அதிலும், கட்டிட வேலை செய்து கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களின் பார்வையும் தங்கள் கட்டிடத்திற்கு முன்னே வந்து நின்ற போலீஸாரிடம் தான்.

சேனாதிபதியும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மொத்த நபர்களையும் அழைத்து ஜெகன்நாதனையும் தன்னோடு வந்திருந்த போலீஸாரையும் விசாரணை மேற்கொள்ள சொல்லிவிட்டு, ஒவ்வொரு நபர்களின் முகத்தையும் கூர்மையாக அளவிட ஆரம்பித்தான்.

எல்லோருமே, அன்று கட்டிட வேலை நடைபெறாததால் தாங்கள் விபத்து நடந்த போது இங்கே இல்லை என்றே சொன்னார்கள்.

ஆனால், ஒரே ஒரு நபரின் முகம் மட்டும் பதட்டத்தை தத்தெடுக்க, எல்லோரையும் அனுப்பி விட்டு, அவரை மட்டும் ஓரம் கட்டிய சேனாதிபதி, “நான் எதையும் பாக்கலைன்னு சொல்ல முயற்சி செய்யாதீங்க” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“சடாருன்னு கேட்ட சத்தத்துல தான் சார், ரெண்டாவது மாடியில நின்னுட்டு இருந்தவன் திரும்பி பார்த்தேன். அந்த பொண்ணு இந்த கம்பத்துல மோதி கீழ விழுந்து கிடந்தது. பக்கத்துல நின்னுட்டு இருந்த பைக்ல ஒருத்தன் உக்காந்திருந்தான். தெரியாம மோதிட்டான் போலன்னு பதட்டத்துல நான் பாத்தா, இறங்கி அந்த பொண்ணு பக்கத்துல கிடந்த எதையோ குனிஞ்சு எடுத்துட்டு, தன்னோட காலால அந்த பிள்ளையோட கழுத்தையும் மிதிச்சான். நடந்தது விபத்து இல்ல கொலை முயற்சின்னு புரிஞ்சதுமே, பதட்டத்துல என்னால நிக்ககூட முடியலை சார், அப்பிடியே நடுங்கிப்போய் உக்காந்துட்டேன். அதுக்கு மேல எதையும் நான் பார்க்க முயற்சி செய்யல சார்” என்றவர்,

“அந்த பொண்ணு எப்பிடி சார் இருக்குது? பிழைச்சிக்குமா?” என்றார் கண்கள் ஆவலில் மின்ன.

அவர் கேள்விக்கு பதில் சொல்ல முனையாமல், “அந்த ஆளைப் பாத்தா அடையாளம் காட்ட முடியுமா? பைக் நம்பர் எதுவும் ஞாபகம் இருக்கா?” என்று சேனாதிபதி பரபரப்பாக கேட்க,

“ஹெல்மெட் போட்டுருந்தான் சார். அந்தநேர பதட்டத்துல பைக் நம்பரை பாக்கத் தோணலை” என்று சொல்லி சேனாதிபதியின் ஆர்வத்தை ஒன்றுமில்லை என்று ஆக்கினார் அந்த மனிதர்.

“இந்த கேஸ் விஷயமா யாராவது உங்களை சந்திச்சா எங்ககிட்ட சொல்லணும்” என்று சொல்லியே அவரை விட்டான் சேனாதிபதி.

அருகேயிருந்த கடைகளில் இருந்தவர்களிடமிருந்தும் பெரிதாக எந்த விஷயமும் கிடைக்கவில்லை. எல்லோரும் பெரும்பாலும் அந்த கட்டிடத் தொழிலாளி போலவே பதில் சொன்னார்கள். தங்களுடைய கண், காது, வாயை மூடிக்கொண்டு சுயநலமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த கூட்டத்தைப் பார்த்து எரிச்சலாகிப்போனது சேனாதிபதிக்கு.

இவர்களை நம்புவதற்கு பதில் டெக்னாலஜியிடம் சரணடையலாம் என்று, தன்னிடம் இருந்த கமலியின் போன் நம்பரை கன்ட்ரோல் ரூமுக்கு அழைத்து சொல்லி, “சைபர் செல் மூலம், இந்த போன் நம்பருக்கு வந்த இன்கமிங் கால்ஸ், அவுட்கோயிங் கால்ஸ், மெசேஜஸ் எல்லாத்தையும் ட்ரேஸ் அவுட் பண்ணித்தரச் சொல்லுங்க” என்று விட்டு

“ஜெகா… நீங்க எல்லாரும் இந்த ஏரியாவுல இருக்குற சிசிடிவி ஃபூட்டேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு, ஆஃபீஸ் வந்துடுங்க. நான் இந்த கேஸை ஹேண்டில் பண்ணுற இன்ஸ்பெக்டரை அவரோட ஸ்டேஷன்ல போய் பாத்துட்டு வரேன்” என்று ட்ரைவர் ராஜோடு கிளம்பிவிட்டான்.

 குறிப்பிட்ட அந்த காவல்நிலையத்திற்கு சேனாதிபதி வரும்போது மத்தியானம் ஒரு மணி. காவல் நிலையத்தை அளவிட்டபடியே உள்ளே நுழைத்தவனின் கண்களில் முதலில் விழுந்தது, டேபிளில் கேரியர் டிபன் பாக்ஸ்ஸை பரப்பி வைத்துக்கொண்டு சாப்பிட்டபடியிருந்த அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் தான்.

சேனாதிபதியின் வருகையைக் கூட அறியாமல் மனிதர் சாப்பாட்டில் மூழ்கியிருக்க, “சார் சாப்பிட்டுட்டு வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணட்டுமா?” என்றபடியே அந்த இன்ஸ்பெக்டருக்கு முன்னால் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான் சேனாதிபதி.

திடீரென்று கேட்ட சத்தத்தில் கலைந்த அந்த இன்ஸ்பெக்டருக்கு, ஏசிபியைக் காணவும் உதறல் எடுத்தது. சட்டென்று எழும்பி சல்யூட் வைக்க முடியாமல் எச்சில் கை தடுத்ததில், “ஒரு கேஸ் விஷயமா வெளியப் போகவேண்டி இருக்கு சார், அதான் சாப்டுட்டு போயிடலாம்னு…” முடிக்காமல், அவஸ்தையாக சிரித்தார்.

“ஓ… சாருக்கு தினம் வீட்டு சாப்பாடு தான் போல.” முன்னால் வளர்ந்திருந்த அவர் தொப்பையை பார்வையிட்டபடியே கேட்டவன், “நமக்கு வேலையா முக்கியம்? சாப்பாடு தான் முக்கியம். நீங்க சாப்பிட்டு முடிங்க. நாம அப்புறமாவே பேசலாம்” என்றான்.

 அந்த குரலில் இருப்பது அக்கறையா, கேலியா என்று பிரித்தறிய முடியாமல், “இதோ…முடிச்சிட்டேன் சார்” என்று அவசரமாக சொன்ன இன்ஸ்பெக்டரின் பார்வை அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் நிலைத்து, “பாத்திரங்களை அள்ளிக்கொண்டு போயேன் ய்யா” என்று அதட்டியதில், அந்த கான்ஸ்டபிள் எச்சில் பாத்திரங்களை அங்கிருந்து அகற்ற முயல,

“நீங்க என்ன அவரோட சர்வெண்ட்டா? மொதல்ல போட்டுருக்க யூனிஃபார்ம் க்கான ரெஸ்பெக்டை குடுங்க சார்” என்று சேனாதிபதி அதட்ட, சட்டென்று கைகளை உதறிக்கொண்டு நகர்ந்தார் அந்த மனிதர்.

தன்னுடைய ஸ்டேஷனுக்கு வந்து தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீஸாருக்கு மத்தியில் தன்னை ஆட்டுவித்தபடி இருந்த சேனாதிபதியின் மீது எல்லையில்லா கோபம் எழுந்தாலும், ஏதும் செய்ய முடியாமல் அவன் பதவி தடுக்க, டிபன் கேரியரை ஒதுக்கி, கைகழுவி, சேனாதிபதிக்கு சல்யூட் ஒன்றை வைத்து விறைப்பாக வந்து நின்றார் அந்த இன்ஸ்பெக்டர்.

“இப்போ பேசலாமா?” சாதாரணமாக சேனாதிபதி கேட்டாலும், குரலில் அடக்கப்பட்ட கோபம் மறைந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது.

“கமலி கேஸ்ல இரண்டு நாளாகியும் குற்றவாளியை நீங்க அரெஸ்ட் செய்யலையே, ஏன்?” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான் சேனாதிபதி.

அந்தோ பரிதாபம்… விபத்துக்குள்ளான பெண்ணின் பெயரைச் சொல்லி கேட்டதும் அந்த மனிதருக்கு சட்டென்று ஞாபகம் வராமல், தன்னருகே நின்றிருந்த கான்ஸ்டபிளைப் பார்க்க, “அதான் சார்… இரண்டு நாளைக்கு முன்னாடி, காலேஜ் ரோட்ல நடந்த ஆக்சிடென்ட் கேஸ்” என்று எடுத்துக் கொடுத்தார் கான்ஸ்டபிள்.

“ஹாங்.. விபத்து நடந்த நேரம் மத்தியானம் சார். அப்போ மக்கள் நடமாட்டம் ரோட்ல கம்மியாயிருந்ததால ஐ விட்னஸ் யாருமே இல்ல.. அதனாலத்தான் லேட் ஆகுது. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன் சார்.” சேனாதிபதியை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் பவ்யமாகவே பதில் வந்தது.

“நீங்க பேசுறது உங்களுக்கே அபத்தமா தோனலையா? ஐ விட்னஸைத் தவிர, சாட்சியா எடுத்துக்க இந்த டெக்னாலஜி வேர்ல்ட்ல வேற எதுவுமே கிடையாதா?” கேலியாக இதழ் வளைத்தான் சேனாதிபதி.

“சிசிடிவி ஃபூட்டேஜ் பத்தி சொல்லுறீங்களா சார்? காலேஜ் என்ட்ரன்ஸ்ல ஒரு சிசிடிவி இருக்கு. ஆனா அது உடைஞ்சு போய் இருக்குது” என்றார் வேகமாக.

“விட்டா, ஆக்சிடென்ட் நடக்கும் போது பக்கத்துல இருந்து யாரும் ஃபோட்டோஸ் எடுத்து தரலை, அதான் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லுவீங்க போலயே!” என்று கேலியாக சிரித்த சேனாதிபதி,

“மனசிருந்தா மார்க்கம் உண்டுன்னு சொல்லுவாங்களே, நீங்க கேள்விபட்டதில்ல? ஒருவேளை அதெல்லாம் மனசு இருக்குறவங்களுக்கு தான், எனக்கு இல்லைன்னு சொல்லுறீங்களோ?” என்றான் ஊடுருவும் பார்வையோடு.

 சேனாதிபதி பேசிய தோரணையில், விஷயம் தெரிந்து வந்திருப்பானோ என்ற சந்தேகம் எழ, உள்ளுக்குள் கிலி ஆட்டிவைத்தது அந்த போலீஸ் அதிகாரியை. என்றாலும், எதுவும் உறுதியாக தெரியும் முன்னர், தான் வார்த்தைகளை விட்டுவிடக்கூடாது என்று அமைதியாக நின்றார்.

“சொல்லுங்க சார்… நீங்க சொன்ன இந்த இரண்டும் இல்லாம குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதா? இல்ல… அந்த பொண்ணோட தகப்பன் கிட்ட பணமும் இல்ல… ஆள் பலமும் இல்ல… நாம வச்சது தான் சட்டம்னு ஒரு அட்டெம்ட் மர்டர் கேஸை, விசாரணை செய்ய சோம்பல்பட்டு ஆக்சிடென்ட் கேஸுன்னு சொல்லி மூடப் பாக்குறீங்களா?” அழுத்தமான குரலில் சேனாதிபதியிடமிருந்து வந்து விழுந்தது கேள்வி.

 விஷயம் தெரிந்ததால் தான் ஏசிபி யின் இந்த திடீர் ஸ்டேஷன் விஜயம் என்பது இப்போது அந்த இன்ஸ்பெக்டருக்கு ஊர்ஜிதமாகிப் போக, “சார்… நான்…” என்று‌ வேகமாக தொடங்கியவர் எதுவும் சொல்ல முடியாமல் திணறினார்.

“நீங்கல்லாம் மனசாட்சியை கழற்றி வீட்ல வச்சிட்டு தான் வேலைக்கு வருவீங்களா? பெத்தபிள்ளைக்கு என்ன நடந்ததுங்குற உண்மையை, பேரெண்ட்ஸ் க்கு கூட சொல்லாமல் மறைச்சிருக்கீங்களே… இந்த தப்புக்கு உங்களுக்கு என்ன தண்டனை தரலாம்? ஹாங்…”

சட்டென்று நாற்காலியை பின்னுக்கு தள்ளியபடி எழும்பியவன், அந்த இன்ஸ்பெக்டருக்கு நேராக நெஞ்சை நிமிர்த்தியபடி நின்று கேட்க, சேனாதிபதியின் குரலில் இருந்த தீவிரத்தில் அடிவயிறு கலங்கியது அந்த இன்ஸ்பெக்டருக்கு.

 “நான் மறைச்சேன் தான்… ஆனா, நீங்க சொல்லுற எந்த காரணத்துக்காகவும் கிடையாது. பொண்ணுக்கு ஆக்சிடென்ட்னு தெரிஞ்ச உடனே அப்செட் ஆகி நின்ன அந்த அப்பாவி ஜனங்க கிட்ட, உண்மையைச் சொன்னா பயந்துடுவாங்களேன்னு நினைச்சு தான் சொல்லலை” சட்டத்தின் ஓட்டையில் நுழைந்து வெளியே வரும் முயற்சியில் அப்போதே இறங்கினார் அந்த இன்ஸ்பெக்டர்.

“ஓ… அப்போ நீங்க செய்தது எல்லாம் அந்த பெத்தவங்களோட நன்மைக்காகத் தான். வேற எந்த உள்நோக்கமும் இல்ல!” தலையை ஆட்டியபடி பாவனையாக கேட்ட சேனாதிபதி,

 “செய்யுறதையும் செய்துட்டு என்னம்மா கம்பி கட்டுறீங்க சார். ஆனா, உங்க வண்டவாளத்தை எல்லாம், அந்த டாக்டர் தண்டவாளத்துல ஏத்திட்டார், வீணா முயற்சிக்காதீங்க” என்றான், உதட்டில் நெளிந்த ஏளன சிரிப்போடு.

தன் சாயம் முழுமையாக வெளுத்து போனதில், அந்த இன்ஸ்பெக்டரின் முகமும் வெளுத்துப் போனது.

“எந்த கேஸா இருந்தாலும் ஒரு துரும்பளவு சந்தேகம் வந்தாக்கூட, அதை துப்பு துலக்கி உண்மையை வெளிய கொண்டு வரத்தானே அரசாங்கம் நமக்கு சம்பளம் தருது.”

“சம்பளம் மட்டும் போதும், வேலைபாக்க முடியாதுன்னு யாரும் இங்க சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. அதையும் மீறி சொன்னா, சொல்லுறவங்களை நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கன்னு வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.” தன் வார்த்தைகளாலேயே அந்த இன்ஸ்பெக்டரை பதற வைத்த சேனாதிபதி,

“கமலியோட வழக்குல கொலை முயற்சியை, விபத்தா மாற்றி கேஸை முடிக்கச் சொல்லி அரசு மருத்துவரை கட்டாயப்படுத்துன குற்றத்துக்காக உங்க மேல கேஸ் ஃபைல் பண்ணுறேன். உங்க விளக்கத்தை கோர்ட்ல வந்து சொல்லுங்க. கோர்ட் அனுமதிச்சா மறுபடியும் வேலையில ஜாயின் பண்ணிக்கோங்க” என்றவன், அந்த இன்ஸ்பெக்டரின் எந்த சமாதான வார்த்தைகளுக்கும் செவிமடுக்காமல் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

கமலியின் விபத்து வழக்கு, கொலை முயற்சி வழக்காக மாறியிருக்க, அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்தான் சேனாதிபதி. கூடவே, குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சேனாதிபதியின் தலைமையில் ஒரு குழு பரபரப்பாக துப்பறியும் வேலையிலும் இறங்கியிருந்தது.

  கமலியோடு உடன் பயிலும் தோழிகளிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று‌‌ சேனாதிபதி முடிவெடுத்து கொண்டான். கமலியின் வழக்கே நாள் முழுவதையும் எடுத்துக்கொள்ள வீட்டுக்கு போய் ஒரு குளியல் போட்டு விட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே இரவு எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருந்தான்.

எப்போதையும் விட ஒருமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு வந்த கணவனைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது சுபாஷிணிக்கு.

 நேற்று காலை தங்கள் திருமண வரவேற்பு முடிந்து மதியத்துக்கு மேல் மாதவபுரத்திலிருந்து கிளம்பியவர்கள், இரவு சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

வரவேற்பில் நின்றது, பயணம், எல்லாம் சேர்ந்து சுபாஷிணி சோர்ந்து போயிருக்க, இன்று விடுமுறை எடுத்துக் கொண்டாள்.

முந்தைய நாட்களின் இனிமையை சுமந்து கொண்டு வேலைக்கு சென்ற கணவனின் முகம், திரும்பி வரும்போது அத்தனையும் தொலைத்திருப்பது போலத் தோன்றவே, “என்னாச்சு த்தான்?” என்றாள் சுபாஷிணி கவலையாக.

“ஒன்னுமில்ல சுபா… கொஞ்சம் டயர்ட். குளிச்சா சரியாகிடும்” என்றபடி மனைவிக்கு அருகில் அமர்ந்தான் சேனாதிபதி.

“நான் சொன்னேன்ல லீவ் போடச் சொல்லி. உங்க உடம்பு மட்டும் என்ன இரும்பாலயா செய்திருக்கு?” கணவனின் கேசத்தை தன் கையால் கலைத்து விட்டபடி சுபாஷிணி ஆதங்கப்பட,

“அதெல்லாம் ஒன்னுமில்ல சுபா. இது வேற..”

“அப்பிடின்னா ஏதாவது பிரச்சனையா த்தான்?

மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கியவன், “சூடா கிரீன் டீ போட்டுத் தர்றியா சுபா?” என்று வேறு பேசினான்.

அவனுக்கு, நடக்கும் பிரச்சினைகளை மனைவியிடம் சொல்லி, அவளையும் ஏன் பதட்டப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம்.

“ஓ… ஏசிபி சார் எங்கிட்ட சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணுறாரோ? அப்பிடின்னா, இந்த வீட்டுக்குள்ள நுழையும் போது நீங்க சுபாஷிணியோட ஹஸ்பென்டா மட்டும் தான் நுழையணும் சாரே.” புதுசட்டம் இயற்றினாள் மனைவி.

“ஓகே மேடம்… இனிமே அப்பிடியே செய்திடலாம். இப்போ நீங்க போய் டீ போடுங்க, நான் குளிச்சிட்டு வந்துடுறேன்.” மனைவியின் முதுகில் கை வைத்து கிச்சன் பக்கம் லேசாக தள்ளியவன் ரூமுக்கு செல்ல, ஜெகன்நாதனிடமிருந்து அழைப்பு.

போனை காதுக்கு கொடுத்து, “சொல்லு ஜெகா” என்று சொல்ல,

“சேனா, விபத்து நடந்த இடத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு கடையோட சிசிடிவி கேமரால அந்த பொண்ணு கமலி பின்னாடி வேகமா பைக்ல வந்த ஒருத்தன் அவளை ஃபோர்ஸா தள்ளிவிடுறது ரெக்கார்ட் ஆகியிருக்கு. அந்த சாட்சி சொன்னமாதிரி ஹெல்மெட் தான் போட்டுருக்கான் அந்த ஆளு. அதனால முகம் தெரியலை. ஆனா பைக்கோட நம்பர் தெரியுது. வீடியோவை உனக்கு அனுப்பியிருக்கேன் பாரு” என்றான் உற்சாகமாக.

“ம்ம்… பாத்துட்டு கூப்பிடுறேன்” என்ற சேனாதிபதி பரபரப்பாக வாட்ஸ்அப் திறந்து பார்த்தான். ஜெகன் நாதன் சொன்னது அப்படியே வீடியோ காட்சியாக இருந்தது.

‘பைக்கோட நம்பரை வச்சி, அடுத்த ஸ்டெப் மூவ் பண்ண வேண்டியது தான்.’ சேனாதிபதி யோசித்த நேரம், இன்னொரு வீடியோ வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது. தெரியாத நம்பரில் இருந்து தான் வந்திருந்தது.

ஆனால் தன்னை இன்னாரென்று அந்த நபர் அறிமுகப்படுத்தி அனுப்பியிருந்த மெசேஜை வாசித்தவனுக்கு, அனுப்பியவரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. உதடுகள் புன்னகையில் விரிய பரபரப்போடு வீடியோவை டவுண்லோட் செய்து ஓட விட்டான்.

இதயவடிவில் ஒரு பெரிய சிவப்பு பலூன் வானத்தில் தெரிய, அதில் ‘ஹேப்பி பெர்த்டே மை டியர் ஏஞ்சல்’ என்ற வார்த்தை பெரிதாக எழுதி தொங்க விடப்பட்டிருந்தது.

 கூர்மையாக வீடியோவை சேனாதிபதி பார்த்துக் கொண்டிருக்க, அந்த கேமரா ஆங்கிள் மெதுவாக நகர்ந்து அந்த பில்டிங் பெயர்பலகை அருகே வந்தது. ‘இது… இது… அந்த கமலியோட காலேஜ் இல்ல?’ சட்டென்று சேனாதிபதியின் ஐம்புலன்களும் கூர்மையாக, பார்வை அப்படியே அந்த வீடியோவை அங்குலம் அங்குலமாக அலசியதில்,

கல்லூரியின் வெளி கேட்டுக்கு அருகே பைக்கில் இருந்தபடியே ஒருவன் கமலியோடு பேசிக்கொண்டிருந்தது சேனாதிபதியின் கண்களில் விழுந்தது. அதுவும், ஹெல்மெட் அவன் தலையில் இல்லாமல் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்தது.

ஹெல்மெட் போடாத இந்த நபரும், ஹெல்மெட் போட்டுக் கொண்டு கமலியை அடித்து தூக்கிய அந்த நபரும், ஒருவர் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. வீடியோவில் தெரிந்த முகத்தையே கூர்ந்து பார்த்தபடி இருந்த சேனாதிபதிக்கு அந்த முகம் பரிச்சயம் போலத் தோன்ற, தன் நினைவடுக்கை தூழாவினான்…