குழந்தை பற்றிய கவலை துளியும் மனைவிக்கு வர விடாமல் அப்படி அவளை பார்த்துக் கொண்டான் விஷ்வா. பரிகாரம் செய்யலாம், வேறொரு மருத்துவர் பார்க்கலாம் என எப்போதாவது வந்து நின்று விஷ்வாவின் கோவத்திற்கு ஆளாவார் வாசுகி.
இந்த விஷயத்தில் மட்டும் மாப்பிளை மீது அவருக்கு கோவம் உண்டாவது இல்லை, மகளுக்கு இப்படி ஆதரவாக அனுசரணையாக இருக்கும் கணவன் கிடைத்திருக்க வேறென்ன வேண்டும் எனதான் நினைத்துக் கொள்வார்.
குணசேகர் இப்போது மச்சானின் கடையில் இல்லை, தனியாக சின்னதாக கடை துவங்கியிருக்கிறார். அப்பாவுக்கு துணையாக பொறுப்பாக இருக்கிறான் சித்தார்த்.
கடை தொடங்க தான் பொருளுதவி செய்கிறேன் என விஷ்வா சொல்லியும் குணா ஏற்றுக் கொள்ளவில்லை. அகல்யாவுக்கு கூட அதில் மன வருத்தம்.
“விஷ்வாவை என் பையனாதான் பார்க்கிறேன் அகல்யா, ஆனா அவன் மேல நமக்கிருக்க அன்புல துளி அளவு கூட அவனுக்கோ வேற யாருக்குமோ சந்தேகம் வந்திட கூடாது. சித்துவுக்கும் இது தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கலாம், இல்லைனா அவனுக்கு கமிட்மென்ட் இல்லாம மந்தமா உழைக்கலாம். இப்போன்னா பேங்க் கடனுக்காக ஓடி ஓடி வேலை செய்வான், இன்னும் முன்னுக்கு வரணும்னு முனைப்பு இருக்கும். எனக்கும் ஒரு அப்பாவா என் மகனுக்கு இதை உருவாக்கிக் கொடுத்தேன்னு திருப்தி இருக்கும். பணத்துக்கு வேற வழியே இல்லைனா பரவாயில்லை, இருக்கும் போது நாமளே பார்த்துக்கலாம்தானே?” என தன் பார்வையை சொன்னார் குணா.
அதன் பின் அகல்யாவுக்கும் சமாதானமாகி விட்டது. கடையின் கடன் பாதிக்கும் மேல் அடைப்பட்ட பின் சித்தார்த்துக்கும் திருமணம் செய்து விடலாம் என இருக்கிறார்.
ஆதிக்கும் அவன் விரும்பிய பெண்ணுக்கும் தாத்தா இருந்த போது அவரே நின்று திருமணத்தை பேசி முடித்திருந்தார். ஆதிக்கு மகன் பிறந்த பிறகுதான் அதிகம் வேதாவை எதிர்பார்க்க விடாமல் அவளின் குழந்தையும் அவளுக்கு கருவாக தங்கி விட்டது.
வேதாவை பிறந்த வீட்டினர் அழைத்து சென்ற பிறகும் அகல்யா அங்குதான் இருந்தார்.
“இன்னிக்கு என் கூட வந்து இரு” என மகனிடம் அகல்யா கேட்க, தயங்கினான் விஷ்வா. அடிக்கடி அம்மாவை அவரின் வீட்டுக்கு சென்று பார்ப்பான் என்றாலும் இரவில் தங்கியது கிடையாது.
“அதுவும் உன் வீடுதான் விஷ்வா, நீ என்னவோ போல இருக்க நான் அங்க எப்படி நிம்மதியா தூங்க முடியும்?” என கவலையாக அம்மா கேட்கவும், உடனே அவருடன் புறப்பட்டு விட்டான்.
இரண்டு படுக்கையறை கொண்ட வீடு அது. அண்ணன் இங்கு தங்க வந்திருக்கிறான் என்றதுமே எங்கு படுப்பான் எனதான் சிந்தித்தான் சித்தார்த்.
முன்பு போல சகோதரர்கள் விரோதம் பாராட்டிக் கொள்வதில்லை, அதற்கென கட்டிப் பிடித்துக்கொள்வதும் இல்லை. அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து கொண்டனர்.
“நான் மொட்டை மாடிக்கு போறேன், அவன் என் ரூம்ல இருக்கட்டும்” என அம்மாவிடம் சொன்னான் சித்தார்த்.
“அவன் எங்க ரூம்ல இருந்துப்பான், நாங்க ஹால்ல படுத்துப்போம்” என அம்மா சொன்னதை கேட்காமல் படுக்கை விரிப்பு, தலையணை என எடுத்துக் கொண்டு மாடியேறி விட்டான்.
மாடியில் நின்று மனைவியிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த விஷ்வா, தம்பியை பார்த்து விட்டு பேச்சை நிறுத்தினான்.
“உன்னை அம்மா கீழ கூப்பிட்டாங்க” என அண்ணனின் முகம் பாராமல் சொல்லி படுக்கை விரிப்பை தரையில் விரித்தான் சித்தார்த்.
“வேதாவை பார்க்க போறேன், காலைலதான் இங்க வருவேன், நீ உன் ரூம்க்கே போ” என தம்பியிடம் சொல்லி விட்டு கீழே இறங்கினான் விஷ்வா.
மாடியிலேயே படுத்திருந்த சித்தார்த்துக்கு அழைத்த அவனது அம்மா, விஷ்வா வேதாவின் வீட்டுக்கு சென்று விட்டதாக சொல்லி அவனை கீழே வரச் சொன்னார்.
“நாந்தான் ரூம் கொடுத்தேன்ல, என்னவாம் அவனுக்கு?” எனக் கேட்டான் சித்தார்த்.
“வெதர் ரிப்போர்ட்ல நைட் மழை வரும்னு போட்ருக்காம், சீக்கிரம் மாடில ஒரு ரூம் போட்ரலாம்னு சொல்லிருக்கான். அப்ப வந்து தங்குவான், நீ வா கீழ”
“அவன் என்ன ரூம் போடுறது? எனக்கு கட்ட தெரியாதா?” என சிடு சிடுத்தான் சித்தார்த்.
“சரிடா நீயே கட்டு, எனக்கு தூக்கம் வருது, வந்து சேரு” என அகல்யா அதட்ட, அவனும் எழுந்து கொண்டே, “உங்க ரூம்ல ஸ்டே பண்ணலாம்ல, ஏன் போயிட்டான்?” எனக் கேட்டான்.
“சொல்லி பார்த்திட்டேன், உன்னை மாதிரியே அவனும் தான் சொல்றதுதான் செய்றதுதான்னு பிடிவாதமா இருக்கான், என்னை என்ன செய்ய சொல்ற?” என பெருமையாக அலுத்துக் கொண்டார் அகல்யா.
“விஷ்வா மாதிரிதான் சின்னவன் இருக்கான்னு சொல்லு” என அப்பா அம்மாவை திருத்துவதை காதில் வாங்கிக் கொண்டே அழைப்பை துண்டித்தான் சித்தார்த்.
கணவனின் வரவுக்காக காத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நின்றிருந்தாள் வேதா. மற்றவர்கள் உறங்க போயிருக்க, மகளுக்கு துணையாக அவளுடன் இருந்தார் சந்திரன்.
விஷ்வா வரவுமே, அவனை வரவேற்ற சந்திரன், கேட் பூட்டிக் கொண்டு உறங்க சென்று விட்டார்.
அறைக்கு வந்ததும், “காலைல உன் அம்மா என்னை பார்த்திட்டு ஷாக் ஆக போறாங்க” என்றான் விஷ்வா.
“ஆமாம் ஒரு நாள் உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாரான்னு கேட்பாங்க. அதெல்லாம் இல்லை, படுக்க இடமில்லைனு எங்கிட்ட வந்தார்னா அவங்கள்ட்ட சொல்ல முடியும்?” என நொடித்தாள் வேதா.
“அதென்னமோ நிஜம்தானே? நான் படுத்துக்கிற இடம் இங்கல்ல இருக்கு?” என அவளை கண்களால் அளந்து கொண்டே அவன் கேட்கவும் அவளுக்கு ஒரே சிரிப்பு.
அவள் படுத்த பின் அவளின் கை வளைவில் படுத்துக் கொண்டான். எப்போதுமே அப்படித்தான் அவளை அண்டிக் கொண்டுதான் உறங்க முற்படுவான்.
இரும்புத் தொழில் செய்பவன் மனைவியிடத்தில் மட்டும் இலவம் பஞ்சு மனம் கொண்டவன்தான்.
அகந்தை, கர்வம், இறுமாப்பு எல்லாமே அவனது அடையாள குணங்களாக இருந்தவைதான். அவனை ஓரளவுக்கு மாற்றியிருக்கிறாள் என தாராளமாக சொல்லலாம். இப்போது அவனுக்கு எல்லாமே மனைவிதான்.
தாய் பார்த்து வைத்த பெண்ணை மணந்து கொண்டான், அவளோ தாயையே அவனுக்கு திருப்பித் தந்தாள். வேதா அவனது வாழ்க்கையில் இல்லை என்றால் இன்று அவனுக்கு கிடைத்திருக்கும் அன்பு, அரவணைப்பு, சொந்தம் எதுவுமே இல்லை. அது அவனுக்குமே தெரிந்திருந்தது.
ஆதலால் வேதாவின் வார்த்தைகள்தான் விஷ்வாவுக்கு வேதவாக்கு! அவனுக்கு விருப்பமில்லா விட்டாலும் அவள் சொல்லி விட்டால் சரி என செய்து விடுவான். அவளும் அந்த சலுகையை தவறாக பயன்படுத்தாமல் கணவனை சரியாகவே வழி நடத்தினாள்.
வேதாவின் நாயகன், விஷ்வாவின் நாயகி இருவருடைய வாழ்க்கை கதையும் இன்னும் பல சுவாரஷ்யங்களும் மகிழ்ச்சியான தருணங்களும் நிறைந்ததாக இனிதாக, இதமாக இருக்கட்டும் என வாழ்த்தி விடைபெறுவோம்!