அத்தியாயம் 12 

வாழ்வின் மேடு பள்ளங்களில் 

விழவிடாமல் தாங்கித் தான் 

சிலரைப் பிடிக்கிறது காதல்!!!

பார்த்திபன் அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்தது கோமளம் தான். பார்த்தியைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. “வாங்க மாப்பிள்ளை, உள்ள வாங்க”, என்றாள்,

“ஐயோ அத்தை பிளீஸ் முதல்ல மாதிரி பார்த்தினே கூப்பிடுங்க. இப்படினா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு”, என்றான் சிறு கூச்சத்தோடு.

“சரிப்பா வா, உள்ள வா”, என்று சொன்னதும் உள்ளே சென்று அமர்ந்தான்.

“முதல் தடவை வீட்டுக்கு வந்துருக்க? டீ எடுத்துட்டு வரட்டுமா?”

“இப்ப தான் அத்தை குடிச்சேன். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். மங்கையோட அளவு ஜாக்கெட் வேணுமே? அதான் வாங்கலாம்னு வந்தேன். அப்படி இல்லைன்னா நீங்களே உங்களுக்கு பிடிச்ச இடத்துல தச்சிக்கிறீங்களா? நான் பணம் கொடுத்துறேன்”, என்று கேட்டான்.

“நிச்சயத்துக்கு எப்படி இருந்தாலும் அது நீங்க தச்சு கொடுத்ததா இருக்கட்டும் பார்த்தி. இரு அவளைக் கூப்பிடுறேன்”, என்று சொன்ன கோமளம் “மங்கை இங்க வா”, என்று சத்தம் கொடுத்தாள்.

“என்னை கத்துற கத்துறன்னு சொல்லிட்டு நீ எதுக்கு மா என்னை ஏலம் போடுற?”, என்று கத்திய படி அங்கே வந்தாள் மங்கை.

அவள் குரல் கேட்டு அவன் முகம் மலர அவனைக் கண்டதும் அவள் அதிர்ச்சியில் விழித்த படி நின்றாள். “பார்த்தி தம்பிக்கு உன்னோட அளவு ஜாக்கெட் எடுத்து கொடு. சரியான அளவா இருக்குறதைக் கொடு டி. நாம கடைசியா தச்சோமே அந்த வெந்தைய கலர் சட்டையை கொடு சரியா இருக்கும். அப்படியே பார்த்திக்கு வீட்டைச் சுத்திக் காட்டு”, என்று சொல்ல அவன் முகம் மலர்ந்தது.

அவன் கண்கள் அவளையே ரசனையுடன் பார்க்க தனிமை கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்று அவளுக்கு தெரியுமே? அவன் பார்வை வேறு அவளுக்கு குறுகுறுப்பைத் தந்தது. வீட்டில் ஒரு நைட்டி அணிந்து எப்போதும் சாதாரண தோற்றத்தில் தான் இருப்பாள்.

ஆனால் இன்று கோமளம் நகை எடுக்க செல்ல வேண்டும் என்று சொல்லி இருந்ததால் குளித்து முடித்து ஈரத் தலையை துண்டில் அடக்கி இருந்தவள் ஒரு சுடிதாரை அணிந்த படி இருந்தாள். அதுவும் ஈர உடம்பில் அவள் சுடிதாரை அணிந்திருக்க அது சில இடங்களில் ஈரமாக இருந்தது.

ஏனோ அந்த கோலத்தில் அவன் கண்கள் அவளைக் கண்டு காதல் மயக்கத்திற்கு செல்ல அவன் பார்வை அவளை உரிமையாக தழுவியது.

அவன் பார்வையில் அவள் தன்னை மறந்து நின்றிருக்க “ஏய் வீட்டைச் சுத்திக் காட்டு டி”, என்று சொன்ன பார்த்திபன் எழுந்து கொண்டான்.

“இது என்ன பேலசா சுத்திக் காட்ட?”, என்று எண்ணி அவள் திகைப்புடன் அவனைப் பார்க்க “அதெல்லாம் வேண்டாம். உன் ரூமுக்கு மட்டும் கூட்டிட்டு போ பிளீஸ்”, என்றான்.

அவன் குரல் அவ்வளவு கிசுகிசுப்பாக ஒலிக்க அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல இருந்த உணர்வை அடக்கியவள் “வாங்க”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் வந்ததும் அவள் அமைதியாக இருக்க “நைட்டி போட்டு தரிசனம் கொடுப்பன்னு நினைச்சு வந்தேன் டி. ஆனா இது அதை விட நல்லா இருக்கு”, என்றான் பார்த்திபன்.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் அவனைப் பார்க்க அவன் பார்வையோ அவள் முகத்தை தான்டி மேனியில் நிலைத்தது. அவன் பார்வையைக் கண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள். அவன் முன் ஒரு துப்பட்டா கூட அணியாத தோற்றம் ஒரு தடுமாற்றத்தைக் கொடுத்தது.

துப்பட்டாவை அவள் கண்கள் தேட அதுவோ அவன் அருகே இருந்த டேபிளில் தான் இருந்தது. அவள் பார்வை உணர்ந்தவன் “கொஞ்ச நேரத்துக்கு அது அங்கயே இருக்கட்டும்”, என்று சொல்ல அவள் முகம் சிவந்து நின்றாள். அவனால் அவளிடம் இருந்து பார்வையை திருப்பவே முடியவில்லை.

அவன் பார்வையை தாங்க முடியாமல் “நீங்க என்ன இங்க? கயலை  அனுப்பி இருக்கலாமே?”, என்று கேட்டாள்.

“ஏன் நான் வரக் கூடாதா? உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு. நல்லதா போச்சு வந்தேன். இல்லைன்னா உன்னை இப்படி பாத்துருக்க முடியுமா? அப்பா எப்படி இருக்க தெரியுமா? இந்த நிமிஷம் நான் நானா இல்லை”, என்று சொன்னவன் பார்வை அவள் தேகத்தில் இறங்க அவளுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

அவளது முகத்தில் இருந்த நீர்த் துளிகளும் அவளது ஈர உதடும் அவனை அப்படியே காந்தமாய் ஈர்த்து தொலைத்தது.

அவளது கழுத்தும் அதில் வடிந்து வந்து கொண்டிருந்த நீரும் அவனை மேலும் மேலும் மயக்கி கொண்டே தான் சென்றது.

அந்த ஈர இதழ்களை கவ்விச் சுவைக்கவும் அவளது கழுத்தில் முகத்தை புரட்டவும் ஆசை கொண்டு அவன் உணர்வுகள் தீண்ட அவனுமே அந்த நொடி தடுமாறி தான் போனான்.

அவன் பார்வை தன்னை மேய்வதைக் கண்டவள் அதற்கு மேல் அவன் முன் அப்படி நிற்க தைரியம் இல்லாமல் துப்பட்டாவை எடுக்க அவனை நெருங்கினாள். அது தெரியாதவனோ இன்னும் ஆர்வமாக அவளைப் பார்வையிட அவன் அருகே வந்தவள் கை நீட்டி அவனுக்கு பின் புறம் இருந்த துப்பட்டாவை எடுத்து விட்டு அங்கிருந்து ஓடிச் செல்ல முயல அடுத்த நொடி அவள் கரம் பற்றி இழுத்திருந்தான்.

அவன் அப்படிச் செய்வான் என்று தெரியாமல் அதிர்ந்தவள் அவன் மேலேயே சாய்ந்திருந்தாள். அவள் கையில் பிடித்திருந்த துப்பட்டா கூட நழுவி கீழே விழுந்தது.

தன் மேல் முழுதாக சாய்ந்தவளை நகர விடாமல் இழுத்து அணைத்தவன் அவள் முகத்தை அவ்வளவு அருகில் பார்த்தான்.

அவளது துடிக்கும் இதழ்களும் படபடக்கும் இமைகளும் அவனை மயக்கியது. அவனை முழுதாக விழுங்க துடிக்கும் கண்களையும் அவ்வளவு அருகில் கண்டவன் அடுத்த நொடி அந்த பூவிதழ்களை மென்று தின்ன ஆரம்பித்தான். அவன் கரங்களும் அவள் இடையில் பதிந்து அழுத்தி இருந்தது.

அவள் செய்கையில் அதிர்ந்து போனாள் மங்கை. அவனைப் பிடித்து தள்ளி விட்டுச் செல்ல ஒரு நொடி ஆகாது தான். ஆனால் அவளால் அதை செய்ய முடிய வில்லை என்பது தான் இங்கே பிரச்சனையாக இருந்தது. அவள் கரங்களும் அவன் முதுகை இறுக்கிக் கொள்ள அளவு கடந்த அந்த முதல் நெருக்கத்தை இருவரும் ரசித்தனர்.

அவள் உதடுகளில் இருந்து விலகி “கொல்லுற டி மங்கம்மா”, என்றவன் அவனை ஈர்த்த அவள் கழுத்தில் முகத்தைப் பிரட்ட அவள் கரங்கள் அவனை இன்னும் இறுக்கிக் கொண்டது. அவள் கழுத்தில் இருந்த ஒற்றை நீர்த்துளியை அவன் உதடுகள் சுவைக்க பார்த்திபனும் சரி மங்கையும் சரி இந்த உலகத்தை விட்டு வெகு தூரம் சென்றிருந்தனர்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ கோமளம் மிக்ஸியில் எதையோ அரைத்துக் கொண்டிருக்க அந்த சத்தத்தில் தான் இருவரும் நடப்புக்கு வந்தார்கள்.

சட்டென்று அவளை விட்டு விலகியவன் “உன் தரிசனம் கிடைக்காதான்னு தான் டி வந்தேன். அதுக்கும் மேல கிடைச்சிருச்சு. இதுக்கு மேல இங்க இருந்தா அவ்வளவு தான். வா வெளிய ஓடிறலாம்”, என்று சொல்லி அவளை வெட்கப் பட வைத்து மீண்டும் அவளை இறுக அணைத்து ஒரு அவசர முத்ததை கொடுத்து விட்டே அவளை வெளியே அழைத்து வந்தான்.