கடந்து செல் காதலுடன்! 9

குருமூர்த்தி இன்னமும் அறைக்கு வெளியே தான் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட சம்யுக்தா, “பேசாத” என்று வாய் மேல் விரல் வைத்து காட்டினாள்.

“ஏன்?” என்று அவன் கேட்க,

“அப்பா” என்று வாயசைத்து, அறைக்கு வெளியே விரல் நீட்டினாள் பெண்.

“இந்த நேரத்துக்கா?” அவனுக்கு நம்பிக்கையில்லை போல.

“என்ன? ஏதும் பிளான் போடுறியா? மாட்டினா நீயும் தான் மாட்டுவ” என்று சத்தத்தை வெகுவாக குறைத்து கொண்டான்.

“இவனோட. கடவுளே!” சம்யுக்தா நெற்றியில் அடித்து கொண்டாள்.

அவன் சந்தேகமாக பார்த்து கதவுக்கருகில் செல்ல போக, “டேய் மடையா” என்று மென்குரலில் அலறி அவன் கைப்பற்றி இழுத்தாள் சம்யுக்தா.

“திரும்ப தொடுற” என்று அவளின் கையை உதற,

“உன்னை கொன்னுடுவேன். மூடிட்டு நில்லு” என்று கண்களை உருட்டினாள் சம்யுக்தா.

மூடிட்டு நில்லா? இவனுக்கு அதிர்ச்சி!

“ஏய் நான் யாருன்னு தெரியுமாடி? எவ்வளவு தைரியம் உனக்கு?” என்று கோவத்தில் அவளின் கைப்பற்றி முறுக்க,

சம்யுக்தா அவனை உதறி, அவனின் வயிற்றிலே குத்து விட்டதுடன், மறுகையால் அவன் வாயையும் அடைந்திருந்தாள்.

“ஆஹ்” என்ற அவனின் சத்தம், அவளின் உள்ளங்கைக்குள் அடங்கி போனது.

குருமூர்த்தியின் அறைக்கதவு அடைக்கும் சத்தம் கேட்டதும், சம்யுக்தா வேகமாக கதவுக்கருகில் சென்று தந்தை சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டாள்.

‘கொஞ்ச நேரத்துல எவ்வளவு டென்சன்’ சம்யுக்தா நெஞ்சில் கை வைத்து ஆசுவாசம் கொண்ட நேரம், அவளை சுழற்றி திருப்பினான் சர்வாச்சார்யா.

அவனின் நெஞ்சிலே மோதி நின்றவளின் இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் வளைத்தவன், “அடிக்கிற. மரியாதை இல்லாம பேசுற! பெரிய இவளாடி நீ?” என்று பல்லை கடித்து மிரட்டினான்.

“என்ன பண்றீங்க நீங்க? முதல்ல என் கை விடுங்க” என்று சம்யுக்தா அவன் மேல் மோதாமல் இருக்க பெரும் பாடுபட்டாள்.

“விட முடியாதுடி! டேய் மடையா சொன்ன இல்லை நீ” என்று இன்னும் பிடியை இறுக்க, சம்யுக்தா வலியில் தடுமாறி அவனை நேருக்கு நேர் இடித்து வைத்தாள். நெஞ்சில் சுள்ளென வலி!

ஸ்ஸ். கண்களை மூடி திறந்தவள், “அறிவு கெட்டவனே! மூளை இருக்காடா உனக்கு? மலை மாடு. விட்டு தொலைடா என்னை” என்று பெண் பொங்கிவிட்டாள்.

அவனும் நொடி அந்த மோதலில் அதிர்ந்துதான் விட்டான். ஆனால் இவளின் பேச்சில், “திரும்ப திரும்ப அப்படியே பேசுற நீ? உன்னை விடவே மாட்டேன்டி. என்ன பண்றியோ பண்ணு” இன்னும் பிடியை வலுவாக பிடித்தான்.

சம்யுக்தா விடைத்து விட்ட மூக்குடன் அவன் கால்களை தாக்க, அவனோ தயாராக இருந்திருப்பான் போல. சட்டென இவள் தாக்குதலில் இருந்து விலகி, அவளை கதவில் சாய்த்தான்.

வலுவான கதவு என்றாலும், வேகமாக சாய்த்ததில் சிறு சத்தம் எழுத்தான் செய்தது.

“சத்தம் இல்லாம உன்னால எதையும் செய்ய முடியாதா?” என்று சம்யுக்தா அவனை முறைத்தாள்.

“சத்தம் இல்லாம சண்டை போட உன் அப்பா சொல்லி கொடுக்கலையே! நீ வேணும்ன்னா சொல்லி கொடு” என்று நக்கலடித்தான்.

“முதல்ல தள்ளி நில்லு”

“முதல்ல நீ சாரி சொல்லுடி”

“நான் ஏண்டா சாரி சொல்லணும்” சம்யுக்தாவும் அவளின் பொறுமையை சுத்தமாக இழந்துவிட்டாள்.

உடன் அவன் பிடியில் இருந்தும் மின்னலாக வெளியேறியவள், “இங்க ஏன் வந்த?” என்றும் கேட்டாள்.

“உன் ரகசியத்தை நான் கண்டுபிடிச்சுட்டேன்னு காட்ட தான்” என்றவன், இரு கைகளையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தான்.

சிவந்திருந்த அவன் கண்கள் அவன் சுத்தமாக தூங்கவில்லை என்று காட்டியது.

“நைட்டெல்லாம் முழிச்சிருந்து ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போல” சம்யுக்தா கடுப்பாக கேட்டாள்.

கற்பகம் பாட்டி மூலம், இவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்து கொண்டவன், நேற்றய இரவு விழித்திருந்து சம்யுக்தா சென்ற வழியை தான் ஆராய்ந்தான்.

“இந்த பக்கம் தான் ஏதோ ஓர் சுவற்றை நகர்த்தினா! எந்த இடம்? சாவி, விசை மாதிரி ஏதும் இருக்கா?” என்று முழு இரவு, முழு பகல் ஆராய்ந்து கண்டுபிடித்து இதோ அவளின் அறைக்கு வந்துவிட்டான்.

சம்யுக்தாவின் அறை என்பது அவனுக்கு சற்று சங்கடமே. ஆனாலும் அவனுக்குள் ஏதோ ஓர் வெளிச்சம் தென்பட்டது இங்கு, இவளிடம் தான்!

“காட்டிட்டா கிளம்புங்க. எப்படியும் நாளைக்கு நான் அப்பாகிட்ட இந்த ரகசிய வழியை சொல்லத்தான் போறேன்” என்றாள் சம்யுக்தா.

“ஹேய் அப்படி ஏதும் பண்ணி தொலைச்சிடாத” என்றான் இவன்.

“க்கும். நான் சும்மா, ஒரு ஆர்வத்துல தான் இங்க வந்தேன். மத்தபடி என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது”

சம்யுக்தா அவனை சந்தேகமாக பார்க்க, “என்னை நம்ப மாட்டியா? சர்வா ப்ராமிஸ்” என்று நெஞ்சில் கைவைத்தான்.

“சர்வா” சம்யுக்தா கேள்வியாக இழுக்க,

“சர்வாச்சார்யா. சர்வா” என்று நல்லவனாக அவளிடம் கை நீட்டினான்.

“என்ன ட்ரை பண்றீங்க. ரொம்ப கேவலமா இருக்கு” என்று சம்யுக்தா முகம் சுளித்தாள்.

நல்லவனுக்கு சுர்ரென ஏற, ‘நோ. நோ சர்வா. கூல்’ என்று நீட்டிய கையை மடக்கி பேக்கெட்டில் விட்டு கொண்டவன்,

“பர்ஸ்ட் டைம் ரூமுக்கு வந்திருக்கேன். காபி, டீ ஏதும் கொடுக்க மாட்டியா?” என்று கேட்டான்.

“என் ரூமுக்கு வந்ததே தப்பு. இதுல விருந்தோம்பல் வேறயா? கிளம்புங்க முதல்ல” சம்யுக்தா சொல்ல,

“அட. உன் ரூம்ல நல்லா இருக்கு. ஓர் பாசிட்டிவ் பீல் கிடைக்குது” என்றான்.

“நான் உங்களை கிளம்ப சொன்னேன்”

“சம்யுக்தா சாம்ராஜ்யம்!” என்று அவளின் போஸ்டரை வாசித்தான்.

“அதையேன் படிக்கிறீங்க”

“படிக்கிறது கூட தப்பா? ரொம்ப பண்றீங்க மேடம் நீங்க”

“சரி போதும், கிளம்புங்க சார். எனக்கு தூங்கணும்”

“எனக்கு இங்க நல்லா இருக்கு. நாலு சுவத்துக்குள்ளே இருந்து இருந்தே மூச்சு முட்டி போச்சு. பைவ் மினிட்ஸ் இங்க இருக்க விடேன்” என்று பாவமாக கேட்டான்.

சம்யுக்தாவிற்கு சட்டென மறுக்க முடியவில்லை. அவன் இருக்கும் அறையில் சில்லென்ற காற்று கூட கிடைப்பதில்லை என்று இவளுக்கு தெரியுமே!

“இங்க உட்கார்ந்துக்கவா?” என்று சேரை காட்டி கேட்க,

“ம்ம்” என்றாள் சம்யுக்தா.

“செம. அந்த ஏசி இன்னும் கொஞ்சம் கூட்டி வைக்கிறியா ப்ளீஸ்” என்று கேட்டான்.

பெண்ணின் இளகிய மனது அவன் கேட்டதை செய்ய வைத்தது.

“தேங்க் யூ” என்று கண்களை மூடி கொண்டவன், “பசிக்குது” என்று முனகினான்.

“பாட்டி கொடுத்ததை சாப்பிடலையா?” சம்யுக்தா கேட்க,

“அப்போ பசிக்கலை” என்று முகத்தை பாவமாக வைத்தவனிடம் என்ன பேச?

சம்யுக்தா அறையில் இருந்த நொறுக்கு தீனியை எடுத்து கொடுத்தாள். “சூப்பர். இதெல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு” என்று எல்லாம் வெளுத்து வாங்கினான்.

“ஸ்வீட் ரொம்ப பிடிக்குமா?” என்று இடையில் கேட்க,

“ஆமா பிடிக்கும்” என்றாள் சம்யுக்தா.

“எனக்கும் இந்த ஸ்வீட் பிடிக்கும்” என்று ஒரு குறிப்பிட்ட இனிப்பை முழுதும் காலி செய்துவிட்டான்.

தண்ணீர் குடித்தவன், “தேங்க்ஸ்” என்றான்.

அவள் பொருட்கள் எல்லாம் பயன்படுத்துகிறான். பெண்ணுக்கு லேசான சுணக்கம். “க்கும். சரி கிளம்புங்க” என்றாள்.

“துரத்திட்டே இருக்காத” என்றவனை, அதற்கு மேல் விடாமல் கிளப்பிவிட்டே ஓய்ந்தாள் சம்யுக்தா.

மறுநாள், “அண்ணா. சண்முகம் ஆளுகிட்ட இருந்து போன். நைட் மீட்டிங் வைச்சுக்கலாமான்னு கேட்கிறாங்க” என்றார் மாசிலாமணி.

குருமூர்த்தி புருவம் சுருங்கியது. ஓர் நாளுக்குள் ஆள் வந்தாகிவிட்டதா? அப்படியென்ன அவசரமாம்?

என் இடத்தில் அத்து மீறி நுழைந்தவர்களை நான் பிடித்து வைத்த ஓர் நாளிலே தான் சண்முகமும் தன் ஆட்களோடு வந்தார்!

உடனுக்குடன் செயல்படுகின்றனர். மிகவும் வேகமாக இயங்குகிறார்கள். ஆனால் ஏன்? ஒரு இளைஞனை கொல்ல மட்டுமா? இல்லை வேறெதுவுமா?

குருமூர்த்திக்கு ஏதோ உறுத்த ஆரம்பித்தது. இவர்கிட்ட பேசணுமே!

குருமூர்த்தி உடனே இந்த நல்லவனை சந்திக்க சென்றார். “ண்ணா. திரும்ப கூப்பிடுறாங்க. என்ன சொல்லட்டும்” என்று மாசிலாமணி அழைக்க,

குருமூர்த்தி பதிலே இல்லாமல் அந்த அறைக்குள் நுழைந்தார்.

மிகவும் சாவகாசமாக கட்டிலில் உருண்டு கொண்டிருந்தவனிடம், “எங்ககிட்ட இருந்து  எதாவது மறைக்கிறீங்களா?” என்று கேட்டார்.

அதுக்குள்ள அவர் பொண்ணு ரூமுக்குள்ள போனதை கண்டுபிடிச்சுட்டாரா என்ன?

“உங்ககிட்ட தான் கேட்கிறேன். ஏதும் மறைக்கிறீங்களா?” என்று திரும்ப கேட்டார் குருமூர்த்தி.

“முதல்ல நான் உங்ககிட்ட ஏதும் சொன்ன மாதிரியே எனக்கு ஞாபகம் இல்லை” என்றான் இவன் பொத்தாம் பொதுவாக.

மெத்தையை விட்டு தலை கீழே தொங்க, குருமூர்த்தி தலைகீழாக தான் தெரிந்தார். நேராக கூட படுத்து பதில் சொல்ல முடியா சுகவாசி!