அத்தியாயம் 12

சென்னையை ஒட்டிய கிராமத்தில் இருந்த, அந்த பண்ணை வீட்டில் இரவைப் பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தன மின்விளக்குகள். கோட்டை மதில்களைப் போலிருந்த அதன் சுற்றுச்சுவர்கள் எளிதில் யாரும் அந்த வீட்டை அணுகிவிட முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியது.

அடர்ந்த மரங்களுக்கு நடுவேயிருந்த அந்த வீடும், அதன் சுற்றுப்புறமும் பகலில் காண்பதற்கு ரம்யமாக இருக்கக் கூடுமோ என்னவோ? ஆனால் இரவில், அங்கிருந்த மரங்களில் அமர்ந்திருந்த ஆந்தைகள் எழுப்பிய சத்தத்தில் ஒருவிதமான அச்சமே ஏற்பட்டது.

அந்த கோட்டான்களின் குரலைவிட, வீட்டுக்குள்ளிருந்து வந்த, “இவ்வளவு தான் இந்தமாச வசூல்ன்னு எங்கிட்டவே சொல்ல உங்களுக்கு வெக்கமாயில்ல?” என்று கேட்ட ஆணின் குரல் அச்சம் தருவதாக இருந்தது.

அந்த குரலுக்குரிய நபர் வேறு யாருமல்ல. நான்கு இளைஞர்கள் விபத்தில் இறந்து போன வழக்கில் போலீஸாரின் சந்தேக பார்வைக்கு உள்ளான பப்புகளின் உண்மையான உரிமையாளரும், முன்னாள் எம்எல்ஏ யுமான இராஜபூபதி தான்.

மரவேலைப்பாடுகள் நிறைந்த அந்த வீட்டின் ஹாலில், விலை உயர்ந்த சோஃபாவில் அமர்ந்திருந்த அந்த மனிதரின் தோற்றமும் குரலைப் போல கரடுமுரடாகத் தான் இருந்தது. அவர் தோற்றத்திற்கு சற்றும் பொருந்தாமல் கைகளிலும், கழுத்திலும் தங்கத்தால் ஆன அணிகலன்கள் புரண்டு கொண்டிருந்தன. அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டுபுறமும் அவருடைய வலது கையும், இடது கையுமான தாஸ் மற்றும் பாபு நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் முறையே முப்பது வயதின் தொடக்கத்திலிருந்த தோற்றத்தில் இருந்தார்கள்.

“இல்லண்ணே… இந்த மாசம் போலீஸ் கெடுபிடி ரொம்ப மோசமா போச்சு… அதான் சரக்கை அதிகமா பப்புல நடமாட விடமுடியல.” அவருக்கு முன்னால் கைகளை கட்டியபடி நின்றிருந்த அந்த பப்புகளின் பினாமி உரிமையாளர்களான செல்வநாயகமும், ரத்னவிநாயகமும், இராஜபூபதியின் கேள்விக்கு தயங்கியபடியே பதில் சொன்னார்கள்.

“ஹஹ… எனக்கேவா? இந்த தொழில்ல நான் பாக்காத போலீஸா? கெடுபிடியா? அதையும் தாண்டி இவ்வளவு தூரம் நான் வளந்து நிக்கல? வேறொன்னுமில்ல… அண்ணனுக்கும் தம்பிக்கும் உக்காந்து தின்னு உடம்புல கொழுப்பு ஏறிப்போச்சு. எவன் தொழில் எப்பிடி போனா நமக்கென்ன? நமக்கு மாசாமாசம் வரும்படி வந்துருங்குற தைரியம். அதான் எங்கிட்டயே உங்க விளையாட்டை காட்டுறீங்க. உங்களுக்கு வைக்கிறேன் டா ஆப்பு” என்று இராஜபூபதி கர்ஜிக்க,

அந்த இரண்டு பினாமிகளும், “எங்களைக் கொஞ்சம் காப்பாற்றித்தான் விடுங்களேன்” என்பது போல அந்த தாஸையும் பாபுவையும் பார்த்தார்கள்.

“இல்ல தலைவா… அந்த நாலு முட்டாப் பசங்க சரக்கு அடிச்சிட்டு போய் முட்டிக்கிட்டு செத்ததுல, நம்ம பப் மேல போலீஸுக்கு சந்தேகம் வந்திடிச்சில்ல… அப்போயிருந்து அந்த ஏசிபி, நாய் மாதிரி நம்மளையே சுத்தி சுத்தி வர்றான். அவங்கிட்டயிருந்து தினம் தப்பிக்கிறதே பெரிய டாஸ்கா போச்சு நமக்கு.”

“நல்லவேளை அந்த செத்துப்போனவனுங்களோட ஃப்ரெண்ட்ஸ் ஒருத்தன் கூட நம்ம பப்புக்கு தான் செத்தவனுங்க கடைசியா வந்துட்டு போனானுங்கன்னு சொல்லலை. இல்லைன்னா, நம்ம இரண்டு மச்சானுங்களையும் உள்ள தூக்கி வச்சி கும்முற கும்முல இந்நேரத்துக்கு நம்மளை போட்டுக் குடுத்துருப்பாங்க.”

காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று, அந்த இரண்டு பேரும், பினாமி இருவரையும் மேலும் போட்டுக்குடுக்க, “அப்பிடி மட்டும் செஞ்சானுங்கன்னா, அவனுங்க கொடலை உருவி மாலையா போட்டுறமாட்டேன்” என்று உறுமியபடி இருக்கையிலிருந்து எழும்பினான் இராஜபூபதி.

“ஐய்யைய்யோ… தெய்வமே… எங்க உயிரை விடுவமே தவிர… உங்களைப் பற்றி மூச்சு கூட விடமாட்டோம். எங்க விசுவாசத்தை சந்தேகிக்காதீங்க” என்று அலறியபடி பினாமிகள் இருவரும் இராஜபூபதியின் காலில் கதறியபடி விழ, வாய்விட்டு சிரித்தார்கள் பாபுவும் தாஸும்.

 தனக்கு விசுவாசமாக இல்லை என்று இராஜபூபதி சந்தேகித்த சிலரை, இந்த தோட்டத்து மண் தின்றிருப்பதை அறிந்த நபர்களாயிற்றே! பின்னே… பயம் வரத்தானே செய்யும் பினாமிகளுக்கு.

“விடுங்க தலைவா… பப்ல மட்டும் இல்ல… நம்மகிட்ட மாசாமாசம் மொத்தமா விக்கிற சரக்கோட அளவுமே இந்த மாசம் படுத்துகிச்சி‌. எல்லாத்துக்கும் காரணம் அந்த ஏசிபி தான்” என்ற தாஸ், அந்தமாத விற்பனையை தன் கையிலிருந்த லேப்டாப்பை திறந்து இராஜபூபதிக்கு காட்டினான்.

அவர்கள் பாஷையில் சரக்கு என்பது கஞ்சா, அபின், கோகைய்ன் போன்ற போதைப் பொருட்களே. யாருக்கு எது தேவையோ, தட்டுப்பாடில்லாமல் அவர்களிடமிருந்து கிடைக்கும். மொத்தத்தில் சென்னை முழுவதும் உலவும் போதைப்பொருட்களில் பாதிக்கு மேல் இவர்களிடமிருந்து கைமாறியதாகத் தான் இருக்கும்.

 “அந்த புடுங்கி ஏசிபியைத் தூக்காம இன்னும் என்னடா செய்துட்டு இருக்கீங்க?” கோபமாக சொல்லியபடியே தாஸ் காட்டிய லேப்டாப் திரையில் தன் பார்வையை பதித்த பூபதி, ஒரு குறிப்பிட்ட பெயரைப் பார்த்ததும், “டேய்… இந்த ஆளுமாடா அந்த ஏசிபிக்கு பயந்துட்டான்” என்றான் ஆச்சர்யமாக. ஏனென்றால் அந்த இராஜபூபதி குறிப்பிடும் நபர், அவர்களிடம் வாங்கும் சரக்கின் அளவு அப்படி‌.

“ஹ்ம்ம்… ஆமா தலைவரே… அந்த ஆளு, ரொம்ப சென்சிட்டிவ்வான ஏரியாஸ்ல சரக்கை சப்ளை செய்யுறதால, ஏசிபி யோட ஸ்பீட் குறையட்டும் பாத்துக்கலாம்னு சொன்னார். எங்களுக்குமே அவர் சொன்னது சரியாப்பட்டது. அதான் நாங்களுமே கொஞ்சம் ஏசிபி விஷயத்தை ஆறப்போட்டுருக்கோம்” என்று சொன்னான் தாஸ். தாஸின் கருத்தில் எனக்கும் உடன்பாடே என்பது போல அமைதியாக நின்றான் பாபு.

“அடச்சீ… நமக்கு இடைஞ்சலா இருக்குறவனுக்கு, அந்த நிமிஷமே கட்டம் கட்டாம, அவன் வேகம் குறையுற வரைக்கும் காத்திருக்கலாம்னு சொல்லுறீங்களே… எம்பசங்களாடா நீங்க?” மாதம் தோறும் கோடிகளில் புரளும் பணம், இம்முறை லட்சங்களில் சுருண்டிருந்த கோபம், இராஜபூபதியின் குரலில் தெரிந்தது.

“எல்லாம் உங்க நன்மைக்காகத் தான் தலைவரே.” அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான் தாஸ்.

“என்ன புடலங்கா நன்மை டா?” எரிச்சலாக கேட்டான் இராஜபூபதி‌.

“அடுத்ததா உடனே எலக்ஷன் வரப்போகுதே, அதை மறந்துட்டீங்களா தலைவரே? நாம ஏசிபியை ஏதாவது செய்யப்போய், ஒருவேளை அது நமக்கெதிரா திரும்பிடிச்சின்னா, அதையே காரணம் காட்டி, உங்களுக்கு எலக்ஷன்ல நிக்க சீட் தர உங்ககட்சி மேலிடம் மறுத்தா என்ன செய்ய முடியும்?”

“என்னதான் கட்சிக்கு நீங்க, நிதியை அள்ளி அள்ளி குடுத்தாலும், உங்கமேல தப்பு இருக்குன்னு வெளிப்படையா தெரிஞ்சா, அவனுங்க எல்லாரும் உத்தமபுத்திரனுங்க மாதிரி உங்களை கட்சியில இருந்து கழற்றி விடத்தானே பாப்பானுங்க. அப்புறம் நீங்க எம்எல்ஏ ஆகுறது எப்பிடி? அப்பிடியே ஒரு அமைச்சர் பதவியை வாங்குறதும் தான் எப்பிடி?”

“இந்த எலக்ஷன் மட்டும் முடியட்டும் தலைவரே… அடுத்த செகண்டே அந்த ஏசிபிக்கு கட்டம் என்ன? செவ்வகமே கட்டிடலாம். இப்பவாவது புலி பதுங்குறது பயந்து இல்ல பாயுறதுக்கு தான் புரியுதா தலைவரே?” கண்களை சிமிட்டியபடி சொன்ன தாஸ், அசிங்கமாக சிரிக்க உடன் சிரித்தான் பாபு.

தன் நிழல்உலக தொழிலைக் கூட தாஸ் மற்றும் பாபு மேல் உள்ள நம்பிக்கையில் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, சமீபகாலமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இராஜபூபதி, அவர்கள் இருவரையும் தன்னிரு கைகளால் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு,

“நீங்க தான்டா என்னோட உண்மையான விசுவாசிங்க. நீங்க மட்டும் எங்கூட இருந்தா, நான் என்ன வேணும்னாலும் தைரியமா செய்யலாம்” என்றான் நெஞ்சை நிமிர்த்தியபடி.

*******

அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் கண்விழித்த சுபாஷிணி, வழக்கம் போல படுக்கையில் தன்னருகே பார்த்தாள். அங்கே சேனாதிபதி இல்லை. தான் இரவு வாசித்து விட்டு தன்னருகே மூடி வைத்த புத்தகம் அங்கேயே இருப்பதிலேயே, இரவில் கணவன் வீட்டுக்கு வரவில்லை என்பது உறுதியானது அவளுக்கு.

பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு திரும்பி வரும் சேனாதிபதி, தனது இரவு உணவை வீட்டில் முடித்துவிட்டு பத்துமணிக்கு போல திரும்பவும் கிளம்பி செல்வான்‌. சுபாஷிணியும் கணவன் வரும் நேரத்திற்காக காத்திருந்து அவனோடே தனது இரவு உணவை சாப்பிடுவது வழக்கம்.

ஒன்றிரண்டு நாட்களில் கணவன் வீட்டுக்கு வராமல் தாமதமான பொழுதுகளில் சுபாஷிணி, அவனுக்கு அழைத்திருக்கிறாள். அப்போதெல்லாம், “நீ சாப்டுட்டு தூங்கு சுபா. நான் வர கொஞ்சம் லேட்டாகும்” என்பவன், சொல்லியது போல தாமதமாக வீட்டுக்கு வந்தும் இருக்கிறான். நேற்றும் அழைத்து கேட்டதற்கு அவ்வாறே பதில் வரவும் உண்டுவிட்டு தூங்கிவிட்டாள் சுபாஷிணி.

சுபாஷிணி என்ன முயன்றும் கூட, இரவு தான் சாப்பிடும் உணவை சேனாதிபதிக்கு பழக்க முடியவில்லை. “உங்களை பாக்க வச்சிட்டு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும் த்தான்.. கொஞ்சமா சாப்பிடுங்களேன்” என்று இவள் விளையாட்டாக சொன்னால்,

“நானும் எம்மேல இருக்குற பாசத்துல சொல்லிட்ட ன்னு நம்பிட்டேனே ம்மா” என்று சிரிப்பவன், அவள் தட்டிலிருந்தே இரண்டு வாய் உணவை எடுத்து சாப்பிட்டு விட்டு நகர்ந்து விடுவான்.

 மற்றபடி, ஃப்ரூட் சாலட் அல்லது வெஜிடபிள் சாலட், பால் என்று, எப்போதும் போலத் தான் இப்போதும் இருக்கிறது சேனாதிபதியின் இரவு உணவு. சுபாஷிணியும் தனது வீண் முயற்சியை கைவிட்டுவிட்டு, கணவன் உண்பதை அவனுக்கு தயார் செய்து கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

இரவு பத்து மணிக்கு கணவன் கிளம்பி சென்றதும், தனிமையை உணரும் சுபாஷிணி இப்போதெல்லாம் தன் கணவன் வாசிக்கும் புத்தகங்களோடு அதை கடக்க முயற்சி செய்கிறாள்.

சேனாதிபதி கிளம்பவும், ஏதாவது ஒரு நாவலை எடுத்து படுத்தபடியே வாசிக்க ஆரம்பித்தாள் என்றால், தன்னை மறந்து தூக்கம் வரும் நேரம், புத்தகத்தை மூடி அருகிலேயே வைத்து விட்டு தூங்கி விடுவாள். நள்ளிரவில் எந்நேரத்திற்கு திரும்பி வந்தாலும், அதை எடுத்து புத்தக செல்ஃபில் வைத்துவிட்டே தூங்குவான் சேனாதிபதி. அதனால் தான், புத்தகம் தன்னருகே இருக்கவும் கணவன் இரவில் வீடு திரும்பியிருக்கவில்லை என்று உறுதியாக எண்ண முடிந்தது சுபாஷிணியால்.

‘ம்ப்ச்… இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. அரிபரி இல்லாம காலையில் அத்தான் கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு நினைச்சா, இவங்க வீட்டுக்கே இன்னும் வரல’ என்று அலுத்துக் கொண்டவளுக்கு, அன்றொரு நாள் இரவு முழுவதும் வராமல் அதிகாலை வந்த கணவன் ஞாபகத்திற்கு வந்தான். கூடவே தாமதத்திற்காக அவன் சொன்ன காரணமும் ஞாபகத்திற்கு வர, கொஞ்சம் பயமாக இருந்தது சுபாஷிணிக்கு.

ஃபோன் செய்து பார்க்கலாம் என்றால், ஒருவேளை ஏதாவது ஒரு இடத்தில், கணவன் சற்றே கண் அசந்திருந்தான் என்றால், தான் எழுப்பி விட்டுவிடக் கூடாதே என்றும் தோன்ற, போன் செய்யும் எண்ணத்தையும் தள்ளிப்போட்டாள்.

 அதன்பிறகு சுபாஷிணியிடமிருந்து தூக்கம் விலகியே நின்றது. என்றாலும், அப்போதே எழும்பி செய்வதற்கு ஏதுமில்லாமல் படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்தாள். ஆனால், அவள் காதுகள் இரண்டும் கதவு திறக்கும் சத்தத்திற்காக காத்துக் கிடந்தன.

ஆறுமணி ஆனபிறகும் கூட சேனாதிபதி வந்து சேரவில்லை. அதற்குப் பிறகும் படுக்கையில் உருண்டு கொண்டிருக்க மனமின்றி எழும்பி காலைக்கடன்களை முடித்து, கையோடு குளித்தும் முடித்திருந்தாள் சுபாஷிணி.

தலையில் கட்டிய துண்டோடு கிச்சனுக்கு வந்து காஃபி போட்டவள், அதை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து குடித்து கொண்டிருந்த நேரம் தான், சேனாதிபதி கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் கண்கள் இரண்டும் கொவ்வைப்பழமாக சிவந்து கிடந்ததிலேயே இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமில்லை என்பது புரிய, “தூங்கவே இல்லையா த்தான் நீங்க?” என்று கவலையோடு கேட்டாள் சுபாஷிணி. ஒரு மனைவியாக கணவனின் உடல்நலனில் அக்கறை கொண்டு கேட்ட கேள்வி அது.

ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாத சேனாதிபதி, “உன்னைப் போல அழகு… அழகுன்னு பைத்தியக்காரத்தனமா அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பொண்ணுங்க இந்த உலகத்துல இருக்குற வரைக்கும், என்னைப் போல போலீஸ்காரங்க நிம்மதியா இராத்திரி தூங்கிற முடியுமா என்ன?” போகிறபோக்கில் பதில் சொல்லியபடியே அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கணவன் என்ன சொன்னான் என்று புரிந்து கொள்வதற்கே சில வினாடிகள் பிடித்தது சுபாஷிணிக்கு. புரிந்த போதோ மனம் வலித்தது. ‘ஏதோ ஒரு சூழ்நிலையில் சிறுபிள்ளைத்தனமாக நான் சொல்லிய வார்த்தைகளிலிருந்து எனக்கு விடுதலை என்பதே கிடையாதா?’ ஊமையாக அழுதது அவள் மனம்.

சற்றுநேரத்தில் அறையிலிருந்து இலகு உடையில் வெளியே வந்த சேனாதிபதி, அங்கே அவள் ஒருத்தி இருப்பதைக் கண்டுகொள்ளாமலேயே உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 அந்த அறையின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்த சுபாஷிணியின் மனம் திரும்பத்திரும்ப கணவனின் வார்த்தைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தது.

‘திருமணம் முடிந்த பிறகு ஓரிருமுறைகள் தன்னுடைய அன்றைய செயலை குத்திகாட்டி அத்தான் பேசியிருக்கிறார் தான். ஆனால், இப்படி முரட்டுத்தனமாக என்றுமே பேசியதில்லையே, இப்போது மட்டும் ஏன் என்று எண்ணத் ‌தோன்றியது. அதுவும் இப்போது கொஞ்ச நாட்களாக இருவருக்கும் இடையில் எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், எதற்காக இன்று மறுபடியும் அப்படி ஒரு பேச்சு’ என்ற யோசனையே சுபாஷிணியிடம்.

 சட்டென்று சுபாஷிணிக்கு கணவன் பேச்சின் சாராம்சம் புரிய, வெளியே நடந்த ஏதோ ஒரு நிகழ்வு அவனை இப்படி பேச வைத்திருக்கிறது என்பதுவும் புரிந்து போனது. ‘அப்படியானால் தினம் தினம் நான் தீக்குளிக்க வேண்டுமா?’ என்ற எண்ணம் எழுந்து, அவளை சோர்வடைய வைத்தது.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இப்படி யோசனையோடே சுபாஷிணிக்கு கழிந்திருக்க, உடற்பயிற்சி அறைக்குள் சென்ற சேனாதிபதி வெளியே வரும் அறிகுறியேத் தெரியவில்லை.

சேனாதிபதியிடம் இவ்வளவு நாள் இல்லாத பயம் ஒன்று சுபாஷிணியின் மனதில் எழுந்தாலும், கணவனை அப்படியே விட்டுவிட மனமின்றி, அந்த அறையினுள் எட்டிப் பார்த்தாள்.

உடற்பயிற்சி செய்யும் சைக்கிளில் அமர்ந்து கொண்டு சைக்கிளிங் செய்து கொண்டிருந்தான் அவன். “அத்தான்… சரியா தூக்கம் இல்லாம இருக்கும் போது இவ்வளவு நேரம் எக்சர்சைஸ் பண்ணுறது உடம்புக்கு நல்லதில்லையே.”

எல்லாவற்றையும் விட கணவனின் உடல்நலனே முக்கியமாகத் தோன்ற, தைரியமாக கேட்டவளை, அலட்சியமாக நிமிர்ந்து பார்த்தவன், “நான் உன்னை என்னோட ட்ரைய்னரா அப்பாயிண்ட் பண்ணுனதா எனக்கு ஞாபகம் இல்லையே” என்று நக்கலாக சொல்லிவிட்டு மறுபடியும் உடற்பயிற்சியைத் தொடர்ந்தான். ஒரு பத்து நிமிடம் கழித்து சைக்கிளில் இருந்து இறங்கிய சேனாதிபதி மறுபடியும் தங்கள் அறைக்குள் நுழைந்து கொள்ள, கணவனின் புது அவதாரத்தை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுபாஷிணி.

குளித்து முடித்து கிச்சனுக்கு சென்ற சேனாதிபதி, கிச்சன் மேடையில் இருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்து விட்டு, அவன் தேடியது கிடைக்காததும், “பயறு முளைக் கட்டலையா?” என்றான் எரிச்சலான குரலில்.

“இன்னைக்கு இட்லி பண்ணப் போறேன்… உங்களையும் அதையே சாப்பிடச் சொல்லலாம்னு நினைச்சேன் த்தான்…” காற்றாகிப் போனக் குரலில் சொன்னாள் சுபாஷிணி.

“ஓ… நான் என்ன சாப்பிடணும்னு, நீங்க முடிவெடுக்குற அளவுக்கு வந்தாச்சோ?” என்று கடுப்பாகச் சொல்லியவன், பழங்களை ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்க,

“குடுங்க த்தான்… நான் கட் பண்ணித்தரேன்.” எதுவுமே நடக்காதது போல கணவனின் கைகளிலிருந்து பழங்களை வாங்க முயன்றாள் சுபாஷிணி.

“வேண்டாம்… இனி எனக்கு தேவையானதை நானே பண்ணிப்பேன்” என்று பழங்களை நறுக்கி சாலட் செய்து சாப்பிட்டவன், சுபாஷிணி காஃபி க்கு என்று காய்ச்சியிருந்த பாலில் இருந்து ஒரு தம்ளர் பாலும் எடுத்துக் கொண்டான்.

‘கணவன் ஏதோ ஒரு கோபத்தில் இருக்கிறான். இப்போது நானும் எதுவும் பேசினால் தவறாகத் தான் போய் முடியும்’ என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தாள் சுபாஷிணி.

உண்மையில்… இரவு ஒன்பது மணிக்கு போல அவன் அனுமதியின்றியே சேனாதிபதியின் கைகள் வீட்டுக்கு செல்லும் பாதையில் வண்டியை திருப்பியிருந்த நேரம் தான், சுபாஷிணி கணவனுக்கு அழைத்தது. அவனோ தனக்காக மனைவியை காத்திருக்க சொல்ல மனமின்றி, “நான் வர லேட்டாகும், நீ சாப்டுட்டு தூங்கு” என்று விட்டான்.

வீட்டுக்கு வரும் வழியில், ஒரு ஆளில்லா சிக்னலில் சிகப்பு விளக்கு எரிய, சேனாதிபதி காரை நிறுத்தவும், நிறுத்திய காரின் பானட்டில் மீது பொத்தென்று ஒரு இளம்பெண் வந்து விழவும் சரியாக இருந்தது‌.

சட்டென்று பதறிப்போனவனாக சேனாதிபதி காரிலிருந்து இறங்கினான். அந்த பெண் பின்னோடே ஓடி வந்த ஒரு ஆண், அப்படியே அந்த பெண்ணை தன்னிரு கைகளில் அள்ளிக் கொள்ள முயல, மயங்கும் நிலையில் இருக்கும் போதும் அந்த பெண்ணின் கண்களில் தெரிந்த பயத்தையும், அந்த ஆணின் உடல்மொழி சரியில்லாததையும் நொடியில் கணித்த சேனாதிபதி, அந்த ஆணைத் தடுத்தான்.

 சீருடையைக் காணவும் தடுமாறிய அந்த ஆண், நொடியில் சுதாரித்துக் கொண்டு “என்னோட கசின் சார்” என்றபடியே மறுபடியும் அந்த பெண்ணைத் தூக்க முயல,

“ஓ… அப்பிடியா? தூக்குங்க… என்னோட வண்டியிலேயே ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிடலாம்” எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகச் சொன்னான் சேனாதிபதி.

“உங்களுக்கு எதுக்கு வீண்சிரமம். என்னோட வண்டி அங்கதான் நிக்குது. நானே ஹாஸ்பிடல் கொண்டு போய்க்கிறேன். நீங்க கிளம்புங்க சார்” என்றான் அந்த ஆண், கொஞ்சம் பயம் விலகியவனாக.

“அதெப்பிடி நீங்க சொல்லுறதை நான் நம்பமுடியும்? உங்ககூட நானும் ஹாஸ்பிடல் வரேன்… மயக்கம் தெளிஞ்சு அந்த பொண்ணு உங்களை கசின்னு சொல்லட்டும், நான் கிளம்பிடுறேன்.” தீர்மானமாக சேனாதிபதி சொல்ல, அந்த ஆணின் கண்களில் இப்போது பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ஓ… அப்பிடி சொல்லுறீங்களோ?” என்று அசட்டு சிரிப்பு சிரித்தவன், “நீங்க முன்னாடி ஹாஸ்பிடல் போய்ட்டு இருங்க சார். நான் பின்னாடி எங்காருலயே உங்களை ஃபாலோ பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர, ஓங்கி அவன் பின்னங்காலில் ஒரு மிதி மிதித்தான் சேனாதிபதி.

அந்த ஒற்றை மிதியில் நிலைதடுமாறி, தலைகுப்புற விழுந்தவனின், கைகளை வளைத்து பிடித்து, “ராஸ்கல்… நீ போய் மாமியார் வீட்டுல இருடா. நான் வந்து உன்னை ஃபாலோ பண்ணிக்கிறேன்” என்றபடி, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை அழைத்து அவனை ஒப்படைத்து விட்டு, அந்த பெண்ணோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

முறையான சிகிச்சைக்குப் பின் கண்விழித்த அந்த பெண், தன் அழகையும், அந்த முகநூல் நண்பனின் வார்த்தைகளையும் நம்பி, சினிமாவில் நடிக்கும் ஆசையில் திருமணத்திற்கு முதல்நாள் வீட்டிலிருந்து கிளம்பி வந்த கதையையும், வந்த சிறிது நேரத்திலேயே, தன் ஆண் நண்பனின் முகமூடி கழன்று கொண்டதையும், அவன் தன்னை அழைத்து சென்ற கார், சிக்னலில் நின்றிருந்த போது காரிலிருந்து குதித்து ஓடிவந்த கதையையும் சேனாதிபதியிடம் சொல்ல, எதை நோக்கி இன்றைய இளைய சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது என்ற ஆயாசமே சேனாதிபதியிடம்.

திரைவானில் நட்சத்திரமாக பிரகாசிப்பது என்பது எளிதான காரியம் இல்லை என்ற அடிப்படை அறிவு கூட தெரியாத அளவிற்கு, அந்த பெண்ணின் பேச்சும் வெளித்தோற்றமும் இல்லை. ‘அப்படியிருக்கும் போது யாரோ ஒருவனை நம்பி, தன் பாதுகாப்பான கூட்டை விட்டு இவர்களைப் போன்றவர்களை வெளியே வரவைப்பது எது?’ என்று யோசித்த சேனாதிபதிக்கு, தங்கள் அழகின் மீது அவர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை என்ற பதில் தான் கிடைத்தது.

அதன் பிறகு விடியும் வரை, மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து, ஒரு பெண் போலீஸிடம் அந்த பெண்ணின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வந்தவன், மனைவியின் கேள்விக்கு அளித்த பதிலில், ஒரேநாளில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்த இரண்டு விதமான நிகழ்வுகளை சந்தித்ததின் பிரதிபலிப்பு இருந்தது.

சாப்பிட்டு முடித்த சேனாதிபதி சீருடை அணிந்து, சுபாஷிணியிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமலேயே கிளம்பி சென்றும் விட்டான். அவனுடைய செயலில் அந்த வீட்டில் நிலவும் இதமான சூழ்நிலை காணாமல் போயிருக்க, காலை உணவு சாப்பிடும் எண்ணமின்றி அப்படியே அமர்ந்து விட்டாள் சுபாஷிணி.

‘இத்தனை நாட்களில் என் அன்பை புரிந்து கொள்ளவுமா இந்த அத்தானால் முடியவில்லை? அப்படி என்ன என்மீது அலட்சியம்?’ என்று சேனாதிபதியின் மீது கோபம் கூட வந்தது சுபாஷிணிக்கு.

மதிய உணவையும் நேரம் கழித்தே ஏதோ பெயருக்கு செய்து உண்டு முடித்தவள் கொஞ்சம் படுத்து எழும்பினாள். அதன்பின், ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்த வேலைகளில் முயன்று கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும்போது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

‘இப்போது யார் வந்திருக்க கூடும்?’ என்ற யோசனையோடு வந்து கதவைத் திறந்தவளுக்கு அங்கே நின்றிருந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ‘இருக்கும் மனநிலையில் இவர்கள் வேறா?’ என்று அலுப்பாக இருந்தாலும், வந்தவர்களை, “வாங்க…” என்று வரவேற்று வீட்டுக்குள் அனுமதித்தாள் சுபாஷிணி.

வந்திருந்தது வேறு யாருமல்ல… அவளுடைய பாட்டி, மாமா, மாமி, ரஞ்சன், ரம்யா என்று சுபாஷிணி அன்னையின் பிறந்தவீட்டு உறவுகள் தான்.

 ‘நான் அவர்கள் வீட்டுக்கு சென்றதையே விரும்பாத கணவன் இவர்களை இங்கே கண்டால் என்ன சொல்வானோ?’ என்ற எண்ணத்தோடே உபசரிப்பில் இறங்கியவளுக்கு, ‘அந்நேரத்திற்கு வீட்டுக்கு வரும் பழக்கம் கணவனுக்கு இல்லையாதலால் இவர்களை சந்திக்க வாய்ப்பில்லை’ என்ற எண்ணம் தோன்ற, சிறுநிம்மதியும் வந்தது.

ஆனால் அந்த நிம்மதி, மாமன் குடும்பத்தாரின் வருகை எதற்காக என்று தெரிந்தபோது பறந்து போனது. அதைவிட, என்றும் இல்லாத திருநாளாக அந்நேரத்திற்கு கணவன் வந்து நிற்க, அதிர்ந்து போனாள் சுபாஷிணி…