பைக்கிலிருந்து இறங்கியபடியே, மனைவியின் இடுப்பிலிருந்த தன் எட்டுமாத பெண்குழந்தை யாழினியை நோக்கி ஆவலாக சேனாதிபதி கைகளை நீட்ட, அதைவிட ஆவலாக அவனிடம் தாவியது குழந்தை.
“பட்டுக்குட்டி அப்பாவை தேடுனீங்களா?” மகளின் பட்டுக்கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடியே கேட்டவன், தன் முகத்துக்கு நேராக குழந்தையை உயர்த்திப் பிடித்து, அதன் வயிற்றில் தன் வாயை வைத்து ஊத,
தந்தையின் தலையை தன் பிஞ்சுக் கரங்களால் பற்றி, தன் பொற்பாதங்களால் அவன் மார்பில் மிதித்தபடி கிளுக்கிச் சிரித்தது குழந்தை.
“பாப்பூ தேடுனீங்க, ஓகே… உங்க அம்மா என்னைத் தேடுனாங்களா?” குழந்தையை ஒற்றைக் கையால் தன் மார்போடு அணைத்துக் கொண்ட சேனாதிபதி, மனைவியின் இடுப்பில் கை கொடுத்து தன்னோடு இழுத்தபடி கேட்டான்.
“ம்ப்ச்… தேடாமத் தான் நீங்க வர்றீங்கன்னு சொன்னதும் வாசல்ல வந்து நிக்குறேனா த்தான்?” என்றாள் சுபாஷிணி.
“நான் வர்றேன்னு சொன்னதும், அங்க, நம்ம வீட்டுல வந்து இருந்திருந்தா, நீ சொன்னதை நம்புவேன் டி… இங்கயே இருந்துட்டு எங்காதுல பூச்சுத்தாத” என்றவன்,
“ஆமா… நான் வர்றேன்னு தெரியுதுல்ல, அழகா ஒரு சாரி கட்டிட்டு நிக்கலாம்ல. எப்போ பாரு ஒரு தலையணை உறையை போட்டுட்டு நிக்க வேண்டியது. இத்துணூன்டு இடுப்பை எனக்கு காட்டக்கூட, அத்தனை கஞ்சம் உனக்கு, ம்ம்…” என்றவன், சுடிதார் அணிந்திருந்த மனைவியின் இடுப்பை அழுத்திப் பிடித்தான்.
அவன் உடும்புப் பிடியில் தடுமாறிப் போனவள், “த்தான்… வெளிய நின்னுட்டு, இது என்ன த்தான்?” என்றாள் அழுதுவிடுபவள் போல.
கணவனின் வேகத்தில் சுபாஷிணி திருதிருக்க, அவள் மகளோ, “என்னை விட்டுவிட்டு அங்கே என்ன பேச்சு?” என்பது போல தகப்பனின் முகம் பற்றி அவன் முகவாயில் கடித்து வைத்தாள்.
“ஓ… அம்மா வரலைன்னா பரவாயில்ல… நாம போகலாம்னு சொல்லுறீங்களா பாப்பூ? இந்த ஐடியா கூட நல்லா தான் இருக்கு. நாம கிளம்பலாமா?” என்றபடியே குழந்தையோடு சேனாதிபதி பைக்கில் அமரப்போக,
சட்டென்று பைக் சாவியை கையில் எடுத்துக் கொண்ட சுபாஷிணி, “விளையாடாதீங்க த்தான், மொதல்ல வீட்டுக்குள்ள வாங்க” என்றபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“கேடி டி நீ” என்றபடியே குழந்தையோடு மனைவி பின்னோடு நடந்த சேனாதிபதிக்கு, ‘அன்று, சென்னைக்கு கிளம்புவதற்கு முதல்நாள் இரவு தன்னிடம் மனைவி நடந்து கொண்டதற்கும், இதோ, யாழினி பிறந்து எட்டு மாதங்கள் ஆகியும் ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லி, தன்னுடன் மனைவி சென்னைக்கு வர மறுத்து தாய் வீட்டிலேயே இருப்பதற்கும் பொதுவாக ஏதோ காரணம் இருக்கிறது’ என்று சமீபமாக எண்ணத் தோன்றுகிறது.
அன்று, மனைவி குளியலறைக்குள் அவசரமாக நுழைந்து கொண்டதும், தன் மோக அலை அறுபட, மூடிய குளியலறை கதவுக்கு வெளியே நின்று, “என்னாச்சு சுபா? உடம்புக்கு முடியலையா?” என்று பதட்டத்தோடு கேட்டான் சேனாதிபதி.
“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்ல த்தான்… ” என்று குளியலறைக்கு உள்ளிருந்தே பதில் சொல்லியவள், சில நிமிடங்களில் வெளியே வந்து, “சும்மா… கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் த்தான்… அதான், வேறொன்னுமில்ல.” திரும்பத் திரும்ப தன்னிடம் விசாரணையில் இறங்கிய கணவனை சமாதானப்படுத்தும் விதமாக, சுபாஷிணி சொன்ன பதிலில் சேனாதிபதி தான் டென்ஷனாகிப் போனான்.
அதன் பிறகு, பணியில் சேர்ந்து, சுபாஷிணியின் டெலிவரிக்கு முன்னால் இருதடவை விடுமுறையில் ஊருக்கு வந்த போதும், மனைவியின் பிரசவத்திற்கு பத்து நாட்கள் முன்னரே விடுமுறையில் ஊருக்கு வந்து, வளைகாப்பு முடிந்து தாய் வீட்டில் இருந்த மனைவியோடு தினமும் இரவில் தங்கிய போதும், மனைவியிடம் கோடு தாண்ட முயற்சிக்கவே இல்லை சேனாதிபதி.
ஆமாம்… சுபாஷிணியின் பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவே ஊருக்கு வந்து விட்டான் சேனாதிபதி. பிரசவ நாள் நெருங்க நெருங்க, ஆவலோடு, ஒருவிதமான பதட்டத்துக்கும் உள்ளான மனைவியோடு எந்நேரமும் உடனிருந்து தாயைப்போல அரவணைத்தவன், ஒரு இதமான மனநிலையில் மனைவியை பிரசவத்தை எதிர்கொள்ள வைத்தான்.
நள்ளிரவில் பிரசவவலி கண்டவளை மருத்துவமனையில் சேர்த்து, ஆறுதல்படுத்தி, மருத்துவரின் சிறப்பு அனுமதியோடு பிரசவ அறையில் மனைவியோடு உடனிருந்து வலிநிறைந்த பொழுதினை அவளை இலகுவாக கடக்கவும் உதவி செய்தான்.
குடும்பத்தில் அத்தனை பேர் இருந்தும், யாரிடமும் தன் பெண்ணரசியை கொடுக்காமல், தானே முதன்முதலாக கையிலேந்திக் கொண்டாடினான்.
ஆக, குழந்தையை சுபாஷிணி மடிசுமந்தாள் என்றால், அவர்கள் இருவரையும் தன் உள்ளத்தில் சுமந்தான் சேனாதிபதி.
தன்னையும், மனைவியையும் கலந்து செய்த கலவை போலிருந்த மகள், தன் சிப்பிக்கண்களை திறந்து, திறந்து மூடும் அழகில், மனைவியையும், மகளையும் தன்னோடு அழைத்துச் செல்லும் நாளுக்காக சேனாதிபதி காத்திருக்க, “முதல் ஐந்து மாதம் கண்டிப்பாக தாய்க்கு ஓய்வு வேண்டும். அதனால் இப்போது சுபாஷிணியை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்று வீட்டுப் பெண்கள் கூறிவிட்டார்கள்.
மனைவியின் ஆரோக்கியம் குறித்த விஷயம் என்பதால் சேனாதிபதிக்கும் மறுத்து சொல்ல மனமில்லை.
ஆனால், ‘அடுத்து வந்த மாதங்களில், மனைவியையும் குழந்தையையும் தன்னோடு சென்னைக்கு அழைத்து சென்று விடலாம்’ என்று இவன் நினைக்க, அவன் மனைவியோ “குழந்தையை குளிக்க வைக்கத் தெரியாது, ஒருவேளை அவளுக்கு உடம்புக்கு சரியில்லாமல் போனால் மருந்து கொடுக்கத் தெரியாது” என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பின்வாங்கினாள்.
“சரி, அங்கே தான் வரவில்லை…. இங்கே, மாதவபுரத்தில் நம் வீட்டுக்காவது வா” என்றால் “இடம் மாறினால் குழந்தைக்கு தூக்கம் வராது” என்றாள்.
பூரணி அம்மாவும் தன் பேரனின் வாரிசை தன் கைக்குள்ளே வைத்து வளர்க்கும் ஆசையில், இந்த விஷயத்தில் பேத்திக்கு ஆதரவாக பக்கப்பாட்டு பாட, சேனாதிபதியால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.
வேறுவழியில்லாமல், மகள் மீதும் மனைவி மீதும் கொண்ட பாசத்தில் சேனாதிபதி தான், சென்னைக்கும் மாதவபுரத்துக்குமாக பறந்து கொண்டிருந்தான்.
பூட்டி, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று எந்நேரமும் உறவுகளின் மத்தியில் உலா வரும் மகளைப் பார்க்கையில் சந்தோஷமாக இருந்தாலும், ‘என்னோடும் என் மகள் இருக்க வேண்டும்’ என்று, ஒரு தந்தையாக சேனாதிபதியின் ஆசைகொண்ட நெஞ்சம் நினைத்தது.
கூடவே, பிரசவத்திற்கு பிறகு இன்னும் மெருகேறி தன்னை பித்தாக்கி கொண்டிருக்கும் மனைவியை, கைகட்டி வேடிக்கை மட்டுமே பாத்திருக்க, முற்றும் துறந்த முனிவனா அவன்?
தன் ஆசையை, மனைவியோடு தனிமையில் பேசக் கிடைத்த சந்தர்ப்பங்களில் சேனாதிபதி வெளிப்படையாக சொல்லும் போது, வெட்கத்தால் முகம் சிவந்து போக, “இதோ… கொஞ்ச நாள்ல வந்துடுறேன் த்தான்” என்பாள் அவன் மனைவி.
ஆனால் அந்த அழகுத் தேர், இப்போது வரைக்கும், மாதவபுரத்திலிருந்து சென்னைக்கு நகரும் வழியைத் தான் காணோம்.
அதனால், என்ன ஆனாலும் இம்முறை மனைவியையும் மகளையும் தன்னோடு சென்னைக்கு அழைத்துச் சென்றே ஆகவேண்டும் என்ற முடிவோடு தான் வந்து இறங்கியிருக்கிறான் சேனாதிபதி.
நல்ல மாலை நேரம். கடல் காற்று சிலுசிலுவென்று அடிக்க, அதை அனுபவித்தபடியே, மகளோடு உள்ளே நுழைந்த சேனாதிபதியை வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் வரவேற்றார்கள்.
பூரணி அம்மா, யாழியின் முன்னே கையை நீட்டி, “குட்டியம்மா, எங்கிட்ட வாங்க…” என்றார். “மாட்டேன்” என்று உடனே தலையசைத்து, தகப்பனின் தோளில் சாய்ந்து கொண்டது குழந்தை.
மகளின் செயலில் அகமெல்லாம் மலர்ந்து போக, தன் சந்தோஷத்தை மகளின் பூ முகத்தில் முத்தமாக்கிய சேனாதிபதி, சோஃபாவில் அமர்ந்தபடியே, “இப்பவாது சிரிச்சிட்டு வரமாட்டேன்னு சொல்லுறா பாட்டி ம்மா. அடுத்த தடவை சென்னைலயிருந்து வரும்போது, யாரு நீங்கன்னு எம்பொண்ணு கேட்கப்போறா?” என்றான்.
சுபாஷிணியை தன்னோடு அனுப்பி வைக்க முயற்சி செய்யாமல், அவளோடு ஜால்ரா அடித்த பாட்டி மீது சேனாதிபதிக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதை விளையாட்டாக பேசி தீர்த்துக் கொள்ள,
“என்னது? சென்னைக்கு கூட்டிட்டு போகப் போறியா? அதை மொதல்லயே நீ சொல்ல வேண்டாமா?” என்றார் பூரணி அம்மா அதிர்ச்சியாக.
“இன்னைக்கு காலைல எங்கூட ஃபோன்ல பேசும் போது கூட, இதைப்பத்தி நீங்க சொல்லலையே த்தான்?” என்று முகம் சுருக்கினாள் அவன் மனைவி.
அவர்கள் இருவரும் சொல்லுவது எதுவும் காதில் விழாதது போல, “இங்க, நம்ம வீட்டுக்கு நாளைக்கு காலைல போறோம் சுபா. மறுநாள் காலைல சென்னைக்கு போறோம். எல்லாம் பேக் பண்ணிக்கோ. முடியலன்னா சொல்லு, நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்றான் கறார் குரலில்.
எப்போதும் இல்லாமல் கணவனின் குரல் கண்டிப்பாக வரவும், பேந்தப் பேந்த முழித்த சுபாஷிணி ஆதரவுக்காக தன் அப்பாம்மாவைப் பார்க்க, அவரோ, “எவ்வளவு நாள் தான் அவனும் அங்கேயும் இங்கேயுமா அலைவான்? நீ பிள்ளையோட சேனா கூட போய்ட்டு வா மக்கா. ம்ஹூம்… பாப்பா இல்லாம வீடு தான் வெறிச்சோடிப் போகும்” என்று பெருமூச்செறிந்தார்.
தான் பெரிதாக நம்பிய அப்பாம்மை கைவிட்டுவிட, என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்து போய் சுபாஷிணி நிற்க, “இன்னும் சின்னபிள்ளை மாதிரி பாப்பாவை தனியா பாத்துக்க மாட்டேன்னு சில்லியா ரீசன் எல்லாம் சொல்லாத சுபா. எல்லாம் பழகப்பழக தானா வரும். சேனா எவ்வளவு ஆசையா கூப்பிடுறாப்ல, போய்ட்டு வாங்க” என்றார் விசாலி.
ஆமாம்.. விசாலி தான். மருமகனுக்கு இன்னமும் மாமியாரிடம் முட்டல் தான். ஆனால் மாமியாருக்கு இப்போது மருமகனின் அருமை நன்றாகவே புரிந்திருந்தது.
அதுவும், மகளின் பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னரே வந்து மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கிய மருமகனை அவ்வளவு பிடித்தது விசாலிக்கு. அதைக்கொண்டு சேனாதிபதி எதைச் செய்தாலும், சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும் என்று மருமகன் மீது அசாத்திய நம்பிக்கை வந்திருந்தது.
தனக்கு சாதகமாக அத்தை பேசினாலும், முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல், இரவு வரை மகளோடு அங்கிருந்து விட்டு கிளம்பிய சேனாதிபதி, மறுநாள் காலை பத்து மணிக்கெல்லாம் மகளையும் மனைவியையும் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டான்.
கணவன் வரும்போது, தனது அறையில் மகளை தயார்செய்து கொண்டிருந்தாள் சுபாஷிணி. பிங் கலரில் அழகான காட்டன் சாரி உடுத்தியிருந்த சுபாஷிணி, அதே கலரில் மகளுக்கு உடை அணிய முயற்சி செய்து கொண்டிருக்க, தகப்பனைக் கண்டதும் அன்னையின் கைகளிலிருந்து அவனை நோக்கி துள்ளினாள் யாழினி.
“அப்பாவைக் கண்டா போதுமே, கூடவே இருக்குற நாங்கெல்லாம் வேண்டாமே.” சுபாஷிணி முணுமுணுக்க, சிரிப்போடு தன் பெண்ணரசியை அள்ளிக் கொண்ட சேனாதிபதி, “நீங்களும் ஓடிவந்து என்னை இப்பிடி கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து வரவேற்கலாம் லட்டுக்குட்டி. நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன்.”
மனைவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே சேனாதிபதி சொல்ல, மென்மையாக கணவனின் மார்பில் சாய்ந்து கொண்ட சுபாஷிணி, “சர்ஜரி செய்த இடம் எல்லாம் நார்மலா இருக்கா த்தான். ஒன்னும் பிரச்சினை இல்ல ல்ல?” அவன் மார்பை நீவி விட்டபடியே கேட்டாள்.
அடிக்கடி இந்த கேள்வியை ஃபோனில் பேசும் போது கணவனிடம் கேட்டு, பதிலும் வாங்கிக் கொள்வாள் சுபாஷிணி. அதை இன்றும் கேட்க, உற்சாகமான மனநிலையில் இருந்த சேனாதிபதி, “ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் சுபா மேடம். சந்தேகமா இருந்தா இன்னைக்கு நைட்டே உங்களுக்கு ப்ரூஃப் பண்ணிடுறேன்” என்றான் கண்களைச் சிமிட்டியபடி.
இதற்குத் தானே சுபாஷிணி பயந்தது. இரண்டு முறை சர்ஜரி செய்த காலும், கையும் எந்த அளவிற்கு பலப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. இதில் நான் நன்றாக இருக்கிறேன் என்று கணவன் தன்னிடம் நிரூபிக்க முயலுவதில், காலுக்கும், கைக்கும் ஏடாகூடமாக எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பயம் தான் சுபாஷிணிக்கு.
அதனால் தான், அன்றே கணவன் தன்னை நெருங்கும் போது அவனைத் தவிர்த்தது. அதன் பிறகும் இத்தனை மாதங்கள் பிள்ளை வளர்ப்பை சாக்கிட்டு கணவனோடு செல்வதை தவிர்த்தாகி விட்டது. அதற்காக காலமெல்லாம் கணவனை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது சுபாஷிணிக்கு.
யாழினிக்கு ஒரு வயது முடியவும் கணவனோடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு. ஆனால் அவனோ அதற்கு முன்பாகவே நீ வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறான்.
தனித்தனியாக இருக்கும் போது கணவனை தவிர்ப்பது எளிதாக இருந்தது. ஆனால் ஒரே வீட்டில் இருக்கும் போது அது சாத்தியம் இல்லை என்று அவளுக்குத் தெரியும்.
‘வேறுவழியில்லை... தன் பயத்தை கணவனிடம் சொல்லி, இன்னும் சில மாதங்கள் விலகி இருக்க வேண்டியது தான். ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியம்…’ சுபாஷிணியின் யோசனை நீண்டுகொண்டே போக,
“ஹலோ மிஸஸ் சேனாதிபதி… என்ன? யோசனை எல்லாம் பலமா இருக்கு?” மனைவியின் முகத்துக்கு நேராக கையை வீசி, அவளை நினைவுலகத்துக்கு கொண்டு வந்தான் சேனாதிபதி.
அவளுக்கு உதவியபடியே, “இந்த வார்த்தைக்கு பின்னால என்ன இருக்குதுன்னு இன்னைக்கு கண்டுபிடிக்கிறேன்” என்று சிரித்தான் சேனாதிபதி.
பைக்கிலேயே மனைவியையும் மகளையும் தன்வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் சேனாதிபதி.
சுபாஷிணி தயார்செய்து வைத்திருந்த பயணப்பைகளை அவளது பெற்றோர்கள் சேனாதிபதியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பூரணி அம்மாவும், மகள் வீட்டுக்கு வந்துவிட்டார்.
யாழினியின் வருகையில் சேனாதிபதியின் வீடு, மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தது. இதற்கு முன் யாழினி இங்கே வராமல் இல்லை. அவ்வப்போது மங்கை தூக்கிக்கொண்டு வந்து விடுவாள் தான்.
ஆனால், இன்று தான் தம்பதிசமேதராக குழந்தையோடு சேனாதிபதியும், சுபாஷிணியும் தங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடும் விதமாக தமிழரசி தடபுடலாக சமையலில் இறங்க, உடன் இணைந்து கொண்டார் விசாலி.
தன்குட்டிக் கால்களையும், கைகளையும் ஊன்றி தவழ்ந்தபடி யாழினி அந்த வீட்டை தலைகீழாக புரட்டிப்போட முயல, அவள் பின்னோடு அலைந்தாள் மங்கை.
மகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு இல்லாததால், சமையலுக்கு உதவி செய்ய சுபாஷிணியும் சமையலறையில் வந்து நிற்க, “பாப்பாவுக்கு ஒரு வயசு முடியுறதுக்கு முன்னாடி கூட்டிட்டு போனா, சுபாவுக்கு கஷ்டம் டா ன்னு சேனாகிட்ட சொன்னா, மருமக மேல அவ்வளவு அக்கறை இருக்குறவங்க எங்ககூட வரவேண்டியது தானன்னு குதிக்கிறான். அதான் நானும் உங்க கூட சென்னைக்கு வர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன் சுபா ம்மா” என்றார் தமிழரசி.
கணவனோடு சென்னைக்கு செல்வதை தள்ளிப் போடுவதற்காக குழந்தை பராமரிப்பை ஒரு கேடயமாக உபயோகித்துக் கொண்ட சுபாஷிணிக்கு, இப்போது உண்மையாகவே, ‘இத்தனை சுறுசுறுப்பாக இருக்கும் யாழினியை தனியாக பார்த்துக் கொள்ளமுடியுமா?’ என்ற யோசனை தான் மனமெங்கும்.
“தோப்புல வேலையிருக்குன்னு மாமா சொன்னாங்க டா. மாமாவுக்கு, சாப்பாட்டுக்கு நான் இல்லைன்னா மங்கையாவது இருக்கணும்ல” என்றவர், “கிச்சன்ல நாங்க ரெண்டு பேருமே அதிகம் தான், நீ போய் சேனாகிட்ட பேசிக்கிட்டு இரு” என்றார்.
தலையசைத்து கேட்டுக் கொண்டவள், யாழினியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்த மங்கையிடம், “மாமாவுக்கு வேலை முடிஞ்சதும் ரெண்டு பேரும் சென்னைக்கு வந்துடுங்க மங்கை” என்றாள்.
“கண்டிப்பா அண்ணி… என் செல்லக்குட்டியை ரொம்ப நாள் பாக்காம, இப்பிடி கொஞ்சாம என்னால இருக்க முடியாது” என்ற மங்கை, “நீ என்னைப் பார்க்காம இருந்துடுவியா பட்டூ?” என்று அண்ணன் மகளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சலில் இறங்க, புன்னகையோடு கணவனிடம் சென்றாள் சுபாஷிணி.
சேனாதிபதியோடு பேசிக்கொண்டிருந்த வாசுவும், பரந்தாமனும், ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார்கள். சேனாதிபதியும் ஒரு ஃபோன்காலில் பிஸியாக இருந்தான். அவன் அருகில் வந்து அமைதியாக அமர்ந்தாள் சுபாஷிணி.
“அப்புறம்… கட்டிப்பிடி வரவேற்பு எனக்கு குடுன்னு சொன்னா, எங்கம்மாவுக்கு குடுக்குற நீ?” பேசி முடித்து அலைபேசியை சட்டை பாக்கெட்டில் வைத்தபடியே மெல்லிய குரலில் சேனாதிபதி கேட்க,
“ஐயோ… நாங்க குடுத்ததே இல்ல பாருங்க” என்று உதடு சுளித்தாள் மனைவி.
“எப்போ ம்மா குடுத்த? எனக்கு மறந்தே போச்சு.” நக்கலடித்தான் கணவன்.
“மறக்கும் த்தான்… மறக்கும்…” என்று கண்களை உருட்டியவள், அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டு, “ராகுலும் இப்போ இங்க இருந்தா நல்லாயிருக்கும்ல?” என்று சொல்ல, உடன்பிறந்தவளின் ஏக்கம் புரிந்தது போல அடுத்த ஐந்தாவது நிமிடம் அங்கிருந்தான் ராகுல்.
“எப்பிடிடா? உனக்கு இன்னைக்கு வொர்க்கிங் டே ஆச்சே?” ஆச்சர்யத்தில் விழிவிரித்தாள் சுபாஷிணி.
“ஒருநாள் க்ளாஸ் தானே க்கா, கட் பண்ணியாச்சு. பாப்பாவை இப்போ விட்டா, பிறகு எப்போ நேர்ல பார்ப்பேனோ?” என்றபடியே மங்கை கையிலிருந்த அக்கா மகளை நோக்கி ஆவலாக நகர்ந்தான் ராகுல்.
அது எதையும் கண்டுகொள்ளாமல் மங்கையிடம் சென்ற ராகுல், “பட்டுக்குட்டி, மாமன் கிட்ட வாங்க” என்று யாழினியிடம் கையை நீட்ட, என்ன நினைத்ததோ அந்த சின்னச்சிட்டு, மங்கை, ராகுல் இருவரின் முகத்தையும் மாறிமாறி பார்த்தது.
“வாங்க பட்டூ…” என்றபடியே, மங்கையின் கைகளிலிருந்து யாழினியை தன் கைகளுக்கு ராகுல் மாற்ற முயல, “டேய்… பாப்பா வந்தா எடுடா. அவதான் உம்மூஞ்சியை பாத்துட்டு வரமாட்டேன்னு சொல்லுறால்ல.” ராகுலின் கையில் அடிவைத்தாள் மங்கை.
“நீ அழுத்தி பிடிச்சி வச்சிகிட்டா பாப்புவால எப்பிடி வர முடியும் அண்ணி?” மங்கையோடு மல்லுக்கு நின்று, தன் கையில் அக்கா மகளைத் தூக்கிக் கொண்ட ராகுல்,
“மாமா, யாழ் பாப்பாவோட தாய்மாமா நானு… எங்க மாமான்னு சொல்லுங்க பார்ப்போம்” என்று யாழினியோடு பேச ஆரம்பித்தான்.
“அதெல்லாம், அத்த ன்னு மொதல்ல என்ன தான் கூப்பிடுவா பாப்பா.” ராகுலின் பேச்சில் இடைபுகுந்தாள் மங்கை.
“பாக்கலாமா?” சவாலாக கேட்ட ராகுல் அப்படியே தரையில் அமர்ந்து, தன் முகம் பார்க்கும்படி யாழினியை மடியில் வைத்துக்கொண்டு “மாமா சொல்லு… மாமா, மாமா சொல்லு பட்டூ” என்று பாடமெடுக்க, மங்கையோ, “அத்த… சொல்லுங்க கண்ணம்மா” என்று அண்ணன் மகளின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.