அவன் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க “இப்ப எதுக்கு இப்படி கண் எடுக்காம பாக்குறீங்க? எனக்கு ஒரு மாதிரி இருக்கு”, என்றாள்.

“உன்னை கிஸ் பன்றதுக்கு ஏதாவது வாய்ப்பு வருதான்னு பாக்குறேன்”

“அதெல்லாம் தானா வராது, நாம தான் வர வைக்கணும்”, என்று அவளையே மீறி சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“ஹா ஹா சரி தான்”, என்றவன் அடுத்த நொடி அவளை நெருங்கி இருந்தான்.

அவன் உதடுகள் அவளை கொள்ளை இட அவனுக்கு குறையாத ஆவலுடன் அவனை தழுவிக் கொண்டாள். சற்று நேரத்தில் ரோட்டில் சென்ற வாகனம் ஏற்படுத்திய சத்தத்தில் நடப்புக்கு வந்தவன் அவளை விட்டு விலகி அமர்ந்தான்.

இருவரின் இதயத்துடிப்பும் அவர்களை மீறி எகிறிக் கொண்டிருந்தது. ஏ.சியின் குளுமையிலும் இருவருக்கும் வியர்த்தது.

தன்னுடைய உணர்வுகளே அவளைக் கேட்கும் போது அவளுக்கு எப்படி இருக்கும் என்று உணர்ந்தவன் அவளை சரி செய்யும் விதமாக “இன்னைக்கு சாயங்காலம் கல்யாண பத்திரிக்கை வந்துரும் மங்கை”, என்றான்.

ஒரு நொடியில் தன்னை சரி செய்து கொண்டவள் “உங்க பேர் பக்கத்துல என் பேர் இருக்குறதே ரொம்ப பெரிய விஷயம் தெரியுமா? எனக்கு அதுல அவ்வளவு திருப்தி சந்தோஷம்”, என்றாள்.

“வேற ஏதும் ஆசை இருக்கா டி உனக்கு?”

“ஆசைன்னு சொன்னா உங்களை கல்யாணம் பண்ணுறது தான். ஆனா அந்த கல்யாணத்துல எனக்கு சின்ன சின்ன எதிர்பார்ப்பு இருக்கு”, என்றவள் காரை கிளப்பினாள்.

குழந்தையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன் “சொல்லுங்க மேடம் கேப்போம்”, என்றான்.

“தனியா சொல்றதுக்குன்னு இல்லை பார்த்தி. தாலி கட்டுறது, அதுவும் மூணு முடிச்சை நீங்களே போடணும், அதுக்கு அப்புறம் தான் கயல் ரெண்டு முடிச்சை போடணும், அப்புறம் மெட்டி போட்டு விடும் போது நீங்க என்னை நிமிந்து பாக்கணும். அப்புறம் நெத்தில குங்குமம் வைக்கும் போது நம்ம ரெண்டு பேரோட கண்ணும் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துதுன்னு பாக்கணும். அப்புறம் சாப்பிடும் போது உங்களுக்கு ஊட்டி விடணும். இன்னும் நிறைய இருக்கு பார்த்தி”, என்று அவள் சொல்லிக் கொண்டே இருக்க அவளை அவ்வளவு காதலாக பார்த்தான்.

தன்னவனின் உரிமையான பார்வையும் அவன் விழிகளில் வழிந்த நேசமும் அவளுக்கு அப்படி ஒரு நிறைவை தந்தது. சந்தோஷமாக வீடு நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்தது.

அன்று இரவு ஜவுளிக் கடையில் பணிபுரியும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள் கனகா. அவளுடன் இன்னும் இருபது பேர் தங்கி இருந்தார்கள். ஒரே ஹால் தான். அங்கேயே அனைவருக்கும் கட்டில்கள் போடப் பட்டிருந்தது.

அவள் தூங்கிக் கொண்டிருக்க மற்ற யாரும் தூங்க வில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேலை முடியவே பத்து மணி ஆகும். அதற்கு பிறகு அவர்கள் அறைக்கு வந்து வீட்டில் உள்ளவர்கள், காத்திருக்கும் காதலன் என பேசுவதும் துணி துவைப்பதும் ஏதாவது நொறுக்கு தீனிகளை கொரிப்பதுமாக இருக்க மணி பன்னிரெண்டு ஆன போதும் அந்த அறை ஜெகஜோதியாக இருந்தது.

ஆனால் அவர்கள் சிரிப்பு சத்தமும் பேச்சு சத்தமும் யாரோ ஒருவரின் போனில் ஓடிக் கொண்டிருந்த பாடலும் கனகாவை நிம்மதியாக தூங்க விட வில்லை.

“நீங்க எல்லாம் பொம்பளை பிள்ளைங்களா? மணி என்ன ஆகுது தெரியுமா? தூங்குறதுகக்கு என்ன?”, என்று சத்தம் போட்டாள்.

“அட பாருங்க டி இந்த அக்காவை. நாங்க எப்ப தூங்கினா உங்களுக்கு என்ன? நாள் முழுக்க கடைல நின்னு கால் வலி வேற வந்ததும் இல்லாம அவன் இவன் உரசுற உரசலையும் தாங்கிட்டு ரூமுக்கு வந்தா ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கீங்க? வயசான பொம்பளையா இருந்துட்டு உங்களுக்கு இது தெரியலையா?”, என்று கேட்டாள் ஒரு பெண்.

“ஆமா கனகாக்கா நீங்க பேசுறது கொஞ்சமும் சரி இல்லை. நாங்க நிம்மதியா இருக்குறதே கொஞ்ச நேரம் தான். வீட்டுக்கு போன் கூட இப்ப தான் பேசுறோம். உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க தூங்குங்க. எங்களை ஏதாவது சொன்னீங்கனா நாங்க நாளைக்கு மேனேஜர் கிட்ட சொல்லிருவோம்”, என்று சொல்ல போர்வையை தலை வரை மூடிக் கொண்டு படுத்து விட்டாள் கனகா.

ஏனென்றால் மேனேஜர் நிச்சயம் வயது பெண்களுக்கு தான் சப்போர்ட் செய்வான் என்று அவளுக்கு தெரியுமே? எப்படியோ அரை குறையாக தூங்க ஆரம்பித்தாள்.

காலை ஏழு மணிக்கு மேல் கனகாவால் ஒரு துளி கூட தூங்க முடியவில்லை. ஆனால் மற்ற அனைவரும் அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பதினொரு மணிக்கு தான் அவர்களுக்கு வேலை என்பதால் பெண்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க கனகாவுக்கு கடுப்பாக இருந்தது.

ஏனோ அவளுக்கு தன்னால் வீட்டு நினைவு வந்தது. அங்கே மகாராணியாக இருந்தவள் இன்று இத்தனை பேர் மத்தியில் கொசுக்கடியில் அத்தனை பேரும் பயன்படுத்தும் பாத்ரூமை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் திட்டும் வாங்கிக் கொண்டு இருந்தாள்.

ஆனால் திருந்த வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வரவே இல்லை அவளுக்கு.

அன்றைய நாள் வேலைக்கு கிளம்பிச் சென்றாள் கனகா. சரியாக தூக்கம் இல்லாததால் தலை வலி உயிர் போனது. கைரேகை மூலம் உள்ளே சென்றதும் நான்கு மாடி ஏற வேண்டுமே என்று இருந்தது.

அப்போது லிப்ட் கதவு திறக்க பட உடனே உள்ளே ஏறிவிட்டாள். அது வாடிக்கையாளர்களுக்கான லிப்ட் இல்லை. குடவுன் நான்காவது மாடியில் இருபதல் சரக்குகளை ஏற்றி இறக்க மட்டுமே அது பயன்பட்டது.

அதில் பணியாளர்களை ஏற வேண்டாம் என்று தான் நிர்வாகம் சொல்லி இருந்தது. அதீத மனஉளைச்சல் அவளை உள்ளே ஏற்றி இருந்தது. ஆனால் அது இரண்டாவது மாடியில் திடீரென்று லிப்ட் நின்று விட ஒரு மாதிரி பதட்டத்துக்கு ஆளானாள்.

அது அவ்வபோது நின்று விடும் தான். அதில் அவசர கால உதவி பட்டனை அழுத்தினால் ஊழியர்கள் வந்து திறந்து விடுவார்கள்.

அது கூட தெரியாமல் ஒரு மாறி தடுமாறியவளுக்கு வியர்த்து ஊற்றி அந்த இடத்திலே மயங்கி சரிந்தாள்.

அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து தான் அவளை பார்த்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆறுமுகம் எண்ணைக் கொடுத்திருந்ததால் அவருக்கு தகவல் சொன்னார்கள். யாரிடமும் சொல்லாமல் ஆறுமுகம் மட்டுமே அங்கே வந்தார்.

அதீத பயத்தில் ஸ்ட்ரோக் வந்திருக்கிறது என்று சொன்னார்கள் மருத்துவர்கள். இனி அவள் கை கால்கள் எதுவும் செயல் படாது, படுத்த படுக்கை தான் என்றும் சொல்லி விட்டார்கள்.

மகளை அந்த நிலையில் பார்த்தவருக்கு “இது உனக்கு தேவை தான், எல்லாருக்கும் நீ பண்ணின பாவத்துக்கான தண்டனையை தான் அந்த கடவுள் கொடுத்திருக்கார்”, என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது.

உதடுகள் கோணி இருந்தது கனகாவுக்கு அவளால் எதுவுமே பேச முடிய வில்லை. அவள் கண்களில் கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது.

ஆறுமுகத்துக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. உடனே சந்தானத்தை அழைத்து விட்டார்.

அவர் வந்து பார்த்து விட்டு “கடவுள் இருக்க தான் செய்றார்ல கனகா?”, என்று மட்டும் கேட்டார். பின் தந்தையிடம் “இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள் தான் பா இருக்கு. இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனா கல்யாணத்துல திர்ஷ்டி பட்ட மாதிரி இருக்கும். கல்யாணம் முடிஞ்ச உடனே கூட்டிட்டு போனா எல்லாரும் மங்கையை தப்பா பேசுவாங்க. இவ தானே ராசி அது இதுன்னு பேசினா. இவளுக்கு ஏதாவது ஆனா கூட மங்கையை தான பேசுவாங்க. அதனால இப்போதைக்கு இவ ஆஸ்பத்திரிலே இருக்கட்டும். கூட பிறந்த பாவத்துக்கு பணத்தை அழனும் வேற என்ன பண்ண? வேற யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்”, என்றார். ஆறுமுகம் சரி என்று கேட்டுக் கொண்டார்.

            கனகா மருத்துவமனை கவனிப்பில் இருந்தாள். இப்போது அவளது மூளை மட்டும் சும்மா இல்லாமல் எதையாவது சிந்தித்த படியே இருந்தது. நடந்த பழைய விஷயங்கள் எல்லாமே நினைவில் வந்து அவளை இம்சித்தது. செய்த பாவத்துக்கான தண்டனை தானா என்று அவளுக்கே தோன்ற ஆரம்பித்தது.

            கண்ணீர் விட்ட படியே நாட்களை கடத்தினாள். அது எத்தனை நாளைக்கு என்று அந்த கடவுள் தானே முடிவு எடுக்க வேண்டும். தெய்வம் நின்று கொல்லுமா என்று தெரியாது. சில நேரம் அன்றே கொல்ல தான் செய்யும் போல?

தொடரும்..