திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அவர்கள் ஊரின் நாட்டாமை நிச்சய பத்திரிக்கையை வாசித்து திருமண தேதியையும் உறுதி செய்தார்.

               மங்கையை அவ்வபோது ஓரப் பார்வையில் சைட் அடித்துக் கொண்டிருந்த பார்த்திபன் “மாப்ளை… சைட் அடிச்சது போதும். பொண்ணு கையில் மோதிரத்தைப் போடுங்க…”, என்று ஒருவர் சொல்ல அவர் குரலில் கலைந்து நிகழ்காலத்துக்கு வந்தான். அனைவரும் கொல்லென்று சிரிக்க அவனுக்கோ வெட்கம். அவளோ முகம் சிவந்து அமர்ந்திருந்தாள். அவளால் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

               ஏற்கனவே அவள் நேரங்கள் எல்லாம் கனவில் இருப்பது போல தான் சென்று கொண்டிருந்தது. கயல் கொடுத்த நிச்சயதார்த்தப் புடவையை மாற்றிவிட்டு வந்தது கூட அவளுக்கு நினைவில் இல்லை.

அவன் கண்கள் வேறு அவளை காதலாக வருட, அவளுக்கோ உள்ளுக்குள் சிறு பதட்டம் இருந்தாலும் அவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

கவின் இருவரின் கையிலும் மோதிரத்தைக் கொடுக்க அவள் தனது இடக்கரத்தை அவன் பக்கம் நீட்டினாள். கையில் ஏந்திய மோதிரத்தோடு அவள் முகம் பார்த்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது ஒரு நொடி தான்.

அவளது கண்கள் இரண்டும் அவனது கண்களில் நிலைத்திருக்க, அவனால் அதில் இருந்து மீள முடியவில்லை. பார்த்தவன் பார்த்தபடியே இருக்க, “மாப்ள, மோதிரத்தை போட்ட பிறகு, நிதானமா கூட பொண்ணை ரசிச்சுப் பார்க்கலாம். இனி உங்களை யாரு கேப்பா. அதான் தேதி குறிச்சாச்சே. இங்க முடிச்சுட்டா நாங்க எல்லாம் சாப்பிடப் போவோம்”, என்று ஒருவர் கிண்டலாகச் சொல்ல, அங்கே ஒரு சிரிப்பலை பரவியது.

அதில் தெளிந்தவன், “அடச்சே… நான் என்ன இப்படி நின்னுட்டேன். எல்லாரும் என்ன நினைப்பாங்க.  இந்த மங்கம்மாவுக்கு என்னை மயக்குறதே வேலையா போச்சு”, என்று அவன் தனக்குள் சொல்லிக் கொள்ள அவளும் அவன் அருகாமையில் மயங்கி நிற்பது அவள் பார்வையிலே அவனுக்கு தெரிந்தது.

அவள் இதழ்களிலும் மென்னகை தவழ, அதைப் பார்த்தவனுக்கு சுர்ர் என காதல் ஏறியது மட்டும் நிஜம். அவள் கரத்தில் மோதிரத்தை மெதுவாக அணிவித்தவன், கைகளை பட்டென விலக்கிக் கொண்டான். ஆனாலும் அவளது கரத்தைப் பிடித்த அந்த நொடி அவனுக்குள் வேறு உணர்வும் பரவியதை அவன் என்ன செய்ய? அவளைத் தீண்டியதும் அவனுக்குள் விரவும் அந்த இதம் அவ்வளவு பிடித்திருந்தது. இப்போது அவளும் அவனுக்கு மோதிரத்தை அணிவிக்க அவளுக்கும் குறுகுறுப்பு தான்.

நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் அனைவரும் இருக்க மணமக்களும் கனவில் இருக்க மற்றவர்கள் உணவு உண்ணச் செல்லலாமா என்ற யோசனையில் இருக்க அப்போது வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள் கனகா.

அவளை அந்த நேரம் யாருமே அங்கே எதிர் பார்க்க வில்லை. திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்த கனகாவுக்கு கடைசி நிமிடம் அதற்கான வழிவகை நிச்சயத்தில் கிடைத்தால் சந்தோஷம் என்ற எண்ணம் வர உடனே தான் கிளம்பி வந்து விட்டாள்.

அங்கே சங்கடமான ஆழ்ந்த அமைதி நிலவ அவளை யாருமே வா என்று அழைக்க வில்லை. அழைக்க மனதும் இல்லை.

அவளைக் கண்டு சேதுவுக்கு தான் வியர்த்தது. சற்று முன்பு பார்த்த மகள் மற்றும் மகனின் சந்தோஷம் நினைவுக்கு வர “கடவுளே பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும். பார்த்தி மங்கை கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கணும்”, என்ற எண்ணம் மட்டுமே வந்தது.

               கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பெண்மணி “வா கனகா, உன் மகன் கல்யாணத்துக்கு நீயே இவ்வளவு லேட்டா வரலாமா?”, என்று கேட்க “கொஞ்சம் வேலை இருந்துச்சு பெரியம்மா அதான்”, என்று கனகா நல்ல முறையிலே பேச  அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தார்கள். ஆனால் அந்த நிம்மதி எல்லாம் சிறிது நேரம் மட்டுமே. வெளியே பந்தியும் ஆரம்பிக்க கனகா வெளியே கிடந்த சேரில் அமர்ந்திருந்தாள் யோசனையோடு.

               அப்போது வம்பிழுக்கும் நோக்கோடு அவள் அருகில் அமர்ந்த உறவுக்கார பெண்மணி “என்ன கனகா இன்னும் பிரச்சனை சரியாகலையா? இந்த வயசுல போய் எங்க அண்ணன் கிட்ட கோபப் பட்டு அப்பா வீட்டுக்கு போகலாமா? அதும் இன்னைக்கு லேட்டா வேற வந்துருக்க?”, என்று கேட்டாள்.

               அவர்களுக்கு சற்று அருகே நிறையே பேர் அமர்ந்திருந்தார்கள். லதாவும் கூட அவளது அன்னையுடன் அமர்ந்து அஸ்வின்க்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். கேட்டரிங் வேலை செய்ய ஆட்கள் இருந்ததால் குடும்பத்தினர் மெனக்கெட வில்லை.

               அதனால் அந்த பெண்மணி கேட்டது லதாவுக்கும் அவளது அன்னைக்குமே நன்கு கேட்டது. மற்ற பெண்களின் கவனமும் அவர்கள் பக்கம் வந்தது.

               “ஆமா இந்த மானம் கேட்ட நிச்சயத்துக்கு வந்ததே பெருசு. இதுல லேட்டா வந்ததைச் சொல்றீங்க? போங்க மதினி”, என்றாள் கனகா.

               “என்ன இப்படி சொல்லிட்ட?”

               “ஆமா வேற எப்படிச் சொல்லச் சொல்றீங்க? என் அக்கா மகனை என் மகனா நினைச்சு வளத்து பெரிய படிப்பு எல்லாம் படிக்க வச்சு எப்பேற்பட்ட நல்ல குடும்பத்துல இருந்து பொண்ணு எடுத்து கட்டி வைக்கணும்னு நினைச்சேன் தெரியுமா? ஆனா இவன் சக்கடைல போய் விழுந்துட்டான். விழா வச்சிட்டாளுங்க. எண்ணத்தை காட்டி மயக்குனாளோ தெரியலை”, என்று சொல்ல லதாவுக்கே அவ்வளவு கோபம் வந்தது.

               “மங்கைக்கு என்ன குறைச்சல் கனகா. அவ அவ்வளவு அழகி”

               “அழகு இருந்து என்ன மதினி செய்ய? எத்தனை பேர் கூட கார் சொல்லிக் கொடுக்குறேன்னு  ஊர் சுத்திருக்கா தெரியுமா? நானே பல பேர் கூட பாத்திருக்கேன்”, என்று சொல்ல “ஏமா உனக்கு நாக்குல நரம்பு இல்லை”, என்று பட்டென்று கேட்டிருந்தாள் லதா.

               “கனகாவுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது. இது தானே அவள் எதிர்பார்த்தது.

               “லதா சும்மா இரு டி. அவ குணம் தெரியுமே? அப்புறம் பேசிக்கலாம்”, என்று எச்சரித்தாள் அவள் அன்னை.

               “நீ சும்மா இரு மா. அவ என்ன பேச்சு பேசுற? அதும் மங்கையை பாத்தி, எனக்கு சில கோபமும் பொறாமையும் உண்டு தான். அதுக்குன்னு சாக்கடை அது இதுன்னு பேசுவாளா?”, என்றவள் “யாரு டி சாக்கடை. அது உனக்கு தான் பொருந்தும். எங்க வீட்டு பிள்ளையை சொல்லுவியா?”, என்று லதா சற்று உறக்கவே கேட்டாள்.

               அனைவரையும் சாப்பிட அழைக்க வந்த கோமளம் காதில் லதா குரல் சத்தமாக ஒலிக்க “லதா எதுக்கு வம்பிழுத்துட்டு இருக்க? அதுவும் இவ்வளவு சத்தமா? பொது இடத்துல இப்படியா பேசுவாங்க?”, என்று கேட்டாள்.

               அதைக் கேட்டு லதா அமைதியாக “என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத கோமளா. உன் மருமக சரியா தான் பேசிட்டு இருக்கு. இந்த கனகா நம்ம மங்கையை அசிங்கமா பேசுறா”, என்று சொல்ல கோமளம் முகம் கோபத்தில் சிவந்தது.

               “ஏய் நீயெல்லாம் என்ன ஜென்மம் டி? அடிச்சு துரத்தியும் நீ எல்லாம் திருந்தலையா? என் மகளை பத்தி பேசின நான் பொல்லாதவளா ஆகிருவேன். அவ சொக்க தங்கம். நீ தான் தரம் கெ ட்டவ. அவளை பத்தி பேசுனா உன் நாக்கு அழுகிரும். நடு ரோட்ல தான் டி செத்து கிடப்ப”, என்றாள் கோமளம்.

               “நான் இல்லாததையா சொல்லிட்டேன். இவ பெரிய பத்தினி எனக்கு சாபம் விடுறா. உன் மவ எவன் கூட எல்லாம் ஊர் சுத்தினான்னு தெரியாமலா இருக்கு?”, என்று கனகா மேலும் கேட்க அடுத்த நொடி கோமளம் கரம் இடியாக அவள் கன்னத்தில் பதிந்தது.