அவள் வீட்டுக்கு வந்ததும் சந்திரன் அவளிடம் பேச ஆரம்பிக்க “எனக்கு கல்யாணத்துல சம்மதம் பா. அதுவும் சேது மாமாவுக்காக தான். ஆனா உங்க மாப்பிள்ளையை எல்லாம் மன்னிக்க மாட்டேன்”, என்று சொல்ல சந்திரன் முகம் மலர்ந்தது.

ஏற்கனவே குறித்த நாளில் அவர்கள் திருமணம் நடக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் எல்லாம் ஆரம்பித்தது. ஆறுமுகம் சிறிது நாட்கள் இங்கேயே தங்க வந்து விட்டார். திருமண வேலைகளை ஆறுமுகமும் சந்தானமும் சேர்ந்து பார்த்துக் கொண்டார்கள். அதனால் சந்தோஷமாக நிம்மதியாக திருமணத்தை எதிர்க் கொண்டார் சேது.

ஆனாலும் மணமக்கள் இருவரும் ஊடலுடன் தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். திருமணத்தில் உடை நகை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சந்தோஷமாக யோசித்தாலும் பார்த்திபன் புறம் மட்டும் அவள் திரும்பவே இல்லை. அவன் எதிரில் வந்தாலே யாரோ போல ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள்.

அவளை நேருக்கு நேர் தொல்லை செய்யாமல் அவன் மன்னிப்பை அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான், அது புரிந்தாலும் அவனை சுத்தலில் விட்டுக் கொண்டிருந்தாள் மங்கை.

பொறுத்துப் பார்த்தவன் நேராக அவளை வீட்டுக்கே சென்று பார்வையிட முடிவு எடுத்தான். அங்கு சென்று அவளது வீட்டினரின் வரவேற்பை பெற்றுக் கொண்டவன் “நான் மங்கையை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போகவா? சீக்கிரமே திரும்ப கூட்டி வந்து விட்டுடறேன்…”, என்று எங்கே அவர்கள் மறுத்துவிடுவார்களோ என்பதால் வேகமாகச் சொன்னான்.

“அவ உங்க வீட்டு பொண்ணு பார்த்தி, தாராளமா அழைச்சுட்டு போங்க”, என்ற சந்திரன் மங்கையை ஒரு பார்வை பார்த்தார். அவருக்குமே அவர்கள் தனியே சந்தித்து பேசினால் பிரச்சனை முடியும் என்று தோன்றியது.

மங்கையவளோ தன்னவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது முகத்தில் இருந்த மறுப்பு அவனுக்கு புரிந்தது. ஆனால் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் அதற்கு மேல் பார்த்திபனால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. வாழ்வில் ஒரு முறை நடக்க போகும் அழகான தருணம். அதை முகத்தை திருப்பிக் கொண்டு கெடுத்துக் கொள்ள விரும்ப வில்லை.

அவளிடம் பேசியே ஆக வேண்டும். மன்னிப்பு வேண்டும் என்றாலும் கேட்க வேண்டும் என்ற உறுதியில் அவர்கள் வீட்டுக்கே சென்று விட்டான்.

“அதான் அப்பா சொல்றாங்கள்ல? இன்னும் என்ன முறைச்சிக்கிட்டு இருக்க? ஒழுங்கா போய் தலை சீவி வேற டிரஸ் மாத்தி கிளம்பு போ”, என்றாள் கோமளம்.

அன்னையை முறைத்து விட்டு உள்ளே சென்றவள் வேண்டா வெறுப்பாக எல்லாம் இல்லாமல் அழகாகவே கிளம்பி வந்தாள்.

ஆனால் அவனுடன் தனியே நேரம் செலவிட எல்லாம் அவள் மனதில் தைரியம் இல்லை. அதனால் லதா அருகில் சென்று அவளை நேருக்கு நேர் பார்த்தவள் “எனக்கு அச்சு குட்டியை வெளிய கூட்டிட்டு போகணும். அவனுக்கு வேற டிரஸ் போடணும். என் அண்ணன் மகனை கூட்டிட்டு போக எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்”, என்றாள்.

“எம்மா தாயே, நான் ஒண்ணும் சொல்லலை. இரு அவனை கிளப்பி கூட்டிட்டு வரேன்”, என்று சொன்ன லதா மகனை உள்ளே கிளப்ப அழைத்துச் செல்ல “இப்ப எதுக்கு டி அவனை கூட்டிட்டு போற?”, என்று கேட்டாள் கோமளம்.

“ஏன் உனக்கும் சொல்லணுமா? என் அண்ணன் மகனை எனக்கு கூட்டிட்டு போக உரிமை இல்லையா?”, என்று வம்பிழுக்க அவள் பேச்சில் பார்த்திபனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“உன்னை நான் அறிவேன் டி”, என்று எண்ணியவன் அவளை கண்டு சிரிக்க அவளோ முறைத்துப் பார்த்தாள்.

ஏனோ அவள் மன்னிப்பாளா மாட்டாளா என்று இது வரை இருந்த தவிப்பு அவனுக்கு இப்போது மறைந்து போனது. அவளது கோபம் மட்டும் தான் பிரச்சனை. அதையும் அவனால் மாற்ற முடியுமே? அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

அவன் பார்வை மொத்தமும் அவனை மீறி அவள் மீதே இருக்க, மற்றவர்கள் அனைவருமே அதைப் பாராமல் பார்த்திருந்தார்கள். மங்கைக்குமே அது புரிய, சிறு சங்கடமாக உணர்ந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அஸ்வின் சந்தோஷமாக கிளம்பி வந்ததும் “வாங்க போகலாம்…” ,       என மங்கை அழைக்கும் வரைக்கும் தன் நினைப்பில் மூழ்கி இருந்தவன், வேகமாக கலைந்து எழுந்தான்.

            அவளை அழைத்துக்கொண்டு சென்றவன், தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்ய “அச்சு குட்டியை வண்டில எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. கார் தான் சரி. நான் எடுக்குறேன். இவனை பிடிங்க”, என்று சொல்லி அவன் கையில் கொடுக்க தன்னுடன் வண்டியில் வருவதை தவிர்க்கிறாள் என்று புரிந்தது.

அவள் அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருக்க அஸ்வின் இது என்ன மாமா அது என்ன மாமா என்று கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாக பதில் சொல்லிக் கொண்டு வந்தாலும் அவ்வப்பொழுது அவளைப் பார்த்தவாறே இருந்தான். அதைப் பார்த்தவள், “கண்ணு என் பக்கம் திரும்புச்சு கொன்னுருவேன்”, என்றாள்.

சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்தவன் “எதுக்கு மங்கம்மா இவ்வளவு கோபம்? இப்ப உனக்கு உடம்பு வேற சரி இல்லாம இருக்குமே?”, என்று கேட்டான்.

அவன் கேள்வியில் அதிர்ந்து போனாள் மங்கை. “உங்களுக்கு இது.. அது எப்படி உங்களுக்கு தெரியும்?”, என்று கேட்டாள் அதிர்ச்சியாக.

“ஒரு டைம் கேள்வி பட்டேன். அப்படியே நினைவு இருக்கு. உன் விஷயம் எதுவும் மறக்காது டி எனக்கு”

“இதெல்லாம் பொண்டாட்டி மாதிரி நியாபகம் இருக்கும். ஆனா கல்யாணம் மட்டும் வேண்டாம்னு சொல்லணும். ஏதாவது பேசுனீங்க பாத்துக்கோங்க”, என்றாள்.

அதற்கு மேல் அவன் எதுவும் சொல்ல வில்லை.  குழந்தை முன்பு பேசவும் ஒரு மாதிரி இருந்தது. ஒரு ரெஸ்டாரன்ட் அழைத்துச் சென்றவன் இருவரையும் பொக்கிஷமாக தாங்கினான்.

முறுக்கி கொண்டிருக்கும் மனைவியை வெளிய அழைத்துச் சென்று சமாதானப் படுத்தும் கணவன் போலவே தான் இருந்தது அவர்களைப் பார்க்கும் போது.

            திரும்பி வரும் போது அஸ்வின் அவன் மடியிலே தூங்கி இருந்தான். இப்போது தைரியமாக அவளை சைட் அடித்துக் கொண்டே வந்தான். அவன் அவளையே பார்ப்பது தெரிந்து கொஞ்சம் கார் அவள் கைகளில் தடுமாறியது.

அதைக் கண்டவன் “ஏதாவது மர நிழல்ல காரை நிறுத்து மா. கொஞ்சம் பேசணும்”, என்றதும் வேற வழி இல்லாமல் காரை நிறுத்தினாள்.

குழந்தையை பின் சீட்டில் படுக்க வைத்தவன் அவள் அருகே அமர்ந்து “இப்ப சொல்லு என் பொண்டாட்டிக்கு என்ன கோபம்?”, என்றான்.

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”, என்று கேட்கும் போதே அவள் குரல் உள்ளே சென்று விட்டது.

“நானும் ஏன் அப்படிச் சொன்னேன்னு உனக்கு தெரியாதா டி? என்னை புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?”

“ஆமா நம்ம பல வருஷமா பழகி சிரிச்சு பேசி புரிஞ்சிக்கிட்டோம் பாருங்க? உங்க மனசை படிக்கிறதுக்கு? எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு? உண்மையாவே என்னால தான் மாமாவுக்கு இப்படி ஆச்சா? நான் ராசி இல்லாதவ தானா?”, என்று கேட்டவளின் கண்கள் கண்ணீரைச் சிந்த அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “என்ன இது சின்ன பிள்ளை மாதிரி”, என்று ஆறுதல் சொல்ல துவங்கினான்.

            நிஜத்தில் அவன் மேல் அவளுக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்லை. அவளால் அவன் மேல் கோபப்படவும் முடியாது. கனகா பேச்சைக் கேட்டு திருமணம் வேண்டாம் என்று சொல்லி தன் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறானே என்று தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

            சிறிது நேரத்தில் அவள் சமாதானமாக அவன் பார்வையும் காதலன் பார்வையாக மாறியது. அவன் உரிமை பார்வையில் அவளுக்கு இதயம் வேகமாக துடித்தது.

அடுத்து என்ன பேச என்று இருவருக்கும் தெரியாததால் “வீட்டுக்கு கிளம்பலாமா?”, என்று கேட்டாள்.

“கொஞ்ச நேரம் இருக்கலாமே? எனக்கு உன் கூட தனியா இருக்கணும் போல இருக்கு”

“எனக்கு எல்லாம் அப்படி இல்லை”

“நம்பிட்டேன் டி, உனக்கும் ஆசை இருக்கு. ஆனா பயமாவும் இருக்கு”

“எனக்கா? எனக்கு என்ன பயம்?”

“நான் உன்னை ஏதாவது செஞ்சிருவேன்னு தான் இந்த சின்ன குட்டியை தூக்கிட்டு வந்த?”

“ஹான் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை”, என்று சொன்னவளின் முகம் சிவந்து போனது.

மங்கைக்கு இப்படி பட்ட உணர்வுகள் எல்லாம் புதிது. அவனைக் கண்டால் அவள் உடல் மட்டும் அல்ல உள்ளமும் தடுமாறுகிறது.