அத்தியாயம் 13 

போகும் தூரம் குறையவே கூடாது 

என்று நினைக்கத் தூண்டும் உந்தன் 

கை கோர்க்கும் தருணத்தில்!!!

மருத்துவமனையில் அனைவரும் கலங்கி போய் அமர்ந்திருக்க சேதுவைப் பரிசோதித்த மருத்துவர் பார்த்தியிடம் வந்து சத்தம் போட்டார்.

            “அவரை பத்திரமா பாத்துக் கோங்கன்னு சொல்லி இருந்தேன் தானே? இந்த அளவுக்கு ஆக விட்டீங்களே? இப்ப அவருக்கு சர்ஜரி பண்ணியே ஆகணும். நாலு நாள் கழிச்சு சர்ஜரி பிக்ஸ் பன்றேன். இதுக்கு மேல விட்டா உயிருக்கு ஆபத்து. அது வரைக்கும் இங்கயே அப்சர்வேசன்ல இருக்கட்டும்”, என்று சொல்ல தலையாட்டிக் கேட்டுக் கொண்டார்கள்.

            “மாப்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகாது டா பார்த்தி. நாங்க எல்லாம் இருக்கோம்ல?”, என்றார் சந்தானம்.

            “ஆமா மாப்பிள்ளை, சம்பந்திக்கு ஒண்ணும் ஆகாது. கலங்காதீங்க”, என்று சந்திரன் சொல்ல அப்போது தான் அவனுக்கு மங்கை நினைவு வந்தது.

            தான் பேசியதும் அவள் உடைந்திருப்பாள் என்று வேறு புரிய தன்னுடைய தவறும் புரிந்தது. எப்போதும் கனகாவிடம் பிரச்சனைக்கு பயந்து அடங்கியே பழகி விட்டான். அந்த பழக்கத்தில் அவன் இப்போதும் பிரச்சனை வேண்டாம் என்று எண்ணி திருமணமே வேண்டாம் என்று சொல்லியிருக்க அதில்  முழுதாக பாதிக்க பட்டது மங்கை என்று புரிந்தது. அத்தனை பேர் முன்னிலையில் அவளை விட்டுக் கொடுத்த தன்னுடைய தவறும் புரிந்தது.

            “மாமா மங்கை”, என்று அவன் கேள்வியாக இழுக்க “அவளை இப்ப சமாதானப் படுத்துறது கஷ்டம் பார்த்தி. கொஞ்சம் நாள் ஆகட்டும் பாப்போம். ஆனா உங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும். அது உறுதி, கவலைப்படாத, இப்ப அப்பாவை மட்டும் பாப்போம்”, என்று ஆறுதல் சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டான். ஆனாலும் மங்கையை எண்ணி மனது சஞ்சலமாக தான் இருந்தது.

எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்த நாள் இப்படி ஆகும் என்று யாரும் நினைக்க வில்லையே. அடுத்த விஷயமாக ஆபரேஷன்க்கு பணம் எப்படி ரெடி பண்ண என்று கவலைப் பட ஆரம்பித்தான் பார்த்திபன். அவனும் இப்போது தானே வேலைக்கும் சேர்ந்திருக்கிறான்.

“என்னோட பென்ஷன் பணம் சும்மா தான் இருக்கு. அதை தரேன். மாப்பிள்ளைக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான் தான். அவளை இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சி பெரிய தப்பு பண்ணிட்டேன். பணத்தை நினைச்சு எல்லாம் கவலைப்படாத டா பார்த்தி”, என்றார் ஆறுமுகம்.

தாத்தா என்றாலும் அவரிடம் வாங்க பார்த்திபன் தயங்கினான். ஏனென்றால் சந்தானம் அதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரிய வில்லையே. அதற்கு அவசியமே இல்லாமல் சந்தானம் தான் தந்தையிடம் பென்ஷன் பணத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்லியிருக்க பணப் பிரச்சனை அகன்றது.

            அதே நேரம் மங்கை தனது அறையில் உடை கூட மாற்றாமல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். நடந்தவை அனைத்தும் மனதுக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் எதையும் மாற்ற முடியாது என்று  அவளுக்கே புரிந்தது.

எப்போதும் நெகட்டிவ் எண்ணங்களை தனக்குள் வர விடாதவள் தான் மங்கை. ஆனால் அவளையே இந்த திருமணம் நின்ற நிகழ்வு முடக்கிப் போட்டிருந்தது.

            லதா மட்டம் தட்டும் போதெல்லாம் கூட நான் இப்படி தான் என்று நிமிர்வாக நிற்பாள். இப்போது கனகா சொன்னது போல நான் ராசியில்லாதவள் தானோ? அதனால் தான் சேதுவுக்கு இப்படி நடந்ததோ என்ற எண்ணமும் அவளுக்கு வந்திருந்தது.

            அவள் மடியில் அஸ்வின் உறங்கி இருக்க அவளுக்கு மற்றொரு புறம் கவின் தூங்கி இருந்தான். அப்போது அங்கே வந்த கோமளம் “தூங்கலையா மங்கை?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தாள்.

            அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க “சேது அண்ணனுக்கு இப்ப பரவால்லயாம் டா. அப்பா பேசிருக்காங்க. ஆபரேஷன் பண்ணினா எல்லாம் சரியாகிருமாம்”, என்றாள்

            “என்னால தான் மாமாவுக்கு இப்படி ஆகிருச்சா மா? நான் ராசி இல்லாதவ தானா மா?”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி போனது.

            மகள் அருகே அமர்ந்து அவள் முதுகை வருடி விட்ட படி “அப்படி எல்லாம் இல்ல டா பாப்பா. உனக்கு கனகாவை பத்தி தெரியும் தானே? அவ சொன்னதை எல்லாம் இப்படி யோசிப்பியா?”, என்றாள்.

            “பார்த்தியும் அப்படி நினைச்சு தான் கல்யாணத்தை  நிப்பாட்டிட்டாங்களா?”

            “பாப்பா இப்ப நீ குழம்பி போய் இருக்க. அதான் எல்லாம் தப்பா இருக்கு. பார்த்தி அந்த நேரத்துல அவ கிட்ட அப்படி சொல்லலைனா அவ இன்னும் மேலும் மேலும் பேசிருப்பா. அண்ணனுக்கு இன்னும் மோசமா ஆகிருக்கும் டா. பார்த்தி பதி அப்படி யோசிக்காத”

“ம்ம்”, என்று கேட்டுக் கொண்டாலும் அவள் சரியாகவில்லை. மகளை உடை மாற்றி தூங்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது கோமளத்துக்கு.

அடுத்த இரண்டு வாரங்கள் எப்படி நடந்தது என்று கேட்டால் யாருக்கும் நினைவில் இல்லை. டெஸ்ட் மருந்து மாத்திரை ஆப்பரேஷன் என அனைவருக்கும் பதட்டம் தான். பார்த்தி மருத்துவமனையிலே தங்கி இருக்க மங்கையை பார்க்க வில்லை. அவளுக்கு அழைத்தாலும் அவள் போனை எடுக்க வில்லை.

            அவள் வீடு வேலை என்று அமைதியாக இருந்து கொண்டாள். அனைவரும் சேதுவை சென்று பார்த்த போதும் அவள் செல்ல வில்லை. அன்னையிடம் அவரைப் பற்றி கேட்டுக் கொண்டாள்.

            கயலை கோதை நன்கு பார்த்துக் கொண்டாள். மருத்துவமனைக்கும் உணவை அவளே சமைத்து கணவர் இல்லை மாமனாரிடம் கொடுத்து விடுவாள்.

            பகலில் வேலைக்கு சென்றாலும் இரவில் தந்தையுடன் இருந்தான் பார்த்திபன். ஆறுமுகம் பகலில் சேதுவுக்கு துணையாக இருந்தார்.

            சேதுவுக்கு திருமணம் நின்று விட்டதே என்ற கவலை இருந்து கொண்டே இருந்தது. அதனால் சந்திரன் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்றும் அவர்கள் காதலிக்கிறார்கள், மங்கையும் பார்த்திபனும் என்றும் சொல்லி அவரை தேற்றிக் கொண்டே இருந்தார்.

            சந்திரனுக்கு நன்கு புரிந்தது இந்த திருமணம் நடப்பதில் தான் சேதுவின் உயிர் இருக்கிறது என்று. மகளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருந்தார்,

            ஆனால் மங்கையோ உயிர்ப்பில்லாமல் நடந்து கொண்டிருக்க அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பார்த்திபனாலும் அவளை நெருங்க முடிய வில்லை. நேருக்கு நேர் சென்று நிற்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் அப்படி கூட அவளை காயப் படுத்த அவன் தயாராக இல்லை.

எப்போதாவது கண்ணில் படமாட்டாளா என்று ஜன்னல் அருகே தவம் இருந்தான். ஆனால் அவன் நிற்பது தெரிந்தும் அவள் விலகிக் கொண்டாள்.

சேது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. பார்த்திபன் இல்லாத நேரம் அவரைக் காணச் சென்றிருந்தாள் மங்கை.

“வா மா மருமகளே”, என்றார் சேது. அவளைக் கண்டு அவர் முகம் மலர்ந்தது.

“இப்ப உடம்புக்கு பரவால்லயா மாமா?”

“உன் கல்யாணம் முடிஞ்சா எனக்கு பாதி வயசு குறஞ்சிரும் டா”, என்று சொல்ல அவள் அதற்கு எந்த பதிலும் சொல்ல வில்லை.

“பார்த்தி மேல கோபமா இருக்கியா மா?”

“கோபம் இல்லை மாமா, கஷ்டமா இருக்கு. எனக்குமே தோணுது என்னால தான் உங்களுக்கு அப்படி ஆகிருச்சோன்னு”

“நீ இதை சொல்றதைக் கேக்கும் போது கனகா ரொம்ப திறமைசாலின்னு  பாராட்ட தோணுது மா”

“என்னது அவங்களை பாராட்ட தோனுதா?”, என்று கேட்டவளுக்கு அவ்வளவு அதிரச்சி.

“ஆமா மா மங்கை, பொதுவாவே நமக்கு எல்லாம் தெரியும் நம்ம தான் அறிவாளின்னு ஒரு எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். எனக்கும் இருந்துச்சு. உனக்கும் இருக்கும். ஆனா நம்மளை எல்லாம் முட்டாள்ன்னு அவ நிருபிச்சிட்டா பாத்தியா?”

“மாமா”, என்று திகைப்பாய் அழைத்தாள்.

“ஆமா நான் தான் நல்ல அப்பான்னு நம்பிட்டு இருந்தேன். ஆனா இல்லை. இப்ப உன்னையும் இப்படி எல்லாம் நினைக்க வச்சிட்டா”

“அது..”

“அதை விடு மா. பார்த்தி உன் மேல வச்சிருக்க அன்பு பொய்ன்னு நினைக்கிறியா?”

“இல்லை மாமா”

“அப்புறம் என்ன டா? கல்யாணம் பண்ணாம நீங்க அந்த கனகாவை ஜெயிக்க வச்சிங்கன்னா அதை தாங்கிக்கிற அளவுக்கு என் இதயத்துக்கு தெம்பு இருக்கான்னு தெரியலை மா”

“அப்படி சொல்லாதீங்க மாமா, உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. இப்படி பேசினா கஷ்டமா இருக்கு”

“என் மனசுல பட்டதை சொன்னேன் மா”

“கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா. ஆனா என்னை வேண்டாம்னு சொன்ன உங்க பையனை பழி வாங்காம விட மாட்டேன்”

“ஹா ஹா  ரொம்ப சந்தோஷம் டா. அது உன் பாடு அவன் பாடு. உங்க ரெண்டு பேருக்குள்ள நாங்க வர மாட்டோம். நீ பழி வாங்குறியா? இல்லை அவன் உன்னை அவன் பின்னாடி சுத்த வைக்கிறானான்னு நாங்க பாக்குறோம்”, என்று சொல்ல அவள் முகம் சிவந்தது.