அதை கோபம் என்று கூட சொல்லலாம். கனகா அவளை ராசி கெட்டவள் என்று சொல்ல சொந்தங்களும் மற்ற அனைவரும் அதை வேடிக்கை பார்க்க அவர்களை அடக்க வேண்டிய பார்த்திபனோ திருமணமே வேண்டாம் என்று அந்த இடத்தில் சொல்லி அவளை அவமானப் படுத்தியது போல தான் இருந்தது. அவன் அதற்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் இன்று திருமண நிகழ்வில் அது கரும்புள்ளி போல அவளுக்கு நினைவில் வந்து இம்சித்தது.

அந்த காயம் அப்படியே அவளுக்குள் இன்னும் இருப்பது போல ஒரு உணர்வு. அதனுடனே அவளால் அவனுடன் வாழ்க்கையை துவங்க முடிய வில்லை. ஆனால் திருமணம் என்ற ஒன்று முடிந்த பிறகு பழைய விஷயங்களை பற்றி பேசி அவனை தள்ளி வைத்து பிரச்சனைகளை எதிர்கொள்ள எல்லாம் அவள் தயாராக இல்லை.

அவனாக நெருங்கினால் அவள் தயார் தான். ஆனால் முழு மனதாக என்றால் அது கேள்விக் குறி தான்.

 இமைக்க மறந்து அவளையே விழுங்குவதுபோல் பார்த்து வைத்தான். கூடவே அவனது பார்வை இப்பொழுது உரிமையாக அவள் தேகத்தில் பயணிக்க துவங்கியது. அவன் பார்வையின் வேகமும், அது தன் தேகத்தில் இறங்கிச் செல்லும் விதத்தையும் பார்த்தவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதில் அவனுக்கு சுள்ளென கோபம் எழ, “எதுக்கு இப்படி முறைக்கிற? அப்படி உன்னை நான் என்ன பண்ணிடுவேனாம்?”, என்று கோபமாக கேட்டான்.

“என்ன செய்ய மாட்டீங்க? ஊரு உலகம் கூடி இருக்கும் போது கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னவர் தானே? வேற என்ன வேணாலும் செய்ய தான் செய்வீங்க?”, என்று அவள் சொல்லிவிட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள, அவனது கோபம் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடிப் போனது.

“சாரி மா”, என்று  அவன் குரல் அத்தனை மென்மையாக ஒலிக்க, வேகமாக அவன் முகம் பார்த்தாள். அவளது இமைகள் லேசாக நனைந்திருந்தது.

எப்படி உங்களால இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல முடிஞ்சது?”, என்று கேட்டவளின் குரல் அவ்வளவு ஆழமாக வந்தது.

            மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாளே என்று எண்ணினாலும் “இல்லை, அது நான்.. நான் வந்து.. “, என்று  தடுமாறினான்.

“எனக்கு பதில் வேணும்”, என்றாள் அவளும் விடாமல்.

            அவன் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க “அவ்வளவு ஈஸியா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க பார்த்தி. நம்ம உறவு அவ்வளவு தான் இல்ல. உங்க சித்தி பேசினதுக்கு என்னை விட்டுருவீங்களா? கல்யாணத்துக்கு முன்னாடி பேசினாங்க, நீங்க விட்டுட்டீங்க சரி. இப்ப பேசிருந்தாலும் என்னை விட்டுருவீங்களோன்னு பயமா இருக்கு?”

            “ஏய் சாரி மா, என்னை மன்னிச்சிரு. நான் செஞ்சது தப்பு தான். கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலும் நான் உன்னை விட்டுருக்க மாட்டேன் டி. நீ தான் என்னோட உயிர்”

            “இவ்வளவு ஈஸியா சாரி சொல்றீங்க? அந்த சபையில வச்சு அத்தனை பேர் முன்னாடி நான் எப்படி நின்னேன் தெரியுமா?”, என்று கேட்க பார்த்திபனுக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை.

            அவள் காயமும் வலியும் புரிந்தது தான். கூடவே இந்த தருணமும் அவனை இம்சித்தது. அவள் மனநிலை சரியாக இருந்திருந்தால் இந்நேரம் அவளை கட்டி அணைத்து அந்த நிகழ்வே வேறு மாதிரி முடிந்திருக்கும். இது தான் சாக்கென்று அவளைக் கொள்ளையிட ஆரம்பித்து முதலிரவை முடித்திருப்பான்.

            ஆனால் அவள் வேதனையில் இருக்க அவளை நெருங்கவும் பயமாக இருந்தது. அவள் மனது வெகுவாக காயப் பட்டிருக்கிறது என்று அவனுக்கு புரியவே செய்தது.

            “என்னை மன்னிச்சிரு மங்கை, நான் அன்னைக்கு செஞ்சது உன்னை ரொம்ப பாதிச்சிருக்கு. அதுக்கு மன்னிப்பு கேக்குறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. உனக்கு எப்ப நம்பிக்கை வருதோ அப்ப நாம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நீ டயர்டா இருப்ப. தூங்கு. நான் ஒரு கால் பேசிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

            வெளியே செல்ல முடியாமல் மொட்டை மாடிக்குச் சென்றவனுக்கு மனதில் இருக்கும் புழுக்கம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு மாதிரி தவித்தான்.

            ஜில்லென்ற தென்றல் அவன் முகத்தில் மோதிய பொது தான் கொஞ்சம் இறுக்கம் குறைந்தது. அவளிடம் போக சொல்லி அவன் தேகம் மொத்தமும் அவனிடமே கெஞ்சத் துவங்க அதற்கு வழி வகை சொல்ல தெரியாமல் தினறினான்.

            அவர்கள் திருமணம் என்று பேசுவதற்கு முன்பே அவன் மனதில் முழுமையாக ஆக்கிரமித்திருந்தவள் மங்கை. இப்போது திருமணம் முடிந்திருக்க அவள் முழுதாக அவனுக்கே சொந்தமாக  இருக்கையில் அவளை விட்டு விலகி இருந்தால் அவனுக்கு எப்படி இருக்குமாம்?

அவள் அழகு வேறு சம்பந்தம் இல்லாமல் இப்போது நினைவில் வந்து அவன் தாபத்தை அதிகரித்தது. அவளை நினைத்தவுடன் அவன் உணர்வுகள் வேறு விழித்துக் கொள்ள மிகுந்த அவஸ்தைக்கு ஆளானான் பார்த்திபன்.

அவளுக்கு ஏறி இருந்த கோபம் இன்னும் அதிகரித்துப் போனது. அவள் அவளை மீறி தான் ஆதங்கத்தைச் சொல்லி இருந்தாள். அவளை இழுத்து அணைத்து சமாதானப் படுத்தி இருந்தால் அவளும் சமாதானம் ஆகி இருப்பாள். அதை விட்டு விலகிச் சென்றது அவளுக்கு கடுப்பாக இருந்தது. இவனோட என்று பல்லைக் கடித்தாள்.

அந்த கோபத்தில் கட்டிலில் ஏறி படுத்தும் விட்டாள். மாடியில் தரையில் படுத்திருந்த பார்த்திபனுக்கோ அதற்கு மேல் தனிமையின் அவஸ்தை முடியாமல் கீழே வந்து விட்டான். அவள் தன் நினைவில் தனக்காக காத்திருப்பாள் என்று எண்ண அவளோ கண்களை மூடி படுத்திருக்க சப்பென்று போனது.

அவன் வருகையில்  அவள் கண் விழித்துப் பார்க்க “ஏய் இன்னைக்கு எப்படி டி உனக்கு தூக்கம் வருது?”, என்று கேட்டான்.

“ஏன் எனக்கு என்ன? வேணும்னா நீங்களும் தூங்குங்க?”

“அட்லீஸ்ட் அந்த நகையையாவது கழட்டி வச்சிட்டு தூங்கு மா”

            “ஏன் உங்களுக்கு என்ன?”

            “எனக்கு ஒண்ணும் இல்லை. நாளைக்கு ஏதாவது நெளிஞ்சு போச்சுனா நான் தான் காரணம்னு பேசுவாங்க”, என்று சொல்ல முகச் சிவப்பை மறைத்துக் கொண்டு எழுந்து கொண்டவள் நகையை கழட்ட ஆரம்பித்தாள்.

            அவள் கையை தூக்கி ஆடி அசைந்து ஏதோ செய்து கொண்டிருக்க இந்த இரவு வீணாவதை எண்ணி அவனுக்குள் அவ்வளவு தவிப்பு. “படுத்துறாளே”, என்று தனக்குள் முனங்கி கொண்டான்.

அவன் முனங்கல் லேசாக கேட்க அதற்கு மேல் அவனைத் தவிக்க விட மனதில்லாமல் “இந்த நகையை மட்டும் கழட்ட ஹெல்ப் பண்ணுங்க”, என்று கேட்டாள்.

            “வாய் மட்டும் பேசு”, என்ற படி நகையைக் கழட்ட அவன் உதவ, அவள் அருகாமை அவனை என்னவோ செய்தது.