அவனும் அவளை சேர்த்து  பிடித்த படி, அவனின் தோளின் மேல் சாய்ந்திருந்த அவள் தலையில் தன் கன்னத்தை சாய்த்து கொண்டு,  “மது ஏதாவது சாப்பிடுறியா, பசிக்குதா, ஜூஸ் ஏதாவது வேணுமா”, என்று கேட்டான்.

     “அதெல்லாம் ஒன்னும் இல்ல, வேண்டாம்” என்று சொல்லும் போதும்,

அவன்  “டாக்டர் டேப்லெட் கொடுக்கணும்னு  சொன்னாங்க, அதுக்காகவாது ஏதாவது புட் எடுத்துக்கோ, அப்படின்னா தான் டேப்லட்ஸ் போட்டுக்க முடியும்”, என்று சொன்னான்.

     “இன்ஜெக்ஷனாவே போட சொல்லுங்க, டேப்லெட் வேண்டாம்” என்று சொன்னாள் .

    அவனும் அவளைப் பார்த்து “சின்ன பிள்ளையா  மது நீ, மாத்திரை சாப்பிடுவதற்கு பயந்து போய் இன்ஜெக்ஷன் போடுங்க ன்னு சொல்றதுக்கு”, என்று சிரித்தபடி சொன்னவன்,

    “எல்லாம் சரியாயிடும் ஓகேவா” என்று சொல்லி விட்டு திரும்பி அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,

    “வெளியே வீட்டில் உள்ளவங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, ரொம்ப எதையும் யோசித்து, நீயும்  குழம்பி, எல்லாரையும் குழப்பாதே ஒன்றும் இல்லை எல்லாம் சரியாயிடுச்சு, சரியா”, என்று சொல்லவும் அவனிடம் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.

     ‘இவனுக்காகவாவது தான் சாதாரணமாக இருக்க வேண்டும்’, என்று நினைத்துக் கொண்டவள், பெருமூச்சோடு மீண்டும் சாய்ந்தமர்ந்தாள்.

     அவன் வெளியே செல்லும் போது, அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பாதிக்கதவை திறந்தபடி, ‘வருவாங்க அமைதியா இரு’, என்று மட்டும் சொல்லி வாயசைக்க, இவளும் தலை மட்டும் ஆட்டி சம்மதத்தை தெரிவித்தாள்.

அப்போது வீட்டினரும் உள்ளே வர, ஒவ்வொருத்தராக நலம் விசாரித்தனர். எல்லோரிடமும் தலையை மட்டும் அசைத்தவள் சாதாரணமாக ஓரிரு வார்த்தை பேசி விட்டு அமைதியாக அமர்ந்தாள்.

    பின்பு வீட்டினரின் கட்டாயத்தினால் சிறிது  எளிமையாக ஜீரணிக்கும்  வகையில் உணவு கொடுத்து டாக்டர் கொடுத்த மருந்துகளையும் கொடுக்க வேறு வழியின்றி எடுத்துக் கொண்டாள்.

  மறுநாள் காலை எழும்போதே அதிகமான வயிற்று வலியோடு எழுந்தவளுக்கு, அந்த மாதத்திற்கான நாள் வந்து விட்டதாக தான் முதலில் நினைத்தாள்.

பின்பு அதிகமான வலியோடு அவதிப்படவே,  சரணின் அம்மா தான் மருத்துரை அழைத்து வந்தார்.

அதன் பிறகு எடுத்த  மருத்துவ பரிசோதனைகளில் அவள் வயிற்றில் 25 நாள் கரு கலைந்து இருப்பது தெரிந்தது.

இந்த ஆக்சிடென்ட் அதிர்ச்சியில் தான் கலைந்திருக்க கூடும் என டாக்டர் தெரியப்படுத்தினார்.

    “நாள் தள்ளிப் போகும் என்று  தெரிந்திருந்தால் நிச்சயமாக வந்திருக்க மாட்டார்கள், திருமணமாகி ஐந்து மாதங்கள் தான் ஆகிறது” என்று மருத்துவரிடம் சொன்னார்கள்.

    “அவர்களும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்” என்பதையே டாக்டரும் சொன்னார்.

அதன் பிறகே மதுவுக்கும் சரணுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

     சரண் அதிர்ச்சியானலும், “25 டேஸ்ங்கறது எப்படி கண்டுபிடிச்சாங்க” என்று வீட்டில் கேட்டவன் டாக்டரிடம் அதைப் பற்றி கேட்டான்.

      “உங்க வைஃப் கிட்ட தான் கேட்டோம், லாஸ்ட் டேட் போன மாசம் இதே தேதியில் இருந்து 2 நாள் முன்னாடி சொல்றாங்க,  இந்த மாசமும் அதை விட 2 நாள் லேட்டா இருக்கு, அவ்வளவு தான் ஆக்சுவலா நேத்திக்கு முந்தின நாள் தான் அவங்களோட டேட், இன்னும் பத்து நாள் போயிருந்தா பிரக்னன்சி கன்ஃபார்ம் ஆயிருக்கும்”, என்றார் .

  “அவளுக்கு ஏதாவது சிம்டம்ஸ் தெரிஞ்சிருக்கணும் இல்ல, அந்த மாதிரி  எதுவும் இல்லையே, அப்புறம்  எப்படி சொல்ல முடியும்”,என்று கேட்டான்.

    “இல்ல அவங்க அதிகமான பெயின் இருக்குன்னு சொல்லப் போய் நாங்க பிளட் டெஸ்ட் எடுத்து பாத்தோம், அதுல தான் கன்ஃபார்ம் ஆச்சு, கரு கலைந்தா கூட அது குறிப்பிட்ட டேஸ் வரைக்கும் பாஸிட்டிவ் ன்னு தான் காட்டும் , அதுல கண்டுபிடிச்சோம்,  இப்போ அவங்களுக்கு டேப்லெட் கொடுத்திருக்கோம்,  எதுவும் அழுக்கு தங்கிடக்கூடாது அப்படிங்கறதுக்காக கொடுக்கிறோம், கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம், நாங்கள் கொடுத்த மருந்துக்கு வெளியே அசடு  எல்லாம் வந்துரும், நாங்க ஒரு செக்கப் பண்ணிட்டு அப்புறமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம், வெயிட் பண்ணனும்”, என்று சொன்னார்.

     “ஓகே” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பும் போது,  டாக்டர் தான், “சார் இதுவும் ஒரு வகையில நல்லதுன்னே நினைங்க, ஏன்னா உங்க வொய்ப்புக்கு நேத்து எல்லாம் அந்த ஆக்ஸிடென்ட் கண்ணு முன்னாலே நினைவு வருது அப்படின்னு சொன்னாங்க , இப்போ இந்த அதிர்ச்சியில் அது மறந்து போயிருக்கும்,  இனி அவங்கள நல்ல பார்த்துக்கோங்க, சோ நடக்கிறது எல்லாம் நன்மைக்கே, கன்ஃபார்ம் ஆகி பல கற்பனைகளுக்கு அப்புறம் இந்த மாதிரி ஆகியிருந்தா, அது ரொம்ப கஷ்டம், அதைவிட இது அப்படின்னு தெரியாமலேயே போனது, ஒரு வகையில கடவுள் உங்களை ரொம்ப சோதிக்கலை ன்னு நினைத்து சந்தோஷப்பட்டுக்கோங்க”, என்று சொன்னார்.

தலை மட்டும் ஆட்டிக்கொண்டவன் அங்கிருந்து வெளியே வந்தான்,

     அவள் இருந்த அறைக்கு வெளியே வந்து நின்று விட, சரண் அம்மா தான், “போ அவள போய் பாருடா”, என்று சொன்னார்.

     அவளிடம் “எப்படி மா, இது எதுவுமே தெரியாதே, தெரிஞ்சிருந்தா கிளம்பி இருக்கவே மாட்டோமே”, என்று சொன்னான்.

      “அவளுக்கும் அப்படி தான்டா, தெரிஞ்சி இருந்தா அவளே உன்கிட்ட சொல்லி இருப்பா,  அவளுக்கும் இதே எண்ணம் தான், எதுவுமே நாங்க சொல்ல முடியாது இல்லைய,  போ அவ கிட்ட போய் பேசு”, என்று சொன்னார்.

“அவ எப்படி இருக்கா” என்று கேட்டான்.

    “அவளும் எதுவுமே பேசல டா, டாக்டர் கேட்கும் போது தான், ‘எனக்கு எந்த சிம்டம்ஸ்ம்  இல்லையே’, ன்னு  சொன்னா, நாங்க தான் சொன்னோம்,   கல்யாணம் ஆகி 5 மாசம் தான் ஆகுது,  எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க, அப்படின்னு சொன்னோம்,  அவட்ட வேற என்ன சொல்ல,  எங்களுக்கும் தெரியல, உன்கிட்ட என்ன சொல்ல ன்னும் எங்களுக்கு தெரியல,  விடு இத பத்தி அவ கிட்ட எதுவும் பேசாத,  நார்மலா டாக்டர் செக் பண்ணிட்டு அனுப்புறேன்னு சொல்லி இருக்காங்கன்னு மட்டும் சொல்லு, வேற எதுவும் சொல்லாத”,  என்று சொன்னார்.

    “சரி” என்று சொன்னவன் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, உள்ளே இருந்த மதுவின் அம்மா வெளியே சென்றார்.

   அருகில் அமர்ந்தவனோ அவள் கையை பிடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

    சற்று நேரம் அமைதியாக இருந்தவள், அவனிடம் “சாரி எனக்கு எதுவுமே தெரியல”, என்று சொன்னாள்.

“மது இதுக்கு எதுக்கு இந்த சாரி, சிலருக்கு உடனே எப்பவுமே தெரியாதாம், டாக்டரிடம் கேட்டேன், சிம்டம்ஸ் சிலர்க்கு தெரியும், சிலருக்கு தெரியாது,  சிலருக்கு லேட்டா தெரியும், அந்த மாதிரி எல்லாம் சொன்னாங்க, சோ இத பத்தி பேசாத, எத்தனையோ பேரு எத்தனையோ வருஷம் பேபி இல்லாம இருக்காங்க,  நமக்கு கடவுள் கொஞ்சம் லேட்டா கொடுப்பாரோ என்னவோ,  ஏன் உடனே கூட கிடைக்க வாய்ப்பிருக்கு,  ஆனா நமக்கு இப்ப வேண்டாம் சரியா,  இத பத்தி யோசிக்க வேண்டாம், முதல்ல உன் ஹெல்த்த பாக்கணும் அப்புறமா மத்தத பத்தி யோசிக்கலாம் சரியா”, என்று சொன்னான்.

     சற்று நேரம் அமைதியாக சாய்ந்து  இருந்தவள், அவன் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்ட பின், “நீங்க எதுவும் இதை பத்தி ஃபீல் பண்றீங்களா”, என்று கேட்டாள்.

     அவனும் “ஏன் உனக்கு ஏதாவது கவலை இருக்கா”, என்று கேட்டான்.

      “அப்படி ஒன்னும் தோணல, ஆனால் ஷாக்கா இருக்கு, எப்படி அப்படின்னு தோணுது, எனக்கு எதுவும் தெரியலையே”, என்று சொன்னாள்.

       நாம எதிர்பார்க்கலை, அதனால் தான் இப்படி ஒரு ஷாக் மட்டும், மே பி எதிர்பார்த்து இருந்தா நமக்கு கஷ்டமா தான் இருந்திருக்கும், விடு இதைப் பற்றி நாம் யோசிக்கவே வேண்டாம் சரியா”, என்று சொன்னான்.

     மீண்டும் “ம்ம் சரி”என்று சொன்னவள்,  எப்போதும் போல அவன் கையை பிடித்தபடி தோளில் தலை சாய்க்க, அவனும் தன் கன்னத்தை அவள் தலையில் அழுத்திக் கொண்டான்.

   மாலை பரிசோதனை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

   அதன் பிறகு ஒரு வாரம் அவளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விட்டு வீட்டினர் கிளம்ப, அவர்களின் வாழ்க்கை எப்போதும் போல சுழல தொடங்கியது.

துன்பம் பல கொடுத்து அதை மறக்க.. இன்பம் சில கொடுத்து எதுவுமே இலகு இல்லை என்பதை நொடிக்கொரு முறை கூறிச் செல்கிறது வாழ்க்கை.