவைக்க.. வர்ஷினியும் தன் அக்கா பெண்ணின் நடனத்தில் கலந்துக் கொண்டாள்.
குடும்பமாகவே நிறைய நபர்கள் இருந்தனர். அதனால் பெரிதான இடஞ்சல் என இல்லை. ஹரிணி அடிக்கடி செல்பி எடுத்தாள். சித்தியை அமரவிடாமல் தொந்திரவு செய்துக் கொண்டே இருந்தாள்.
விஜயா பெண்ணை பார்த்ததும்.. கிளம்பிவிட்டார் அறைக்கு.
முடிந்தமட்டும் மூவரும் ஆடி சலித்து.. உண்டு முடித்து அறைக்கு வந்தனர்.
மறுநாள் காலைஉணவு முடித்துக் கொண்டு ரெசார்ட்டில் இருந்து கிளம்பினர் நால்வரும். வர்ஷிணியின் முகம் இயல்புநிலை கொண்டிருந்தது. விஜயாவும் அப்படியே மகளிடம் ‘சாவி கொடுத்திட்டியா.. சாப்பிட்டியா’ என சகஜமாக பேசத் தொடங்கியிருந்தார்.
ஆக வர்ஷினிக்கு ‘வொர்த் சார் இந்த ஹாலிடே..’ எனத் தோன்றியது.
அந்த ஞாயிறு குதூகலமாகவே சென்றது எல்லோருக்கும். வீடு வந்தும்.. மூவரும் அதே மூடில் இருந்தனர்.. வர்ஷினி அறையில் பாட்டு நடனம் என நேரம் சென்றது. இரவுதான் சற்று அடங்கினான் வைகுந்த். அதன்பிறகுதான் ஹரிணியும் சற்று அமைதியாக இருந்தாள். இல்லையென்றால் இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு பாடல் வைத்துக் கொண்டு நடனமாட.. அதையடுத்து கேம்ஸ் விளையாட என நேரம் பரபரப்பாகவே கடந்தது. வர்ஷினி அசந்து உறங்கவோ.. போன் பார்க்கவோ தொடங்கினால்.. இருவரும் “வர்ஷி” என அழைத்துக் கொண்டே பஞ்சாயத்து செய்ய கூப்பிட்டனர். அதனால் வர்னிக்கும் உறங்க முடியாமல் போனது. இரவுதான் பிள்ளைகள் ஓய்ந்தனர்.. உண்ணாமல் கூட உறங்கினர். வீடே சற்று அமைதிக் கொண்டது.
அடுத்த வேலைநாள்.. வர்ஷினி நல்ல மனநிலையில்தான் எழுந்து வந்தாள். அதற்கு தக்க அன்னையும் “வர்ஷினி, காபியை அப்பாக்கு எடுத்து போய் கொடு..” என ஆணையிட.. பெண்ணவள் அவ்வண்ணமே தன் நாளை தொடங்கினாள்.
ஆனால், சிவகுமார் எந்த மாற்றமும் இல்லாமல்.. அப்படியே இருந்தார். மேலே சூரியநமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தவர்.. பெண் வந்ததும் கண்களை மூடிக் கொண்டார்.
“அப்பா.. காபி” என்றாள்.
“வைச்சிடு” என்றவர் மீண்டும் தன் நிலையை தொடர்ந்தார்.
பெண்ணவள் நின்றாள் இரண்டுநிமிடம். தந்தையிடம் எந்த அசைவும் இல்லையெனவும் கீழே வந்துவிட்டாள்.
வர்ஷினி மீண்டும் எதையோ யோசிக்கத் தொடங்கிவிட்டாள்.
நேரமும் கடந்தது தந்தை முன்பு.. எப்போதும் இந்த நேரத்தில் கீழே வந்திடுவார்.. தன் வண்டியை துடைத்து.. கீழே இறக்கி நிறுத்துவதி வைப்பார்.. கிளம்பும் வரை கூடவே இருப்பார் “பார்த்துடா.. கவனம்” என வழியனுப்புவார். இந்த பதினைந்து நாட்களாகஇதெல்லாம் இல்லை.
இன்றுவர்ஷினிக்கு போருக்க முடியாமல் தன் அன்னையிடம் “இன்னமும் அப்பாக்கு கோவமா ம்மா” என்றாள்.
விஜயா “இது கோவம் இல்லடா.. அவர் முடிவு செய்துவிட்டார் உன்னை கூடவே வைத்துக் கொள்ள வேண்டுமென. உன் மேலோ.. உன் விருப்பம் மீதோ அவருக்கு கோவமில்லை. ஆனால், அந்த பையன் வெளிநாட்டில் இருப்பதுதான் பிரச்சனை. இங்கே வரசொல்லிடு எல்லாம் சரியாடும்” என்றார், இதமாக.
ஆக, பெற்றவர்க்கு.. தன் கொள்கையில் பிடி இறுகியது.. அதிகமாகியது. ம்.. வாததிற்குதானே மருந்து, பிடிவாதத்திற்கு மருந்து இல்லை.. மனம்தானே மருந்து.
பெண்ணவள், தானே வண்டி இறக்கிக் கொண்டு.. அதை துடைத்துக் கொண்டே மேலே தன் தந்தையின் அறையை பார்த்தாள். அவர் கண்ணில் படவில்லை.
வண்டி எடுத்துக் கிளம்பினாள்.
அதன்பின்தான் சிவகுமார் கீழிறங்கி வந்தார்.
நேற்று வரை.. மகள்மேல் கோவத்தில் இருந்த மனையாள் இன்று “பெண்ணு உங்களை தேடிவிட்டுதான் செல்லுகிறாள். என்ன கோவமாக இருந்தால் என்ன.. வண்டியை எடுத்து வெளியே நிறுத்துவதுதானே” என்றார்.
கணவரோ “என்னால் அப்படி மாற முடியலையே. எல்லாம் அவள் நல்லதுக்குதான்.” என்றார் யோசனையோடு.
விஜயா அமைதியாகிவிட்டார்.
வர்ஷினிக்கு, தந்தையை சுற்றியது மனம். என்னமோ அலுவலகம் வந்து.. உடனே சர்வேஷ்ஷூக்கு அழைத்து.. தந்தை பற்றி சொல்லி கொஞ்சம் அழுகை.
“அப்பா உன்னை வேலையைவிட்டு இங்கே வர சொல்றார்.. செய்யலாமா.. இப்போது உன்னால் முடியுமா சொல்லு” என்றாள்.
“முடியாது.. ஆனால், அதற்கான ரீசன் என்னான்னு நான் சொல்றேன்.” என்றான்.
“அப்பாக்கு தெரியாமலா இருக்கும் சர்வா.. அப்பா வேணுமென பிடிவாதம் பிடிக்கிறார்” என்றாள், வருத்தம் போய் கோவமாக.
அவனோ “அவருக்கு தெரியும்.. ஆனால், என் பெண்.. அத்தோடு என் விருப்பம்.. இதைவிடவா, இந்த பணம் முக்கியமான்னு நினைச்சிருக்கலாம் வர்ஷி.. நான் பேசுகிறேன்” என்றான்.
வர்ஷினிக்கு புரிகிறது.. சர்வேஷ் கண்டிப்பாக தந்தையிடம் பேசவேண்டுமென.. ஆனால், எப்படி தொடங்குவது என தெரியாமல் அவள் அமைதியானாள் இப்போது.
சர்வேஷ் “ரிலாக்ஸ்.. ஈவினிங், உனக்கு கூப்பிடுறேன்.. நீ அட்டென் பண்ணாத.. ஹரிணி பேசட்டும், நான் உன் அப்பாவிடம் கொடுக்க சொல்லி பேசுகிறேன்” என்றான்.
“அது நல்லா இருக்குமா” என்றாள்.
“அப்போ ப்ராப்பர் இன்ட்ரோ கொடு எனக்கு..” என்றான்.
பெண்ணவள் தயக்கத்தோடு “ம்..” என்றாள்.
“லவ் யூ டா..” என்றான் நிம்மதியான குரலில்.
பெண்ணவள் தயக்கம் குறையாமல் “மீ டூ” என்றாள்.
“போடி வேலையை பாரு.. மாமனாரை எப்படி கரெக்ட் பண்றேன்னு பாரு” என்றான் அவளை மகிழ்விக்க.. கிண்டல் குரலில்.
தூரங்கள் அன்பினை அரவணைக்கும் அழகு.. நுட்பமானது. உச்சு கோதியோ.. அணைத்து ஆறுதல் தந்தோ.. முத்தமிட்டு மோகித்தோ.. கைகோர்த்து விரல்களின் இடுக்கில் சூடு பரப்பியோ.. உறவினை காக்க முடியாதே. நிம்மதியான மூச்சு காற்றினையும்.. வார்த்தை கோர்வையையும்தான் தந்தி வழியனுப்பி.. காற்றில்தான் ஆறுதல் பரப்ப முடியும். அதை உணரவும்.. உணர்த்தவும்.. ஐந்து புலன் தாண்டி.. வேறேதோ தேவ பாஷை தேவை. அது ஒருசிலருக்கே வாய்க்கும் வரம். அந்த வகையில் வர்ஷினியும் சர்வேஷ்ஷூம்.. தேவ பாஷைகள் உணர்ந்த தேவ தேவதைகள்தான்.
“தொலைதூரம் சென்றாலும்..
தொடுவானம் என்றாலும்.. நீ..
விழியோரம் தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய்..”
ஒருநாள் வர்ஷினி அலுவலகத்திலிருந்து வந்தவிட்டு.. குளிக்க சென்றிருந்தாள்.. செல்லும் போதே “ஹரி, சர்வா.. கால் செய்தால் எடுக்காதே, நான் வந்து பேசிக்கிறேன்” என கூறிவிட்டுத்தான் சென்றாள்.
ஆனால், பிள்ளைகள் ‘செய்யாதே செய்வோம்.. சொல்லாதே சொல்லுவோம்..’ என்ற கோட்பாடோடு இருந்தது போல.. ஹரிணி ஹாலில் அமர்ந்து விளையாடினாள் போனில்.
வைகுந்த் தன் தாத்தா போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.
சரியாக வர்ஷினிக்கு அழைத்தான் சர்வேஷ்.
ஒரே ரிங்கில் அழைப்பினை ஏற்றாள்.. “சர்வா, வர்ஷி வாஷ்ரூமில் இருக்கா” என்றாள்.
விஜயா எதோ சைகை செய்தார். பேத்தியோ கவனிக்கவில்லை.
சிவகுமார் வந்தார் உள்ளே.. “யாரு டாம்மா” என்றார்.
ஹரிணி “சர்வா தாத்தா” என்றாள்.
வைபவ் “ஷ்..” என்றான்.
சிவகுமார் கூர்ந்து கவனித்தார் பேத்தியை. அவளோ மும்முறமாக ‘வைகுந்த் விளையாடியது.. அன்னை தன்னிடம் மதியம் திட்டியது’ என சின்னக் குரலில் ஸ்ர்வேஷ்ஷிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.
சிவகுமார் “என்ன இது” என்றார் எழுந்து நின்று சத்தமாக.
விஜயா வந்தார் “வர்ஷினி பிரென்ட்தாங்க” என்றார் ஒன்றுமில்லா குரலில்.
சிவகுமாரும் சற்று நிதானித்தார் “விஜயா இதெல்லாம் சரியில்ல.. எங்க அவ.. வர்ஷினி.. சொல்ற பேச்சு கேட்பதில்லையா” என்றார்.
போனில் சர்வேஷ் கேட்டுக் கொண்டிருந்தான் எல்லாவற்றையும் “ஸ்பீக்கரில் போடு ஹரிணி” என சொல்லிக் கொண்டிருந்தான், ஆனால் ஹரிணிதான் போனினை கையில் வைத்திருந்தாலே.. காது கேட்கவில்லை.
இப்போது அவசரமாக வந்தாள் வர்ஷினி, தந்தை முறைத்தார்.. விஜயா ஹரிணியை பற்றியிருந்த விதம் எதோ சரியில்லை என காட்ட.. ஹரிணி கையில் போன்.
வர்ஷினி அருகில் வந்து சட்டென போனினை வாங்கினாள்.. காதில் வைக்க.. “ஹரிணி கேட்க்குதா” என சர்வேஷ் குரல்.
பெண்ணவள் அழைப்பினை துண்டித்தாள்.
தந்தை “இதெல்லாம் சரியில்லை. என் பேச்சினை கேட்கனும் வர்ஷினி.” என்றார்.
வர்ஷினி “அப்பா.. ஒரே ஒருமுறை.. சர்வேஷ்கிட்ட பேசுங்க ப்பா..” என்றாள்.
தந்தை அமர்ந்தார், நெற்றியை வருடிகே கொண்டார் சலிப்பாக “என்ன பேசணும்.. நான்தான் பார்த்திருக்கேன் அவனை. அப்புறம் என்ன.. வேலையை இங்க பார்க்க சொல்லு” என்றார்.
விஜயாவும் “சரிதானே வர்ஷினி, இங்கே வரும் வருமானம் போதுமே. அவங்களும் கொஞ்சம் இறங்கி வரலாமில்ல” என்றார்.
பெண்ணவள் தளர்ந்து அமர்ந்தாள்.. “அப்படி இல்ல ம்மா.. அவருக்கு சின்ன வயதிலேயே அப்பா இறந்துட்டார். அக்காங்கதான் எல்லாம் அவருக்கு செய்தாங்க. முன்பு செழிப்பாக இருந்தவங்க. இப்போது அதை இவர் கொண்டு வரணும்ன்னு நினைக்கிறார். அங்கே இருந்தால் பத்து வருடத்தில் சம்பாரித்துவிட்டு வந்திடலாம். அத்தோடு, இங்கே வந்தாலும்.. அவருக்கு நொய்டா.. ஹைட்ராபாத் பக்கம்தான் வேலை.. ம், ஒரு ஸ்டெப் இறங்கினார்போல இருக்கும்மா.. கொஞ்சநாள்தான்..” என்றாள்.
சிவகுமாருக்கு பழைய நினைவு.. “அவனும் இப்படிதான் சொன்னான். ம்.. இப்போவெல்லாம் வரவு செலவு கணக்கு.. எல்லா இடத்திலும் சரியாகத்தான் இருக்கு.. இங்கே வருவதாக இருந்தால் பேசலாம்.” என்றவர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.. இதுதான் முடிவு வேறு பேச்சில்லை என்பது போல.
வர்ஷினி விஜயாவை பார்த்தாள் பாவமாக. அன்னையும் “ஏன் பிடிவாதம் ஒன்று வேண்டுமென்றால்.. ஒன்றை இழக்கத்தான் வேண்டும்..” என்றார்.
ஹரிணி பாட்டியோடே கிட்சென் சென்றாள்.
ஆக நாட்கள்தான் கடந்தது மாற்றமில்லாமல்.
ஆகிற்று.. மது குடும்பம் ஊருக்கு கிளம்பினர், அதனால் வீடு வர்ஷினியின் விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை.
ஹரிணி வர்ஷினியை விட்டு நகரவில்லை அன்று முழுவதும். இரவுதான் விமானம். ஆனாலும் வர்ஷினி விடுமுறை எடுத்திருந்தாள். செந்தில்நாதன் மது இருவரும் பேக்கிங் வேலையில் இருந்தனர். வீடு ஒருமாதிரி பரபரப்பாக இருந்தது.
நேரம் நெருங்க நெருங்க.. ஹரிணியின் ஆர்பாட்டம் அதிகமாகியது. என்ன செய்வது விவரம் புரிந்தும் புரியாத வயது.. பால் அருந்தவில்லை.. உண்ணவில்லை.. அழுகை குட்டி பெண். வர்ஷிதான் எதோ ஆர்டர் செய்து வாங்கி, ஊட்டி விட்டாள்.
இரவு கிளம்பினர், ஹரிணி அழுத்துக் கொண்டே “தாத்தா.. வர்ஷியை நான் கூட்டிட்டு போறேன்” என்றாள்.
எல்லோரும் சிரித்தனர்.. சிவகுமார் முகம்மட்டும் வாடி போனது.
விஜயா “நீ அழற.. அவர் அதை செய்யமாட்டார் அவ்வளவுதான். தாத்தா வர்ஷினியை எங்கும் அனுப்பமாட்டார்டா.. நீ அடுத்த ஆறுமாதத்தில் வர போகிறாய்.. ம்.. டிக்கெட் இப்போவே போட்டிடலாம்” என்றார். பேத்தியை சமாதனப்படுத்த.
ஆனால், வர்ஷினிக்கு இந்த வார்த்தைகள் யோசனையை கொடுத்தது.. அப்பாவை பொறுமையாதான் மாற்றனுமோ.. அதையும் நான்தான் செய்யனும் என மூளையில் ஒரு உதயம். அஹ.. வழிகள் இல்லா.. ஊர்கள் ஏது.
மது வர்ஷினி தன் கணவர் பெற்றோரோடு செல்ல.. வர்ஷினி பிள்ளைகளோடு.. காரில் சென்றாள் விமான நிலையத்திற்கு.