நீயென் நாயகி -20

அத்தியாயம் -20

வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப் பட்டிருக்கவும், அழைப்பு மணியை அழுத்தப் போனார் வாசுகி.

“வேணாம் அத்தை, அம்மா தூங்குறாங்களோ என்னவோ, பின் பக்கமா போலாம் வாங்க” என அத்தையை அழைத்துச் சென்றான் சித்தார்த்.

அகல்யா தன் மருமகளிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் விஷ்வாவின் அப்பா தன்னிடம் ஒதுங்கி நின்றதற்கு காரணம் அவரின் காதல் தோல்வி என யூகித்துதான் இருந்தாராம், ஆனால் இப்படி என கற்பனை கூட செய்திருக்கவில்லை என முதல் கணவரின் ரகசியத்தை உடைத்து  சொல்ல, அப்படியே வாசுகியும் சித்தார்த்தும் கேட்க நேரிட்டு விட்டது.

வந்தவர்களை கவனித்து விட்ட வேதா அதிர்ந்து போனவளாக எழுந்து நின்றாள். அகல்யாவும் அவர்களை எதிர் பார்த்திருக்கவில்லையே, ஐயோ என்பது போல பார்த்தவருக்கு அடுத்து என்னாகுமோ என்பதில் பதற்றம் கூடிப் போனது.

“இது உன் புருஷனுக்கு தெரியுமா வேதா? என் அம்மாவையே தப்பு சொல்லிட்டிருந்தானே இப்ப  மூஞ்சிய எங்க போய் வச்சுப்பானாம்?” என கோவமாக கேட்டான் சித்தார்த்.

“எதுவும் முழுசா தெரியாம அவரை எதுக்கு மரியாதை குறைவா பேசுற சித்து? அவர் உன் அண்ணன்” என்றாள் வேதா.

“என் அம்மாவை அம்மாவா ஏத்துக்காத ஒருத்தன் எனக்கு எப்படியும் இல்லை, அந்த கிழவர் பெரிய நல்லவராட்டம் எப்படிலாம் பேசினார், என் அம்மாவுக்கு இப்படி பண்ண அந்த கேடு கெட்ட மனுஷனுக்கு  எப்படி மனசு வந்துச்சு?” என ஆவேசப் பட்டான் சித்தார்த்.

வேதா அவனை சமாளித்துக் கொண்டிருக்க, கிறு கிறுத்த தலையை பிடித்துக்கொண்டு இரும்பு கட்டிலில் தளர்ந்து போய் படுத்தார் அகல்யா.

தன் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த வாசுகி, நாத்தனாரை கவனித்து விட்டு, “உங்க சண்டையை நிறுத்துங்க, இங்க அண்ணிக்கு என்னமோ செய்யுது போல” என சத்தம் போட்டார்.

அதன் பின் அகல்யாவை கவனித்து, உறக்கம் வராத போது இரவில் போட்டுக் கொள்ளலாம் என மருந்துவர் பரிந்துரைத்த மாத்திரையை போட்டுக் கொள்ளச் செய்து, அவரின் அறையில் ஏசி போட்டு விட்டு படுக்க வைத்தனர்.

மருமகளின் கையை பிடித்துக்கொண்ட அகல்யா, அவளை அர்த்தமாக பார்த்தார்.

“ஃபேக்டரியிலிருந்து இந்த வீடு தூரம் இல்லையாத்தை, வந்திடுவார், அவர் வர்றதுக்குள்ள சித்துவை சரி பண்ணிடுறேன்” என்றாள் வேதா.

“சித்துவையும் அண்ணியையும் உன் வீட்டுக்கு அனுப்பி வை” என சோர்வாக சொல்லி கண்களை மூடிக் கொண்டார் அகல்யா.

சரி என சொல்லி வெளியே வந்து அவரின் அறைக் கதவை மூடினாள் வேதா. ஹாலில் சித்தார்த் ஏதோ கோவமாக சொல்லிக் கொண்டிருக்க, அவனை சமாதானம் செய்வது போல பேசிக் கொண்டிருந்தார் வாசுகி.

தன் அம்மா இந்த விஷயத்தில் நிதானமாக நடந்து கொள்வதை நினைத்து வேதாவுக்குமே ஆச்சர்யம்தான். உண்மை தெரிந்த பின் வாசுகிக்கு தன் நாத்தனார் மீது பரிதாபமே எழுந்தது. ஒரு பெண்ணாக, தாயாக அவரிடத்தில் தன்னை பொருத்தி பார்த்துக் கொண்டவருக்கு அவருக்கு நடந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லைதான்.

இப்போது அம்மாவை புரிந்து கொண்டு வருபவன் தன் மகளின் கணவன் என்பதில் விஷ்வா மீதும்  அவருக்கு கரிசனம்.

அம்மாவும் மகனும் சந்தித்துக் கொள்வதுதான் இப்போது முக்கியம் என நினைத்த வாசுகி, சித்துவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தார். அவனுக்கோ அம்மாவுக்கு இழைக்க பட்டு விட்ட அநீதியில் நெஞ்சு பொறுக்க முடியாத நிலை.

வேதாவும் அவனிடம் வந்து, “அப்புறம் பேசிக்கலாம் சித்து, நீ அம்மாவை அழைச்சிட்டு அங்க நம்ம வீட்டுக்கு போடா” என்றாள்.

“எங்கம்மா எவ்ளோ அழுதிருக்காங்கன்னு உனக்கென்ன தெரியும்? உன் புருஷன்கிறதால நீ சும்மா விடலாம், நான் விட முடியாது. அவனையும் அவன் தாத்தனையும் ஒரு வழி பண்ணாம ஓய மாட்டேன்” என இரைந்தான் சித்தார்த்.

அவனை சமாளிக்க முடியாமல் அம்மாவும் மகளும் திணறிக் கொண்டிருக்க, விஷ்வாவும் வந்து சேர்ந்து விட்டான்.

தான் வருவேன் என தெரிந்தும் ஏன் கதவு பூட்டி வைக்க பட்டிருக்கிறது என நினைத்த விஷ்வா, அழைப்பு மணியை அழுத்தாமல் மனைவிக்கு அழைத்து தன் வருகையை சொன்னான்.

‘நீ பார்த்துக் கொள்’ என மகளுக்கு கண் காட்டி விட்டு, சித்துவை அவனது அறைக்கு இழுத்துக் கொண்டு சென்றார் வாசுகி.

வியர்த்து விட்டிருந்த முகத்தையும் கழுத்தையும் துடைத்து விட்டுக் கொண்ட வேதா, வேகமாக சென்று கதவை திறந்தாள்.

“நான் வருவேன்னு தெரியாதா? டோர் லாக் பண்ணிட்டு எங்க இருந்த நீ?” என பட படத்தவன் அவளை ஊன்றி கவனித்து விட்டு, “என்ன வேதா, என்னாச்சு, ஏன் டென்ஷனா இருக்க, அம்மா… அம்மா எங்க, அம்மா ஓகேதானே?” என பயத்தோடு வினவினான்.

“பயப்பட ஒன்னுமில்லங்க, கொஞ்சம் அழுதாங்க, அது ஆதங்கம் இருக்கும்தானே? நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எனக்கு தெரியலை, படுத்து இருங்கன்னு ரூம்ல விட்ருக்கேன்” என்றாள்.

“ரொம்ப அழுதாங்களா?” என கவலையாக கேட்டவனின் கையை பிடித்துக் கொண்டவள், “உங்களை பார்த்தா சரியாகிடுவாங்க,நீங்க போய் பார்க்குறீங்களா?” எனக் கேட்டாள்.

“தூங்கினா டிஸ்டர்ப் பண்ண வேணாம், நான் வெயிட் பண்றேன், குடிக்க கொஞ்சம் தண்ணி தா” என அவன் சொல்லவும், தண்ணீர் எடுப்பதற்காக சமையலறை சென்றாள் வேதா.

தன்னை அறையிலேயே இருக்கும் படி சொன்ன வாசுகியை அலட்சிய படுத்தி விட்டு, அறைக் கதவை திறந்து கொண்டு விஷ்வா முன் கோவத்தோடு வந்து நின்றான் சித்தார்த்.

‘இவனும் இருக்கிறானா, வேதா சொல்லவே இல்லையே’ என சற்றே குழம்பினாலும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவனை பார்த்து அமர்ந்தே இருந்தான் விஷ்வா.

“எங்கடா வந்த நீ? சட்டமா உட்கார்ந்திருக்க? எந்திரிடா முதல்ல!” என எடுத்த உடனே ஆத்திரமாக பேசினான் சித்தார்த்.

“அவர் உன் அண்ணன் சித்து! இப்படியா பேசுவ?” கண்டித்தார் வாசுகி.

“என்னம்மா ஏன் அவனை வெளில விட்டீங்க?” என கேட்டுக் கொண்டே வந்து நின்றாள் வேதா.

“நான் எங்கடி விட்டேன்” என சலித்துக் கொண்ட வாசுகி, “நீ மாப்ளய கவனி” என சொல்லி சித்துவை, “நீ வாடா” என பிடித்து இழுத்தார்.

அத்தையின் கையை உதறி விட்ட சித்து, “இவன் அப்பன்காரன் நடத்தைக்கு என் அம்மா பலி கடாவா? என்னை இவன்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லி சொன்னார் மாமா, இவன் தாத்தாவை என் அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்வாரா? மாமாவை கூப்பிடுறேன், அவர்கிட்ட சொல்றேன், ஊர் உலகத்துக்கே இவன் அப்பனை பத்தி சொல்றேன். எவ்ளோ அவமானம் என் அம்மாக்கு, என் அம்மா மேல எந்த தப்பும் இல்லைனு எல்லாருக்கும் சொல்ல போறேன்” என குதித்தான்.