அவள் சொன்னதை புன்னகையோடு கேட்டுக் கொண்டவன், “காவலன் ஆப், மொபைல்ல டவுண்லோட் பண்ணி வச்சிக்கோங்க ம்மா. அது இக்கட்டான சூழ்நிலையில் யூஸ் ஆகும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அன்று அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் கிளம்பி செல்லவும், சிறிதுநேரம் அங்கேயிருந்த சேனாதிபதி, “இவங்களை இரண்டு நாள் இங்கேயே வச்சிட்டு கேஸ் எதுவும் ஃபைல் பண்ணாம விட்டுடுங்க” என்று அந்த காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டரிடம் தனியாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.
கூடவே, இரண்டு நாளும் நேரம் தவறாமல் மூவருக்கும் சாப்பாடு வாங்கி குடுங்க என்று பணம் வேறு கொடுத்திருந்தான். என்ன… சாப்பாடு ரொம்ப சாதாரணமாக இருந்தால் போதும் என்று குறிப்பிட்டு சொல்லியிருந்த சேனாதிபதி, இளைஞர்கள் கையிலிருந்த மொபைல் போன்களையும் அவர்களிடமே விட்டு வைக்க சொல்லியிருந்தான்.
சேனாதிபதி கிளம்பி சென்றிருந்த சற்று நேரத்திற்கெல்லாம், அந்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்கு அழைத்திருந்தார்கள்.
அதற்கு முன்பே அவர்களைப் பற்றிய தகவலை அறிந்திருந்த அவர்களின் நண்பர்கள், “டேய்… வீட்டுல இருக்கிறேன் டா… அப்பா இருக்கிறாரு, இப்போ பேச முடியாது.” பெரிதாக பெற்றவர்களுக்கு பயந்தவர்கள் போலச் சொல்லி, பேச மறுத்தனர்.
அன்றிரவு முழுவதும் வேறுவழியில்லாமல் அமைதியாக கழித்த இளைஞர்கள், மறுநாள் காலையில் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு, நடந்தவற்றை சொல்லி தங்களை ஜாமீன் எடுக்க சொல்ல, “எதுக்கு? எங்களையும் பிடிச்சி உள்ள போடுன்னு சொல்லிட்டு நாங்களே வந்து அங்க நிக்கணுமா? நம்மால முடியாது மச்சி” என்று நேரடியாகவே சொல்லி கழண்டு கொண்டார்கள்.
“டேய்… ஜாமீன் எடுக்கலைன்னா கூட பரவாயில்ல டா… நல்லதா சாப்பாடாவது வாங்கி குடுங்க டா” என்று இவர்கள் கதற, ‘நல்லவேளை நேற்று நாம் அங்கே இல்லை’ என்ற எண்ணத்தில் இருப்பவர்களா அவர்கள் கேட்டதை செய்துவிடப்போகிறார்கள்?
கடைசியில், கொடுத்ததை தின்றுவிட்டு, அன்று உடுத்தியிருந்த துணியோடு கம்பிபோட்ட கதவுக்கு பின்னே கையறு நிலையில் உட்கார்ந்திருக்கும் போது தான், அவர்களுக்கு இந்த சுயநல உலகத்தின் உண்மை சொரூபம் தெரியவந்தது.
இப்போது தெரிந்து என்ன பயன், என்ற விரக்தியில் மூவரும் இருக்க, இரண்டுநாள் முடிவில் சொர்க்க வாசல் கதவு போல திறந்து கொண்டது சிறைக் கதவு. ” படிக்கிற பசங்க.. விட்டுருங்கன்னு ஏசிபி சொன்னதால உங்களை விடுறேன். இல்லைன்னா நீங்க செய்த காரியத்துக்கு பப்ளிக் நியூசென்ஸ் கேஸ் போட்டு உள்ளதள்ளி லாடம் கட்டியிருப்பேன்” என்று சொன்ன அந்த காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி,
“விட்டுட்டேன்னு நினைக்காதீங்க, எங்க பார்வை வட்டத்துக்குள்ளேயே தான் நீங்க இருப்பீங்க, ஒழுங்கா காலேஜுக்கு போனமா, வந்தமான்னு இருக்கணும்” என்றும் சொல்ல, இவ்வளவு பெரிய அனுபவத்திற்குப் பிறகும் தறிகெட்டு ஆட அவர்கள் முட்டாள்களா என்ன?
சொன்னது போல அந்த மூவரின் நடவடிக்கைகள் அவர்கள் அறியாமலேயே கண்காணிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இப்போது வரைக்கும், தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் மூவரும் இருப்பதாக தகவல். இந்த பெண்ணும் அவர்களை அதன்பிறகு இங்கே காணவில்லை என்று சொல்ல, ‘பரவாயில்லை நல்ல மாற்றம் தான்’ என்று எண்ணிக் கொண்டான்.
அலுவலகம் வந்த சேனாதிபதி, ஜெகன்நாதனோடு டிஜிபி அலுவலகத்திற்கு சென்று, அங்கு நடந்த ஒரு கலந்துரையாடலில் கலந்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான். இப்போது ராஜ் ட்ரைவ் செய்து கொண்டிருக்க, முன்பக்கம் அமர்ந்து கொண்டு தன் பார்வையால் வெளிப்புறத்தை தூழாவியபடியே வந்தான் சேனாதிபதி.
ஒரு திருப்பத்திலிருந்த கோவில் அருகே கூடியிருந்த சிறிய கூட்டத்தைக் கண்டு ராஜ் காரின் வேகத்தை குறைக்க, “என்னை விடுங்க… நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று ஒரு பெண்ணின் குரல் அந்த கூட்டத்தின் மத்தியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தது.
சேனாதிபதியின் பார்வையில் ராஜ் காரை அங்கே நிறுத்த, சேனாதிபதி, ஜெகன்நாதன் இருவருமே இறங்கி கூட்டத்தை நோக்கி சென்றார்கள்.
“வேண்டாம் ம்மா… அவன் நல்லவன் இல்லன்னு உங்கூட படிக்கிற பிள்ளைங்க போன் பண்ணி சொன்னாங்க. தயவு செய்து அவனை கல்யாணம் பண்ணிக்காத, எங்க கூட ஊருக்கு வந்துடு.” பார்ப்பதற்கு அந்த பெண்ணின் பெற்றவர்கள் போலிருந்த, மத்திம வயது ஆணும், பெண்ணும், சத்தமிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் இரண்டு பக்கமும் நின்றுகொண்டு அவள் கையைப் பிடித்து தங்களோடு வந்துவிடும்படி இழுத்துக் கொண்டிருந்தனர், இல்லையில்லை… கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அந்த பெண்ணோ அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முழுமுயற்சி செய்தபடியே, “ஓ… எல்லாம் அவளுங்க வேலை தானா? அதான் நீங்க சரியான நேரத்துக்கு வந்து நிக்குறீங்களா? வேற ஒன்னும் இல்ல… இவ்வளவு அழகான, வசதியான பையன் அவளுங்களை லவ் பண்ணலைங்குற பொறாமையில தான், உங்ககிட்ட அவரைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா போட்டுத் தந்துருக்காளுங்க. என்ன ஆனாலும் சரி, நான் அவரைத்தான் தான் கல்யாணம் பண்ணிப்பேன், எங்க கல்யாணத்தை யாராலும் தடுக்க முடியாது” என்று நீளமாக வசனம் பேசிக்கொண்டிருந்தாள்.
சுற்றி நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் அந்த பெண்ணையும், சிலர் அந்த பெற்றவர்களையும் ஆதரித்து பேசிக்கொண்டிருக்க, சேனாதிபதியின் கண்கள் அந்த பெண் சொல்லிய ‘அவரை’ தேடி சுழன்றது.
தேடிய கண்களுக்கு அதிக சிரமம் கொடுக்காமல், கையில் மாலைகளோடும் மாப்பிள்ளை கெத்தோடும் நின்ற அந்த அவர், சேனாதிபதியின் கண்களில் விழ, சட்டென்று பொறிதட்டியது ஏசிபி க்கு. அடுத்த விநாடி கண்களில் கட்டளையோடு ஜெகன்நாதனை, சேனாதிபதி பார்க்க, அந்த அவருக்கு ‘முட்டுச் சுவராக’ அவன் பின்னால் போய் நின்று கொண்டான் ஜெகன்நாதன்.
கூட்டம் இப்போது போலீஸைக் கண்டதும் சலசலக்க ஆரம்பித்தது. பெற்றவர்களின் கையை உதறிவிட்டு சேனாதிபதி அருகே வந்த அந்த பெண், அந்த அவரின் கையைப் பிடித்து தன்னோடு நிற்க வைத்தபடி, “சார்.. நான் மைதிலி, இவர் ராகேஷ். நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமம். இங்க சென்னைல இன்ஞ்சினியரிங் தேர்ட் இயர் படிக்கிறேன். வயசு இருபது. பொண்ணுக்கு கல்யாண வயசுன்னு கவர்மெண்ட் சொன்ன வயசைத் தாண்டிட்டேன். ஆனா என்னோட பேரண்ட்ஸ் என் மனசுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்க விடமாட்டேங்குறாங்க. நீங்க தான் எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” என்று தைரியமாக கூறினாள்.
அவள் தைரியத்திற்கு நேர்மாறாக, அந்த காதலனின் முகம் போலீசைக் கண்டதும் வெளிறத் தொடங்கியதை மனதில் குறித்துக் கொண்ட சேனாதிபதி, “ஃபைனல் இயரையும் முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாமே… இப்போ என்ன அவசரம்?” என்றான் கதை கேட்கும் நோக்கத்தில்.
அதற்கு அந்த பெண் பதில் சொல்ல முனைய, அவளைத் தடுத்த ராகேஷ், “எப்பிடின்னாலும் இவங்க நம்ம கல்யாணத்தை நடத்த விடப்போறதில்ல. அப்புறம் எதுக்கு நம்ம கதையை எல்லாருக்கும் சொல்லிட்டு. வா… நாம இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்று அங்கிருந்து நகர முயற்சி செய்தான்.
“அதெப்பிடி? நாம ரெண்டு பேரும் மேஜர். அப்புறம் எதுக்கு நாம பயப்படணும் ராகேஷ்?” என்று வீராவேசமாக பேசியபடி ராகேஷின் கையைப்பிடித்து அவனை நகரவிடாமல் செய்த மைதிலி, சேனாதிபதியிடம்,
“ராகேஷ் வீட்டுல வேற பொண்ணோடு அவரை கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறதுனால, கல்யாணம் பண்ணிட்டு படிச்சுக்கலாம்னு நான் முடிவெடுத்துருக்கேன். காரணம் போதுமா சார்? இப்போ நாங்க கல்யாணம் பண்ணிக்க கோவிலுக்குள்ள போலாமா?” என்றாள் போலியான பணிவோடு.
“அதுசரி… ஆயிரம் பெண்களை மணந்த ஆபூர்வ சிந்தாமணின்னு பட்டம் வாங்கணும்னா, நீங்க படிச்சி பட்டம் வாங்குற வரைக்கும் நாங்க காத்திருக்க முடியுமா, என்ன? அப்படித்தானே மாப்பிள்ளை சார்?” சட்டென்று முகத்தில் ரௌத்திரம் ஏறியவனாக, மைதிலியின் பிடியில் இல்லாத ராகேஷின் வலது கையை ஒரு திறுக்கு திறுக்கி அவன் முதுக்கு பின்னால் சேனாதிபதி கொண்டு செல்ல,
அங்கிருந்து தப்பித்து சென்றுவிடு என்று அவன் அறிவு சொன்னாலும், “நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன் சார்” என்று வலியில் தன்னை மறந்து கத்த தான் முடிந்தது ராகேஷால்.
அந்த மைதிலியோ, சேனாதிபதியின் வார்த்தையில் இருக்கும் உண்மையை ஆராய்வதை விட்டுவிட்டு, “இவ்வளவு அழகா, மேன்லியா இருக்குற என் ராகேஷைப் பாத்தா, உங்களுக்கு ரோட்சைட் ரோமியோ போலத் தெரியுதா?” என்று சேனாதிபதியிடம் சண்டைக்கு வந்தாள்.
அழகுக்கும், நடத்தைக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்கும் அந்த பெண்ணின் அறியாமையை நினைத்து சிரிப்பு தான் வந்தது சேனாதிபதிக்கு. அதை மறைக்காமல் கேலிச்சிரிப்பாக தன் இதழ்களில் தவழவிட்ட சேனாதிபதி, “அப்பிடியா ம்மா… ஸ்டேஷனுக்கு வாங்க… உங்க அழகான, மேன்லியான ராகேஷ்ஷோட சரித்திரத்தையே நான் உங்களுக்கு காட்டுறேன்” என்று நக்கலாகச் சொல்லியவன், ஜெகநாதனின் உதவியோடு அவர்களை தங்கள் வாகனத்தில் ஏற்றியிருந்தான்.
இதுவரையில் தங்கள் பெண்ணின் வாழ்க்கை என்னவாகுமோ? என்று கவலையிலேயே நின்றிருந்த மைதிலியின் பெற்றோர், அப்படி எதுவும் தவறாக நடக்க சேனாதிபதி விட்டு விடமாட்டான் என்ற நம்பிக்கையில், தாங்களே காரில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.
முடிவடையாத பழைய கேஸ் ஃபைல்களை படிக்கும் பழக்கமுடைய சேனாதிபதிக்கு, ராகேஷின் புகைப்படத்தோடு தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டான் என்று ஒருபெண் வழக்கு பதிவு செய்திருந்த ஃபைல் சமீபத்தில் படிக்க கிடைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து அந்த கேஸைப் பற்றிய விவரங்களை சேனாதிபதி சேகரிக்கத் தொடங்க, மேலும் மூன்று பெண்கள் அதே குற்றச்சாட்டை அவன்மீது சுமத்தி வெவ்வேறு மாவட்டங்களில் கேஸ் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. தைரியமாக வெளியே வந்து வழக்கு பதிந்தவர்களே நான்குபேர் என்றால், அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எத்தனை பேரோ என்ற எண்ணம் தோன்ற, சம்மந்தபட்டவனைத் தேடும் பணியை படுவேகமாக முடுக்கி விட்டிருந்தான் சேனாதிபதி. ஆனால் இவ்வளவு எளிதாக தன்னிடம் அவன் மாட்டிக் கொள்வான் என்று சேனாதிபதியே எதிர்பார்க்கவில்லை.
அழகான தோற்றம் உடைய ராகேஷுக்கு, தன்னை பெரியவீட்டு பிள்ளை என்று பொய் சொல்லி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, தன் தேவை முடிந்ததும் அவர்களை கைமாற்றி விடுவதே தொழில். அதுவும், அழகான தனக்காக வேண்டி, பழகிய தோழிகளே தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்வதைக் காணும்போது, அவனுக்கு அலாதி இன்பமாக இருக்கும்.
அப்படி தோழிகளுக்குள் போட்டி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான், மைதிலியின் தோழிகள் வட்டம் முழுமைக்குமாக வலைவிரித்தான் இந்த அழகன். ஆனால், அவன் நினைத்தது போல எல்லாப் பெண்களும் முட்டாள்கள் இல்லை என்பதை மைதிலியின் தோழிகள் அவனுக்கு புரிய வைக்க, கிடைத்த வரைக்கும் லாபம் என்று மைதிலியோடு கம்பி நீட்டிவிட நினைத்தான்.
அவளோ படிப்பை முடித்துவிடுகிறேன் என்று சொல்ல, இல்லாத கதைகளை இட்டுகட்டி இதோ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து விட்டான். ஆனால், விஷயம் மைதிலியின் தோழிகள் மூலம் அவள் பெற்றோர் வரைக்கும் சென்று, அவர்கள் இங்கே வந்து நிற்பார்கள் என்பதெல்லாம் அவன் எதிர்பாராதது.
தான் ஏமாற்றிய பெண்களில் சிலர் தன்மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்பது வரைக்கும் அவனுக்கும் தெரியும். ஆனால் இதுவரை அவன் போலீஸிடம் சிக்கியதில்லை. இப்போது போலீஸை அருகில் கண்டதும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஓடினாலும், தன்னை எங்கே நினைவு வைத்திருக்கப் போகிறார்கள் என்று அசட்டையாகவே நினைத்தான். ஆனாலும், அங்கிருந்து சென்றுவிட முயற்சித்தவனை, அந்த பெண் மைதிலி பிடித்து நிறுத்தி விட்டாள்.
தான் போலீஸிடம் மாட்டியதற்கு மைதிலி தான் காரணம் என்று மனம் முழுவதும் அவள் மீது கோபத்தோடு அவன் வர, அவளோ ஆந்திராவில் உள்ள பிரபல தொழில் குடும்பத்தின் பெயரைச் சொல்லி, “அந்த குடும்பத்தோட கடைக்குட்டி வாரிசு, நீங்க எதுக்கு போலீஸ் கார்ல வரணும் ராகேஷ்? உங்க வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்க. அவங்க ஏதாவது செய்வாங்க” என்று அவனோடு ஒட்டி அமர்ந்து கொண்டு அவனை நச்சரித்தபடியே வந்தாள்.
“உங்க குடும்ப தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி, தொழில் படிச்சிக்கோன்னு உங்க பேரெண்ட்ஸ்ஸே உங்களை சென்னைக்கு அனுப்பி வச்சதா தானே சொன்னீங்க. அப்புறம் ஏன் அவங்ககிட்ட ஹெல்ப் கேட்க தயங்குறீங்க. நம்ம விஷயம் தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகட்டுமே. மொதல்ல உங்களை சேவ் பண்ணிக்கோங்க, நம்ம விஷயத்தை பிறகு பாத்துக்கலாம். உங்க வீட்டுக்கு போன் பண்ணுங்க ராகேஷ்” என்று மறுபடியும் மறுபடியும் மைதிலி சொல்ல, அப்படியொரு குடும்ப பின்னணி இருந்தால் தானே, அவள் சொல்வதை அவனால் செய்ய செய்யமுடியும்.
விசாரணை எதுவுமின்றியே தங்கள் முழுக்கதையையும் மைதிலி கடைபரப்பியதில், தான் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது ராகேஷூக்கு அப்பட்டமாக புரிய, தன்னோடு ஒட்டியபடி இருந்த மைதிலியை தன் முழங்கையால் லேசாக இடித்து தள்ளியவன், “அடச்சீ… வாயை மூடு… பணமும், பெரிசா அழகும் இல்லாத உன்னை கல்யாணம் செய்ய சபலப்பட்டு, நான் மாட்டிகிட்டது தான் மிச்சம்” என்று கோபத்தில் வார்த்தைகளை விட்டான்.
அவன் செயலிலும், வார்த்தையிலும் அந்த பெண் மிரண்டு போய் பார்க்க, “பொண்ணுங்க மேல கைய வைக்கிறது இன்னைக்கு தான் டா உன்னோட வாழ்க்கையில கடைசியா இருக்கணும்” என்று சொல்லி அவன் பிடரியில் ஓங்கி அடித்தான் அவன் அருகில் அமர்ந்திருந்த ஜெகன்நாதன்.
அந்த ஒற்றை அடியிலேயே சித்தம் கலங்கிப் போக, தன் பொன்னான மேனி புண்ணாக விரும்பாதவனாக, “நான் அவன் இல்லை” என்று சொல்லாமல் எல்லாவற்றையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதே வந்துவிட்டான் அந்த ராகேஷ்.
தனது அலுவலகத்திற்கு வந்ததும், ராகேஷ் மீது பதியப்பட்ட புகார்களை எடுத்து மைதிலியின் முன் பரப்பினான் சேனாதிபதி. அந்த புகார்களில் இருந்த ஆணின் புகைப்படம், கொஞ்சம் வெவ்வேறு சிகையலங்காரங்களிலும், வெவ்வேறு பெயர்களிலும் இருந்தாலும், அது இப்போதைய ராகேஷ் தான் என்று கண்டுகொண்ட மைதிலி ஓய்ந்து போனாள்.
போதாததற்கு, அவள் முன்பாகவே தன்னுடைய குற்றங்களை அந்த ராகேஷ் ஒத்துக்கொள்ள, “தன் தோழிகள் எத்தனையோ சொல்லியும் இவன் அழகு என் கண்ணை மறைத்து விட்டது” என்று வாய்விட்டு சொல்லி கதறி அழுதவள், அதன்பிறகு அவன்பக்கம் பார்வையைக் கூட நகர்த்தவில்லை. நல்ல காலம் நான் தப்பித்துக் கொண்டேன் என்ற பாவனையே இப்போது அவளிடம்.
“அழகை எப்போதுமே வெளித்தோற்றத்தில் தேடக்கூடாது” என்று அந்த பெண்ணுக்கு அறிவுரையை கூறிய சேனாதிபதி, “எந்த காரணத்துக்காகவும் உங்க பொண்ணோட படிப்பை நிறுத்திடாதீங்க, தொடர்ந்து படிக்க வைங்க. எந்த உதவின்னாலும் தயங்காம எங்கிட்ட வாங்க” என்று அந்த பெற்றோரிடம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
அதன்பிறகு சட்டப்படி அந்த ராகேஷை கைது செய்யும் நடவடிக்கைகளில் சேனாதிபதியின் நேரம் பறந்தது. எல்லா வேலைகளையும் முடித்து ராகேஷை ஜெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு சேனாதிபதி நிமிரும் போது மதியம் இரண்டு மணி கழிந்திருந்தது.
அருகிலிருந்த ஹோட்டலில் ராஜ்ஜை உணவை வாங்கிவரச் சொல்லி உண்டவன், சற்று ஓய்வாக தன் இருக்கையில் சாய்ந்தான். அன்று நடந்தவற்றை மனம் மெதுவாக அசைபோட ஆரம்பித்தது.
எந்த குற்ற உணர்வும் இல்லாமல், தன் தவறுகளை ஒத்துக் கொண்ட ராகேஷை நினைக்க நினைக்க அவன் மேல் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது போலவே, அழகு… அழகு… என்று பறந்த அந்த பெண்ணின் மீதும் கோபம் வந்தது சேனாதிபதிக்கு.
‘எதற்குத்தான் அழிந்து போகும் இந்த அழகிற்கு இந்த பெண்கள் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ தெரியவில்லை? அதனால் தானே இவனைப் போன்ற ஆண்களால் வெட்கமே இல்லாமல் இப்படிப்பட்ட தவறுகளை செய்யமுடிகிறது’ என்று சேனாதிபதி எண்ண,
‘ஏன்? பெண்கள் மட்டும் தான் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? ஆண்கள் கொடுப்பதே இல்லையா? இவ்வளவு ஏன்? நீ அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா?” என்று ஒரு குரல் அவனுளிருந்து ஓங்கி ஒலிக்க, அதிர்ந்து போனவனாக நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தான் சேனாதிபதி.
‘ஆமாம்… நானும் அப்படித்தான் போல, இல்லையென்றால், உன்னைத் திருமணம் செய்து கொண்டு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக நான் தயாராக இல்லை என்று என்னிடம் சொன்ன பெண்ணையே, வெட்கமே இல்லாமல் திருமணம் செய்து கொள்வேனா?’ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.
சேனாதிபதியின் மனதின் அடிஆழத்தில் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷிணி சொன்ன வார்த்தைகள், நீண்ட நாட்கள் கழித்து விழித்துக் கொண்டு பேயாட்டம் போட்டதில், ‘சிறுவயது முதலே, மனைவி என்று தன் ஒவ்வொரு அணுவிலும் சுபாஷிணியின் உருவம் பச்சை குத்தப்பட்டதாலேயே, அவளையன்றி வேறு யாரையும் தன்னால் மனைவியாக்கிக் கொள்ள முடியவில்லை’ என்ற உண்மையை சேனாதிபதியால் பகுத்தறிய முடியவில்லை.
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்பவன் தனக்கென்று வரும்போது தடுமாறிப்போனவனாக, இரவு ஒன்பது மணி ஆகியும் வீட்டுக்கு செல்ல மனமின்றி, சிங்கார சென்னையின் சாலைகளில் தன் வாகனத்தில் தனியாக அலைந்து கொண்டிருக்க…
அதே சென்னையை ஒட்டிய கிராமத்தில் இருந்த பண்ணை வீட்டில் சிலர், சேனாதிபதிக்கு கட்டம் கட்டுவதற்காக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்…