அத்தியாயம் 20
“கமாண்டர் இருக்காங்களா சுபா க்கா?” காலை ஏழு மணிக்கே தன் வீட்டுக்கு வந்ததும் அல்லாமல் தன் கணவனையும் தேடும் அனுவை யோசனையோடு பார்த்த சுபாஷிணி, “என்ன விஷயம்?” என்று கேட்க,
“அது கொஞ்சம் சீக்ரெட்டான விஷயம். அப்பா வெளியூருக்கு போயிருக்காங்க… இல்லைன்னா அப்பாகிட்டவே சொல்லியிருப்பேன்” என்றாள் அனு.
விளையாட்டுதனம் சுத்தமாக தொலைந்து போயிருந்த அனுவின் முகத்திலிருந்து ‘விஷயம் கொஞ்சம் தீவிரமானது தான் போல’ என்று முடிவு செய்த சுபாஷிணி, “உட்காரு… வரச்சொல்லுறேன்” என்று தங்கள் அறைக்குள் சென்றாள்.
இப்போதெல்லாம், ‘இந்த சமுதாயத்தை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பில் கணவன் இருக்கிறான்’ என்ற எண்ணத்தை, தன் மனதில் பதியவைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் சுபாஷிணி.
அதுவும், சமீபத்தில் சென்னையின் பரபரப்பான பகுதியில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகத்தை, வெடிகுண்டு தாக்குதலுக்கு உட்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை புறநகர்பகுதி வீடு ஒன்றில் ஆயுதங்களோடும், வெடிகுண்டுகளோடும் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, சேனாதிபதியின் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்ததில், ஒரு மனைவியாக சுபாஷிணியின் நெஞ்சம் பெருமிதத்தில் பூரிக்கத் தான் செய்தது.
ஒருவேளை அந்த தீவிரவாதிகள் திட்டமிட்டது போல மட்டும் நடந்திருந்தால், அந்நிகழ்வு எத்தனை உயிர்களை காவு வாங்கியிருக்க கூடுமோ தெரியாது? ஆனால் தங்கள் உயிரை துச்சமாக மதித்து, அந்நிகழ்வை நடக்கவிடாமல் முறியடித்த காவலர்கள், இந்த சமுதாயத்தின் காவல் தெய்வங்களாக போற்றுதலுக்கு உரியவர்களே என்ற எண்ணம் சுபாஷிணியின் மனதில் வலுவாக பதிந்து போனது.
அந்த காவல் தெய்வங்கள், இந்த சமுதாய நலனுக்காக தவிர்க்க முடியாத சிலநேரங்களில் வதம் செய்தாலும் தப்பில்லை என்ற எண்ணம், இப்போதெல்லாம் அவள் மனதில் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. என்றாலும், ஒரு மனைவியாக, கணவனின் பாதுகாப்பும் பிரதானமாக தெரிய, மதில் மேல் பூனை நிலை தான் சுபாஷிணியின் மனநிலை.
தங்கள் அறைக்குள் வந்தவள், குளியலை முடித்திருந்த கணவனிடம், அனுவின் வருகையைப் பற்றி சொல்ல, அவனிடமும் யோசனையே.
அந்த யோசனையோடே ஹாலுக்கு வந்த சேனாதிபதி, “சொல்லு அனு…” என்றபடியே அவளுக்கு எதிரில் கிடந்த இருக்கையில் அமர்ந்தான்.
“அது…” என்று தொடங்கியவள் தங்களுக்கு அருகே நின்றிருந்த சுபாஷிணியை யோசனையாக பார்க்க, “ஒரு போலீஸ் ஆஃபீஸர் வைஃப்பா இருந்துட்டு, வீட்டுல பேசுற விஷயம் வெளியப் போகக்கூடாது ங்குற பேசிக் நாலெட்ஜ் கூட அவளுக்கு இல்லாம இருக்குமா? நீ சொல்லு” என்றான்.
அனுவிற்காக தன்னை அங்கிருந்து விலக்காமல், இங்கு பேசுவது வெளியே போகக்கூடாது என்று மறைமுகமாக தனக்கு கட்டளையிட்ட கணவனின் சமார்த்தியத்தை மெச்சிக் கொண்டாலும், ‘அப்படி ஒன்னும் நீங்க பேசுறது எனக்கு கேட்க வேண்டாம்’ என்ற எண்ணத்தில்,
“எனக்கு வேலையிருக்கு” என்று முணுமுணுத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் சுபாஷிணி. என்றாலும், அவர்கள் பேசியது அவளுக்கும் மெல்லிய குரலில் கேட்கத்தான் செய்தது.
“கமாண்டர்… எங்க காலேஜ்ல ட்ரக்ஸ் நடமாடுது தெரியுமா?” பரபரப்பை அவசரமாக குரல் தத்தெடுத்துக் கொள்ள சொன்னாள் அனு.
“உங்க காலேஜ்லயா? சான்ஸஸ் ரொம்ப கம்மியாச்சே அனு?” கொஞ்சம் நம்பாத தன்மையோடே பதில் சொன்னான் சேனாதிபதி.
இருபாலரும் படிக்கும் ஒரு பிரபலமான கல்லூரியில் தான் அனு படிப்பது. அங்கே கல்லூரி நிர்வாகத்தினர், டிசிப்பிளின் கமிட்டி, ஆன்டி_ ட்ரக் கமிட்டி என்று அமைத்து கல்லூரி முழுவதையும் தங்களது அதீத கண்காணிப்பிலேயே வைத்திருப்பார்கள். ‘பின்னே எப்படி அங்கே போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும்?’ என்ற எண்ணம் தான் சேனாதிபதிக்கு.
“இல்ல கமாண்டர், நேற்று கூட க்ளாஸ் ரூம்ல எனக்கு முன்னாடி உக்கார்ந்திருந்த ஒரு பொண்ணு, திடீர்னு ஒருமாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சிட்டா. அவ பக்கத்துல இருந்த அவளோட ஃப்ரெண்ட்ஸ் எப்பிடியோ அவளை சமாளிச்சு, ப்ரொஃபெஸர் க்ளாஸ்ல இருந்து போனதும், வெளிய கூட்டிட்டு போய்ட்டாங்க தெரியுமா?” என்றாள் தீவிரமான குரலில்.
“ஓஹ்… அந்த பொண்ணு டேய்ஸ் ஸ்காலரா, ஹாஸ்டலா?” யோசனையாக கேட்டான் சேனாதிபதி.
“அந்த கேங்கே ஹாஸ்டல் தான் கமாண்டர்” என்ற அனு, யோசனையின் பிடியிலிருந்த சேனாதிபதியின் முகத்தைப் பார்த்து, “இதையெல்லாம் நேத்து பார்த்துட்டு, இன்னைக்கு உங்ககிட்ட வந்து நான் சொல்லலை கமாண்டர். ரொம்ப நாளா வாட்ச் பண்ணிட்டு வந்துதான் சொல்லுறேன். இதே போல சில பசங்களையும் பாத்துருக்கேன்” என்றாள்.
உண்மையில் அனு சொல்வதை எந்த அளவுக்கு நம்புவது என்ற எண்ணம் தான் சேனாதிபதியிடம். அதுவும் மாணவர்கள் விஷயம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விட முடியாதே.
ஆனால், அனு பலதடவைகள் பார்த்திருக்கிறேன் என்று சொல்லவும், “நாங்களும் உங்க காலேஜை சுத்தி அப்பப்போ ரௌண்ட்ஸ் வரத்தான் செய்றோம். ஆனா, ட்ரக் சேல் பண்ணுற மாதிரி ஆளுங்களோட நடமாட்டமே எங்க கண்ணுல பட்டதே இல்லையே அனு?” என்றான் யோசனையாக.
“கேம்பஸ்ஸுக்கு வெளியே யாரும் சப்ளை பண்ணுனா தானே உங்ககிட்ட மாட்டுவாங்க. கேம்பஸ் உள்ளயே நடந்தா உங்களுக்கு எப்பிடி தெரியும்?” என்றாள் அனு.
அனுவின் பதிலில் அதிர்ந்து போன சேனாதிபதி, “என்ன அனு சொல்லுற?” என்றான் வேகமாக.
“ஹ்ம்ம்… எங்க காலேஜ்லயே படிக்கிற இரண்டு ஸ்டூடண்ட்ஸ், யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வச்சா மாதிரி ரொம்ப சீக்ரெட்டா டிஸ்ட்ரிபியூட் பண்ணுறாங்க. எனக்கு சந்தேகம் வரவும் யார்கிட்டயும் சொல்லாம அவங்களை சைலண்டா வாட்ச் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன். சாக்லேட் ஃபார்மெட்ல குடுக்குறாங்க தெரியுமா?” என்றாள் விழிகளை விரித்து.
அனு சொல்லக் கேட்ட சேனாதிபதிக்கு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என்ற ஆதங்கமே.
முன்னொரு காலத்தில்… ஏன் இப்போது கூட பகுதிநேர வேலை செய்து, அதில் வரும் வருமானத்தில் படிக்கும் மாணவர்கள் ஏராளம் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அதேநேரம், விலை உயர்ந்த செல்போன்கள், வார இறுதி பார்ட்டிகள், ஆடம்பரமான செலவுகள், இவற்றுக்காக, இந்த மாதிரி சமூக விரோத செயல்களை தெரிந்தே செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டதே?
இம்மாதிரியானவர்கள் நம் சமுதாயம் என்னும் கட்டமைப்பை செல்லரிக்கும் கரையான்கள் என்று தோன்ற, “அந்த பசங்களோட டீடெயில்ஸ் கிடைக்குமா அனு?” என்று கேட்டான் சேனாதிபதி.
“டீடெயில்ஸ் என்ன, இரண்டு பேரோட போட்டோஸே தரேன்” என்றவள் அனைத்தையும் சேனாதிபதிக்கு வாட்ஸ் அப் செய்ய,
“ஒரு போலீஸ் ஆஃபீஸரோட பொண்ணுங்கிறதை, நீ ஃப்ரூப் பண்ணிட்ட அனு” என்று அனுவை சிலாகித்தான் சேனாதிபதி. சேனாதிபதியின் பாராட்டில் அனுவின் முகத்தில் கீற்றாக புன்னகை.
சமையலறையில் நின்றிருந்த சுபாஷிணி கூட, ‘பரவாயில்லையே இந்த பொண்ணு’ என்று மெச்சிக் கொண்டு, கணவனுக்கும் அனுவுக்குமாக டீயை கொண்டு வந்து கொடுத்தாள்.
சுபாஷிணிக்கு, “நன்றி” சொல்லி டீயை எடுத்துக் கொண்ட அனுவிடம், “இதைப்பத்தி காலேஜ்ல யார்கிட்டயும் பேசாத அனு. இதுக்கு மேல அந்த பசங்களை ஃபாலோ பண்ணாத, என்ன செய்யணும்னு நான் பாத்துக்கிறேன்” என்றான் சேனாதிபதி.
தலையாட்டியபடி டீயை குடித்த அனு, விடைபெற்று செல்லும் போது வாசல்வரை தன்னுடனே வந்த சுபாஷிணியின் கையை லேசாக பற்றி, “சாரி ஃபார் எவ்ரிதிங்” என்றபடி விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.
அனுவின் எதிர்பாராத செயலில், ‘இந்த அராத்தா தன்னிடம் மன்னிப்பு கேட்டது?’ என்ற எண்ணம் தான் சுபாஷிணிக்கு. ஆனாலும் மனது என்னவோ கொஞ்சம் லேசானது போல உணர்ந்தாள்.
“அனு உங்கிட்ட என்னவோ சொன்னது போல இருந்ததே சுபா?” சேனாதிபதி மனைவியிடம் கேட்க,
“ம்ம்… டீ நல்லாயிருந்துன்னு சொன்னா த்தான்.” கிண்டலாகச் சொன்னவள், “அதென்ன… போலீஸ் ஆஃபீஸர் பொண்ணுன்னு ஓவரா பில்டப் எல்லாம் குடுத்தது போல இருந்திச்சி” என்று கணவனிடம் கண்களை உருட்டினாள்.
“நீங்களும், எதுக்கெடுத்தாலும் மூக்கை உறிஞ்சி, கண்ணை கசக்காம இருந்தா, உங்களையும் போலீஸ் ஆஃபீஸர் வைஃப்ன்னு கெத்தா சொல்லுவோம்ல பார்ட்னர்.” மனைவியின் மூக்கை பிடித்து ஆட்டியபடியே சேனாதிபதி சொல்ல,
கணவனை இடையோடு கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்தபடி, “ஐ வில் ட்ரை மை பெஸ்ட் பார்ட்னர்” என்றவளுக்கு சொன்ன வார்த்தையை காப்பாற்றுவதற்கான சூழ்நிலை இப்போதெல்லாம் அமையப் போவதில்லை என்று தெரிந்திருக்கவில்லை.
அலுவலகத்திற்கு வந்திருந்த சேனாதிபதி, அனு தன்னிடம் சொல்லியவற்றை ஜெகன்நாதனிடம் பகிர்ந்து கொண்டான். அந்த மாணவர்களை விசாரித்தால், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களின் விபரங்கள் சங்கிலித் தொடராக வெளியே வரக்கூடும் என்பதால், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்து கொண்டார்கள்.
அதன்படியே, மறுநாள் மாலை கல்லூரி விட்டு வீட்டுக்கு செல்லும் நேரம் அந்த மாணவர்களை தூக்கியிருந்தார்கள் இருவரும். சேனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரகசிய இடத்திற்கு தான் முதலில் அவர்களை கொண்டு சென்றார்கள். அனு கூறியது போல அவர்களின் கல்லூரி பேக்கில் சாக்லேட் வடிவில் போதைப் பொருள் இருந்தது.
ம்ஹூம்… பாடப்புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டிய பைகள், போதைப் பொருளை சுமந்து செல்லும் அவலத்தை என்னவென்று சொல்வது?
போலீஸாரின் கவனிப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் சிறிது நேரத்திலேய தங்களுக்கு போதைப் பொருள் விற்கும் நபரை அவர்கள் இருவரும் கை காட்ட, அவர்கள் கைகாட்டிய நபரைக் கண்டு அதிர்ச்சியாகிப் போனது சேனாதிபதிக்கு.
ம்ம்… அந்த நபர் ரஞ்சன்.
ஆமாம்… சுபாஷிணியின் மாமன் மகன் ரஞ்சன் தான்.
பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும், திரைப்படத் துறையில் இருந்த ரஞ்சனை எளிதாகவே அடையாளம் காட்ட முடிந்தது அந்த மாணவர்களால்.
இவனா செய்தான், என்பதை விட, தனக்கு மிக அருகில் இருந்தவன் செய்திருக்கிறானே என்ற அதிர்ச்சி தான் சேனாதிபதியிடம்.
ரஞ்சனுக்கும் தனக்கும் இருக்கும் உறவுமுறையைப் பற்றி ஜெகனிடம் மறைக்காமல் சேனாதிபதி சொல்ல, “மொதல்ல வீட்டுல சிஸ்டர் கிட்ட விஷயத்தை சொல்லிடு சேனா. அவங்ககிட்ட, அவன் ஏதாவது குழப்படி செய்து வச்சிடக்கூடாது” என்றான் ஜெகன். சேனாதிபதிக்குமே அந்த எண்ணம் இருந்தது.
கூடவே, ‘தன் மனைவி இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாளோ?’ என்றும் தோன்ற, ‘எப்படியென்றாலும் விஷயத்தை அவளிடம் சொல்லியே ஆகவேண்டும்’ என்று முடிவெடுத்து கொண்டான்.
அதற்குமுன் சூட்டோடு சூடாக ரஞ்சனை அள்ளிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவன் வீட்டுக்கு சென்றால், அங்கே அவன் இல்லை.
சேனாதிபதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாணவர்களோடு தொடர்பில் இருக்கும் இன்னொரு கல்லூரி மாணவனுக்கு, தன் நண்பர்களை போலீஸ் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட விஷயம் தெரியவர, ரஞ்சனுக்கும் விஷயத்தை சொல்லி, தானும் தலைமறைவாகி விட்டான். அதனாலேயே உஷாராகி மறைந்து கொண்டான் ரஞ்சன்.
தன் மகனைத்தேடி யூனிஃபார்மில் வந்த சேனாதிபதி மீது அத்தனை துவேஷத்தையும் கொட்டினார் அவன் அன்னை அர்ச்சனா. ஆமாம்… ஏதோ பகையை மனதில் வைத்துக் கொண்டு தன் மகனை பழிதீர்த்துக் கொள்வதற்கு சேனாதிபதி முயல்வதாக அந்த பெண்மணி கத்த, உடன் சேர்ந்து கொண்டார் அவர் கணவர்.
“சத்தம் போடாம இருக்கணும். இல்லைன்னா உங்க மகன் கிடைக்கிற வரைக்கும், அவனுக்கு பதிலா நீங்க ரெண்டு பேரும் தான் லாக்கப்ல இருக்க வேண்டி இருக்கும். எப்படி வசதி?” என்று ஜெகன் அவர்களை அதட்ட, அந்த அதட்டல் வேலை செய்தது.
வீடு முழுவதையும் தங்களோடு வந்த போலீஸாரோடு இருவரும் சோதனை நடத்தினார்கள். சோதனையின் முடிவில், அந்த ரஞ்சனின் அறையிலிருந்து போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது.
அதைக்கண்ட அவன் பெற்றோருக்கும் கூட அதிர்ச்சியே. சொந்த தங்கைக்கே நம்பிக்கை துரோகம் செய்த பாண்டியனின் வளர்ப்பு பின்னே எப்படி இருக்கும்?
பிள்ளைகள் நம்மைப் பார்த்து தான் வளர்கிறார்கள் என்று சும்மாவா சொன்னார்கள்? ரஞ்சனின் பெற்றவர்கள் நம்பிக்கை துரோகிகள் என்றால், ரஞ்சன் தேசதுரோகி. அவ்வளவு தான் வித்தியாசம்.
அந்த பொழுதிலிருந்து ரஞ்சனை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டது. பஸ் நிலையங்கள், இரயில்வே ஸ்டேஷன்கள், விமான நிலையங்கள், என்று எல்லா இடங்களுக்கும் தகவல் அனுப்பி அவன் தப்பி செல்ல முயலும் மார்க்கங்களை அடைக்க முயற்சி செய்தார்கள். அவன் வீடும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
அன்று இரவு வீட்டுக்கு வந்த சேனாதிபதி, ரஞ்சன் விஷயத்தை மனைவியிடம் சொல்ல, அதிர்ந்து தான் போனாள் சுபாஷிணி.
“மாமா பாவம் இல்ல த்தான்… எப்பிடித்தான் இந்த விஷயத்தை தாங்கிக்கப் போறாரோ?” என்ற ரீதியில் அவள் புலம்பத் தொடங்க,
“உங்க குடும்பத்துக்கே நல்லவங்க யாரு? கெட்டவங்க யாருன்னு ஐடென்டிஃபை பண்ணத் தெரியாதா?” என்று மனைவியிடம் கோபப்பட்டான் சேனாதிபதி.
“என்ன சொல்ல வர்றீங்க த்தான்?” எப்போதும் போல அவள் விழிவிரிக்க,
“ம்ம்… அதைச் சொல்லி இனி ஆகப்போறது ஒன்னும் இல்ல. நாம இப்போ நடக்கவேண்டியதைப் பார்ப்போம்” என்றவன், “உங்க மாமா வீட்டுலயிருந்து யார் இங்க வந்தாலும் வீட்டுக்குள்ள அலவ் பண்ணாத. நான் இந்த கேஸை டீல் பண்ணுறதால அது சரி வராது. அதோட, அவங்க யாருமே நல்லவங்க கிடையாது, அவங்களை நம்பாத” என்று சேனாதிபதி சொல்ல, தலையாட்டிக் கொண்டாள்.
மறுநாள், ஊடகங்களில் ரஞ்சனும், அந்த இரு மாணவர்களும் தான் தலைப்பு செய்தியாகிப் போனார்கள். படிப்பு, எதிர்கால வாழ்க்கை என்று எதையும் காரணம் காட்டி அந்த இரு மாணவர்களுக்கும் சலுகை வழங்க மறுத்தான் சேனாதிபதி.
‘சமூகவிரோத செயல் என்று தெரிந்தே செய்தவர்கள், அதன் முழுபலனையும் அனுபவித்தே ஆகவேண்டும். இவர்களுக்கு கிடைக்கும் தண்டனையைப் பார்த்து, வருங்காலத்தில் இதேப்போல வேறு யாரும் துணிந்து இந்த செயலில் இறங்கக்கூடாது’ என்ற எண்ணம் சேனாதிபதியிடம் இருந்ததால் சட்டத்திற்கு முன் இருவரையும் நிறுத்தி விட்டான்.
போலீசார் ரஞ்சனை தேடுவதை விட அதிதீவிரமாக இன்னொரு நபர் அவனை தேடிக் கொண்டிருந்தார். அந்த நபர் எம்எல்ஏ இராஜபூபதி.
ரஞ்சன் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ளும் அடுத்த விநாடியே தன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டு போகும் என்று அவனுக்கு தெரியும். ஆமாம்… மாணவர்களுக்கு ரஞ்சன் போதைப்பொருள் விற்பனை செய்தான் என்றால், அவனுக்கு போதைப் பொருளை விற்பனை செய்வது இராஜபூபதி.
எனவே போலீஸாரிடம் ரஞ்சன் மாட்டிக்கொள்ளும் முன்னர், தன் இடத்திற்கு அவனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முழுமூச்சாக தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தான் இராஜபூபதி.
கூடவே, தன் பிரியத்துக்குரிய தாஸை காவு கொண்ட சேனாதிபதியை பழிக்கு பழி வாங்க சரியான நேரம் பார்த்து கொண்டிருந்த இராஜபூபதிக்கு, இந்த வழக்கிலும் சேனாதிபதி தான் முழுவீச்சில் இறங்கி நிற்கிறான் என்று தெரியவும், அன்றே, அப்பொழுதே சேனாதிபதியை அழித்துவிடும் வேகம் எழுந்தது.
விளைவு… ட்ரைவர் ராஜோடு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த சேனாதிபதியின் கார், விபத்துக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், கடைசி நொடியில் சுதாரித்துக் கொண்ட ட்ரைவர் ராஜ், தன்னுடைய சாதூர்யத்தால் மிகப்பெரிய விபத்தை தவிர்த்திருந்தார்.
என்றாலும் சேனாதிபதிக்கும், ராஜுக்கும் காயங்கள் ஏற்படத்தான் செய்திருந்தது. அந்த நேரத்தில் அங்கே வந்த வாகனங்களில் இருந்தவர்களுக்கு சேனாதிபதியை நன்றாகவே அடையாளம் தெரிய, ஆம்புலன்ஸுக்கு கூட காத்திருக்காமல் சேனாதிபதியையும், ராஜையும் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொண்டார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மத்தியான வேளை அது. வீட்டிலிருந்த சுபாஷிணியின் மனது, மாமன் மகன் ரஞ்சனின் தகாத செயலையே சுற்றி வந்து கொண்டிருக்க, போன் அழைத்தது.
தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. யோசனையோடே சுபாஷிணி அழைப்பை ஏற்க, “நான் ரஞ்சன்” என்றான் எதிர்முனையில் இருந்தவன்.
அவ்வளவு தான்… “இது என்ன வேலை ரஞ்சன்? தப்புக்கு மேல தப்பு பண்ணாத, போலீஸ்ல சரண்டர் ஆகிடு.” படபடவென்று பேச ஆரம்பித்தாள் சுபாஷிணி.
“நான் தான் எங்க கேங்கப் பத்தி ஏற்கனவே உங்கிட்ட சொன்னேன்ல. இப்போ பாரு, உம்புருஷனை அடிச்சி தூக்கிட்டாங்க. இப்பவோ அப்பவோன்னு ஹாஸ்பிடல்ல கிடக்குறான். கடைசியா ஒருதடவை போய் உயிரோடு அவனை பாத்துட்டு வந்துடு.” சுபாஷிணி சொல்லியது எதையுமே காதில் ஏற்றிக் கொள்ளாமல், தான் சொல்ல வந்ததை நக்கலாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டான் ரஞ்சன்.
ரஞ்சன் சொன்ன தகவலில், இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது சுபாஷிணிக்கு. என்றாலும், அவன் வார்த்தைகளை அப்படியே நம்பிவிட மனமின்றி, கணவனுக்கு அழைத்தாள்.
நடந்த விபத்தில் சேனாதிபதியின் போனுக்கு சேதாரம் அதிகமாக இருந்ததால் சுபாஷிணியின் அழைப்பு அவன் ஃபோனை எட்டவேயில்லை. இப்போது லேசான பதட்டம் ஏற்பட, ட்ரைவர் ராஜுக்கு அழைத்தாள் சுபாஷிணி.
அலுவலக மீட்டிங் நடக்கும் சமயங்களில் கைபேசியை அணைத்து வைத்து விடுவதால், “ஏதாவது அவசரம் என்றால் ட்ரைவருக்கு அழைத்து சொல்லிவிடு, அவர் என்னிடம் விஷயத்தை சொல்லிவிடுவார்” என்று ட்ரைவருடைய கைபேசி எண்ணை மனைவியின் மொபைலில் சேமித்து கொடுத்திருந்தான் சேனாதிபதி.
அது இப்போது அவளுக்கு உபயோகமாகியது.
“அண்ணா… எங்க இருக்கீங்க? அவங்கள எங்க?” உயிரை கையில் பிடித்துக் கொண்டு கேட்டாள் சுபாஷிணி.
“அது… ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் ம்மா… சாருக்கு உள்ள ட்ரீட்மெண்ட் போயிட்டுருக்கு. முடிஞ்சதும் உங்ககிட்ட பேசச் சொல்றேன்.” உண்மையையேச் சொன்னார் அந்த மனிதர்.
ரஞ்சன் தன்னை ஏமாற்றுகிறானோ என்ற எண்ணத்தில் போன் செய்தவளுக்கு, நடந்த விபத்து உண்மை தான் என்றானதில், அதுவும் அந்த நிமிடம் கணவனுடன் பேசமுடியாமல் போனதுமாக சேர்ந்து, கணவனுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, ட்ரைவர் தன்னிடமிருந்து உண்மையை மறைக்கிறார் என்றே சுபாஷிணிக்கு எண்ணத் தோன்றியது.
கணவன் என்று வந்து விட்டால் தன் நிதானத்தை கடன் கொடுத்து விடும் சுபாஷிணி, மருத்துவமனை விபரத்தை ராஜிடம் அறிந்து கொண்டு கணவனை பார்க்க கிளம்பியே விட்டாள்.
தன் இருசக்கர வாகனத்தில் செல்லும் அளவிற்கு மனத்திடம் அப்போது இல்லாததால், பர்ஸ்ஸையும் போனையும் மட்டும் கையில் எடுத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக குடியிருப்பு வளாகத்தின் நுழைவுவாயிலுக்கு வந்து, வாடகை காருக்காக கண்களைச் சுழற்றினாள். இவளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல அவள் முன்னே வாடகைக்கார் ஒன்று வந்து நின்றது.
யோசிக்காமல் அதில் ஏறி அமர்ந்து, போகும் இடத்தை சொல்லியவள், “கொஞ்சம் சீக்கிரம் போங்க” என்று விட்டு சீட்டில் தளர்ந்து அமர்ந்தாள். மனமோ கணவனுக்காக இடைவிடாது ஜெபிக்கத் தொடங்கியது.
அந்த ப்ரார்த்தனைக்கு நடுவே முன்னால் இருந்த ட்ரைவரின் உருவம் ஏனோ மூளையை நெருட, கண்களை திறந்து முன்னால் பார்த்தாள் சுபாஷிணி.
அவள் தன்னைப் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல ட்ரைவர் சீட்டிலிருந்தவன் திரும்பிப் பார்த்தான். தலையை மொட்டை அடித்து, மீசை, தாடி எல்லாம் மழித்திருந்த முகத்தை கூர்ந்து பார்த்த சுபாஷிணி, “நீ… நீ… ரஞ்சன் தான?” என்று யோசனையோடே கேட்க,
“நானே தான்.” கோணல் சிரிப்போடு சொல்லியவன், சட்டென்று தன் கையிலிருந்த துணியை சுபாஷிணியின் முகத்தில் வைத்து அழுத்தினான். அந்த துணி முழுவதும் பரவியிருந்த குளோரோஃபார்மின் உபயத்தால் சத்தமின்றி மயக்கத்தின் பிடியில் விழுந்தாள் சுபாஷிணி…