விஷ்வா, வேதா இருவரின் குடும்பங்களும் காலைப் பொழுதிலேயே கோயிலில் நிறைந்து காணப் பட்டனர்.
வேதா அணிந்திருந்த பழைய தாலியை உண்டியலில் செலுத்தி விட்டனர். இப்போது கோயிலில் வைத்து உறவுகள் சூழ முறையாக திருமணம் நடக்கவிருந்தது.
உண்மையெல்லாம் சந்திரனுக்கும் குணசேகருக்கும் கூட தெரிந்திருந்தது. அகல்யாவுக்கு இந்த நேரம் ஆறுதல் தேவை, சித்துவை சமாளிக்க வேண்டும், திடீரென விஷ்வா அம்மாவுடன் இணக்கமாகி விட்டதை பற்றி கேள்விகள் எழுந்தால் சரியான பதில் தர வேண்டும் என அனைத்தையும் யோசித்து, அவர்களிடம் சொல்லி விட்டார் வாசுகி.
வேதா கேட்டுக் கொண்டதால் அம்மாவுடன் இணைந்து விட்டான் என்றுதான் தாத்தாவிடமும் விஷ்வாவின் சித்தப்பா சித்தி மற்றும் ஏனைய உறவுகளிடமும் சொல்லப் பட்டிருந்தது.
தாத்தாவுக்கு ஏதோ புரிகிறது, வேதாவை அவர் பார்க்க, அவளோ அவரின் பார்வையை தவிர்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் எதையும் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளும் துணிவு தாத்தாவுக்கு இல்லை. அதிக நாட்கள் இருக்க மாட்டோம் என அவருக்கு தெரியும், அது வரை இப்படியே இருந்து விட்டு போய் விடுவோம் என முடிவு கட்டி விட்டார்.
விஷ்வாவுக்காக சந்திரனும் சண்முகநாதனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
முன்னர் நடந்தவை பற்றி அனைவருக்கும் கோவம் வருத்தம் இருந்த போதும் இப்போது அம்மாவும் மகனும் சுமூகமாகி விட்டதை மட்டுமே பெரிதாக நினைத்து தங்கள் கோவ தாபங்களை, மன வருத்தங்களை ஒதுக்கி வைத்து விட்டனர்.
ஆதிரனுக்கும் வாசுகி சொல்லியிருந்தார், அம்மாவின் அறிவுரை படி தனக்கேதும் தெரியாதது போலவே இருந்து கொண்டான் அவன்.
பட்டு அணிந்து தயாராகியிருந்தனர் விஷ்வாவும் வேதாவும். அவர்களின் ஆடைகள், திருமாங்கல்யம் என எல்லாம் அவர்களுக்கு அகல்யாவே ஆசை ஆசையாக வாங்கியதுதான்.
இன்னும் விஷ்வாவுக்கு அம்மாவிடம் இயலாபாக பேச வரவில்லை, பழைய குற்ற உணர்ச்சி முழுதாக நீங்கவில்லை என்பது ஒன்று, பல வருடங்களாக தள்ளியே இருந்து விட்டு இப்போது திடீரென அப்படி மாறிக்கொள்ள முடியவில்லை என்பது இன்னொன்று.
ஆனால் அகல்யாவுக்கு அப்படியில்லை, மகனிடம் சகஜமாக பேசினார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவனது கையை பிடித்துக்கொள்வதும் அவனது கன்னத்தை வாஞ்சையாக தடவிக் கொடுப்பதும் என பல வருட இழப்பை கொஞ்சம் போல ஈடு செய்து கொண்டார்.
அம்மாவின் அருகாமையில் விஷ்வாவுக்கும் உள்ளம் உருகியது என்பது மறுக்க முடியாத உண்மை.
சித்துவிடம் குணா பேசியிருந்தார். நீ ஒரு குழந்தைக்கு தகப்பனாக மாறும் போது உன் அம்மாவை புரிந்து கொள்வாயோ என்னவோ, இப்போது அவர்களை புரிந்து கொள்ள முடியா விட்டாலும் தொந்தரவு செய்யக் கூடாது என சொல்லியிருந்தார்.
கருவறையில் வைத்து பூஜை செய்யப் பட்ட மாங்கல்யம் கோர்க்க பட்ட மஞ்சள் கயிறை எடுத்து வந்தார் அர்ச்சகர்.
பெரியவர்கள் தொட்டு கும்பிட்ட பின், தன் கையில் வாங்கிக் கொண்ட விஷ்வா கண்களை மூடிமனதை ஒருநிலை படுத்தினான். அவளுக்கு வலுக் கட்டாயமாக தாலி கட்டிய நிகழ்வு வந்து போனது. நெற்றியை சுருக்கி, மனதை ஒருநிலைப் படுத்தி மனத் திரையை வெறுமையாக்கி கண்களை திறந்தான்.
மலர்த்த முகம், விரிந்த கண்கள், பூரித்த கன்னங்கள், சிரித்த இதழ்கள் என தேவ கன்னிகை போல நின்றிருந்தாள் வேதா. அவளை அப்படியே மனத் திரையில் பதித்துக் கொண்டான்.
தாலி கட்டும் போது ஒவ்வொரு முடிச்சையும் அவன் இறுக்கமாக போட, அனைவரது முகங்களிலும் சின்ன சிரிப்பு.
மனைவியை தன் பக்கம் நிறுத்தி, அவளின் கையையும் கெட்டியாக பிடித்துக்கொண்டான் விஷ்வா.
வேதாவுக்கு லேசாக கண்கள் கலங்கியிருந்தது. மகளின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்த வாசுகி, “அழக் கூடாது, நல்லா சிரிச்சா மாதிரி நில்லு” என்றார்.
மனைவியின் முகத்தை கவனித்த விஷ்வா, பார்வையால் கண்டனம் சொன்னான்.
“ஒரே ஒரு கல்யாணம்தான்னு உறுதியோட இருந்தவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார், அப்ப அழுகை வரும்தானே?” என வேடிக்கையாக கேட்டாள் வேதா.
“எத்தனை கல்யாணம் பண்ணினாலும் ஒரே பொண்டாட்டிதான், அதுல மாற மாட்டேன்” என விரிந்த புன்னகையுடன் சொன்னான் விஷ்வா.
மணமக்கள் அவர்களின் இல்லம் செல்ல இருந்தனர். அனைவருமே அங்கு புறப்பட, சித்தார்த் வர மாட்டேன் என அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்பாவும் மகனும் தனியாக பேசிக் கொண்டிருப்பதை கண்ட விஷ்வா அவர்களை நோக்கி செல்ல, ஏதாவது வம்பாகி விடுமோ என அவனின் கையை இழுத்தாள் வேதா.
“எனக்கு என் அம்மாவோட நிம்மதியும் சந்தோஷமும் ரொம்ப முக்கியம் வேதா, நடந்ததை மாத்த முடியாட்டாலும் இனி அவங்களுக்கு கஷ்டம் தர்ற எதையும் செய்ய மாட்டேன்” என உறுதியாக சொன்னான் விஷ்வா. வேதாவும் கணவனின் கையை விடுவித்தாள்.
விஷ்வா வருவதை கவனித்த குணா, பேசுவதை நிறுத்தி விட்டார். சித்தார்த் ஒரு வித எரிச்சலோடு அங்கிருந்து செல்லப் பார்த்தான்.
“எங்க போற, நில்லு” என தம்பியிடம் சொல்லிக் கொண்டேதான் வந்தான் விஷ்வா.
அப்பாவின் முன்னிலையில் அண்ணனின் வார்த்தையை அலட்சிய படுத்த முடியாமல் நின்றான் சித்தார்த்.
“எனக்கு உம்மேல எந்த வருத்தமும் இல்லப்பா, நான் வராம என்ன, கண்டிப்பா வர்றேன்” என அவனின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே சொன்னார் குணா.
அவரிடமிருந்து தன் கையை விலக்கிக் கொள்ளாமலே சித்துவை பார்த்தவன், “எங்க போற, வா வீட்டுக்கு” என்றான்.
தன்னிடம் இவன் இறங்கி வருவான் என சித்து எதிர் பார்க்கவில்லை, ஆகவே என்ன சொல்லவென தெரியாமல் விழித்தான்.
“வர்றேன்னு சொல்லு சித்து!” என சத்தமில்லாமல் அதட்டினார் குணா.
சித்து ஏதும் சொல்லாமல் பார்வையை திருப்பிக் கொண்டான்.
“பேசாட்டா பரவாயில்லை, வருவான் அவன்” என உள்ளுக்குள் மூண்ட கோவத்தை மறைத்து, நல்ல விதமாகவே சொல்லி சென்றான் விஷ்வா.
விஷ்வா அவர்களிடம் சென்ற போதே அகல்யாவை அழைத்து காண்பித்திருந்தார் வாசுகி. தன் கணவரை பற்றி அகல்யாவுக்கு எப்போதுமே பயமிருந்ததில்லை. காயப்பட்டு அதீத மன இறுக்கத்தில் இருந்த காலத்திலேயே அவர்தான் அவருக்கு எல்லாமுமாக இருந்தவர். மனைவியை முழுதாக புரிந்து கொண்டவர், விஷ்வாவை எப்போதுமே தன் முதல் மகனாக நினைப்பவர்தான். ஆனால் தனதிரு மகன்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமே என்ற கவலை இருந்தது.
இப்போதும் விஷ்வாவிடம் பேச மறுத்து நிற்கும் சின்ன மகனை கண்டு விட்டு முகம் சுணங்கி போனார் அகல்யா.
“வீட்டுல ரெண்டு ஆம்பள புள்ளைங்க இருக்கிறவங்கள கேட்டு பாருங்க, அடிதடி ரகளை மண்டை ஒடப்பு எல்லாத்தையும் தாண்டித்தான் என் அண்ணன்டா என் தம்பிடான்னு நிப்பானுங்க. இது ரெண்டுக்கும் சின்னதுல மல்லுகட்டிக்க வாய்ப்பு கிடைக்கல, இப்பதான் அமைஞ்சிருக்கு. எல்லா ரகளையும் முடிச்சிட்டு சேர்ந்துக்குவாங்க, இதை மனசுல தூக்கி வச்சிட்டு உங்க நிம்மதிய கெடுத்துக்க வேணாம்” என வாசுகி சொல்ல, சமம்தமாக சிரித்தார் அகல்யா.
ஆதி ரகசியமாக யாருடனோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, வேதாவின் பார்வை அவனிடம் சென்றது.