கடந்து செல் காதலுடன்! 11 2 10706 “ஏய் சுபா? என்ன இது? ரிலாக்ஸ்” என்று அவரின் தோழிகள் சொல்ல, “என்னம்மா இது? ஓவரா ரியாக்ட் பண்றீங்க? அவன் தானே மாப்பிள்ளை” என்றனர் மணமகன் நண்பர்கள். நண்பனின் ஆதங்கம் தெரிந்திருந்தவர்கள் ஆதரவிற்கு வர, “ஏதோ அப்செட்ல சுபா ரியாக்ட் பண்ணியிருப்பா. விடுங்க” என்றார்கள் சுபத்ராவின் தோழிகள். “அப்செட்ன்னா எப்படி வேணா நடந்துக்கலாமா?” “நடந்துப்பேன்? உனக்கென்ன பிரச்சனை? உன் வேலையை நீ பாரு” என்றார் சுபத்ரா. “என்ன பேசுற நீ? அவன் என் ப்ரெண்ட். மரியாதையா பேசு” என்று மணமகன் கண்டிக்க, “என் விஷயத்துல தலையிட்டா இப்படித்தான் பேசுவேன்” சுபத்ரா சொல்ல, “என்ன நடக்குது இங்க?” என்று குருமூர்த்தி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் இவர்களிடம் வர, அவரை கண்டதும் சுபத்ரா கண்கள் ஒளிர்ந்தது. மனதும் மகிழ்ச்சியில் துள்ள, அவரின் துக்கம் சென்ற இடம் தெரியவில்லை. அப்போ நான் இழந்தது இவரை தானா? சுபத்ராவிற்கு அவரின் மனது முழுமையாக புரிந்தது அந்த நிமிடத்தில் தான். “ஏன் இத்தனை நாளா என்னை தேடி வரலை” என்று உரிமையான கோவமும் கொண்ட சுபத்ரா, குருமூர்த்திக்கு அருகில் வந்து நின்றுகொண்டார். குருமூர்த்தி பக்கத்தில், அவரை உரசும் நெருக்கத்தில் கெத்தாக நின்ற சுபத்ரா, இப்போ பேசுங்கடா என்று மற்றவர்களை சவாலாக பார்த்தார். அடேங்கப்பா. என்னமோ இவ்வளவு நேரம் பயந்து இருந்த மாதிரி ஆக்டிங்கை பாரேன்! மணமகன் நண்பர்கள் தான் அவளை கடுப்புடன் பார்த்து, “நீங்க யாருங்க முதல்ல?” என்று குருமூர்த்தியிடம் கேள்வி கேட்டார்கள். குருமூர்த்தியே சுபத்ராவின் செயலில் கொஞ்சம் அதிர்ந்து தான் போயிருந்தார். எதுக்கு இப்போ இவ்வளவு கிட்டக்க நிக்கிறா? “இவர் பெரிய ரவுடி. என் கிளையண்ட்” என்றார் சுபத்ரா பெருமையாக. “ரவுடிக்கு இவ்வளவு பெருமையா? இந்த லூசு உனக்கு தேவை தானா?” என்று மணமகனிடம் கேட்டான் ஓர் நண்பன். “டேய் என்ன லூசு சொல்ற?” என்று சுபத்ரா குதிக்க, “பின்ன கட்டிக்க போறவனை விட்டு ரௌடிகிட்ட போய் நின்னுட்டு இருக்க?” “நான் சரியாதான் நிக்கிறேன்“ “என்ன சொல்ல வர நீ?” என்று மணமகன் அவளை கூர்மையுடன் பார்க்க, “உனக்கு இங்க இருக்க இஷ்டம் இல்லைன்னா நீ வீட்டுக்கு கிளம்பு போ” என்றார் குருமூர்த்தி இடையிட்டு. “எனக்கு இஷ்டம் தான்” சுபத்ரா சொல்ல, குருமூர்த்திக்கு கோவம். இவளுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலை போல என்ற அவரின் ஆசை நிராசையாகி போனதே! “அப்புறம் எதுக்கு இவங்களோட சண்டை போட்டுட்டு இருக்க?” என்று குருமூர்த்தியின் ஏமாந்த மனது கோபத்துடன் கேள்வி கேட்டது. “இஷ்டம்ன்னு சொன்னது அவங்களோட இருக்க இல்லை. உங்களோட இருக்க” என்று சுபத்ரா அவரின் மனதை பட்டென உடைத்துவிட்டார். சுபத்ரா எதற்கும், யாரை நினைத்தும் பயம் கொள்ளவில்லை. காதல் போராட்டம்! “எனக்கு இவர்தான் வேண்டும்” என்று தன் குடும்பத்தின் முன்பும் உறுதியாக நிற்க, “ரவுடியை கட்டிக்கிட்டு நல்லா வாழ்ந்துட முடியுமா? நீ நாசமாதான் போவ?” என்று சுபத்ராவின் பாட்டி சாபம் கொடுத்தார். “நாசமா போற வரைக்கும் நல்லா வாழ்ந்துட்டு போறேன் போங்க” என்றார் சுபத்ரா. கோதண்டம் போலீசை வைத்து, “குருமூர்த்தியை தூக்கி உள்ள போட்டா அவன் வெளியே வர எத்தனை வருஷம் ஆகும்ன்னு தெரியாது” என்று மிரட்டிய போதும், “இருபது வருஷம் கழிச்சுன்னாலும் அவர் வெளியே வந்துதானே ஆகணும். அதுக்கு அப்புறம் அவர் கூட வாழ்ந்துகிறேன்” என்று சுபத்ரா சொல்லிவிட, அண்ணன்கள் கையால் நன்றாகவே அடி கிடைத்தது. குருமூர்த்தி மறுபக்கம் சுபத்ராவின் நல்வாழ்க்கைக்காக அவரின் காதலை மறைத்து கொள்ள, சுபத்ரா அவருடனும் போராடி தான் கரம் பற்றினார். அந்த நாட்களில் எல்லாம் சுபத்ராவின் தைரியம், நிலைத்தன்மை, மனஉறுதி கண்டு குருமூர்த்தி நிறையவே வியந்திருக்கிறார். இன்று அவரின் மகள் சம்யுக்தாவிடமும் அதே தைரியத்தை அடிக்கடி காண்கிறார்! என் மீது என் மகளுக்கு பயம் இருந்த போதும் என்னை எதிர்த்து நிற்கிறாளே! என் சுபாவை போல் என் மகளுக்கும் நான் வேண்டும்! நெஞ்சமெல்லாம் பூரித்து போனது. உலகமே வசப்பட்ட உணர்வை குருமூர்த்தி இரண்டாம் முறையாக உணர்கிறார்! குருமூர்த்தி மகள், மனைவி நினைவில் பூரித்து போய் இருக்க, அவரின் மகளோ அங்கு பொருமி கொண்டிருந்தாள். “அதெப்படி இவர் இல்லாம போவார்? அப்புறம் நான் என்னாவேன்னு இவருக்கு தெரியாதா?” என்று கேட்க, “என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்?” என்றான் சர்வாச்சார்யா. “ஆமா உனக்கு எப்படி தெரியும்? நீயா எனக்கு அப்பா? அவர்தானே என் அப்பா! அவர் தான் என்னை யோசிக்கணும்” என்றவள், நல்லவன் கையில் இருந்த இனிப்பை பிடுங்கி கொண்டாள். “ஏய் எனக்கும் கொஞ்சம் வை” என்று அவளிடம் இருந்து இவன் பிடுங்க, “நாந்தான் சாப்பிடணும். எனக்கு தான் நிறைய கோவம், மனசுகஷ்டம் எல்லாம்” என்று பெண் சண்டைக்கே போக, “என்னையும் தாண்டி உன் அப்பன் டென்சன் பண்ணிட்டார். ஒழுங்கா எனக்கும் கொடு” என்று இவன் மல்லுக்கு நின்றான். “நான் இப்போ உன்னை டேய் சொல்லவே இல்லை. ஏண்டா என்னை டி சொன்ன?” சம்யுக்தா அவன் உச்சி முடியை பிடித்து ஆட்டிவிட்டாள். “ஏய் விடுடி ராட்சசி. உன் அப்பன் மேல உள்ள கோவத்தை எல்லாம் என் முடியில காட்டுறியா நீ? விடுடி” “அப்படித்தான்டா காட்டுவேன். என் ரூமுக்குள்ள எதுக்கு வர? அன்னைக்கு என்னமோ என்னை தொந்தரவு பண்ண மாட்டேன்னு சொன்ன” என்று அவன் முடியை விட்டவள், அவனை முறைத்து பார்த்தாள். “கையை உடைச்சுட்டாங்க” என்று பாவமாக சொன்னான் நடிகன். “கை உடைச்சாங்களா? யாரு?” “எல்லாம் அந்த மணி தான்“ “மணி அண்ணாவா? அப்பா எதுவும் சொல்லலையா?” “அவரை பிடிச்சு தள்ளிட்டேன்னு தான். ஆஹா” என்று வலியில் கத்தியவன் வாயை அடைத்தவள், “எவ்வளவு தைரியம் இருந்தா என் அப்பாவை தள்ளியிருப்ப நீ?” என்று திரும்ப அடி விழுந்தது. “இவ்வளவு நேரம் அவரை தான் திட்டிட்டு இருந்த நீ?” என்று அவன் ஞாபகபடுத்த, “நான் திட்டுவேன். என் அப்பா. நீ அவரை தள்ளுவியா?” என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க கேட்டாள். “அவர் என்ன பேசினார்ன்னு உனக்கு தெரியாது. பேசாம போயிரு” என்றவன் முகம் இப்போதும் கோவத்தில் சிவந்தது. “அப்படியென்ன பேசிட்டார்?” சம்யுக்தா புருவம் சுருக்கி கேட்க, “அது உனக்கு தேவையில்லாதது. உன் வேலையை பார்த்துட்டு போடி. அதான் அடிச்சுட்ட இல்லை” என்றான் கோவமாக. “என் கையை உடைங்க, என்னை அடிங்க, மறைச்சு வைங்க, என்ன வேணா செய்ங்க. யார் கேட்பா உங்களை?” “ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நான்“ “என் குடும்பமே என்னை ஒளிச்சு வைக்கும் போது நீங்க எல்லாம் என்னை அடிக்கிறதால, கையை உடைக்கிறதால மட்டும் என்னாகிட போகுது? இருந்த ஒருத்தனும் என்னை காப்பாத்த போய். ம்ப்ச்” என்று அழுத்தமாக முகத்தை ஒற்றை கையால் தேய்த்தான். குருமூர்த்தியின் வார்த்தைகள் அவனை கிளறிவிட்டிருந்தது. கண்ணீர் கண்கள் முழுதும் தேங்கி நிற்க, குடும்பத்தின் நினைவு, நண்பனின் ஏக்கம் என்று அவனால் அவனையே கட்டுப்படுத்த இயலவில்லை. அவன் முகத்தை மூட போராட, கட்டு போட்ட கை அவனுக்கு ஒத்துழைக்காமல் போக, சட்டென சம்யுக்தாவை இழுத்து அணைத்து கொண்டான். சம்யுக்தா அதிர்ந்து சிலையாக, அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டான். பெண்ணின் கழுத்தில் முகத்தை அங்கும், இங்குமாக திருப்பியவன் கண்ணீர் அவளின் கழுத்தில் ஊர்ந்து ஏதோ செய்தது. “என். என்ன? ஏன் இப்படி? ப்ளீஸ் அமைதியாகுங்க” என்று சம்யுக்தா தடுமாறி அவன் முதுகை வருடி கொடுக்க, “அவன் ஏன் அப்படி பண்ணான்? நான் சொல்லியும் அவன் கேட்கலை. யாரோ என்னவோ பண்ணிட்டு போறாங்கடான்னு அவ்வளவு சொன்னேன். கேட்க மாட்டேன்னுட்டான். இப்போ மொத்தமா இல்லாம போயிட்டான். நான் என்ன பண்ணுவேன்? அவன் அப்பாம்மாக்கு என்ன பதில் சொல்வேன்? என் தலையில பெரிய பொறுப்பை வைச்சுட்டு போயிட்டான். நான் அந்த ஆதாரத்தை எல்லாம் வெளியே விட்டா மட்டும் என்னாகிடும்? அவன் திரும்ப வந்திடுவானா? சொல்லு. நீயே சொல்லு” என்று அரற்றினான் பாவப்பட்டவன். “ஆதாரமா? என்ன சொல்றாங்க இவங்க” சம்யுக்தா அதில் அதிர்ந்தாலும், அவன் ஒற்றை கைப்பிடி இறுக்கமாக மாறுவதில், இடையில் இருந்த அவன் கைமேல் தன் கையை வைத்தவள், “எல்லாம் சரியாகிடும். நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க” மற்ற கையால் அவனை வருடி கொண்டே சொன்னாள். “ம்ம். சரியாக்குவேன். செய்யணும். செஞ்சுதான் ஆகணும்” என்றவன் சில நொடிகள் சென்று அவளிடம் இருந்து பிரிந்தவன், தனித்து விடப்பட்டவனாக நின்றான். இத்தனை நாட்கள் தனியாக சமாளித்தவனுக்கு, புதிதாக கிடைத்த அரவணைப்பு, குழந்தைக்கு கிடைத்த சாக்லேட் போல் தித்திக்கவும் செய்தது, திரும்ப வேண்டும் போலவும் இருந்தது. ஆறுதல் கொடுத்த பெண்மையிடம் திரும்ப தாவ துடித்த கால்களை கடினப்பட்டு நகர்த்தி கொண்டான். “குடிங்க” என்று சம்யுக்தா அவனிடம் நீட்டிய வாட்டர் பாட்டிலை வாங்கி வேகமாக குடித்தான். அவன் மேல் சிந்திய தண்ணீரை சம்யுக்தா டவலால் துடைத்துவிட்டவள், “ஷர்ட் ஈரமாக்கிட்டீங்க” என்றாள். அவளின் அருகாமையில், “எனக்கு திரும்ப வேணும்” என்றான் முனகலாக. “தண்ணியா?” “இல்லை“ “ஸ்வீட்” என்று எடுக்க போக, “நீ” என்றான். “ஆஹ்ன்” சம்யுக்தா கோவமாக அவனை பார்க்க, “ஹக் கொடு. ப்ளீஸ்” என்றான். “முடியாது. நீங்க கிளம்புங்க போங்க” என்று விரட்டினாள். “ரொம்ப பண்ணாத. மோசமா பீல் பண்றேன்“ “பண்ணிக்கோங்க. இப்போ கிளம்புங்க போங்க” என்று அவன் கைப்பற்றி இழுத்து சென்று, ரகசிய வழியில் விட்டவள், “திரும்ப வந்து தட்டாதீங்க. திறக்க மாட்டேன்” என்று எச்சரித்தாள். “பெரிய அழகி. இவளை தேடி வேற வரேன். போடி ராட்சசி” “நீ போடா மலைமாடு“ “இன்னொரு முறை மலைமாடு சொன்ன, உன்மேல பாய்ஞ்சிடுவேன்டி” என்று அவன் மிரட்டிவிட்டு செல்ல, ‘எந்த அர்த்தத்துல சொல்லிட்டு போறான் இவன்?’ சம்யுக்தா மூடிய கதவை முறைத்து கொண்டு நின்றாள்.