அத்தியாயம் 13

மாமன் குடும்பத்தினரை வரவேற்று ஹாலில் அமரவைத்து பேசிக்கொண்டிருந்த சுபாஷிணி, அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொடுப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் பின்னோடே எழுந்த சுபாஷிணியின் பாட்டி மரகதமும், மாமி அர்ச்சனாவும் கிச்சனுக்கு வந்து தாங்கள் வாங்கி வந்திருந்த பழங்களை டைனிங் டேபிளில் வைத்து விட்டு, ஒவ்வொரு அறைக் கதவாகத் திறந்து வீட்டை பார்வையிட ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்கள் பார்ப்பதாவது பரவாயில்லை, முதன்முதலாக வீட்டுக்கு வந்த உறவுக்கார பெண்கள், ஒரு ஆர்வத்தில் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் பின்னோடு ஒவ்வொரு அறையாக உற்றுப் பார்த்துக் கொண்டே அலைந்த ரஞ்சனின் செயல், அதுவும், கணவன் மனைவி இருவரும் உபயோகப்படுத்தும் படுக்கையறைப் பார்த்து, “ஓஹ்..‌. இதுதான் ஏசிபி யோட பள்ளியறையோ?” என்று தன்போக்கிலேயே சொன்னவனின் செயல் சுபாஷிணியை முகம் சுழிக்க வைத்தது.

போதாததற்கு சேனாதிபதியின் ஜிம் ரூமுக்குள் நுழைந்த ரஞ்சன், கைகளை வைத்துக் கொண்டு சும்மாயிராமல், அங்கிருந்த உடற்பயிற்சிப் பொருட்களை ஏனோதானோ என்று பரிசோதிக்க ஆரம்பிக்க, “கடங்காரன்… பேசாம ஹால்ல உக்காந்திருக்க வேண்டியது தான” என்று மனதிற்குள் முணுமுணுக்கவே செய்து விட்டாள் சுபாஷிணி.

எல்லா அறைகளையும் பார்த்து முடித்துவிட்டு மூவரும் சமயலறைக்கு வர, “வீடு பரவாயில்ல… நல்லாத்தான் இருக்கு. சொந்தமா? இல்ல வாடகைத் தானா?” என்று கேட்டார் அர்ச்சனா.

  இதுவரைக்கும் இப்படி ஒரு கேள்வியை, கணவனிடம் கேட்க வேண்டும் என்று சுபாஷிணிக்கு கூட தோன்றியதே இல்லை. கணவனும் இதைப்பற்றிய விபரம் எதுவும் அவளிடம் சொன்னதும் இல்லை. எனவே, “தெரியலையே மாமி” என்று உண்மையையே சுபாஷிணி சொல்ல, அவளை நம்பாத பார்வை பார்த்தார் அர்ச்சனா.

“நீங்க வேற ம்மா… கிட்டத்தட்ட ஆறு வருஷம் போலீஸா சர்வீஸ் போட்டாச்சு… அதுல இரண்டு வருஷம் சென்னையோட ஏசிபி… இன்னுமா சொந்தமா வீடு வாங்காம இருப்பாப்ல?” என்று பொடிவைத்து பேசினான் ரஞ்சன்.

ரஞ்சனின் பேச்சின் உள்அர்த்தத்தை புரிந்து கொண்ட சுபாஷிணிக்கு கோபம் வர, “உண்மையிலே எனக்கு இந்த விபரம் தெரியல… வேணும்னா அத்தான் வந்ததும் கேட்டுச் சொல்லுறேன்.” முகத்தை சிரித்தது போலவே வைத்துக் கொண்டு பதில் சொன்னாள்.

“பரவாயில்ல… நீயும் நல்லா பேச படிச்சிகிட்ட சுபா.” சுபாஷிணியை போலியாக மெச்சிக்கொண்ட அர்ச்சனாவின் மனது, தன் மகனுக்கு வேண்டாம் என்று தான் ஒதுக்கிய பெண்ணின் நல்வாழ்வைக் கண்டு பெறாமையில் புகையத்தான் செய்தது.

“ஏசிபி யோட வைஃப் ன்னா சும்மாவா ம்மா?” என்றான் அப்போதும் சும்மாயிராமல் ரஞ்சன்.

அம்மா, மகன் இருவரின் பேச்சும் சுபாஷிணிக்கு ரசிக்கவில்லை. என்றாலும், பதிலுக்கு எதுவும் பேசி சூழ்நிலையை ரசாபாசமாக்கி கொள்ள விரும்பாமல் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு காஃபியை கலந்து அவர்கள் கையில் கொடுத்தவள், இது எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஹால் சோஃபாவிலேயே அமர்ந்திருந்த மாமனுக்கும், ரம்யாவுக்கும் காஃபியை அங்கேயே கொண்டு சென்றாள். மற்றவர்களும் அவள் பின்னோடு வந்து ஹால் சோஃபாவில் அமர்ந்து கொண்டார்கள்.

சுபாஷிணி கொடுத்த காஃபியை குடித்து முடித்தவர்கள், எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுபாஷிணியும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, மனைவியின் பார்வையில் தொண்டையை செருமிக்கொண்ட சுபாஷிணியின் மாமன் பாண்டியன், “சுபாவால எங்களுக்கு ஒரு காரியம் ஆகணும்” என்று மெதுவாக பேச்சைத் தொடங்கினார்.

‘ஏதோ பாட்டியின் தொந்தரவு தாங்காமல், தன்னைப் பார்க்க வந்திருப்பார்கள்’ என்ற எண்ணத்தில் இதுவரை இருந்த சுபாஷிணி, மாமனின் பேச்சில், “என்ன காரியம் ஆகணும் மாமா? என்னால முடிஞ்சா செய்யுறேன்” என்றாள்.

“உன்னால முடியும்… அவ்வளவு ஏன்? உன்னால மட்டும் தான் முடியும்” என்று பூடகமாக சொன்ன பாண்டியன், “நம்ம ரம்யாவோட ஹஸ்பென்ட் திருச்சியில ப்ரைவேட் பேங்க் வச்சி நடத்திட்டு இருக்காங்கன்னு உனக்கு தெரியும் தானே சுபா?” என்றார்.

“ஆமா… அதுக்கு இப்போ என்ன மாமா?” என்றாள் சுபாஷிணி யோசனையாக.

“அவர் பேங்க்ல அமௌண்ட் டெப்பாசிட் செய்து, மெச்சூர் ஆனவங்களுக்கு இப்போ பணத்தை திருப்பி குடுக்கணும்.”

“ம்ம்..”

“ஆனா, குடுக்குற அளவுக்கு அவர்கிட்ட இப்போ பணமில்ல… அதனால பிரச்சினையாகி கஸ்டமர்ஸ் அவர் மேல போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்க.”

“ஐயையோ..” கேட்ட கதையின் தாக்கத்தில் அதிர்ச்சியாக வார்த்தையை விட்ட சுபாஷிணி, ரம்யாவின் முகத்தைப் பார்த்தாள். அதுவோ அவமானத்தால் சிறுத்துப் போயிருந்தது.

ஆறுதல் என்று இப்போது ரம்யாவிடம் தான் எது சொன்னாலும் தவறாகிப் போய்விடும் சூழ்நிலை இருந்ததால், “அப்புறம் என்னாச்சு?” என்றாள் சுபாஷிணி மாமனிடமே.

“இப்போ ரம்யாவோட ஹஸ்பென்ட் தலைமறைவா இருக்கார். வெளியே இருந்தா போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்களே… அதான்…” என்று பாண்டியன் நிறுத்த,

“இதுல நான் என்ன பண்ண முடியும் மாமா?” என்றாள் சுபாஷிணி எதுவும் புரியாமல். முன்னே பின்னே செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும்.

சுபாஷிணியின் கேள்வியில் அங்கிருந்தவர்கள் அதிருப்தியாக தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

“திருச்சி டிஎஸ்பி மாதவன், உன் ஹஸ்பென்ட் சேனாதிபதியோட க்ளோஸ் ஃப்ரெண்டாம். அவர் தான் இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகியிருக்கார். அவர்கிட்ட நம்மளோட ரிலேஷன்ஷிப்பை பத்தி சேனாதிபதி சொல்லி, இந்த கேஸை கண்டுக்க வேண்டாம்னு சொல்லணும். சேனாதிபதி சொன்னா அந்த மாதவன் கண்டிப்பா கேட்பார். உன் மாமனுக்காக இதை நீ சேனாதிபதிகிட்ட சொல்லி, நடத்தி தரணும்” என்றார் பாண்டியன்.

திருச்சி டிஎஸ்பி உன் கணவனின் நண்பன் என்று மாமன் சொல்லும் போதே அடுத்து என்ன வரும் என்று ஓரளவுக்கு யூகித்திருந்த சுபாஷிணிக்கு, ‘அடுத்தவர்கள் பணத்தை எடுப்பதே தவறு, இதில் அதை கண்டுகொள்ளாமல் அவர்களை விடச்சொல்ல எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது?’ என்றே எண்ணத் தோன்றியது.

“அதெப்பிடி மாமா? மெச்சூர் ஆன டெப்பாசிட்டை திருப்பி குடுக்கலைன்னா, டெப்பாசிட் பண்ணுணவங்க பாவம் இல்ல” என்றாள் தன் எண்ணத்தை மறைக்காமல்.

“நாம குடுக்காமப் போகப்போறது கிடையாது சுபா. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு எல்லாருக்கும் குடுத்திடத் தான் போறோம். ஆனா, அதுக்கு முன்னாடி, அரெஸ்ட் ஆகி ஜெயிலுக்கு போயிட்டா அசிங்கமில்ல… அதான் உன்னை ஹெல்ப் பண்ண சொல்லுறோம்.” சுபாஷிணியின் பேச்சில் கோபம் வந்தாலும், அவளால் காரியம் ஆகவேண்டும் என்பதால் அமைதியாக பதில் சொன்னார் பாண்டியன்.

“அப்படீன்னா… டெப்பாசிட் மெச்சூர் ஆன கஸ்டமர்ஸைப் பெர்ஸ்னலா மீட் பண்ணி, அவங்ககிட்ட இரண்டு மாச டைம் கேட்டு, அவங்களையே கேஸை வாபஸ் வாங்க வைக்கலாமே மாமா. என்னைக் கேட்டா, இந்த ஐடியா தான் பெஸ்ட் ன்னு சொல்லுவேன்” என்று சுபாஷிணி சொல்ல,

“உங்கிட்ட ஐடியா கேட்டு வரல சுபா. உன் ஹஸ்ஸை எங்களுக்கு உதவி செய்யச் சொல்லி தான் கேட்டு வந்தோம். எனக்கு இந்த உதவியை நீ செய்ய முடியுமா, முடியாதான்னு உடைச்சு சொல்லிடு” என்றாள் அதுவரை அமைதியாக இருந்த ரம்யா.

சுபாஷிணிக்கே இப்படி ஒரு உதவியைக் கணவனிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கும் போது கூச்சமாகத்தான் இருந்தது. அதைவிட, தான் கேட்டாலும் கூட கணவன் செய்வான் என்று தோன்றவில்லை. இது தெரியாமல் தாங்கள் காலால் இட்ட ஏவலை, இவள் தலையால் செய்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் எதிரே உட்கார்ந்திருந்தவர்களை ஆயாசமாக சுபாஷிணி பார்த்துக் கொண்டிருந்த நேரம் தான் சேனாதிபதி வீட்டுக்குள் வந்தது.

பகல் நேரத்தில் திறந்திருக்காத கதவு இன்று திறந்திருக்கவும், யோசனையோடு உள்ளே வந்த சேனாதிபதியின் கண்கள் அங்கே இருந்தவர்களைக் கண்டு கொண்டதும் சுபாஷிணியைப் பார்த்து முறைத்தது.

‘இவங்க வேற… என்னமோ எல்லாரையும் நான் வெத்தல பாக்கு வச்சு அழைச்சது போலத் தான்…’ சுபாஷிணி அலுத்து முடிக்கும் முன், யாரையும் கண்டுகொள்ளாமல் தன் கால் ஷூக்களை கழற்றிவிட்டு விறுவிறு என்று தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான் சேனாதிபதி.

சேனாதிபதியின் செயல் சுபாஷிணிக்கே முகத்தில் அறைந்தது போலத்தான் இருந்தது. ‘எதிரியே ஆனாலும் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்க வேண்டாமா?’ என்று இவள் நினைக்கும் போதே, “வந்தவங்களை வாங்கன்னு கூட சொல்லாம…, இது என்ன பழக்கம் சுபா?” என்று நேரடியாகவே பாட்டி கேட்டுவிட, கொஞ்சம் அவமானமாக உணர்ந்தாள் சுபாஷிணி.

“இ..ல்ல.‌‌.. உங்களை அத்தான் கவனிக்கலையோ என்னவோ? இதோ இப்போ வரேன்…” என்று தடுமாற்றமாக சொல்லியபடி எழும்பியவள் தங்கள் அறையை நோக்கி சென்றாள். அவளுக்கே தன் பேச்சிலிருந்த அபத்தம் புரியத் தான் செய்தது.

இப்படியொரு சூழ்நிலையில் தன்னை நிறுத்திய காலத்தை சபித்தவாறே, அறைக்குள் வந்த சுபாஷிணியின் கண்கள் அங்கில்லாத கணவனைத் தேட, பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் சேனாதிபதி.

உண்மையில், அலுவலகத்திற்கு வந்து தன்னை வேலையில் தொலைத்துக் கொண்ட சேனாதிபதியின் மன இறுக்கம் மெல்ல மெல்லக் குறைய, யாரோ எப்படியோ நடந்து கொண்டார்கள் என்பதற்காக இன்று காலையில் மனைவியிடம் தான் நடந்து கொண்டது அதிகப்படி என்று தோன்றியது.

அதுவும், சுபாஷிணியின் பயந்த பார்வை அவனை என்னவோ செய்ய, திருமணம் என்னும் தளையால் அங்குமிங்கும் நகரவிடாமல், மனைவியை கட்டிவைத்து அடிப்பது போல தன் செயல் தோன்றவே, அவமானமாக உணர்ந்தவன், சுபாஷிணி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிடைத்த இடைவெளியில் வீட்டுக்கு வந்து விட்டான்.

வந்தால்… நட்டநடு ஹாலில் அந்த ரஞ்சனின் குடும்பம்… ஆமாம்… அவர்களை அப்படித்தான் நினைக்க முடிந்தது சேனாதிபதியால். சேனாதிபதியிடமிருந்து விடைபெற்று சென்றிருந்த கோபம் மறுபடியும் அவன் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ள, அலட்சியமாக அறைக்குள் நுழைந்து கொண்டான்.

இப்போது அறைக்குள் வந்துநிற்கும் மனைவியையும் கண்டுகொள்ளாமல் முகத்தை டவலால் துடைத்தவன், கழற்றி வைத்திருந்த ஷாக்ஸ்ஸை எடுத்து அணிய ஆரம்பித்தான்.

கணவனின் செயலை மௌனமாக கவனித்துக் கொண்டு நின்றிருந்த சுபாஷிணி, கணவன் தன்னிடம் தானாக எதையும் கேட்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவளாக, “வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கூட சொல்லாம இப்பிடி ரூம்முக்குள்ள வந்துட்டீங்களே… இது நல்லாவாயிருக்கு அத்தான்? எங்கூட வாங்க… வந்து ஒருவார்த்தை அவங்களை வெல்கம் பண்ணிடுங்க.” கணவனின் கையைப் பிடித்து தன்னோடு இழுத்தபடியே வெளியே இருப்பவர்களுக்கு கேட்டுவிடக் கூடாது என்று மெல்லிய குரலில் பேசினாலும், தன் குரலில் இருந்த அதிருப்தியை சுபாஷிணியால் மறைக்க முடியவில்லை.

“ஏன்? நான் வெல்கம் பண்ணலைன்னு சொல்லிட்டு, அந்த ரஞ்சன் வீட்டாளுங்க எழும்பி போய்டப் போறாங்களா என்ன? அப்பிடி ரோசம் வந்து போனா போகட்டுமே, அதுல உனக்கென்ன வருத்தம்?” மனைவியின் கையை உதறியபடி, உன்னைப் போல கட்டுப்பாடு எதுவும் எனக்கில்லை என்பது போல சத்தமாக பேசியவன், அதற்கு மேல் அங்கே நிற்காமல் கிளம்பியிருந்தான்.

கழற்றி வைத்துவிட்டு சென்றிருந்த காலணிகளை திரும்ப அணியும் போதும், யாருமே அங்கே இல்லாத பாவனை தான் சேனாதிபதியிடம். அவனுடைய செயலே அங்கிருந்தவர்களை தள்ளி நிறுத்த, யாரும் தானாகவே சேனாதிபதியிடம் சென்று பேசவும் முயலவில்லை. ஆனால் அவன் சென்றதும் சுபாஷிணியை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள்.

“உம்புருஷன் எங்களை கண்டுக்காத அளவுக்கு, அப்பிடி என்ன நாங்க குறைஞ்சு போனோம் சுபா?” தன் குடும்பத்தின் ஒட்டுமொத்த குரலாக சுபாஷிணியிடம் சாடினார் மாமன் மனைவி அர்ச்சனா.

“சின்ன வயசுல ரஞ்சனுக்கும் அவருக்கும் சண்டை நடந்திச்சின்னா அது அவங்களோட, நாங்க என்ன பண்ணுனோம்னு எங்ககிட்ட முகத்தைத் திருப்பிட்டு போறார்?” அவர் பங்குக்கு கேட்டார் பாண்டியன்.

அன்று, மாதவபுரத்தில், சேனாதிபதிக்கும், ரஞ்சனுக்குமிடையே நடந்திருந்த கைகலப்பை வீட்டுக்கு வந்ததும் ரம்யா பெற்றோரிடம் சொல்ல, “அந்த பட்டிக்காட்டு பயலுக்கு எவ்வளவு திமிர் இருந்தா எம்பிள்ளை மேல கை வைப்பான். அவன் அடிச்சதைப் பாத்துட்டு நீ சும்மாவா நின்ன?” என்று விசாலியிடம், அர்ச்சனா கேட்டு ஒரு களேபரமே நடந்திருந்ததால், எதுவும் மறக்கவில்லை பாண்டியனுக்கு.

“நீங்க சொல்லுறது எதுவுமே காரணம் இல்ல ப்பா… தமிழ்நாட்டோட கடைகோடி ஊர்ல உள்ளவன் சென்னையோட ஏசிபி ஆகிட்டான்ல… அந்த திமிரு தான்” என்றான் ரஞ்சன்.

“இத்தனைக்கு பிறகும், இவபுருஷன் அந்த சேனா…திபதி நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்குற நம்பிக்கை எனக்கில்லீங்க… நம்ம பிள்ளையோட வாழ்க்கையை காப்பாத்திக்க, நாம தான் வேற ஏதாவது யோசிக்கணும். இன்னும் எதுக்கு இங்க வீணா உக்காந்துகிட்டு, வாங்க போலாம்” என்று எழும்பினார் அர்ச்சனா. அவரைத் தொடர்ந்து எல்லோரும் தங்கள் இருக்கையிலிருந்து எழும்பினார்கள்.

என்னதான் இருந்தாலும், மற்றவர்களுக்கு முன்னால் தன்னை விட்டுக்கொடுத்துவிட்டு போய் விட்ட கணவனின் செயலில் மனதுடைந்து போய் நின்றிருந்த சுபாஷிணி, கணவன் மீது சரமாரியாக அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்து போய் நின்றிருந்தாள்.

 பாட்டி மரகதம், சுபாஷிணியின் அருகில் வந்து, “நம்ம ரம்யா பாவம்ல சுபா. அதுவும் இப்போ வாயும் வயிறுமா வேற இருக்கிறா. உம்புருஷன் கிட்ட சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லேன்” என்று பேத்தியின் கைகளைப் பற்றினார்.

பாட்டி சொல்லும் தகவல் சுபாஷிணிக்கு புதிது. ‘தாங்கள் அங்கு சென்றிருந்த போது கூட ரம்யா தாய்மை அடைந்திருக்கும் விஷயம் தங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை’ என்று தோன்றினாலும், “அப்பிடியா? எத்தனை மாசம் பாட்டி?” என்றாள் சுபாஷிணி ஆவலாக. அவளுக்கு பதில் சொல்ல மரகதம் முயல,

“இன்னுமா இவளை நீங்க நம்புறீங்க அத்த? வாங்க போலாம்… இல்ல… எம்மக வயித்து பேத்திதான் எனக்கு பெரிசுன்னு உங்களுக்கு தோணிச்சின்னா, நீங்க இங்கயே இருங்க.. நாங்க கிளம்புறோம்” என்று வாசலை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தார் அர்ச்சனா. மருமகளின் அதட்டல் குரலில் சுபாஷிணியின் கைகளை விட்டு விட்டு தன் மகன் குடும்பத்தின் பின்னே நடந்தார் மரகதம்.

ஆனால், அவர்களிடமிருந்து சற்றே பின்தங்கிய ரம்யா, “இது நாலாவது மாசம் சுபா. யாருக்காக இல்லாட்டாலும், வயித்துல இருக்கிற என் பிள்ளைக்காகவாவது சேனாதிபதியை எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணச் சொல்லு. பிளீஸ்…” என்று சுபாஷிணியிடம் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

அவர்கள் சென்றதும் கதவை அடைத்து விட்டு பொத்தென்று சோஃபாவில் வந்து அமர்ந்த சுபாஷிணிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

இந்த விஷயத்தில் கணவனிடம் உதவி என்று போய் நிற்க அவளுக்குமே விருப்பம் இல்லை. ஆனால், ரம்யா தாய்மை அடைந்திருக்கும் விஷயம், அவள் மனதை நெகிழ வைத்திருந்தது. அதுவும் திருமணமாகி சிலப்பல வருடங்களுக்குப் பிறகு மாமன் மகளுக்கு கிடைத்திருக்கும் வரம்.

‘இந்த சமயத்தில் கணவன் ஜெயிலில் இருந்தால் ரம்யாவின் மனநிலை பாதிக்கப்படாதா? அதுவும் இல்லாமல், இந்த நேரத்தில் எத்தனை உறவுகள் அருகே இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு கணவன் அருகாமை போல வருமா?’ என்றெல்லாம் சுபாஷிணியின் யோசனை சென்றது.

யோசனையின் முடிவில், ‘பணத்தை கொடுக்க மாட்டேன் என்று அவர்கள் சொல்லவில்லையே, இரண்டு மாதத்திற்கு பிறகு கொடுத்துவிடலாம் என்று தானே சொல்கிறார்கள். அதனால் யாருக்காக இல்லாவிட்டாலும், ரம்யா வயிற்றுப் பிள்ளைக்காகவாவது இதைப்பற்றி கணவனிடம் பேசத்தான் வேண்டும். அப்போது தான் இதில் என்ன செய்ய முடியும் என்று தெரியும்” என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

காலையில் தன்னிடம் அலட்சியமாக பேசியதுமல்லாமல், இப்போது வந்திருந்த தன் உறவினர்களிடமும் அலட்சியமாக நடந்து கொண்ட கணவன் மீது வண்டி வண்டியாக கோபம் கொட்டிக் கிடந்தது சுபாஷிணியின் மனதில்.

அதையும் தாண்டி, கணவன் உதாசீனம் செய்த தன் உறவுகளுக்காக அவனிடமே உதவி கேட்டு நிற்க வேண்டிய தன் நிலையை சுத்தமாக வெறுத்தாள் சுபாஷிணி.

ஆனால், வேறுவழியும் இல்லை என்பதால் எப்படி பேச்சை தொடங்கலாம் என்று மனதிற்குள் திட்டமிட்டபடியே, அப்போதிருந்தே கணவனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டாள் சுபாஷிணி.

இரவும் வந்தது. நேரம் செல்லச்செல்ல, கணவன் இன்றிரவு வீட்டுக்கு வருவானா என்ற சந்தேகமும் வந்தது சுபாஷிணிக்கு.

ஆனால், அவள் சந்தேகப்பட்டது போலில்லாமல் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்குள் நுழைந்து விட்டான் சேனாதிபதி.

கணவனிடம் உதவி கேட்க வேண்டும் தான், அதற்காக அவன் செய்து வைத்துவிட்டு சென்றதையும் மீறி பளிச்சென்று அவனிடம் புன்னகைமுகம் காட்டமுடியாமல் இறுக்கமான முகத்துடனே அமர்ந்திருந்தாள் சுபாஷிணி. அப்படியொன்றை மனைவியிடமிருந்து எதிர்பாராதவன் போலத்தான் இருந்தது சேனாதிபதியின் நடவடிக்கைகளும்.

 ஆனால், அந்த ரஞ்சன் குடும்பத்துக்காக தன்னிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மனைவி அமர்ந்திருக்கிறாள் என்ற எண்ணம், அவனுள் கோப விதைகளையும் விதைத்தது.

 எப்போதும் போல தங்கள் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தவனுக்கு, பார்த்தவுடனேயே இரவு சமையலுக்கான எந்த ஆயத்தமும் அங்கே செய்யப்படவில்லை என்பது புரிந்தது.

 ஒரு அலட்சிய தோள் குலுக்கலோடு, ஃபிரிட்ஜிலிருந்து பழங்களை எடுத்து நறுக்குவதற்காக திரும்பியவனின் கண்களில் மேஜை மீது சுபாஷிணியின் மாமன் குடும்பத்தார் கொண்டு வைத்திருந்த பழங்கள் விழ, “இந்த கண்றாவி எல்லாம் அவங்க கொண்டு வந்ததுன்னா, இன்னும் ஏன் இங்க இருக்கு?” என்று இடது புறங்கையால் அவற்றைத் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் பழங்கள் தரையில் சிதறி உருண்டோடியது.

அவ்வளவு தான்… கிச்சனுக்குள் சென்ற கணவன் என்ன செய்கிறான் என்று ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்த சுபாஷிணியின் பொறுமை பறந்து போக, “என்னையும், எங்குடும்பத்து ஆள்களையும் கண்டா உங்களுக்கு அவ்வளவு அலட்சியமா போச்சா?” என்று வெடித்து விட்டாள். காலையில் தன்னைப் பேசியது, சாயங்காலம் தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் தன்னை உதறிவிட்டு சென்றது எல்லாம் சேர்ந்து, கணவனின் செயலில் வார்த்தைகளாக வெடித்திருந்தது.

ஏற்கனவே மனைவி அவர்களுக்காக முகத்தை தூக்கிக் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற கோபத்தில் இருந்தவனுக்கு, அவர்களை என்குடும்பம் என்று சுபாஷிணி சொல்லியதில் தாறுமாறாக கோபம் ஏறியது.

“சப்பாஷ்… அவங்க உங்குடும்பமா? ம்ம்ம்.. அது சரி… அந்த குடும்பத்துல ஒருஆளா இருக்கிறதுக்கு உனக்கு பத்து பொருத்தமும் பக்காவா தான் இருக்கு” என்று தலையை ஆட்டியபடி நக்கலாகச் சொல்லிய சேனாதிபதி,

“ஆமா… உன் குடும்பத்துலயிருந்து ரஞ்சன்… ரஞ்சன்னு ஒரு பரதேசி வந்திருந்தானே… அந்த பரதேசி ஹாலோட மட்டும் உக்காந்திருந்தானா? இல்லை ரூம்ரூமா நுழைஞ்சு வெளிய வந்தானா? ஏன் கேக்குறேன்னா… உங்குடும்பத்து ஆளோட கை சும்மா இருக்காம, எம்வீட்டுல எதையும், எங்கேயும் மறைச்சு வச்சிட்டு போயிருக்க கூடாதுல்ல ம்மா… முக்கியமா பாத்ரூம்ல…” என்றான் நக்கலாக.

ரஞ்சனின் இன்றைய செயல் பிடிக்காமல் அவனை ஹாலோடே உக்காந்திருக்க வேண்டியது தானே என்று சுபாஷிணியே நினைத்தாள் தான். ஆனால் அதையே கணவன் வாய் மூலமாக கேட்கவும், மனதுக்கு என்னவோ போல இருக்க,

“உங்க போலீஸ் புத்தியை எல்லாம் உங்க வேலையோடு வச்சிக்கோங்க, வீட்டுக்குள்ள கொண்டு வராதீங்க.” கிட்டத்தட்ட கத்தினாள் சுபாஷிணி.

கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும் என்று மாமன் மகனுக்கு சுபாஷிணி முட்டுகொடுக்க முயல, சேனாதிபதிக்கோ அன்று மாதவபுரத்தில் வரிந்து கட்டிக்கொண்டு ரஞ்சனுக்காக பேசிய சுபாஷிணியே ஞாபகத்துக்கு வந்தாள்…

அதன் விளைவாக, அவளைத் தீப்பார்வை பார்த்த சேனாதிபதி, “ச்சே… நீ இருக்குற வீட்டுக்கு மனுஷன் வருவானா?” என்று கையிலிருந்த பழங்களை எறிந்து விட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றே விட்டான்…