“ஏய் என்னையா அடிச்ச?”, என்று கேட்ட கனகா கோமளத்தை அடிக்க வர “கனகா”, என்று ஒரு அரட்டல் போட்டார் சந்தானம்.

               சந்தானம் குரல் சற்று ஓங்கி கேட்க அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.

“என்ன மச்சான்?”, என்று பதறிய படி சேது வர பின்னேயே சந்திரன் வர பார்த்திபனும் அங்கே வந்து விட்டான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மங்கையும் வந்து விட்டாள்.

               “என்ன நடந்துச்சு? எதுக்கு எல்லாரும் நல்ல காரியம் நடக்குற இடத்துல கரைச்சல் பண்ணுறீங்க? கேக்குறேன்ல சொல்லுங்க?”, என்று சத்தம் போட்டார் சந்திரன்.

               “நான் சொல்றேன் தம்பி”, என்று ஆரம்பித்த லதாவின் அன்னை அனைத்தையும் சொல்லி முடிக்க ஆறுமுகம் மகளை அடிக்க ஆரம்பித்தார்.

               “நீ எல்லாம் பொம்பளையா டி? செத்து தொலை டி”, என்ற படி அவர் அடிக்க கல் போல இறுகி  நின்ற கனகா அடிக்காதீங்க என்று ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை.

               அப்போதும் “நான் ஒண்ணும் இல்லாததை சொல்லலை. போயும் போயும் இவளை போய் கட்டி வைக்க போறீங்க நம்ம மகனுக்கு”, என்று பேச மங்கைக்கு கனகா பேச்சு எரிச்சல் தந்தாலும் கலங்கி விட வில்லை. அவளுக்குத் தெரியுமே கனகா ஒரு சாக்கடை என்று.

               ஆனால் பார்த்திபன் பதறி போனான். அவன் பயந்ததுக்கு காரணம் சேது முக மாற்றம். அவருக்கு ஏதோ செய்கிறது என்று புரிந்தது.

               கனகா பேச கோமளம் பேச என அந்த இடமே பேச்சுகளால் நிறைந்திருக்க “என் மகன் கல்யாணம்?”, என்ற கவலையில் இருந்த சேது அதீத நெஞ்சு வலியின் காரணமாக அப்படியே மயங்கிச் சரிந்தார்.

               “ஐயோ அப்பா”, என்று பதறிய படி அவரை நெருங்கி மடியில் சாய்த்துக் கொண்டவன் “ஆம்பூலன்ஸ்க்கு கால் பண்ணுங்க”, என்றான்.

சந்தானம் ஆம்பூலன்சை அழைக்க அதுவோ ரிங் சென்று கொண்டே இருந்தது.

               “ஐயோ ஐயோ நான் சொன்னது நடந்து போச்சா? நிச்சயம் நடந்ததுக்கே என் புருஷன் சாக கிடக்குறாரே? இவ ராசி என் குடும்பத்தையே சிதைச்சிருமே?”, என்று நேரம் பார்த்து பேசினாள் கனகா.

               “ஏய் என் பொண்ணை பத்தி பேசின உன்னை கொன்னுருவேன் டி”, என்று கோமளம் பேச “ஐயோ எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க”, என்று சத்தம் போட்ட பார்த்திபன் கனகாவை நேருக்கு நேராக பார்த்து “உங்களுக்கு என்ன இந்த கல்யாணம் நடக்க கூடாது அதானே? இந்த கல்யாணம் நடக்காது போதுமா? சந்தோஷமா போய்ட்டு வாங்க”, என்றான்.

               அந்த வார்த்தையில் தான் மங்கை கலங்கி போனாள், வெகுவாக உடைந்தும் போனாள். என்ன ஆனாலும் கடைசி வரை உடன் இருப்பேன் என்று சொல்ல வேண்டியவன் சிறு பிரச்சனை செய்யும் பூச்சிக்கு பயந்து தன்னை ஒதுக்கி வைத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?

உள்ளுக்குள் ஏதோ மறித்து போனது போல ஒரு உணர்வு எழ விரக்தியாக அவனைப் பார்த்தவள் அவன் மடியில் இருந்த சேதுவையும் பார்த்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள், அவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை.

               யார் அவளைப் பார்க்க விட்டாலும் சந்திரன் மகளை பார்த்து விட்டார். அவரது இளவரசியாயிற்றே. அவருக்கு அவள் உணர்வுகள் புரிந்தது. அதே நேரம் பார்த்திபன் மனநிலையும் அறிந்தவர் மகளை இப்போது சமாதான படுத்துவது கடினம் என்று புரிய “நந்து கவினை மங்கை கூட இருக்க சொல்லு”, என்று உத்தரவிட்டார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அக்காவின் அறைக்குள் நுழைந்திருந்த கவின் இறுகிப் போய் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்த அக்காவின் மடியில் அஸ்வினை அமர்த்தி விட்டு அவர்கள் அருகே அமர்ந்து கொண்டான்.

               ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆகும் என்று தகவல் வர “நம்ம கார்லே போயிறலாம்”, என்று சொன்ன சந்தானம் காரை கிளப்ப பார்த்தி சந்திரன் ஆறுமுகம் மூவரும் சேதுவை காரில் அமர வைத்தார்கள். கார் மருத்துவமனை நோக்கிச் செல்ல நந்தனும் லதாவும் வண்டியில் கிளம்பிச் சென்றார்கள்.

               அனைவரும் கனகாவை புழுவைப் பார்ப்பதைப் போல பார்க்க அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் திமிராகவே அங்கிருந்து சென்றாள் கனகா.

               “இவளை இதுக்கு மேல வீட்ல வச்சிருக்காத கோதை. நீ ரெண்டு பொம்பளை பிள்ளை வேற பெத்து வச்சிருக்க. பாம்புக்கு பால் வார்க்காத. அவ்வளவு தான் சொல்லுவேன்”, என்று சேதுவின் உடன் பிறந்தவள் வேறு சொல்ல கோதைக்கு உள்ளுக்குள் அவ்வளவு ஆவேசம்.

               “ஒண்ணும் நடக்காது சமபந்தி. பொண்ணை கவலைப் படாம இருக்க சொல்லுங்க. சேது அண்ணன் எந்திச்சு வந்துருவார். நாங்க போய்ட்டு வறோம். கயல் இங்க தனியா இருக்க வேண்டாம். எங்க கூட கூட்டிட்டு போறோம்”, என்று கோமளத்துக்கு ஆறுதல் சொன்ன கோதை பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குச் சென்றாள்.

               அவர்கள் போன போது வீட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் கனகா. “இங்க என்ன நடந்தாலும் ரூமை விட்டு வெளிய வரக் கூடாது உள்ள போங்க”, என்று சொன்னாள் கோதை.

               அன்னையின் முகத்தில் இருந்த அதீத கோபம் அவர்களை பயமுறுத்தியது. கோதை எப்போதும் சிரித்த முகமாக தான் இருப்பாள். அவள் முகம் சுழிப்பது கனகாவைப் பார்த்து மட்டுமே என்பதால் அவர்கள் இருவரும் அமைதியாக கயலை அழைததுக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

               அடுத்த நொடி கனகாவின் உடைகள் அடங்கிய பையை எடுத்து வந்தவள் “ஏய் எந்திரி டி”, என்றாள்.

               “என்ன அண்ணி?”

               “சி வாயை மூடு. யாருக்கு யாரு அண்ணி. இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது. வெளிய போ”, என்றவள் அவள் பையை அப்படியே தெருவில் வீசி விட்டாள்.

               “நான் ஏன் போகணும். இது என் வீடு”

               “என்னது உன வீடா? இது என் வீடு என் புருஷன் வீடு? நான் தான் சொல்லுவேன். வெளிய நீயா போறியா? இல்லை கழுத்தை பிடுச்சு வெளிய தள்ளவா?”

               “நான் போக முடியாது. நான் ஏன் போகணும்?”

               “இப்ப போனா உன் உயிராவது உன் உடம்புல இருக்கும்? மாமாவும் என் புருஷனும் வந்தா உன்னை அடிச்சு கொன்னு ஹார்ட் அட்டாக்ன்னு சொல்லிருவாங்க. அப்படி இல்லைன்னா கூட நானே உன் சோத்துல விஷயம் வச்சி கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா புத்தி சுவாதீனம் இல்லாதவன்னு சொல்லுவேன்”, என்று சொல்ல கனகாவுக்கு திக்கென்று தான் இருந்தது.

               அப்போது சந்தானம் வேறு கோதையை அழைக்க அதை எடுத்தாள் கோதை. போனில் பேசுவது கனகாவுக்கும் கேட்டது.

               “கோதை வீட்டுக்கு போய்ட்டியா? நாங்க ஆஸ்பத்திரி வந்துட்டோம். மாப்பிள்ளைக்கு உள்ள மருத்துவம் பாக்காங்க. நீ வேஷ்டி துண்டு, எல்லாம் எடுத்துட்டு வரியா? நம்ம மேரி ஆஸ்பத்திரிக்கு தான்”, என்றார்.

               “சரிங்க இப்பவே வரேன்”

               “அப்புறம், நாங்க வரும் போது அந்த பீடை அந்த வீட்ல இருக்க கூடாது. அடிச்சு பத்தி விடு. அது போனதும் வீட்டை பிநாயல் இல்லைன்னா மாட்டு கோமியம் கூட ஊத்தி கழுவி விடு”, என்று சொல்லி போனை வைக்க அடுத்த நொடி கோதை பார்த்த பார்வையில் அப்படியே வெளியே சென்று விட்டாள் கனகா.

அவள் வேலை பார்க்கும் இடத்துக்கு சென்று நிலைமையை அவளுக்கு தகுந்த மாதிரி விவரித்து ஆறுதல் தேடிக் கொள்ள அங்கே வயது பெண்கள் தங்கி இருக்கும் விடுதியில் அவளையும் தங்கி கொள்ளச் சொன்னார்கள். கனகாவும் அங்கே சென்று விட்டாள் இதற்கு பிறகு தான் அவளுக்கான சோதனை காலம் ஆரம்பிக்கும் என்று தெரியாமல்.

தொடரும்..