“புடிடா இம்சை…” என்று தந்த நண்பனை இறுக்கி அணைத்து, “தேங்க்ஸ் மச்சான்” என்று நந்தா சொல்ல, “அடச்சீ பேயே பொழைச்சு போ… ஏதோ நீயும் என்னை மாதிரியே புது புருஷன் ஆச்சேன்னு உதவி செஞ்சிருக்கேன். என்ன ஏடாகூடம் செஞ்சு கம்மலை உடைச்சியோ… போ போ சீக்கிரம் போயி பொண்டாட்டியைச் சமாதானம் பண்ணு. நானும் அதே வேலையைப் பார்க்க போறேன்” என்று அவனுக்கு முன்பே குடும்பஸ்தன் பொறுப்பை ஏற்றவன் என்கிற முறையில் சொல்ல,

அதற்கு, “அடச்சீ உனக்கு புத்தி போகுது பாரு” என்று அவினாஷின் முதுகில் அடித்தாலும் நந்தாவின் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.

“உன் வெட்கத்துலேயே தெரியுது போடா” என்று அப்போதும் காலை வாரினான் அவன்.

மறுநாள் கண் விழிக்கையில் கூட அனுவிற்கு சோர்வு வாட்டியது. அப்பா தந்த கம்மல் எப்படி உடைந்ததென்று தெரியவில்லை. திடீரென்று நேற்று எடுத்து அணியலாம் என்று பார்த்தால் அணியும் போதே சட்டென்று இரண்டாக வந்து விட்டது. அவ்வளவு தான் பெண்ணவளின் விழிகள் பொங்கிப் பெருகி விட்டது. அவளுக்கு அந்த கம்மல் ரொம்பவும் முக்கியம். அதை எப்பொழுதாவது தான் அணிவாள் என்றாலும் அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும், அதனை ஆசையாக வருட வேண்டும். இப்படி இன்னும் நிறைய!

அவளின் உணர்வுகளோடு பிணைந்து விட்ட அந்த கம்மலை உடைந்த நிலையில் பார்த்தவளுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. செய்வதறியாது படுக்கையில் சரிந்து தேம்பித் தேம்பி அழுதாள். மாமியார் இவளைக் காணாமல் தேடி வந்து உணவுண்ண அழைத்தபோதும் அசையவே இல்லை. வற்புறுத்தி உண்ணச் சொல்லியும் மறுத்து விட்டாள்.

அவளின் சோர்வைப் பார்த்து அவராகவே கொஞ்சம் உணவை ஊட்டி கூட விட்டார். அவளுக்கு மேலும் மேலும் துக்கம் தான் பொங்கியது. இதற்கு மேலும் மாமியாரை தனக்காக வருந்த வைக்கப் பிடிக்காமல் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிட்டவள் போதும் என்றுவிட்டாள். உடம்பு சரியில்லை என்று அவள் சொன்னதை நம்பி மாத்திரை கொடுத்துவிட்டு அவரும் சென்று விட்டார்.

அழுதபடியே கொஞ்ச நேரத்தில் உறங்கியிருந்தாள். காலையில் கண் விழிக்கும் போதே மீண்டும் கம்மலின் நினைவே! அதனைச் சரி செய்ய முடியும் என்கிற யோசனை கூட வருத்தத்தில் இருந்தவளுக்கு வர மறுத்தது. நிதானமாக யோசிக்க முடிய வேண்டும் அல்லவா? அந்த நிலையில் தான் அவள் இல்லையே!

நேரம் கடந்திருக்க, கணவன் வேலைக்குக் கிளம்பியிருப்பான் போல என்று எண்ணிக் கொண்டாள். இயந்திரகதியில் குளித்தவள், வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

பொட்டு வைத்துவிட்டுத் திரும்பும் போது தான் அந்த டேபிளில் முளைத்திருந்த ரோஜா மலர் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கொண்டிருப்பது விளங்கியது.

இருந்த எரிச்சலில் கணவனின் புகைப்படத்தைப் பார்த்து, ‘ஆசையா செடி வளர்கிறது நான், பூவை பறிக்கிறது இவராக்கும்’ என்று வாய்விட்டே திட்டிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதே வேலைக்குத் தயாராகிவிட்டு காலை உணவை முடித்துக் கொண்டு அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம் என்று எண்ணி அறைக்கு வந்த நந்தகுமார், அவள் சொன்னதைக் கேட்டு சத்தமின்றி சிரித்துவிட்டு அமைதியாக வெளியேறி விட்டான். சரி செய்த கம்மலை அவளே பார்க்கும் போது பார்க்கட்டும் என்பதாக!

திருமண புகைப்படத்திலிருக்கும் கணவனைப் பார்த்துத் திட்டிவிட்டு மீண்டும் ரோஜாவை பார்த்தாள். ரொம்பவும் அழகாகத்தான் இருந்தது. இருந்த சோர்வில் சூடிக்கொள்ள மனமில்லை.

அதனை விரல்களால் வருடினாள். ‘ஒருவேளை எனக்காகத்தான் பரிச்சிருப்பாரோ?’ மனம் அலைபாய்ந்தது. மலரை வருடியவளின் மென் விரல்கள் ஜிமிக்கியையும் வருட ஆசை கொண்டது. அதன் உடைந்த நிலை நினைவில் வர கண்ணில் நீர் தேங்கிக் கொண்டது. விசும்பல் எழ அவசரமாகக் கீழுதட்டை கடித்துக் கொண்டாள்.

அந்த கம்மலை உடைந்த நிலையில் பார்க்கும் தைரியம் அவளிடம் இல்லை. அதனை வருடாமலும் இப்பொழுது அவளால் நகர முடியாது.

கைகள் நடுங்க மலரின் அருகில் அதனை உரசிக்கொண்டிருந்த அந்த குட்டி நகைப்பெட்டியை எடுத்தாள். மெல்ல விரித்துப் பார்த்தவள் அதனை வருடினாள். மீண்டும் பெட்டியை மூட இருந்த சமயம் அதன் பளபளப்பு உறுத்தியது. ‘இதென்ன பாலிஸ் போட்டது போல’ என்று எடுத்துப் பார்க்கப் புதிது போல ஜொலித்தது.

கண்கள் விரிய, உடைந்திருந்ததாக இவள் எண்ணிக் கொண்டிருந்த மற்றொன்றையும் பக்குவமாக எடுத்தாள். என்ன அதிசயம் அதுவும் எந்த குறைபாடுகளும் இல்லாமல் அழகாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

கண்ணில் நீர் நிற்கவே இல்லை. கரகரவென்று பொழிந்தது. என்னவோ இந்த கம்மலை இனி அணிய தனக்குக் கொடுத்து வைக்காது போல என தனக்கிருந்த அதிர்வில் அதைச் சரி செய்யலாம் என்று கூட யோசிக்க மறந்தவளாய் எண்ணி விட்டவளுக்கு இது மிகப்பெரிய வரம்.

கண்ணை துடைத்துக் கொண்டு ஆசையாக அந்த கம்மலை அணிந்து கொண்டாள். நெஞ்சம் அப்படி தழும்பிக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காரணமானவன் யாரென்று அவள் யூகிக்க கூடியது தானே!

இப்பொழுதே அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பெண்ணவளுக்கு. கம்மலை மாட்டிய பிறகு தாமதிக்கவே இல்லை. வேகமாக வெளியே வந்தாள்.

கனகதேவி மருமகளைப் பார்த்ததும், “என்ன பாப்பா கிளம்பி வர? உடம்பு தான் சரியில்லையே இன்னைக்கு லீவ் போட வேண்டியது தானே? வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு” என்றார் அக்கறையாக.

“கண்டிப்பா லீவ் தான் அத்தை. ஆனா இப்ப வீட்டுல இருக்க முடியாது. உங்க மகனை பார்த்தே ஆகணும்” என்று சொன்னவளின் பூரிப்பு அவரின் கண்ணில் படவில்லை. அவளும் அவனது ஓயாத வேலைக்கு கண்டிக்க நினைக்கிறாள் போல என அவராகவே யூகித்துக் கொண்டார்.

“என்னவோ போ… இப்படி ராத்திரி பகலா என்னத்தை வேலை செய்யறானோ? என்னடா ராத்திரி ஒன்பதரைக்கெல்லாம் இன்னைக்கு வந்துட்டானேன்னு நினைச்சா வந்த ஒரு மணி நேரத்துல மறுபடி வெளிய போயிட்டு ராத்திரி ரெண்டு மணிக்கு மேல தான் திரும்பி வரான். இவனை கண்டிச்சே தான் ஆகணும். நீ என்னன்னு கேளு, இவனை எல்லாம் இப்படியே விட்டா சரிப்பட்டு வராது”

என்னவோ இவள் குச்சி எடுத்துக் கொண்டு அடிக்க கிளம்பியது போல அவர் பங்கு புகாரையும் சேர்த்து கனகதேவி வாசிக்க, அவள் அமைதியாகச் சிரித்தாள்.

“ஆமா நீ என்ன அதிசயமா அவனைத் தேடி போற?” அவர் புரியாமல் கேட்க,

“நீங்க யோசிச்சிட்டே இருங்க, நான் சீக்கிரம் போய் பார்த்துட்டு வந்துடறேன். அவர்கிட்ட போன் போட்டு சொல்லிடாதீங்க. சர்ப்ரைஸ் விசிட்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு போனவளைப் பார்த்தவருக்கு அப்பொழுதுதான் என்னவோ விளங்க மனம் நிறைந்து தான் போயிற்று.

தெரிந்த ஆட்டோவில் பயணித்து கணவனின் அலுவலகம் வந்துவிட்டவள், அவனைத் தேடிக்கொண்டு அவனது அறைக்கே போய்விட்டாள். உள்ளே யார் நுழைந்தார்கள் என்று கூட ஏறிட்டுப் பார்க்காமல், “இந்த பைல்ஸ் எல்லாம் வெரிபை பண்ணியாச்சு. அங்கே அடுக்கிடு கிரி” என்று தன் உதவியாளன் தான் வந்திருக்கிறான் போல என்று எண்ணிக் கொண்டவன் வேலை ஏவிவிட்டு அவனது வேலையில் கவனமாக இருந்தான்.

கோப்புகள் இருந்த இடத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் எரிச்சலோடு ஏறிட்டுப் பார்த்தவன், அங்கே அனுவை எதிர்பார்க்காமல் ஆனந்தமாக அதிர்ந்தான்.

கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அதிர்ந்து எழுந்து நின்றது தான் தாமதம் ஓடிச்சென்று அவனை இறுகி அணைத்துக் கொண்டு, “எப்படி உடைஞ்சு போயிட்டேன் தெரியுமா? தேங்க்ஸ்… தேங்க் யூ சோ மச்” என்று கண்ணீரோடு சொன்னவள், தன்னையும் மீறிச் சாய்ந்திருந்த நெஞ்சிலேயே சில முத்தங்களைப் பதித்து விட்டாள்.

இதெல்லாம் நடக்கும் என்று யூகித்தேயிராத நந்தா தான் திக்குமுக்காடிப் போனான்.

“ராது…” அவன் சிறு சிரிப்புடன் அழைக்க, அவன் சட்டைக் காலரை ஒரு கையால் பற்றி அருகில் இழுத்தபடி, அவன் உதட்டில் லேசாக தன் இதழ்களை ஒற்றி எடுத்து, “லவ் யூ” என்று வாயை மட்டும் அசைத்தாள். கண்கள் நீரினால் நிரம்பியிருந்தது. கலங்கிய விழிகள் அவனது விழிகளோடு தான் கலந்திருந்தது பிரிய மனமில்லாதது போல!

அவனின் வலிய கரங்கள் நங்கையவளின் மெல்லிடையை வளைத்து இன்னும் தனக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது.

அனுராதா கண்ணைச் சிமிட்டினாள். கண்ணில் தேங்கியிருந்த நீர் கன்னத்தில் வேகமாக வழிந்தோடியது. அதை தன் கன்னம் கொண்டு துடைத்தவன் துடைத்த வேகத்தில் கன்னத்திலேயே அழுத்தமாக முத்தத்தையும் கொடுத்துவிட்டு, அவளின் நெற்றியில் முட்டி, “எதுக்குடி அழுகை?” என்றான் மூக்குரசி.

விசும்பலுடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “தெரியலை” என்றாள்.

அவளை இலகுவாக்கும் பொருட்டு, “ம்ம்… ஹ்ம்ம்…” என்று ராகம் இழுத்தவன், “உதட்டுல உன் உதட்டை ஒட்ட வெச்சியே அது எதுக்கு?” என்று வம்புக்கு இழுத்தான். அப்போதே அவளாகத் தொடங்கி வைத்த விஷயம் புரிந்தது. சட்டென்று வெட்கம் சூழ, அவனிடமிருந்து வேகமாக விலகப் பார்க்க அதற்கு அனுமதிக்காமல் இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு, “என்னவோ வாயசைச்சு சென்னியே அது கூடவா என்னன்னு தெரியலை” என மீசை முடிகள் காதில் உரச சந்தேகம் கேட்டான் கள்வன்.

அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நழுவவும் அவன் அனுமதிக்க மறுக்கிறான். சங்கடத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

கள்வனின் காதல் மனம் இன்னும் என்னென்ன கவி பாடியிருக்குமோ நல்லவேளையாக அவனின் அலுவலக உதவியாளன் கிரி வந்து அவன் அறைக்கதவைத் தட்டியதில் அனுவிற்கு அவனிடமிருந்து விலகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறையிலிருந்து நழுவும் வாய்ப்பும் தான்!

கிரி பொறுப்பாக, “மேம் நீங்க வந்திருக்கீங்கன்னு தான் ஜூஸ் கொண்டு வந்திருக்கேன். குடிக்காம போறீங்க?” என்று கேட்க, திருதிருவென விழித்தவள், “உங்க பாஸ் குடிப்பாரு. நான் இப்ப கிளம்பணும்” என்றுவிட்டு வேகமாக வெளியேறப் பார்த்தாள்.

நந்தா சிறு சிரிப்புடன், கிரிக்கு கண்ணசைக்க, “மேடம் மேடம் இருங்க, வீட்டுக்குப் போக வண்டி அரேஞ் பண்ணறேன்” என்றபடி பின்னேயே ஓடினான்.