“தம்பி தம்பி… அவ எங்கள்ட்ட எதுவும் சொல்லலை, உங்கம்மா இவகிட்ட பேசிட்டு இருந்ததை தற்செயலா கேட்டுட்டோம் நாங்க” என்ற வாசுகி, மகளை பார்த்து, “உள்ளதை சொல்லாம என்னடி வாய்ல தந்தி அடிச்சிட்டு நிக்கிற?” என கடிந்து கொண்டார்.
“ஏன் அப்படியே மூடி மறைச்சிடலாம்னு இருந்தானாமாம்?” என சீறிய சித்தார்த், விஷ்வாவின் தந்தையையும் தாத்தாவையும் வரம்பு மீறி திட்ட, தம்பியின் கன்னங்கள் இரண்டிலும் ஒவ்வோர் அடி வைத்தான் விஷ்வா.
வேதா தன் கணவனை தடுத்து பிடித்துக் கொள்ள, வாசுகியால் சித்துவை தடுக்க முடியவில்லை. ஏதும் பிரச்சனை ஆகி விடக்கூடாது என கணவனுக்கும் நண்பனுக்கும் இடையில் நின்று அவர்களை தடுத்தாள் வேதா.
கணவரை அழைத்து விடலாமா இல்லை அது இன்னும் பிரச்சனையில் முடியுமா என புரியாமல் குழம்பி நின்றார் வாசுகி.
எதிர்பாராத விதமாக வேதாவின் கழுத்து சங்கிலியில் விஷ்வாவின் கை சிக்கிக் கொண்டது, அவளின் கழுத்தை காயம் செய்து விட்டு அவன் கையோடு வந்து விட்டது அவளின் தங்க சங்கிலியும் கூடவே தாலிக்கயிறும்.
வலியெடுத்த கழுத்தை பிடித்துக் கொண்ட வேதா அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். கையிலிருந்த தாலிக்கயிறை திகைப்பாக பார்த்த விஷ்வாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
சித்துவின் முதுகிலேயே நான்கைந்து அடி வைத்த வாசுகி, “ஒரு நிதானம் வேணாம்டா மனுஷனுக்கு? அவர் உன் அண்ணன் இல்லைனா விடு, உனக்கு உன் குடும்பத்துக்கு எவ்ளோ செஞ்சிருப்பார் உன் மாமா, அவர் பொண்ணோட புருஷங்கிற மரியாதையை கூடவா தர மாட்ட?” என கோவமாக கேட்டார்.
சித்து தன் அத்தையை முறைக்க, வேதாவின் அருகில் அமர்ந்து அவளின் கழுத்தை ஆராய்ந்தான் விஷ்வா.
அவளின் கழுத்தில் வரியாக தடித்துப் போயிருக்க, ஓரிடத்தில் கீறல் ஏற்பட்டு இரத்தமும் கசிந்தது.
“நீ எது செஞ்சாலும் உன் அம்மா சந்தோஷ படணும் நிம்மதியா இருக்கணும், நீ ஊர் உலகத்துக்கு அறிவிக்க போற செய்தியால அது நடக்குமான்னு சிந்திச்சு பார், உன் அம்மாட்டருந்து உன்னை பிரிச்சு வச்சிருந்தா உனக்கு தெரியும்டா வலி, என்ன பேச்சு பேசிட்ட, அவர்கிட்ட ஸாரி கேளு” என்றார் வாசுகி.
சித்தார்த் முகத்தை திருப்பிக் கொள்ள, “வயசுல பெரியவ சொல்றேன் என் பேச்சை கேட்க மாட்டீல்ல? கேட்க வேணாம், தள்ளி போ” என சத்தமிட்டு அவனை வேகமாக இழுத்து பின்னுக்கு தள்ளிய வாசுகி, மகளிடம் சென்றார்.
“எப்படி ஆச்சுன்னே எனக்கு தெரியலைடி, உன்னை யார் நடுவுல வரச் சொன்னது? ஹாஸ்பிடல் போலாம் வா” என தன் மனைவியிடம் சொன்னான் விஷ்வா.
காயத்தை பார்த்த வாசுகி, “சும்மா தேங்கா எண்ணெய தடவி விடுங்க, போதும்” என்றார்.
“அம்மா தாலி அறுந்து வந்திடுச்சு மா” என கலங்கினாள் வேதா.
“ம்ம்… என் கண்ணுக்கும் தெரியுது, ஆடியில போய் புருஷன் வீட்ல உட்கார்ந்தப்போ சடங்கு சம்பிராதயம் தெரியலைல? இப்ப மட்டும் எதுக்கு கண்ண கசக்குற? என் அம்மாகிட்ட கேட்கிறேன், பெரியவங்க என்ன செய்யணும்னு சொல்லுவாங்க” என முதலில் திட்டி, பின் சமாதானமாக சொன்னார் வாசுகி.
எட்டி எட்டி வேதாவை பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் ஓடிப் போய் தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து நின்றான்.
“நல்லா காயம் ஆகியிருக்கு, எந்திரி, டாக்டர் பார்த்தாதான் எனக்கு சமாதானம் ஆகும்” என்ற விஷ்வா, தேங்காய் எண்ணெய் வைத்திருந்த தம்பியின் கையை தன் கையால் பட்டென தள்ளினான்.
தன் மாப்பிள்ளை வெளியில் சென்று வந்தால் அவனின் ஆவேசம் சற்று தணியலாம் என்றெண்ணிய வாசுகியும், “சரி மாப்ள சொல்ற படி ஆஸ்பத்திரி போய்ட்டு வா, அவர் கூட கிளம்பு நீ” என மகளை எழுப்பி நிறுத்தினார்.
விஷ்வாவும் வேதாவும் சென்ற பின், “என் வீட்ல வந்து உட்கார்ந்திட்டு என்னையவே அடிக்கிறான், வேதாக்கு ஹெல்ப் பண்ண போனா கையை தட்டி விடுறான், அவனை மட்டும் மாப்ள மாப்ளன்னு தூக்கி வச்சி பேசுறீங்க, என்னை அடிக்கிறீங்க” என அத்தையை குறை சொன்னான் சித்தார்த்.
“உன் வீடுன்னு நல்லா சொல்லுவடா, நீ சம்பாதிச்சு கட்டினியா?” என வாசுகி கேட்க, “அத்தை ஓவரா போவுது உங்க பேச்சு” என எச்சரிக்கை போல சொன்னான்.
“கோவம் மட்டும் நல்லா வருதுடா உனக்கு! நான் பார்க்க பொறந்து வளர்ந்தவன் நீ, உன் மேல கோவ படவும் நீ தப்பு செஞ்சா கண்டிக்கவும் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உன் வீடுன்னு நீ மார் தட்டிகிட்டதாலதான் அப்படி சொல்லி காட்டினேன்? தலை புள்ள தள்ளி நிக்கிறான்னு உன் அம்மாவுக்குள்ள எவ்ளோ வருத்தம், கவலை இருக்குன்னு உனக்கு தெரியாதா? எப்படிடா அதை சரி பண்ணுவ? உன் அம்மாவோட சந்தோசம் விட உன் வீம்பு பெருசா போச்சா?” என அவர் கேட்க, அவனும் சற்று தணிந்தவனாக அமர்ந்தான்.
அவன் பக்கத்தில் அமர்ந்து அவனின் தோளை சலுகையாக பிடித்துக்கொண்டவர், “அந்த புள்ளய கொஞ்சம் நினைச்சு பாருடா, உன் அம்மாக்கு மட்டுமில்லை அவருக்கும் சேர்ந்துதான் அநியாயம் நடந்திருக்கு. சொத்து சுகம் கொடுத்திட்டா ஆச்சா? பெத்த அம்மா உசுரோட இருந்தும் தனியா வளர்ந்த கொடுமையை எண்ணி பாருடா. அண்ணன் இல்லைனு நீ வாயால சொன்னா அது உண்மை ஆகிடுமா? இரத்த சொந்தம் எப்படிடா விட்டு போகும்? இவ்ளோ நாள் வேதாவோட புருஷன் உன் அம்மாவை படுத்தினார், இனி நீ படுத்தி பார்க்கலாம்னு இருக்கியா? வேணான்டா, உன் அம்மாவை இனியாவது நிம்மதியா இருக்க விடு” என்றார்.
கண்களில் நீர் திரள தன் அத்தையை பார்த்தவன், “எப்பவுமே அம்மாக்கு அவன்தான் முக்கியம், உங்களுக்கும் உங்க மாப்ள ஆகிட்டான், இனி நான் யாரோதான்ல உங்களுக்கெல்லாம்?” எனக் கேட்டான்.
அவன் தோள் பட்டையில் சலுகையாக தட்டியவர், “ச்சீ படவா! பேச்சை பாரு, எனக்கு இன்னொரு பொண்ணு இருந்தா உனக்கு கொடுத்து உன்னையும் மாப்ள ஆக்கியிருப்பேன்டா, உன் அம்மாக்கு மட்டுமில்லை எனக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒன்னுதான், இப்படிலாம் யோசிக்காத” என்றார்.
அவனது அறிவுக்கு புரிந்தாலும் சட்டென ஏற்றுக் கொள்ள முடியவில்லை, காலம் எடுக்கும்தானே?
“நான் போறேன், அம்மாக்கும் அவங்க ஆசை புள்ளைக்கும் இடைல நான் எதுக்கு?” என வீம்பாக கேட்டுக் கொண்டு அவன் எழுந்த போதே அவனது கண்களில் கண்ணீர் வடிய ஆரம்பித்து விட்டது.