வார்த்தைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து விழுந்த பிறகு தான், தன் பேச்சிலிருந்த அபத்தம் புரிய, தன்னையே நொந்து கொண்டான் சேனாதிபதி.
ஆனால் திரும்ப அள்ளிக்கொள்ள, சிதறவிட்டவை சில்லறையா என்ன? வார்த்தைகளாயிற்றே.
எதுவும் செய்ய முடியாதவனாக, எல்லாவற்றுக்கும் காரணம் நீதான் என்பது போல, அதிர்ந்து போய் நின்றிருந்த சுபாஷிணியை உறுத்து விழித்தான் சேனாதிபதி.
அவளோ, கணவனின் வார்த்தைகளில் தளர்ந்து போய் மறுபடியும் இருக்கையில் அமர, “என்னை பேச வைக்காத சுபா, இங்கயிருந்து போயிடு, ப்ளீஸ்…” என்றான் கோபமாக.
‘இதற்கு மேல் என்ன பேசிவிடப் போகிறாய்?’ என்ற ரீதியில் விரக்தி சிரிப்பை இதழ்களில் தவழவிட்டபடியே, “ம்ஹும்… இப்ப கூட நம்மளை மாதிரி பெர்ஃபெக்ட் ஜோடி இந்த உலகத்துல இருக்க முடியாது த்தான்” என்றாள் சுபாஷிணி.
மனைவியின் பேச்சில் புருவத்தை சுருக்கிய சேனாதிபதி, “என்ன உளர்ற?” என்றான் எரிச்சல் குரலில்.
“நீங்க அப்பா ஆகப்போறீங்க, நான் அம்மா ஆகப்போறேன். இந்த நேரத்துல, நாம ஒருத்தொருக்கொருத்தர் பொருத்தமான துணை இல்லன்னு ஒரேமாதிரி யோசிக்கிறோமே… இப்போ சொல்லுங்க… நம்மளை மாதிரி பொருத்தமான ஜோடி இந்த உலகத்துல இருக்க முடியுமா?” கணவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி கேட்டாள் சுபாஷிணி.
முகம் இறுக மனைவியை பார்த்துக் கொண்டிருந்த சேனாதிபதிக்கு, “நீங்க அப்பா ஆகப்போறீங்க” என்ற வார்த்தை, தன்னை அறியாமலேயே உடலோடு சேர்த்து உள்ளத்தையும் சிலிர்க்க வைக்க, “என்ன சொல்லுற சுபா?!” என்றான் வேகமாக.
“உங்களை மாதிரி தைரியமான ஆளுக்கு பொருத்தமான துணை நான் இல்ல த்தான். அதனால உங்க லைஃப்லயிருந்து விலகிடலாம்னு நினைச்சேன். அதேபோல நீங்களும்…” தன் பேச்சின் சாராம்சத்தை தளர்ந்து போனக் குரலில் சுபாஷிணி திரும்பவும் சொல்ல,
“ம்ப்ச்… நீ மொதல்ல சொன்னதைக் கேட்டேன்” என்றான் சேனாதிபதி பொறுமை இழந்தவனாக.
“ஓஹ்…” என்று புருவம் தூக்கிய சுபாஷிணி, “நீங்க அப்பா ஆகப்போறீங்கன்னு சொன்னேன் த்தான். ஏன்? நான் சொன்ன விஷயத்துல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உங்களை என்னோட பிடிச்சி வைக்க பொய் சொல்லுறேன்னு சந்தேகப்படுறீங்களா?” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இப்பிடி சும்மா சும்மா அழறதே எனக்கு பிடிக்காது. ஆனா, இப்போ கொஞ்ச நாளா நான் அழுகையோடே தான் குடியிருக்குறேன். அதுக்கு காரணமும் நானே தான். நீங்க இல்ல த்தான்.” அவசரமாக சொல்லியபடியே கண்களைத் துடைத்தவள், தன்னையே பார்த்தபடி இருந்த கணவனிடம்,
“இத்தனை வருஷம் கழிச்சு கூட மறக்க முடியாத அளவுக்கு, முட்டாள் மாதிரி உங்களை பேசிட்டு, கிடைச்சது சான்ஸ்ஸுன்னு உங்களை நான் கல்யாணம் செய்திருக்கவே கூடாது த்தான்.”
“சரி… கல்யாணம் தான் செய்துகிட்டேன்… என்னை, என் காதலை உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேனா? அதுவும் இல்ல… உங்க லைஃப் ஸ்டைல்லோட, என்னால பொருந்த முடிஞ்சுதா ன்னா, அதுவும் இல்ல. எதுக்கெடுத்தாலும் பயம், பதட்டம், அதனால கோபம். கடைசியில, இதோ… இது வரைக்கும் உங்களைக் கொண்டுவந்து விட்டாச்சு. அதான், எங்கிட்ட இருந்து உங்களுக்கு விடுதலை தந்துடலாம்னு நினைச்சா… இப்போ குழந்தை. உண்மையிலேயே என்ன செய்யுறதுன்னே எனக்கு தெரியல த்தான்.” என்றவள், சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு,
“கொஞ்சம் பொறுத்துக்கோங்க த்தான்… சீக்கிரம் உங்க வாழ்க்கைலயிருந்து நான் விலகிடுறேன். ஆனா, சத்தியமா நீங்க சொன்ன ரீசனுக்காக இல்ல.” குரல் தழுதழுக்க, நாற்காலியில் இருந்து எழும்பியவள், லேசாக தடுமாறினாள்.
மனைவி பேச்சின் கடைசி வரிகளில் உள்ளுக்குள் வெந்து தணிந்த சேனாதிபதி, “பாத்து சுபா…” என்று, தன்னை மறந்து பதட்டத்தில் சொல்லியிருந்தான்.
கணவனின் பதட்டத்தில் அவனைப் பார்த்து புன்னகைத்த சுபாஷிணியின் முகம், தன் ஜீவகளையை தொலைத்திருக்க, அறையிலிருந்து மெதுவாக வெளியேறினாள்.
சுபாஷிணியின் சோர்ந்து போன தோற்றத்தில், அவள் மீதிருந்த பிணக்கையும் மீறி ஆதூரமாக அணைத்துக் கொள்ள துடித்த சேனாதிபதி, அங்குமிங்கும் நகர முடியாத தன் நிலையை வெறுத்தான். அதைவிட சற்றுமுன் மனைவியிடம் தான் பேசிய வார்த்தைகளை அடியோடு வெறுத்தான்.
அன்று, மாமன் மகள் சொன்ன வார்த்தைகள் தீராத வடுவை, அவன் இளம்மனதில் ஏற்படுத்தியிருந்தாலும், திருமணம் என்று ஆன பிறகு, அதுவும் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் தான், அதைச் சொல்லிகாட்டி அவளை வதைத்து விடக்கூடாது என்ற எண்ணம் தான் எப்போதும் சேனாதிபதியிடம்.
அதையும் மீறி ஒன்றிரண்டு முறை தன் வார்த்தைகளால் மனைவியை வதைத்திருந்தவனுக்கு, தன் செயலைக் குறித்து அவமானமாக இருக்க, அதன் பிறகு அப்படி ஒன்று நடந்துவிடக் கூடாது என்பதில் எத்தனையோ கவனமாகத் தான் இருந்திருக்கிறான்.
அதேபோல, செய்து கொண்ட திருமணத்திற்கு நியாயம் செய்வதற்காக மனைவியோடு சுமுகமான ஒரு மணவாழ்க்கையை நடத்துகிறோம் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, தன்னுள்ளே இருந்த பழைய காதல், மனம் கவர்ந்தவளின் அருகாமையில் அவனறியாமலேயே தன்னை புதுப்பித்துக் கொண்டதை அறியாமலேயே போனான்.
மனைவியோடு கடமைக்காக மட்டும் அல்லாமல், காதலோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்ததாலேயே அவ்வப்போது, அறியாமல், புரியாமல் அவள் செய்த செயல்களை, தன்னால் பெரிதுபடுத்தாமல் இருக்க முடிந்தது என்பதையும் அறியாமல் போனான்.
அதே காதல் தான், தன் வார்த்தைகளையும் மீறி, ரஞ்சனின் வார்த்தைகளை நம்பி மனைவி வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறாள் என்று தெரியவரவும், சேனாதிபதியின் மனதை முற்றுமுழுதாக ஏமாற்றத்தின் வசத்தில் சிக்கவும் வைத்தது.
உடல் பலவீனத்தோடு, இந்த ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள, நிலையிழந்து போன சேனாதிபதிக்கு மனைவியோடான தன் நினைவுகள் ஆதி முதல் அந்தம் வரை ஞாபகம் வந்ததில், மனைவியின் அழுகைக்கு ஒரு காரணத்தை தானே கற்பித்து, தன் மொத்த ஏமாற்றத்தையும் வார்த்தைகளாக்கி இறக்கி வைத்து விட்டான்.
ஆனால், உள்ளச்சுமையை இறக்கி வைத்தவனின் மனம், லேசாக ஆவதற்கு பதில் பாரமாகிப்போனது தான் அவனுக்கு விந்தையாகிப் போனது.
அதுவும் மனைவி தாய்மை அடைந்திருக்கும் விஷயம், சேனாதிபதியின் அகத்தை நிறைத்திருந்த கோபம் என்னும் இருளை அகற்றியதில், தான் பேசிய வார்த்தையின் வீரியம் விஸ்வரூபம் எடுத்து அவன் முன் நின்று அவனை மிரட்டியது.
சுபாஷிணியின் தரப்பை கேட்காமல், தானே முடிவெடுத்து பேசிய தன் மடத்தனத்தை நொந்து கொண்ட சேனாதிபதிக்கு, ‘தன் காதலே உண்மையானதா?’ என்ற ஐயம் இப்போது உண்டாயிற்று.
ஆமாம்… ‘உண்மையான காதல் தன் அன்புக்குரியவர்களை எப்படி காயப்படுத்தும்? அப்படி காயப்படுத்தினால் அது உண்மையான காதலா?’ என்ற கேள்வி அவன் மனதை வண்டாக குடைந்தது.
‘பள்ளிப்படிப்பை கூட முடிக்காத சிறுபெண்ணிடம் நீ காதல் சொன்னால்… அவள் சிறுபிள்ளைத்தனமாக பதில் கூறி உன் காதலை மறுத்து விட்டாள். அதற்காக எப்படி என்றாலும் அவளிடம் பேசுவாயா நீ? அதுவும் அந்த பெண்ணோடு இணைந்து முற்று முழுதாக ஒரு மணவாழ்க்கையை வாழ்ந்து விட்டு, பேசுவாயா நீ?’ என்று சுபாஷிணிக்காக அவன் மனமே அவனிடம் மல்லுக்கு நின்றது.
அன்று சுபாஷிணி அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டினாள் என்றால், அதே தவறை இன்று சேனாதிபதி செய்துவிட்டு மனதோடு மறுகி நிற்கின்றான்.
உடல் வேதனையோடு, இந்த மனவேதனையும் சேர்ந்து படுத்தி எடுக்க, முயன்று லேசாக உடம்பை அசைத்தவனின் காதில், “உண்மையாவா சொல்லுற சுபா ம்மா? ரொம்ப சந்தோஷம்…” என்று ஆர்ப்பரிப்பாக கேட்ட தாயின் குரல் விழ, ஆணவனின் முகமும் மகிழ்ச்சியில் விகசித்தது.
சேனாதிபதி நினைத்தது போல, தாய்மையடைந்திருக்கும் விஷயத்தை, சுபாஷிணி தன் அத்தையிடம் சொல்லியிருந்தாள்.
சில வினாடிகளுக்கு அத்தையின் கண்களை மறைத்து, திறக்கும் போது அவர் முன்னே பிரக்னென்ஸி கிட்டைக் காட்டியிருந்தாள் சுபாஷிணி.
அதில் தெரிந்த இரட்டை கோடுகளை கண்டு ஒரு வினாடி தடுமாறி, மறுவினாடியே சந்தோஷத்தின் உச்சிக்கு சென்ற தமிழரசி, “உண்மையாவா சொல்லுற சுபா ம்மா?” என்று ஆர்ப்பரிப்பாக கேட்டவர், தன் மருமகளை உணர்ச்சி மிகுதியில் அணைத்து உச்சிமுகந்தார்.
அன்று மகனின் நிலைமை மருட்டியதில், மருமகளை குற்றம் சுமத்தினார் தான், தமிழரசி. அதன்பிறகு வந்த நாட்களில் அவளோடு ஒரே அறையில் தங்கியதில், மருமகளின் உறங்கா இரவுகளிலும், விடாத புலம்பல்களிலும் கணவனின் விபத்தில், அவளும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது புரிய, அந்த பேதை மீது இருந்த அதிருப்தி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய், அவளை சகஜநிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருந்தார். அதில் இருவருக்கிடையே, அத்தை, மருமகள் என்ற உறவைத் தாண்டி அழகான நட்பு உருவாகியிருந்தது.
அத்தையும் மருமகளும் உணர்ச்சி மிகுதியில் ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி நின்றிருந்த நேரம், சேனாதிபதியின் அப்பா வாசுவும் அங்கே வந்து சேர்ந்தார். அவரிடமும் அந்த சந்தோஷமான தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது. வாஞ்சையாக மருமகளின் தலையைத் தடவி தன் அன்பை பகிர்ந்து கொண்ட வாசு, “சேனாகிட்ட சொல்லிட்டியா ம்மா?” என்று மருமகளிடம் கேட்க, “ஆமாம்” என்று, மெதுவாக தலையசைத்தாள் சுபாஷிணி.
“சேனாவையும் விஷ் பண்ணிடலாம், வாங்க…” என்றபடி மகன் இருந்த அறைக்குள் நுழைந்தார் வாசு. அவர் பின்னோடு சென்றார் தமிழரசி. கணவனின் வார்த்தைகள் தளையாக மாறி சுபாஷிணியின் கால்களைத் தடுக்கவே, அவர்களோடு செல்லாமல், தங்களின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அறைக்குள் வந்த பெற்றவர்களை முகம் மலர எதிர்கொண்டான் சேனாதிபதி. இத்தனை நாட்களில் மகன் தொலைத்திருந்த சிரிப்பை அவன் முகத்தில் காணவும், பெற்றவர்களுக்கு உள்ளம் குளிர்ந்து போயிற்று. மகன் அருகே கட்டிலில் அமர்ந்து அவனுக்கு வலிக்காதவாறு லேசாக அணைத்து விடுவித்த வாசு, “வாழ்த்துகள் சேனா” என்றார். மகனின் நெற்றியில் முத்தமிட்டு, தன் அன்பை பரிமாறிக் கொண்டார் தமிழரசி.
மூவரின் முகங்களிலும் சந்தோஷத்தோடு, ஒருவிதமான உணர்ச்சி அலை பொங்கி பிரவாகமாக நிற்க, “எனக்கு எழும்பி உக்காரணும் ப்பா” என்றான் சேனாதிபதி.
ஒவ்வொரு முறையும் இப்படி உதவிகள் கேட்க தவித்துப் போவான் சேனாதிபதி. இன்று மிக இயல்பாக தகப்பனிடம் கேட்க, “இதோ ப்பா… இதோ ப்பா…” என்று, பரபரப்பாக மகனுக்கு உதவி செய்து உக்கார வைத்தவர், “மனசை இதே சந்தோஷத்தோடவும், நம்பிக்கையோடும் எப்பவும் வச்சிக்க ப்பா. சீக்கிரமா எழுந்து நடமாடிடலாம்” என்றார் மென்மையாக.
புன்னகையோடு கேட்டுக்கொண்டவன், “இத்தனை நாளும் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல ப்பா.. சாரி” என்று உணர்ந்து சொல்ல,
“அடிபடுவ படவா… இந்த ஃபார்மாலிட்டீஸை எல்லாம் கடந்த உறவுடா நம்மது” என்று வாசு சொல்ல, உணர்ச்சிவசத்தில் அங்கிருந்த மூவரின் கண்களிலுமே, கண்ணீர் கசியத் தான் செய்தது.
அதை மூவருமே முயன்று மறைத்துக்கொள்ள, “சுபா எங்க ம்மா?” என்று ஆவலாக தாயிடம் கேட்டான் சேனாதிபதி.
“இனிமே உங்கம்மா கண்ணுக்கு நாம எல்லாம் தெரிஞ்சா தான் ஆச்சர்யம் டா” என்று மகனிடம் சொல்லி சிரித்தார் வாசு.
‘தன்னைப் பார்ப்பதை மனைவி தவிர்க்கிறாளோ?’ என்று சேனாதிபதிக்கு தோன்றினாலும், தந்தையிடம் புன்னகை முகமே காட்டினான்.
ஆக, “இன்னும் சில மாதங்களில் உங்களோடு ஒருவராக நான் இருப்பேன்” என்று சுபாஷிணியின் வயிற்று சிசு கட்டியம் கூறியதில், அந்த வீடு இழந்திருந்த சந்தோஷத்தை மறுபடியும் மீட்டிருந்தது.
சரியாக காலை உணவு நேரத்திற்கு, கையில் சேனாதிபதிக்கான உணவோடு, அவன் அறைக்குள் மறுபடியும் நுழைந்தாள் சுபாஷிணி.
தந்தையின் உதவியோடு காலைக்கடன்களை முடித்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான் சேனாதிபதி. ‘புதிதாக தான் இழுத்து வைத்திருக்கும் பிரச்சினையை எப்படி சரி செய்வது?’ என்ற யோசனையோடு அறை வாசலையே பார்த்தபடி இருந்தவனிடம், மனைவியைக் கண்டதும் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக் கொள்ள, சுபாஷிணியிடம் தயக்கமே…
“சேனா உன்னை அப்பவே தேடுனான். நீயே அவனுக்கு சாப்பாடு கொண்டு போ” என்று சுபாஷிணியை தமிழரசி தான் அனுப்பி வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் சேனாதிபதி யாரையுமே தன்னை நெருங்க விடாததால், வாசு தான் அதட்டி, உருட்டி மகனை சாப்பிட வைப்பது. அதுவும் சர்ஜரி செய்த வலது கையை மார்புக்கு குறுக்காக மடக்கி வைத்து ஆர்ம் சிலிங்கால் இடது தோள்பட்டையோடு பிணைத்து வைத்திருப்பதால், இடது கையால் ஸ்பூன் மூலம் தான் சேனாதிபதி உணவை உட்கொள்வது. அது கொஞ்சம் தடுமாற்றமாக இருந்த போதும், பெற்றவர்களின் உதவியை மறுத்து தானே சாப்பிட்டு கொள்வான்.
இன்று மனைவி உணவோடு வரவும், மெல்லிய புன்னகையோடு அவளை சேனாதிபதி பார்க்க, அந்த புன்னகை அவள் மூளையைச் சரியாக சென்றடையவில்லை என்பதை, அவள் பதட்டம் சொல்லியது.
கணவனின் கண்ணோடு கண் பார்க்க பயந்தது போல இருந்தவள், “அத்த தான் உங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரச்சொன்னாங்க த்தான்” என்று சொன்னபடியே, கட்டிலில் அவனுக்கு எதிரே பட்டும்படாமலும் அமர்ந்து, உணவு இருந்த தட்டின் மூடியைத் திறந்தாள். அங்கே சூடு பறக்க இட்டிலி, சாம்பாரோடு, நெய் சொட்டச் சொட்ட கேசரியும் அமர்ந்திருந்தது.
“நான் செய்யல த்தான். அத்த தான் ஸ்வீட் க்கு கேசரி இருக்கட்டும்னு செய்தாங்க.” சிறு பதட்டத்தோடு சுபாஷிணி சொல்ல, திருமணம் ஆன மறுநாள் காலை உணவிற்காக மாமன் வீட்டுக்கு சென்ற இடத்தில், தான் கேசரியையும், பொங்கலையும் உண்ண மறுத்ததாலேயே, இப்போது சுபாஷிணியிடம் இந்த பதட்டம் என்று புரிந்தது சேனாதிபதிக்கு.
இவ்வளவு ஏன்? தானே சமையல் செய்து பழகிவிட்ட இத்தனை நாட்களில், சுபாஷிணி ஒருநாள் கூட கேசரியோ, பொங்கலோ செய்து உண்டதாக அவனுக்கு ஞாபகமே இல்லை.
‘பிடித்த உணவைக் கூட தனக்காக மனைவி தவிர்த்திருக்க, என்னையே உனக்கு பிடிக்காது என்ற ரீதியில் ஏனோதானோ என்று அவளிடம் பேசிவிட்டோமே’ என்று சேனாதிபதியின் மனது தவித்தது.
சுபாஷிணிக்கோ கணவனின் பேச்சில் கூடைத் தணலை தலையில் அள்ளிக் கொட்டிய உணர்வு தான். ஆனால், எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி சிறுவயதில் தான் பேசிய பேச்சும், இப்போது நடந்து கொண்ட விதமுமே என்று புரிந்து கொண்டவள், கணவனின் வார்த்தைகளை தன் நெஞ்சாங்கூட்டுக்குள்ளேயே புதைத்து விட போராடிக் கொண்டிருந்தாள்.
அத்தை சொல்லவும், மறுக்க முடியாமல் உணவை கொண்டு வந்துவிட்டாள் சுபாஷிணி. ஆனால், இருவரும் பேசிய வார்த்தைகள் சீனப்பெருஞ்சுவராக இருவருக்குமிடையே எழும்பி நின்றதில், எப்படி உணவை கணவனுக்கு கொடுப்பது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி நின்றாள் சுபாஷிணி.
அது புரிந்தது போல, “சாப்பாடு குடுக்குறியா சுபா? எனக்கு பசிக்குது.” சிறிதுநேர அமைதிக்குப் பிறகு மனைவியிடம் கேட்டான் சேனாதிபதி.
‘பசி’ என்ற கணவனின் ஒற்றை வார்த்தை, தங்களுக்கிடையே இருந்த தடுப்புச் சுவரை தாண்டும் வல்லமையை சுபாஷிணிக்கு தந்தது போல. ஸ்பூனில் கேசரியை எடுத்து கணவனின் வாயருகே வேகமாக கொண்டு சென்றவளின் கைகள், ஒரு எல்லைக்கு மேல் முன்னேறாமல் தடுமாறி நிற்க, லேசாக முன்னால் சாய்ந்து ஸ்பூனிலிருந்த கேசரியை உண்டான் சேனாதிபதி.