அவர்கள் வெளியே வரும் போது அவன் கையில் அன்னை சொன்ன அளவு சட்டையும் இருந்தது. அவள் மார்பில் துப்பட்டாவும் இடம் பிடித்திருந்தது. அப்போது கண்ணாடி டம்ளரில் மாதுளை ஜூசோடு வந்த கோமளம் “இதை குடிச்சிட்டு போ பா”, என்று சொல்லி அதைக் கொடுத்து விட்டு “சட்டையை அப்படியே வாடி தூக்கி கொடுப்ப? வளந்தாலும் இன்னும் சின்ன பிள்ளை தான்”, என்று கேட்ட படி உள்ளே செல்ல “சின்ன பிள்ளை மாதிரி எல்லாம் என் கண்ணுக்கு தெரியலை”, என்றவன் அவள் துப்பட்டாவை ஒரு பார்வை பார்க்க “பார்த்தி பிளீஸ்”, என்று சிணுங்கினாள். அங்கே வந்த கோமளம் அளவு ஜாக்கெட்டை கவரில் வைத்துக் கொடுத்தாள்.
ஜூசைக் குடித்து முடித்தவன் டம்ளரை அவள் கையில் கொடுத்து விட்டு “சரி அத்தை, போய்ட்டு வரேன்”, என்றவன் அவளையும் அந்த ஜூஸ் டம்ளரையும் மாறி மாறி பார்த்தான்.
“சரிப்பா”, என்று சொன்ன கோமளம் உள்ளே சென்று விட வாசலில் நின்று செருப்பை அணிந்து கொண்டிருந்த அவனைப் பார்த்தவள் டம்ளரில் மீதி இருந்த ஜூசை அவன் முன்னிலையிலே அருந்த அவன் மேனி சிலிர்த்துப் போய் அவளைப் பார்த்தவன் சிறு சிரிப்புடன் அவளிடம் இருந்து விடை பெற்றான்.
ஒரு வாரம் வேகமாக கடந்தது. இன்று மாலை நிச்சயதார்த்தத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்ததால் இரண்டு குடும்ப உறவினர்களும் முந்தைய நாளே வந்திருந்தனர்.
பெரிய மண்டபம் எல்லாம் பார்க்காமல் இரண்டு வீட்டுக்கும் இடைப்பட்ட இடத்திலே டேபிள் சேர் போட்டு உணவு பரிமாற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த இடமே தாராளமாக தான் இருந்தது.
மங்கை பக்கம் நெருங்கிய சொந்தங்கள் அதிகம் இருக்க பார்த்திபன் குடும்பத்தில் நெருங்கிய உறவுகள் குறைவு தான். சேதுவின் சொந்தங்கள் எல்லாம் வந்திருந்தனர். பார்த்திபனின் தாத்தா மற்றும் மாமா குடும்பம் மட்டும் இன்னும் வரவில்லை. அவர்கள் வராதது சேதுவுக்கு கஷ்டமாக இருந்தாலும் இன்னும் நேரம் இருப்பதால் வந்து விடுவார்கள் என்ற எதிர் பார்ப்பு இருந்தது.
என்ன இருந்தாலும் சந்தானம் குடும்பம் பார்த்திபனின் தாய் வீட்டு உறவு. சந்தானம் தாய்மாமா வேறு அல்லவா? ஆனால் அங்கே இருக்கும் கனகாவை எண்ணி வயிற்றில் புளியைக் கரைத்தது சேதுவுக்கு. கனகா மட்டும் இங்கே வந்து விடக் கூடாது என்றும் எண்ணினார். அவள் வந்தால் நிச்சயம் அனைவரின் மனதில் இருக்கும் சந்தோஷம் தூரப் போகும் என்பது அவருக்கு நிச்சயமே. அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கசப்பை அவருக்கு கொடுக்க அவர் நெஞ்சின் ஓரம் சிறு வலி எழுந்தது.
அந்த வலியை உணர்ந்தவர் மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு “அவளைப் பத்தி நினைக்காத சேது. பிள்ளைகளை நினை”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார்.
நிச்சயத்துக்கு இரண்டு மணி நேரம் இருக்கும் போதே சந்தானமும் ஆறுமுகமும் குடும்பத்துடன் வந்து விட அப்போது தான் சேதுவுக்கு நிம்மதியாக இருந்தது. ஏனோ அவர்களைக் கண்டதும் சீதாவே வந்தது போல இருந்தது. வாங்க வாங்க என்று அவர்களை வரவேற்க கயல் மற்றும் பார்த்திபன் இருவரும் ஓடி வந்து மாமனையும் அத்தையையும் வரவேற்றார்கள்.
கயலை அணைத்துக் கொண்ட கோதை “உன்னைப் பாக்கும் போதெல்லாம் ஒரு பையனை பெத்துக்காம விட்டுட்டோம்ன்னு இருக்கு டி”, என்றாள்.
“பாப்பா என்ன பேசுற பெரியவங்க கிட்ட?”, என்று சேது அரட்ட “அவங்க அத்தையும் மருமகளும் பேசுறாங்க. நீங்க எதுக்கு பிள்ளையை சத்தம் போடுறீங்க?”, என்று சந்தானம் கேட்க தந்தையைக் கண்டு பழிப்பு காட்டினாள் கயல்.
ஏனோ அனைவருக்கும் கயலின் அந்த செய்கை ஆச்சரியத்தை தான் கொடுத்தது. ஏனென்றால் இது வரை கயல் இப்படி கலகலப்பாக எல்லாம் பேச மாட்டாள். அமைதியாக தான் இருப்பாள்.
“இப்படி சந்தோஷமா இருக்க வேண்டிய பிள்ளைகளை அப்படி வதைச்சிருக்காளே அந்த ராட்சசி”, என்று ஆறுமுகம் சொல்ல அனைவருக்கும் அந்த நிமிடம் இறுக்கமாக கழிந்தது. அப்போது சந்திரன் அங்கே வர அறிமுகப் படலம் என நேரம் சென்றது.
தாவணி அணிந்து பம்பரமாக சுழன்று கொண்டிருந்த கயலை கவின் வேறு சைட் அடித்துக் கொண்டிருக்க ஒரு முறை அவன் பார்வையை கண்டு கொண்டவள் அவனை நெருங்கி “என்ன டா பார்வை எல்லாம் ஒரு மார்கமா இருக்கு”, என்று கேட்டே விட்டாள்.
“ஐயோடா, இவ பெரிய உலக அழகி இவளை சைட் அடிக்கிறாங்க? அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா? தாவணி எல்லாம் கட்டிருக்கியே? சேலை எல்லாம் எப்ப கட்டுவ? கட்டினா எப்படி இருக்கும்னு தான் பாத்தேன். அதுக்காக சைட் அடிக்கிற அளவுக்கு எல்லாம் நீ ஒண்ணும் சூப்பர் பிகர் இல்லை. நம்ம கிளாஸ் மோனிஷா விட நீ அழகு கம்மி தான்”, என்று சொல்லி விட்டுச் செல்ல அவள் தான் குழம்பி நின்றாள். கடைசி வரை அவன் சைட் அடித்தானா அடிக்க வில்லையா என்று கூட அவளுக்கு தெரிய வில்லை. அவள் திகைத்து நிற்பதைக் கண்டு கவினுக்கோ அவ்வளவு சிரிப்பு.
வீட்டின் மூத்த மருமகளாக லதா வேறு கோமளம் சொன்னதை எல்லாம் தட்டாமல் செய்து கொண்டிருந்தாள். அதுவும் சற்று நேரத்துக்கு முன் விழாவுக்கு வந்திருந்த லதாவின் அன்னை வேறு “அச்சு குட்டியை என் கிட்ட கொடு. உன் அத்தை ஒத்தைல எல்லா வேலையும் பாத்துட்டு இருக்கா பாரு. நீ பிள்ளையை சாக்கு வச்சு தப்பிச்சிக்கிட்டு இருக்கியா? என் நாத்தனார் கிட்ட நல்ல மருமகன்னு பேர் எடு போ. நீ தான் இந்த வீட்டுக்கு மருமக. கோமளத்துக்கு அப்புறம் நம்ம மங்கை குட்டியை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உனக்கு தான் இருக்கு. உனக்கு அண்ணனோ தம்பியோ இருந்தா மங்கையை யாருக்கும் நான் விட்டுக் கொடுத்துருக்க மாட்டேன். வாய் பாக்காம போ”, என்று விரட்டி இருந்தார்.
“அத்தை என் கிட்ட கொடுங்க, நான் செய்றேன்”, என்று வந்து நின்ற லதாவை அதற்கு மேல் ஒதுக்க மனதில்லாமல் கோமளமும் அவளை முன்னே நின்று அனைத்தையும் செய்ய வைத்தாள்.
“அப்பா, நீங்க சொன்ன வேலை எல்லாம் முடிச்சிட்டேன். நீங்க ஒரு தடவை சரி பாத்துறீங்களா?”, என்று கேட்ட படி வந்த நந்தனையும் நிறைவாக பார்த்த சந்திரன் “நீ பாத்துட்டல்ல? அது போதும். சாப்பாடு மட்டும் சரியான நேரத்துல வர மாதிரி பாத்துக்கோ நந்து”, என்றார்.
சிறு சிறு விட்டுக் கொடுத்தலும் புரிதலும் கொண்டது தானே நிறைவான வாழ்க்கை. அதை உணர்ந்தவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும். இல்லாதவர்களுக்கு கடைசி வரை மன பாரம் மட்டுமே மனதில் குடியிருக்கும் என்பது நிதர்சனமான உண்மையே.
ஒரு வழியாக அனைவரும் எதிர் பார்த்த தருணம் வர மங்கை வீட்டின் வரவேர்பறையில் ஜமுக்காளம் விரித்து நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டு வீட்டு உறவினர்களும் அங்கே குழுமி விட அந்த இடமே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
மணமக்களும் அழகாக உடை அணிந்து அங்கே வந்து விட இயல்பான கூச்சமும் வெட்கமும் இருவருக்குமே இருந்தது. அவனுக்கு அவளைக் கண்டு இன்னும் ஆர்வம். எந்த ஒப்பனையும் இல்லாமலே ஆளைத் தூக்கிச் சாப்பிடும் அழகில் இருக்கும் மங்கை இன்று பேரழகியாக ஜொலிக்க அவனுக்கு அப்போதே அவளை அழைத்துச் செல்ல வேண்டும் போல இருந்தது.