“இந்த கண்டிஷன் எனக்கு மட்டும் தானா?” என்று எதிர்கேள்வி கேட்டாள் சுபாஷிணி.
“ம்ப்ச்… எங்கூட உன்னைக் கம்பேர் பண்ணாத சுபா.” தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் அதட்டும் குரலில் சொன்னான் சேனாதிபதி.
“அது சரி… நீங்களும் நானும் ஒன்னில்லை தான்.. அதனாலத் தான், நான் கிளம்புனதைப் பத்தி ஒரு நோட் எழுதி பெட்ரூம் சைட்லேம்ப் பக்கத்துல இருக்கிற புக்ல வச்சிருக்கேன்… நீங்க செய்து வச்சதுக்கு நான் இதுகூட செய்திருக்க கூடாது தான். ஆனா ஏசிபி யோட வைஃபையே காணலையாம், அது தெரியாம அவரும் இருந்திருக்காராம்னு யாரும் உங்களை கேலி பண்ணிடக்கூடாதுல்ல, அதான் வச்சிட்டு வந்தேன்” என்றாள் கோபமாக.
மனைவி சொன்ன இடத்திலிருந்து அவள் எழுதிய குறிப்பை எடுத்து சேனாதிபதி படித்துப் பார்த்தான். கணவனிடம் பேசியதை அப்படியே அதில் வார்த்தைகளாக்கியிருந்தாள் சுபாஷிணி.
‘நான் பயணத்திற்காக என் உடமைகளை எடுத்துச் செல்லுவதற்காக வீட்டிற்கு வந்திருக்கும் போது சுபா இருந்திருந்தால் கண்டிப்பாக சொல்லிவிட்டு தான் சென்றிருப்பேன். அந்நேரம் சொல்லாதது அப்படியே வேலையில் தள்ளித்தள்ளி போய்விட்டது. என் வேலை அப்படி, அதற்காக அவள் என்னிடம் சொல்லிவிட்டு செல்லமாட்டாளாமா?’ என்று மறுபடியும் மறுபடியும் சுபாஷிணியின் மீது கோபம் தான் வந்தது சேனாதிபதிக்கு. அதை அவன் மனைவியிடம் மறைக்காமல் வெளிப்படுத்த,
“நீங்க என்ன குடுக்குறீங்களோ, அதுதான் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்” என்று விட்டாள் சுபாஷிணி. மனைவியின் அசராத பேச்சில் போனை வைத்தவன் இன்றுதான் அவளுக்கு திரும்ப அழைத்திருக்கிறான்.
கணவனின் அன்றைய பேச்சின் தோரணை இன்றைய பேச்சின் தோரணை எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக வீட்டுக்கு சென்றதும் சொல்லாமல் சென்றதற்காக தனக்கு அர்ச்சனை நிச்சயம் என்று தான் தோன்றியது சுபாஷிணிக்கு.
என்ன நடந்தாலும் பரவாயில்லை… அதற்காக, கணவன் செய்வது எல்லாம் சரி என்று தன்னால் பூம்பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டு ஒரு வாழ்க்கை வாழ முடியாது என்று சுபாஷிணியின் மனது முரண்டு பிடித்தது.
சுபாஷிணியின் எண்ணம் இவ்வாறு இருக்க, அங்கே சேனாதிபதியின் நிலமையோ படுமோசமாக இருந்தது.
ஆமாம்… இரண்டு வருடங்களாக அதே வீட்டில் தனியாக வசித்தவனுக்கு, இப்போது மனைவி இல்லாத அந்த வீட்டுக்குள் நுழையவே மனதில்லை. வீட்டில் எங்கு பார்த்தாலும் அவள் உருவமே நிறைந்திருக்க, நிஜத்தை விடுத்து நிழலோடு உறவாட மனமின்றி, பெரிதாக வீடுதங்காமல் வேலையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு அலைந்தான்.
ராகேஷூம், அந்த இன்னொரு வாலிபனும் கைது செய்யப்பட்ட செய்தி பத்திரிகையில் வெளியாகவும், இன்னும் சில பெண்களும் தைரியமாக வெளியே வந்து அவர்கள் மீது புகாரை பதிவு செய்தார்கள். அதன்மூலம் அந்த இருவரையும் வெளியுலகையே காணமுடியாத அளவிற்கு செய்துவிட வேண்டும் என்று முனைப்பாக வேலையில் ஈடுபட்டுக் கெண்டிருந்தான் சேனாதிபதி.
இரவில் தூங்குவதற்காக மட்டும் வீட்டுக்கு வருபவனுக்கு கட்டிலில் தன்னருகே இருக்கும் வெற்றிடம் பெரும் சோதனையாக இருந்தது. இந்த அளவிற்கா தன்னில் மனைவி நிறைந்து போயிருக்கிறாள் என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.
‘இத்தனைக்குப் பிறகு சுபாஷிணியின் மீது காதல் வராது என்று நினைத்திருந்தோமே… ஆனால் இப்போது அவள் இல்லாமல், என் உலகம் இயங்க மறுக்கிறதே, இதற்குப் பெயர் காதல் இல்லாமல் என்ன?’ என்று சேனாதிபதியின் அறிவு கேள்வி எழுப்பியது.
‘மனைவி என்ற பந்தத்தில் இத்தனை நாட்களாக ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பதால் அவளைத் தேடுகிறது, மற்றபடி அவள் மீது காதல் என்றெல்லாம் எதுவும் இல்லை’ என்று, அறிவு சொன்னதை ஏற்க மறுத்தது சேனாதிபதியின் மனது.
ஞாபகங்கள் பலநேரங்களில் வரம் ஆகும். அதே ஞாபகங்கள் சிலநேரங்களில் சாபமாகவும் போய்விடும். சுபாஷிணியோடான சேனாதிபதியின் ஞாபகங்கள் அவனுக்கு சாபமாகப் போய்விட, அறிவுக்கும் மனதிற்கும் இடையே நடந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் கடைசியில் ஜெயித்தது என்னவோ அவன் மனம் தான்.
திவ்யா திருமணம், அதைத்தொடர்ந்த நிகழ்வுகள் என்று எல்லாவற்றிலும் கலந்து கொண்டு, தோழியிடமிருந்தும் அவள் குடும்பத்தினரிடமிருந்தும் பிரியா விடைபெற்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்து இறங்கிய சுபாஷிணிக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
ஆமாம்… அந்த மத்தியான வேளையில் மனைவியை எதிர்நோக்கி, சுபாஷிணி வந்த ட்ரெயின் நடைபாதையில் நின்று கொண்டிருந்தான் சேனாதிபதி.
ட்ரெயின் வந்து நிற்கவும், நொடியில் மனைவியைக் கண்டு கொண்டு புன்னகைமுகமாக அவளை நோக்கி சேனாதிபதி நகர, என்னதான் அவனிடம் சொல்லாமல் கிளம்பி வந்ததுக்கு ஆயிரம் காரணங்கள் தனக்குள் சொல்லிக் கொண்டாலும், கணவனை நேரில் கண்டதும் கொஞ்சம் திக்கென்றது தான் இருந்தது சுபாஷிணிக்கு.
“ஸ்டே ஸ்ராங் சுபா.” தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தன் அலுவலக தோழிகள் சகிதம் கணவனை நோக்கி சுபாஷிணி நகர, மனைவியின் அருகே வந்த சேனாதிபதி, “ஜர்ன்னி கம்ஃபர்ட்டாபிளா இருந்ததா?” என்று அனைவருக்கும் பொதுவாக கேட்டான்.
அந்த பெண்களும் புன்னகையோடு பதில் சொல்லி, விடைபெற்று அங்கிருந்து கிளம்பி சென்றுவிட, அவர்கள் போவதை பார்த்தபடியே நின்றிருந்தாள் சுபாஷிணி.
“நாம இப்போ வீட்டுக்கு போலாமா? இல்ல இங்கயிருந்தே வேற எங்கயும் போறமாதிரி ப்ரோக்ராம் எதுவும் வச்சிருக்கியா?” சீண்டலாக கேட்டபடியே மனைவியின் கையிலிருந்த பயணப்பையை தன் கைக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொண்டான் சேனாதிபதி.
கணவன் மீதான கோபம் முற்றிலும் குறையாத மனநிலையில் இருந்த சுபாஷிணியோ, “எனக்கு போகணும்னு தோணிச்சின்னா கண்டிப்பா போவேன். யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்” என்றாள் கணவனை வெறுப்பேற்றும் விதமாக.
“ஓஹ்… இனிமே ஒருதடவை எங்கிட்ட சொல்லாமப் போய்ப்பாரு… அப்புறம் தெரியும் இந்த சேனாதிபதி யாருன்னு.” மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் சேனாதிபதி அதட்டலாகச் சொல்ல, “இனிதான் அது எனக்கு தெரியணும்னு இல்ல” என்றாள் சுபாஷிணி அமைதியாக.
சுபாஷிணியின் பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்க, அவளை ஊடுருவது போல பார்த்தான் சேனாதிபதி. அதற்குமேல் இருவருமே பேச்சை வளர்க்காமல் சேனாதிபதி அழைத்து வந்திருந்த வாடகைக் காரில் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.
சரியாக சாப்பாட்டு நேரம். வெளியே எங்கேயும் சாப்பிட்டு நேரத்தை வீணாக்க விரும்பாமல் வீட்டுக்கு மனைவியோடு வந்திருந்த சேனாதிபதி காரில் வரும்போதே, தரமான ஒரு ஹோட்டலில் மதிய உணவை வாங்கி வரும்படி ஸ்விகியில் ஆர்டர் செய்திருந்தான்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்திருந்த பதினைந்து நிமிடங்களில் ஆர்டர் செய்திருந்த உணவும் வந்து சேர, சுபாஷிணியும் குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வந்திருந்தாள்.
“வா சுபா… சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு” என்றபடியே உணவைப் பிரித்து தட்டுகளில் சேனாதிபதி பரிமாற, குறைந்தபட்சமாக தன் செயலுக்கு “சாரி” என்ற ஒற்றை வார்த்தையைக் கூட சொல்லாமல் வெகு இயல்பாக நடமாடிக் கொண்டிருக்கும் கணவன் மீது கோபம் வந்தது சுபாஷிணிக்கு.
எனவே, “உங்களுக்கு வேணும்னா நீங்க சாப்பிடுங்க, எனக்கு வேண்டாம்…” என்றபடி மறுபடியும் அறைக்குள் நுழைந்து கொள்ள பார்த்தாள் சுபாஷிணி.
அதற்கு இடம்தராமல், சட்டென்று மனைவியின் இடையோடு கைகொடுத்து தூக்கிக்கொண்டு போய் டைனிங்டேபிள் நாற்காலில் அமரவைத்த சேனாதிபதி, “தெம்பா சாப்டுட்டே எங்கூட சண்டை போடுவியாம்” என்றான் மனைவியின் மூக்கோடு தன் மூக்கை உரசியபடி.
கணவனின் எதிர்பாராத இந்த செயலில் அடங்கிக் கிடந்த கோபம் தூண்டப்பட, தன் இடுப்பிலிருந்த அவன் கையை தட்டிவிட்டபடியே, “நீங்க சொல்லுறபடி எல்லாம் கேட்டு ஆடணும்னா, என்னைப் போல உயிருள்ள பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க கூடாது. உங்களுக்கே உங்களுக்குன்னு டிசைன் பண்ணுன ரோபோவைத் தான் நீங்க கல்யாணம் பண்ணியிருக்கணும்.” சட்டென்று சொல்லிவிட்டாள் சுபாஷிணி.
தன் பிடியிலிருந்து விலக முயற்சி செய்த மனைவியின் முயற்சியை எளிதாக முறியடித்த சேனாதிபதி, “இப்போ என்ன? உங்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா?” மனைவியின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அவன் கண்களையேப் பார்த்தாள் சுபாஷிணி.
“ஓகே… சாரி… ஆனா, சாரி கேக்குறதை விட, நடந்த தவறுகள் திரும்பவும் நடக்காம பாத்துக்கணும்னு நினைச்சேன்.” மனைவியின் விலகாத பார்வையை எதிர்கொண்டு ஆழ்ந்த குரலில் சொல்லியவன், அவ்வளவு தான் என்பது போல உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
கணவனின் இந்த வார்த்தைகள் தன்னிடம் சொல்லாமல் சென்றதற்கானது மட்டுமல்ல என்று புரிந்து கொண்ட சுபாஷிணியும், அதற்கு மேலும் எதுவும் சொல்லாமல் தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்த சேனாதிபதி அலுவலகத்திற்கு செல்ல, சுபாஷிணி படுத்து தூங்கிவிட்டாள்.
இரவு, என்றுமில்லாமல் தானே மனைவிக்கு அழைத்து, “வர லேட்டாகும். நீ சாப்பிட்டுட்டு தூங்கு சுபா” என்று சேனாதிபதி சொல்ல, எதைப்பற்றியும் யோசித்து அலட்டிக்கொள்ளாமல் படுத்து தூங்கி விட்டாள் சுபாஷிணி.
இரவு பதினோரு மணிக்கு பிறகு வீட்டுக்கு வந்த சேனாதிபதிக்கு, மனைவியின் வருகையில் தங்களது அறையே உயிர்பெற்றது போலத் தெரிந்தது.
சந்தோஷமான மனநிலையில் உடல்கழுவி படுத்தவன், விழி அகலாது மனைவியைப் பார்த்தான். தூக்கத்தில் கூட வேதனையின் சாயல் தெரிந்த மனைவியின் முகம் அவனை என்னவோ செய்ய, அப்போதே அள்ளி அணைத்து அவள் வேதனைகளை போக்கி விட வேண்டும் என்று அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் பரபரத்தது.
ஆனால், குழம்பிய மனநிலையில் இருக்கும் மனைவியின் மனது தன் செயலால் காயப்பட்டு போகக்கூடாது என்று தன்னை அடக்கிக்கொண்டவனின் கை விரல்கள், தன்னை மீறி, மனைவியின் மூக்குதியின் மீதும், உதட்டு மச்சத்தின் மீதும் ஊர்வலம் நடத்தியது.
அதில் புருவம் சுழித்த சுபாஷிணி புரண்டு படுத்துக் கொள்ள, ‘உள்ளதும் போச்சா…’ என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டவனின் மனமெங்கும் சிந்தனையின் சாயலே.
மறுநாள் காலையில் தினசரி கடமைகளை முடித்து, பணிக்கு செல்வதற்காக கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தான் சேனாதிபதி. சுபாஷிணியும் வேலைக்கு செல்வதற்காக கிளம்பி, காலை உணவாக உப்புமா செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அன்றைய பொல்லாத ஞாயிற்றுக்கிழமைக்கு பின், சுபாஷிணி சாப்பிடுவதற்கு கணவனை அழைப்பதுவும் இல்லை, அவனும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.
ஆனால் இன்று, “எனக்கு தராம தனியே சாப்பிடுறியே சுபா? வயிறு வலிக்கப் போகுது ம்மா உனக்கு…” என்றபடியே மனைவிக்கு அருகே வந்து அமர்ந்தான் சேனாதிபதி.
‘நீ பேசியது எனக்கு கேட்கவேயில்லை’ என்ற பாவனையில் சுபாஷிணி இருக்க, “இதை எனக்கு தந்துட்டு, நீ வேற எடுத்துக்கோ” என்று மனைவியின் முன் இருந்த தட்டை தன்பக்கமாக இழுத்தான் சேனாதிபதி.
தட்டை நகரவிடாமல் சுபாஷிணியும் இழுக்க, “இரண்டு தட்டு எதுக்கு? ஒரே தட்டுல இரண்டு பேரும் சாப்பிட்டுடலாங்குறியா? அதுவும் சரிதான்” என்றபடியே அந்த தட்டிலேயே சேனாதிபதி சாப்பிடத் தொடங்க, எதுவும் சொல்லாமல் எழும்பிச் சென்று வாஷ்பேஷனில் கைகழுவிய சுபாஷிணி, அடக்கமுடியாமல் வாய்விட்டு அழுதாள்.
இத்தனை வருடங்களுக்கு பிறகும், அன்றைய தன்னுடைய பேச்சை, வெளியே நடந்த ஏதோ ஒரு நிகழ்வோடு இணைத்து தன்னை காயப்படுத்தும்படி பேசிய கணவன், இப்போது, எல்லாம் மறந்தது போல தன்னோடு ஒட்டி உறவாட முயல்வதை சுபாஷிணியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
‘எப்போது என்ன பேசுவானோ என்று பயந்து பயந்து வாழ்வதற்கு பதிலாக அவனிடமிருந்து ஒதுங்கி இருந்து கொண்டால் பிரச்சினையே இல்லையே’ என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் அதற்கு விடாமல் சேனாதிபதி அவளை தன்னோடு இழுத்து பிடிக்க முயல, இயலாமையில் ஓ… என்ற அழுகை அவளிடம்.
மனைவியின் எண்ணம் புரிந்தது போல, அவள் அருகில் வந்து தன்னோடு சேர்த்தணைத்து ஆறுதல்படுத்திய சேனாதிபதி, காலம் தங்களுக்கு வைத்திருக்கும் கணக்கை அறியாமல், “என்னை நம்பு சுபா… நம்பிக்கை தான் வாழ்க்கை” என்று மனைவியின் காதோரம் மெல்லிய குரலில் சொல்ல, ஆசை கொண்ட பெண்ணவளும் கணவனின் மார்பில் வாகாக சாய்ந்தபடி நம்பிக்கையோடு தலையசைத்து கேட்டுக் கொண்டிருந்தாள்…