ஒரு கண்டத்தை தாண்டி இப்போது தான் வெளியே வந்திருப்பவளிடம், “உன் கணவனுக்கு, கை, கால் முறிந்து, இதே மருத்துவமனையில் ரணசிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது” என்று சொல்ல மனமின்றி,

“முழிச்சிட்டீங்களா சுபா க்கா… தேங்க் காட்” என்று பரபரத்த அனு, “ம்மா… சுபா க்கா முழிச்சிட்டாங்க” என்று லேசாக கத்த, அந்த அறையிலிருந்த இன்னொரு நாற்காலியில் இருந்து எழும்பி வந்தார் அனுவின் அம்மா.

 ஆமாம்… சேனாதிபதி, சுபாஷிணி, ரஞ்சன் மூவரையுமே போலீஸார் மீட்டு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள்.

சேனாதிபதி, ரஞ்சன் இருவருமே, கட்டடம் கட்டுவதற்காக போடப்பட்டிருந்த கம்பால் ஆன சிறிய சாரத்தில் விழுந்து, அதன்பிறகு தரையில் விழுந்திருந்ததனால், கீழே விழுந்த வேகம் குறைந்து உயிர் சேதமின்றி தப்பியிருந்தனர். ஆனால் கை, காலில் முறிவு ஏற்பட்டிருந்தது.

ரஞ்சனை போலீஸார் தன் கஸ்டடியில் எடுத்திருந்தார்கள். அவனுக்கும் கூட இதே மருத்துவமனையில் தான் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

சுபாஷிணியும் அதிகப்படியான மயக்க மருந்தை சுவாசித்திருந்ததால், முறையான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். ஆறுமணிக்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்தவள், இதோ இரவு பத்து மணியாகிவிட்டது கண்விழிக்க.

மாதவபுரத்துக்கு தகவலை போலீஸாரே தெரியப்படுத்தி விட்டார்கள். அவர்களும் கிளம்பி இங்கே வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வரும்வரை சுபாஷிணியை தனியே விட மனமின்றி, அனுவும் அவள் அம்மாவும் அவளோடு இருக்கிறார்கள்.

“அந்த ரஞ்சன், அத்தானுக்கு ஆக்சிடென்ட்ல ரொம்ப அடின்னு சொன்னான், அதான் நான் ஹாஸ்பிடல் போறதுக்காக போனேன்.. ஆனா அவன்…” என்று தழுதழுத்தபடியே அனுவிடம் நடந்தவற்றைச் சொன்ன சுபாஷிணி, “அத்தானுக்கு ஒன்னுமில்ல ல்ல அனு… சொல்லேன் ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

 “அவன் சொன்னப்ப எல்லாம் உன் அத்தானுக்கு ஒன்னுமில்ல… அந்த களவாணி பயக்கிட்ட இருந்து உன்னைக் காப்பாத்த வந்துதான் சேனாதிபதி அடிபட்டு கிடக்குறாப்ல.” எரிச்சலை மறைக்காத குரலில் சொன்னார் அனுவின் அம்மா.

புரியாமல் விழித்த சுபாஷிணிக்கு, தனக்கு தெரிந்த வகையில் நடந்தவற்றை அனு சொல்ல, “எனக்கு பாக்கணும்… எனக்கு இப்பவே என் அத்தானைப் பாக்கணும்” என்று கதறியபடி கட்டிலில் இருந்து அவசர அவசரமாக இறங்கியவளுக்கு கிர்ரென்று தலை சுற்ற, தடுமாறி கட்டிலில் அமர்ந்தாள்.

‘இதுதான்… இந்த உன் அவசரம் தான் இன்னைக்கு சேனாதிபதியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருக்கு. ஏம்மா… எவனோ என்னவோ சொன்னா, உடனே நம்பிடுவியா நீ? அதை உறுதிபடுதிக்கணும்னு உனக்கு தெரியாது?” என்று நேரடியாக சுபாவிடமே சாடினார் அனுவின் அம்மா.

அனுவின் அம்மாவுடைய குற்றச்சாட்டில் மலைத்துப் போனாள் சுபாஷிணி. தன் உயிருக்கு உயிரான கணவனின் உயிருக்கு, ஆபத்து என்று கேள்விப்படும் போது எப்படி அமைதியாக இருப்பது என்று அவளுக்கு தெரியவே இல்லை.

அப்படியும் அவள் ரஞ்சனின் வார்த்தைகளை நம்பவில்லையே… அதே நேரம், ராஜ் சொல்லியதையும் நம்பவில்லையே. யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று பிரித்தறியத் தெரியாமல் சூழ்ச்சியின் சுழலுக்குள் சிக்கிக்கொண்டாளே.

ம்மா… அவங்களே வருத்தத்துல இருக்காங்க. நீங்க வேற ஏம்மா?” தன் அம்மாவை கண்டித்த அனுவிடம், “எனக்கு அத்தானை பாக்கணும்” என்ற சுபாஷிணியின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.

“வலது கை, கால் இரண்டுலயும் சர்ஜரி. அதனால நேரம் ஆகும்னு சொன்னாங்க. சூடா இந்த பாலைக் குடி, நம்மளை கூப்பிடுறப்போ போய் பார்க்கலாம்” என்றபடியே ஃப்ளாஸ்கில் இருந்த பாலை ஊற்றி சுபாஷிணியின் கைகளில் அனுவின் அம்மா கொடுக்க, அவர் கண்களில் இருந்த கண்டிப்பில் பேசாமல் வாங்கி குடித்தவள், கணவனைக் காணச்செல்லும் நேரத்திற்காக தவம் போல காத்திருக்க ஆரம்பித்தாள்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் தான் சர்ஜரி முடிந்து ஐசியூ க்கு சேனாதிபதியை மாற்றியதாக தகவல் வந்தது. எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடினாள் சுபாஷிணி. ஐஜி, ஜெகன்நாதன் என்று எல்லோரும் அங்கே தான்.

ஐசியூ அறையின் கண்ணாடிக் கதவு வழியே உடலெல்லாம் கட்டுக்களோடு முற்றிலும் மயக்கம் தெளியாத நிலையில் இருந்த கணவனை கண்ட சுபாஷிணி மயங்கிச் சரிய, தாங்கிக் கொண்டாள் அனு.

உடல் சோர்வு, மனச்சோர்வு எல்லாம் சேர்ந்து சுபாஷிணியை மறுபடியும் மயக்கத்திற்குள் தள்ளியிருந்தது. ஆனால் இம்முறை மயக்கம் நீண்டநேரம் நீடிக்கவில்லை. என்றாலும், கட்டிலை விட்டு அவளை கீழே இறங்க அனுமதிக்கவில்லை அனுவின் அம்மா.

“இப்போ போனாலும் கமாண்டரை பாக்க பெர்மிஷன் குடுக்க மாட்டாங்க சுபா க்கா, காலைல போலாம்.” தன்னை பரிதாபமாக பார்த்தவளிடம் சொன்ன அனு, “இதெல்லாம் கமாண்டருக்கு ஒன்னுமேயில்ல. தூசு போல உதறிட்டு சீக்கிரமே மாஸா என்ட்ரி குடுப்பாங்க பாருங்க” என்று சுபாஷிணிக்கு தைரியம் கொடுத்தாள்.

தன்னைவிட சிறுபெண்ணான அனுவின் தைரியமான பேச்சில், அன்றொரு நாள் அனு சொன்னது போல, ‘அத்தானுக்கு தான் ஏற்றஜோடி இல்லையோ’ என்ற எண்ணம் மெல்ல மெல்ல முளைவிடத் தொடங்கியது சுபாஷிணியின் மனதில்.

சுபாஷிணியை சமாதானப்படுத்தும் விதமாக மேலும் என்னவெல்லாமோ பேசியபடியே அனு மெல்ல மெல்லக் கண்ணுறங்க, ‘பாசம் என்ற பெயரில் இப்படியொரு சூழ்நிலையில் கணவனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் நீயெல்லாம் என்ன மனைவி?’ என்று ஓங்காரமாக சத்தமிட ஆரம்பித்தது சுபாஷிணியின் மனது.

மறுநாள் காலை, நன்றாக மயக்கம் தெளிந்திருந்த சேனாதிபதி மனைவியைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, கணவனை அருகில் கண்டுவிடும் ஆவலில் ஓடினாள் சுபாஷிணி.

 தன் சோர்ந்து போயிருந்த கண்களால் அவளைப் பார்த்த சேனாதிபதி, “நல்லாயிருக்க தானே சுபா. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல ல்ல” என்று மெதுவாக கேட்க, அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை வெடித்து சிதற விட்ட சுபாஷிணி, பதிலாக தலையை ஆட்டியபடியே,

“என்னால தான்.. எல்லாம் என்னால தான்…” என்றாள் அழுகையினூடே.

“ம்ப்ச்… நீ என்ன செய்வ சுபா?” முகமெங்கும் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த சிராய்ப்புகள் சதையை இழுத்துப் பிடித்ததனால் உண்டான எரிச்சலில் முகத்தை சுருக்கியபடி பேசினான் சேனாதிபதி.

“நான்… நான் மட்டும் அன்னைக்கு அந்த ரஞ்சன் சொன்னதை நம்பி வீட்டை விட்டு வேளிய வராம இருந்திருந்தேன்னா உங்களுக்கு இப்பிடி நடந்துருக்காது ல்ல த்தான்?” இரவு முழுவதும் எதை திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தாளோ அதையே கணவனிடமும் சொன்னாள்.

தனக்கு விபத்து நடந்தது தெரிந்ததால் தன்னை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பிய மனைவியை, கால் டாக்சி மூலம் ரஞ்சன் கடத்தி கொண்டு போய் விட்டான் என்றே இதுவரைக்கும் நினைத்திருந்த சேனாதிபதிக்கு, ரஞ்சனின் வார்த்தைகளை நம்பித்தான் மனைவி வீட்டைவிட்டே வெளியே இறங்கியிருக்கிறாள் என்ற தகவல் புதிது.

அந்த தகவல் தந்த அதிர்ச்சியில் கண்களை இறுக மூடித்திறந்த சேனாதிபதி, “நீ எப்போ தான் என்னை நம்புவ சுபா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

கணவன் குரலில் இருந்த பேதத்தில், தவித்துப் போனவளாக “அத்தான்…” என்று ஏதோ சுபாஷிணி சொல்ல வர,

“இதுக்கு மேலயும் உங்கிட்ட எதுவும் நான் பேச விரும்பல சுபா. இங்கயிருந்து போயிடு” என்றான் கடுமை விரவியிருந்த குரலில்.

“த்தான்…” காற்றாகிப் போன குரலில் அழைத்தவள், கணவனின் முகத்தை நடுங்கும் விரல்களால் தொட முயல,

“நல்லாயிருக்கும் போதே நான் சொல்லுறதை கேக்கமாட்ட… இப்போ கையும் காலும் முடமாகிக் கிடக்கும் போதா கேட்டுறப்போற.” அலுத்துக் கொண்டபடி சேனாதிபதி கண்களை மூடிக் கொண்டான். தன்னைத் தானே கணவன் முடம் என்று சொல்லிக் கொண்ட வார்த்தை உயிர்வலி கொடுக்க, அமைதியாக அங்கேயிருந்து வெளியேறியிருந்தாள் சுபாஷிணி.

 மாதவபுரத்திலிருந்து எல்லோரும் வந்துசேர மத்தியானம் ஆகிவிட்டது. எப்போதும் போல எல்லோருமே வந்திருந்தார்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்று தெரியாத அளவிற்கு எல்லோரையும் கலங்கடித்திருந்தான் சேனாதிபதி.

மருத்துவமனையில் எல்லோரும் இருக்க முடியாது என்பதால், வாசுவும், சுபாஷிணியின் அப்பாவும் மட்டும் இருந்து கொண்டு எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

சுபாஷிணி வீட்டுக்கு செல்ல மறுக்க, “உன்னால எந்த உதவியும் இப்போ சேனாவுக்கு செய்யமுடியாது ம்மா. நாங்க பாத்துக்குறோம், நீ வீட்டுக்கு போ” என்று கட்டாயப்படுத்தி மருமகளை வீட்டுக்கு அனுப்பியிருந்தார் வாசு.

பேரனை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்திருந்த பூரணி அம்மா, “என்மகனை உசுப்பேத்தி விட்டே அவன் வாழ்க்கையை உன் அண்ணன் அழிச்சான். அவன் பையன், எம்பேரன் வாழ்க்கைல கை வைக்க பாக்குறானா? தொலைச்சிபுடுவேன், தொலைச்சி… உன் அண்ணன் மகன், அந்த பரதேசிக்கிட்ட சொல்லி வை” என்று மருமகளிடம் சண்டைக்கு சென்றார்.

“கவலப்படாதீங்க பாட்டி ம்மா, அந்த தொரைக்கு காலம் முழுசும் இனி கவர்ன்மெண்ட் சாப்பாடு தான். இனிமே, அவன் நினைச்சா கூட, யார் வாழ்க்கையிலும் கையையும் வைக்க முடியாது, காலையும் வைக்க முடியாது” என்றாள் மங்கை.

எப்போதும் பிலாக்காணமாக பேசும் விசாலிக்கு இப்போது பேசும் வழியே இல்லாமல் போனது. அதுவும் மாமியாரின் வார்த்தைகள் மண்டையில் ஓங்கி தட்ட, சென்னையில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தானும், தன் அண்ணனோடு சேர்ந்து தங்கள் வீழ்ச்சிக்கான குழியைப் பறித்திருக்கிறோம் என்று மிகத் தாமதமாக புரிந்தது.

 கூடவே, தன் அண்ணன் வீட்டாரின் சுயரூபத்தை, மகளுக்கு முதலிலேயே தெரியப்படுத்தி, அவர்களிடமிருந்து விலகி இருக்கச் சொல்லாத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து போனார். காலம் கடந்த ஞானோதயம். அதனால் யாருக்கும் பயன் தான் இல்லை.

இதுவரை மருமகளை எதுவுமே சொல்லாத சேனாதிபதியின் அம்மா கூட, “சுபா கொஞ்சம் நிதானமா யோசிச்சு நடந்துருக்கலாம்” என்று விட்டார் கோபமாக.

 மொத்தத்தில் ‘சேனாதிபதியின் இந்த நிலைமைக்கு காரணம் சுபாஷிணி’ என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் பதிந்து போனது.

 “நானாவது அந்த ரஞ்சன் நல்லவன் இல்லன்னு உங்ககிட்ட சொல்லியிருக்கணும் அண்ணி.” தனிமையில் சுபாஷிணியிடம் பேசிய மங்கை, பலவருடங்களுக்கு முன்னர் ஊரில் அவன் நடந்து கொண்டதைச் சொல்லி, “நான் சொல்லியிருந்தா நீங்க அவங்கிட்ட இருந்து டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணியிருப்பீங்க ல்ல. அண்ணனுக்கு இப்பிடி ஆகியிருக்காதுல்ல” என்றாள்.

‘எங்கே? இப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று நானும் எப்போதோ யூகம் செய்து விட்டேனே. இருந்தும் முட்டாள் மாதிரி அவன் சொன்னதை நம்பிவிட்டேனே’ என்று அங்கலாய்த்துக் கொண்டது சுபாஷிணியின் மனது.

ரஞ்சன் சொல்லியதை நம்பி, சுபாஷிணி வீட்டை விட்டு இறங்கி விட்டாள் என்பதனால் ரஞ்சன் மீது அவளுக்கு நம்பிக்கை என்று அர்த்தமில்லை, அவன் சொன்ன செய்தியின் வீரியம் அதிகம், அவ்வளவு தான்… அதை அலசி ஆராயும் அளவிற்கு சுபாஷிணியின் பதட்டம் இடம் கொடுக்கவில்லை.

அவள் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் எல்லோரும் சுபாஷிணியை நோக்கி உன்னால் தான் என்று விரலை நீட்டினார்கள். இவ்வளவு ஏன்? அவளே தன்னால் தான் என்று தானே சொல்லிக் கொள்கிறாள்.

சேனாதிபதி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரவும், அவன் பெற்றோரைத் தவிர எல்லோரும் ஊருக்கு கிளம்பியிருந்தார்கள். மங்கை, மாமன் வீட்டில் தங்கி கொள்வதாக ஏற்பாடு.

கிளம்பும் போது பூரணி அம்மா, “எடுப்பார் கைப்பிள்ளையா இல்லாம, சூதானமா எம்பேரன் கூட பிழைக்கிற வழியைப்பாரு சுபா” என்று பேத்தியிடம் சொல்லவும் தவறவில்லை.

ஆயிற்று… இதோ ஒருவார மருத்துவமனை வாசத்துக்குப் பிறகு சேனாதிபதி வீடு வந்து சேர்ந்து பத்து நாட்களாகி விட்டது.

இடைப்பட்ட இந்த நாட்களில் ரஞ்சனின் வாக்குமூலத்தால் இராஜபூபதியையும் போலீஸார் கைது செய்திருந்தார்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் இராஜபூபதியிடம் சிக்கிக் கொண்டால், அவனிடமிருந்து தப்பிப்பதற்காக அவனுக்கும் தனக்குமான தொடர்புக்கு ரஞ்சன் வைத்திருந்த சில சாட்சிகள், தன் அரசியல் செல்வாக்கை வைத்து கூட வழக்கிலிருந்து இராஜபூபதி தப்பிக்க முடியாத அளவிற்கு இருந்ததில், இனி அந்த இருவருக்கும் காலம் முழுவதும் ஜெயிலில் தான் வாசம் என்று முடிவாகிப்போனது.

 சேனாதிபதிக்கு வலது கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு சர்ஜரி செய்திருந்தபடியால், அவனின் சின்னச் சின்ன அசைவுக்கும் கூட உதவி தேவைப்பட்டது. அதனால் அவனோடு ஒரே அறையில் அவன் அப்பா வாசு தங்கிக் கொண்டார். தன் அத்தையோடு சுபாஷிணி இன்னொரு அறையில் தங்கிக் கொண்டாள்.

பிறந்த குழந்தையைப் போல, தன் வளர்ந்த மகனை பார்த்துக் கொண்டார் வாசு. தன் மகன் கூடிய சீக்கிரம் எழும்பி நடமாடிவிட வேண்டும் என்று பார்த்துப் பார்த்து பக்குவமாக சமைத்துக் கொடுத்தார் தமிழ்.

ஆனால், கட்டுப்பாடற்ற காற்றாக சுழன்று அடித்த சேனாதிபதிக்கு, கட்டிலில் முடங்கிக் கிடப்பது, அதுவும் தன் சின்ன சின்ன நகர்வுக்கு கூட இன்னொருவரின் துணை தேவைப்படுவது மனதளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

கூடவே, தான் அத்தனை சொல்லியும் ரஞ்சனின் பேச்சை நம்பி மனைவி வீட்டை விட்டு வெளியே வந்தது, அன்றைய ரஞ்சனின் பேச்சு என்று எல்லாம் சேர்ந்து, மனது உலைக்கலனாக கொதிக்க, கோபம்… கோபம்… கோபம் மட்டுமே அவனிடம்.

 எதற்கெடுத்தாலும் கோபம், யாரைப் பார்த்தாலும் கோபம் என்று சேனாதிபதி மாறிப்போக, மகனின் கோபத்தில் பெற்றவர்களே தடுமாறிப் போனார்கள். இதில், அவன் அறவே சுபாஷிணியை தவிர்த்தது, அவர்கள் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவேயில்லை.

ஆனால் சுபாஷிணிக்கு கணவன் தன்னை தவிர்ப்பது நன்றாகவே புரிந்தது. என்றாலும், ‘இப்படியொரு மனைவியை கொஞ்சவா செய்வார்கள்?’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், கணவனின் கோபத்தில் அவனுக்கு உதவி எதுவுமே செய்ய முடியாமல், தள்ளி நின்று யாரோ போலத்தான் அவனைப் பார்க்க முடிந்தது.

 வேலைக்கு போகாமல் அத்தைக்கு உதவியாக வீட்டில் இருந்தவளின் தொடர் யோசனையில், ‘நான் அத்தானின் வாழ்க்கை முறைக்கு சற்றும் பொருந்தாதவள். எனவே அத்தானுக்கு சரியானதும், அவருக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, அவரிடமிருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்’ என்று அதிபுத்திசாலியாக முடிவும் எடுத்துக் கொண்டாள்.

ஆகமொத்தம் அந்த வீட்டின் நிம்மதி, சந்தோஷம் எல்லாம் சேனாதிபதியோடு சேர்ந்து முடங்கிப் போனது.

அன்று மத்தியானம், தங்கள் அறைக்கு வெளியே நின்று பிடிவாத குழந்தையாய் தூங்கும் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று பொறிதட்ட, தன் மாதந்திர சுழற்சி நாளை படபடவென்று கணக்கிட்டாள். பன்னிரெண்டு நாட்கள் தள்ளிப்போய் இருந்தது. அவ்வளவு தான்… சந்தோஷத்தில் உடல் நடுங்க அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் சுபாஷிணி.

 என்றாலும், பரிசோதித்து நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவள், ஆர்வம் தாளாமல் அப்போதே அப்பார்ட்மெண்ட் அருகேயிருந்த மெடிக்கல் ஷாப்பில் கர்ப்பத்தை கண்டறியும் கிட் ஒன்றையும் வாங்கி வந்தாள்.

மறுநாள் காலையில் பரபரப்பாக பரிசோதனையில் இறங்கிய சுபாஷிணி, கிடைத்த முடிவில் நூறு, ஆயிரம் கூடை மலர்களை தலையில் கொட்டியது போல மகிழ்ந்து போனாள்..

ஆமாம்… அவளும், அவள் அத்தானும் கொண்ட காதலுக்கு சாட்சியாக அவள் வயிற்றில் அவர்களின் குழந்தை. மற்றவை எல்லாம் மறக்க சிட்டுக்குருவியாக கணவனிடம் ஓடிவந்தவளுக்கு, நிதர்சனம் ஓங்கி முகத்தில் அறைய, தூங்கிக் கொண்டிருந்த கணவனின் படுக்கைக்கு அருகே கிடந்த நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்தாள்.

எப்போதுமே, மகன் கண் விழிப்பதற்கு முன் எழுந்து வெளியே ஒரு நடை போய்விட்டு வரும் பழக்கம் வாசுவுக்கு இருந்ததால், அறையில் அவர் இல்லை.

‘எப்படி அமைந்திருக்க வேண்டிய நிகழ்வு. இன்றோ தங்கள் அறையில் தானே யாரோ போல வந்து அமர்ந்திருக்கும் நிலை. கூடவே, இதே அறையில் தங்களுக்கான தனிமைப் பொழுதுகளில் குழந்தையைப் பற்றிய கணவனின் ஆர்வமான பேச்சுக்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வர, கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது.

“இப்போ எதுக்கு இந்த அழுகை?” திடீரென்று கேட்ட கணவனின் அதட்டலான குரலில் கண்களைத் திறந்தவள், அவன் கூரிய பார்வையில் தவறு செய்த குழந்தையாய் இருக்கையிலிருந்து மெதுவாக எழும்பி நின்று, கண்ணீரை புறங்கையால் துடைத்தாள். சொல்லவந்த விஷயம் கணவனின் கடுமையில் சொல்ல முடியாமல் அவள் மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள, கணவனை மௌனமாக பார்த்தாள்.

“ஏற்கனவே பார்க்க சகிக்க மாட்டான். இதுல கை, கால் வேற முறிஞ்சு முடமா கெடக்கானே… இவனைக் கல்யாணம் பண்ணுனதே தப்புன்னு நினைச்சு அழறியா?” வார்த்தைகளில் விஷத்தை தோய்த்து பேசிய சேனாதிபதி, சில வினாடிகள் இடைவெளியில்,

 “வருத்தப்படாத, நான் உனக்கு டைவர்ஸ் குடுக்குறேன்… உன் அழகுக்கு தகுந்த மாதிரி, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்.

 வீரியம் இழந்து போனதாக சேனாதிபதி நினைத்திருந்த சுபாஷிணி பேசிய வார்த்தைகள், அவன் கொண்டிருந்த மன அழுத்தத்தின் காரணமாக, ஈஸ்ட்மேன் கலரில் வந்து பல்லைக் காட்டியதில், வார்த்தைகளை யோசிக்காமலேயே தவற விட்டிருந்தான் சேனாதிபதி…