வர்ஷினியிடம் அடுத்த இரண்டுநாளும் வீட்டில் யாரும் பேசவில்லை.
சிவகுமார் தன் அக்காவின் அழைப்பினை ஏற்கவில்லை இப்போது. என்ன காரணம் சொல்லுவது என தயங்கினார்.. ‘எல்லாம் முடிவாகும் நேரம்.. இப்படி சொல்லுகிறாளே பெண்..’ என கைதவறிய பொருளுக்காக ஏங்குவது போல சிவகுமார் உடைந்து அமர்ந்தார்.
சிவகுமாரின் அக்கா விஜயாவின் எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினார்.
மது விஜயா இருவரும் என்ன செய்வது என தெரியாமல் நின்றனர். அரைமணி நேரம் சென்று மீண்டும் அழைப்பு.. மது அழைப்பினை ஏற்று “அத்தை, அப்பாக்கு திடீர்ன்னு மயக்கம் வந்துவிட்டது.. நாங்க ஹாஸ்பிட்டல் போயிட்டிருக்கோம்.. நான் அப்புறமாக பேசவா.. அவர்களிடம் சொல்லிவிடுங்கள்” என்றாள்.
அத்தையின் எந்த பேச்சினையும் கேட்கவில்லை.
விஜயா “அத்தை இங்க வந்திடுவாங்க” என்றார், மகளிடம்.
என்ன செய்வது உடனடியாக மது சமாளித்தாள். அன்னையும் மகளும் பேசிக் கொண்டிருந்தனர்.
வர்ஷினி ஹால் வந்து நின்றாள்.
விஜயா பெண்ணினை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார். ஏதும் பேசவில்லை.
மது “வர்ஷினி முன்பே சொல்லியிருக்கலாமில்ல..” என்றாள்.
தலைகுனிந்து நின்றாள் பெண்.
அன்னைக்கு கோவம் குறையவில்லை “திட்டம் போட்டு நம்மை அவமானப்பட வைச்சிட்டா.. இப்போது எப்படி அண்ணியோட முகத்தில் விழிப்பது. சொந்தங்கள் என்ன சொல்லும் ஏதாவது யோசிச்சாளா” என புலம்பத் தொடங்கினார்.
வர்ஷினி, அன்னையின் அருகில் வந்தாள்.. “சாரி ம்மா.. எனக்கு புரியுது, ஆனால்..” என நிறுத்திக் கொண்டாள்.
“உன் அப்பா உன்னை வெளியூர் கூட அனுப்ப பயப்படுகிறார்.. உனக்கு எல்லாம் தெரியும். எல்லாம் தெரிந்தும் இதென்ன அந்த சர்வேஷ் வேண்டுமென சொல்லுகிறாய்” என்றார்.
வர்ஷினிக்கு எந்த நியாமும் இல்லை பேசுவதற்கு. காதல் பக்கம் இருப்பவர்களுக்கு.. அந்த காதல் ஒன்றே நியாயமானது. எதிர் பக்கம் இருப்பவர்களுக்கு காதல் அநியாமானதுதானே.
சிவகுமார் மேலே உள்ள அறைக்கு சென்றுவிட்டார்.
விஜயா தங்களின் அறையில் முடங்கிக் கொண்டார்.
மது ஹரிணி வரவும் அவளை கவனிக்கத் தொடங்கினாள்.
வர்ஷினி தனியாக அமர்ந்துக் கொண்டாள்.
வீடு ஸ்தம்பித்தது.
அன்று முழுவதும் வர்ஷினி தன் அறையிலேயே இருந்தாள். யாரும் அவளோடு பேசவில்லை. ஹரிணியை கூட அவள் அறைக்கு அனுமதிக்கவில்லை. இரவு எழுந்து வந்து தானாக உண்டாள்.
மது அவள் வரவும் தோசை ஊற்றிக் கொடுத்தாள். ஆனால், பேசவில்லை.. அன்னை தந்தை இருவரும் கீழே வரவில்லை.. அத்தையிடம் என்ன சொல்லியிருக்கிறார் தந்தை என தெரிவில்லை மதுவிற்கு.. அதனால் ஒரு கோவம் தங்கையின் மீது. பேசவில்லை அவளும்.
மறுநாள் வர்ஷினி காலை ஏழு மணிக்கே அலுவலகம் கிளம்பிவிட்டாள். வீட்டில் யாரும் எழவில்லை.
சிவகுமார் எழுந்து வந்தார்.. ஒரு முடிவோடு வந்துவிட்டார். அப்படிதான் இருந்தது அவரின் முகம்.
சிவகுமார் யாரும் எழுந்திருகாததை உணர்ந்து தானே காபி கலந்துக் கொண்டார்.
சமையலறையில் சத்தம் உணர்ந்து விஜயா எழுந்து வந்தார். கணவர் கையில் காபியோடு இருப்பதை பார்த்து, தான் குளிக்க சென்றார்.
விஜயா பரபரவென ஒரு அடுப்பில் குக்கர் வைத்தார். மற்றொன்றில் தண்ணீர் வைத்தார்.. காய்கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினார். கிட்சென்னில் அன்றாடம் வேலை நடந்தாலே.. அந்த வீடு உயிர்ப்போடு இருக்கும் போல.
நேரம் ஆக.. வர்ஷினி இன்னமும் எழுந்து வரவில்லையே என சிவகுமார் சென்று அறையில் பார்க்க.. அவள் அங்கே இல்லை. அப்போதுதான் வெளியே வந்து பார்த்தார்.. அங்கே வண்டி இல்லை. பெண் கிளம்பிவிட்டாள் என எண்ணிக் கொண்டு.. வர்ஷினிக்கு அழைக்க எண்ணினார். போனில் சார்ஜ் இல்லாமல் போக.. சார்ஜ் போட்டு அமர்ந்திருந்தார்.
வர்ஷினி அந்த நேரத்தில் கோவிலில் இருந்தாள். கிளம்பிவிட்டாள்.. ஆனால், எங்கே செல்லுவது என தெரியவில்லை.. அதனால், கோவிலில் சென்று அமர்ந்துக் கொண்டாள். அவள் செல்லும் வழியில் இருக்கும் ஒரு அம்மன் கோவில். வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் இருந்தது. சாமி கும்பிட்டு வந்து அமர்ந்துக் கொண்டாள்.
சர்வேஷ்ஷூக்கு மேசேஜ் செய்துக் கொண்டிருந்தாள்.. நேற்று நடந்தவைகளை. நேற்று முழுவதும் அவனின் அழைப்பினையும் ஏற்கவில்லை.. செய்தியும் அனுப்பவில்லை. இப்போதுதான் செய்தி அனுப்பினாள். அவன் அலுவலகம் வந்துக் கொண்டிருந்தான் இந்த நேரத்தில். பொதுபயன்பாட்டிற்கான பஸ்தான் அவன் பயன்படுத்துவது. இன்னமும் கார் வாங்கவில்லை. ‘தனியான எனக்கு எதுக்கு கார்’ என வாங்கவில்லை.. அப்படி அவசரம் என்றால்.. ராக்கியின் கார் எடுத்துக் கொள்வான்.
இப்போது அவள் செய்தி அனுப்பவும் உடனே பார்த்தான். ‘என்ன சொல்லிட்டாளா..’ என உடனே அழைத்தான் அவளுக்கு.
வர்ஷினி சின்ன குரலில் பொறுமையாக நேற்று நடந்தவைகளை சொன்னாள்.. “என்கிட்ட சொல்லவில்லை.. ஜாதகம் ஒத்து வந்துவிட்டது பேச போகிறோம் என. திடீர்ன்னு சொன்னாங்க.. எனக்கு என்ன செய்வதுன்னு தெரியலை.. அதான் சொல்லிட்டேன்..” என விவரித்தாள். “யாரும் இன்னமும் என்னிடம் பேசவில்லை” என்றாள் குரல் கமர.
சர்வேஷ் “இருக்கத்தானே செய்யும்.. அவங்களுக்கு இது ஷாக்தானே. நானும் அக்கா அம்மாகிட்ட சொல்லி வந்து பெண் கேட்க்க சொல்றேன்” என்றான்.
“இருங்க சர்வேஷ் அப்பா கோவம் கொஞ்சம் குறையட்டும். நீங்க வீட்டில் சொல்லுங்க.. பொண்ணு கேட்க்க வேண்டாம். அப்பாக்கு உங்களை பிடிக்கும்.. நீங்க வெளிநாட்டில் இருப்பதுதான் அவருக்கு பயம்.” என்றாள் அவனை சமாதானமாக்க.. அதான் உண்மை என்றாலும், வர்ஷினி தங்களை பற்றி சொன்ன நேரமும் கொஞ்சம் நெருடலான நேரம்தானே என சர்வேஷ்ஷூக்கு புரிந்தது.
“இன்னும் எழுந்துக்கலையா நீ” என்றான்.
பெண்ணவள் அப்போதுதான் “நான் வீட்டில் இல்லை.. சீக்கிரமாக கிளம்பி வந்துட்டேன். நேற்று யாருமே பேசலையே சாப்பிட வான்னு சொல்லலை தெரியுமா.. எனக்கு அப்பா அம்மாவும் வெளியே வரவேயில்ல.. நான் அங்கிருந்தால் அவர்களும் பேச முடியாது என சீக்கிரமாக கிளம்பி வந்துட்டேன்” என்றாள் குழந்தையாக.
சர்வேஷ் அவளின் இந்த பேச்சில்.. அவள் தன்னை தேடுவதைத்தான் உணர்ந்தான்.. அவளின் தைரியம் எங்க போகிற்று எனகூட யோசனை அவனுக்கு. அவளை தேற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டே “வர்ஷி, அதெல்லாம் பரவாயில்ல.. உன் அப்பா அம்மாதானே கேட்கல.. நீ கேட்டியா.. அவங்க சாப்பிட்டாங்களான்னு. அவங்களுக்கும் கொஞ்சம் டைம் வேணுமே வர்ஷினி. நாம தப்பு பண்ணல.. அதே நேரம் அவங்களும் தவறு பண்ணலையே.. நமக்கே புரியுமே.. பொறுமையாக அவங்களை கன்வீன்ஸ் பண்ணனும் வர்ஷினி.. நீ எதையும் நினைக்காத.. உன்னை அவங்ககிட்டிருந்து பிடுங்கி கூட்டிட்டு போகமாட்டேன்.. அவங்க வீட்டில் இருப்பது போல.. என் வீட்டிலும் நீ ராணியா இருக்க ஆசைப்பட்டுதானே உன்னை தேடுகிறேன். சோ, குயீன் போஷிஷன் ஆல்வேஸ் ட்ஃப்” என்றான்.
வர்ஷினிக்கு இந்த தத்துவத்தை கேட்டு கொஞ்சம் கோவம்தான் வந்தது.. நானே நேற்று ஏழுமணிக்கு சாப்பிட்டது அதுவும் ரெண்டு தோசை .. இன்னமும் ஏதும் சாப்பிடலை.. இவன் வேற என எண்ணிக் கொண்டு இவள் அமைதியாக இருக்க.. சர்வேஷ் “நீ இன்னமும் சாப்பிடலைதானே” என்றான்.
“என்ன அதிசயம்.. கேட்டுடீங்க.. பசியில் அட்வைஸ் கேட்பது எவ்வளவு கொடுமை தெரியுமா” என்றாள் தன்னையறியாமல்.. என்னமோ அவள் மாறியிருந்தாள்.
“சாரி வர்ஷி.. சாரி டா.. கிளம்பு, போய் முதலில் நல்ல ஹோட்டலாக பார்த்து சாப்பிடு.. கவனமாக பார்த்து போ..” என்றான்.
“ம்..” என்றாள்.
“மிஸ் யூ வர்ஷி.. உன்னை தனியா விட்டுட்டேன் திரும்பவும்..” என்றான்.
கன்னம் தாண்டியது கண்ணீர் பெண்ணவளுக்கு.. “க்கு.. லவ் யூ சர்வா” என்றாள்.
இருவருக்கும் அந்த அழைப்பினை துண்டிக்க மனதேயில்லை.. பார்க்கும் தூரத்தில் இருந்திருக்க கூடாதா என எண்ணிடாமல் இருக்க முடியவில்லை இருவருக்கும். இருவரும் போனினை கையில் வைத்துக் கொண்டே கண்கலங்கினர். மனதேயில்லாமல் அழைப்பினை துண்டித்தனர்.
வர்ஷினி, அலுவலகத்தின் அருகில் இருக்கும் ஹோட்டலில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தாள்.. அவளின் தந்தை அழைத்தார்.
பெண்ணவள் அழைப்பினை ஏற்று காதில் வைத்துக் கொண்டாள் ஏதும் பேசவில்லை.
தந்தைதான் பேசினார் “வர்ஷினி எங்க இருக்க” என்றார், குரலில் கடினம்தான் இருந்தது.
“ஆபீஸ் ப்பா..” என்றாள்.
சின்னதான ஒரு நிதானம் வந்திருந்தது போல.. ஒரு நெடிய மூச்சு அவரிடம்.. இப்போது சாதாரணமான குரலில் “என்ன இவ்வளவு சீக்கிரமாக கிளம்பிட்ட” என்றார்.