Neeyen Naayagi 19 1 7345 நீயென் நாயகி -19 அத்தியாயம் -19 விஷ்வாவும் வேதாவும் இரண்டு வாரங்கள் கொடைக்கானலில் இருந்து விட்டு ஊர் வந்து சேர்ந்தனர். இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இயல்பாக இருக்க, தாத்தாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்றைய தினம் வேதா வீட்டில்தான் இருந்தாள். விஷ்வா மட்டும் ஃபேக்டரி சென்றான். மதிய உணவு தயாரானதும் விஷ்வாவுக்கு பேக் செய்து டிரைவரிடம் கொடுத்தனுப்பினாள். பின் தன் பிறந்த வீட்டுக்கு செல்வதாக தாத்தாவிடம் அறிவித்து விட்டு புறப்பட்டு விட்டாள். வாசுகியின் மகள் மீதான கோவமும் மட்டுப் பட்டிருக்க, மகளை நல்ல முறையிலேயே வரவேற்றார். கொடைக்கானலில் வீட்டினருக்கு வாங்கிய எதையும் எடுத்து வந்திருக்கவில்லை வேதா, அம்மாவுக்கு விஷயம் தெரிய வர விடாமல் சமர்த்தாக சமாளித்துக் கொண்டாள். இடையில் விஷ்வாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. ஏற்றுக் கொண்டு தள்ளி சென்று விட்டாள். ஆனாலும் மகளின் மீதே பார்வையை வைத்திருந்தார் வாசுகி. மகள் சிரித்துப் பேசுவதும் இடையில் அவளின் கன்னங்கள் பூரிப்பதுமாக இருப்பதை கண்டவர் நெஞ்சில் கை வைத்து சமாதானம் அடைந்தவராக தன் வேலையை பார்க்க சென்று விட்டார். சந்திரன் மதிய உணவுக்காக வீடு வந்தவர் மகளை கண்டு விட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். மகளிடம் தென்பட்ட மலர்ச்சியில் அவருக்கும் நிம்மதி. கணவருக்கு உணவு பரிமாறும் போது, “ஆடி மாசம் அங்க போய் உட்கார்ந்திருக்கா, சேர்ந்துதான இருந்தாங்க, உங்க மாப்ள ஃபோன்ல பேச ஆரம்பிச்சு ஒரு மணி நேரமாகுது, அப்படி என்னத்ததான் பேசிக்குவாங்களோ? சாப்பிட்டு போய் பேசலாமா இல்லையா? என்னவோ நல்லாருந்தா சரி” என மன மகிழ்ச்சியோடு அங்கலாய்த்துக் கொண்டார் வாசுகி. விஷ்வா இல்லாத போதும் நடக்க வேண்டிய வேலைகள் அனைத்தும் சரியாகவே நடந்திருந்தன. ஆதலால் அவனுக்கென பெரிதாக வேலைப் பளு இல்லை. சாப்பாட்டு டப்பாவை திறக்கும் போதே மனமெங்கும் மனைவி வந்து ஆக்ரமித்து விட, உடனே வேதாவுக்கு அழைத்து விட்டவன் அவளுடன் பேசிக் கொண்டேதான் சாப்பிட்டான். சாப்பிட்டு முடிந்த பிறகும் பேச்சை நிறுத்துவதாக இல்லை அவன். “அப்பா வந்திருக்காங்க, இன்னும் நான் அப்பாட்ட சரியா பேசல, ஃபோன் வைக்கவா?” எனக் கேட்டாள் அவள். “அங்க போனதும் என்கிட்ட பேச கூட டைம் இல்லைல உனக்கு? ஹ்ம்ம்… வை வை” என்றான். “ஆடி மாசம் கூட அம்மா வீட்ல விடாம புடிச்சு வச்சுக்கிட்டு இப்படிலாம் பேசினா நீங்க இருக்க இடம் மட்டும் மழை பெய்யாம போயிடும்” “மழையெல்லாம் நான் வரவச்சுக்கிறேன், நீ அங்கேயே இல்லாம என் அம்மாவை போய் பார், ஈவ்னிங் சரியா அஞ்சு மணிக்கு நான் அவங்கள பார்க்க வந்திடுவேன்” என்றான். சரியென சொல்லி சாப்பிட வந்தாள் வேதா. விஷ்வாவுக்கு உள்ளுக்குள் சற்று உதறலாக இருந்தது. மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் தான் அம்மாவிடம் நடந்து கொண்ட விதமெல்லாம் சரியாகி விடுமா? பாட்டி சொன்னதை அப்படியே கேட்ட எனக்கு அம்மாவின் தரப்பை கேட்டு பார்க்கலாம் என ஏன் தோன்றாமல் போனது? அப்படி அம்மாவை பேச அனுமதித்திருந்தால் உண்மை தெரியாமலேயே கூட அவரை ஏற்றுக் கொண்டிருப்பேனோ… யோசனை பல விதமாக ஓடிக் கொண்டிருக்க, அவனாலும் நிலையாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. நேரத்தை பார்த்தான், அம்மாவை சந்திக்க இன்னும் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா என சலிப்பாக உணர்ந்தவன் மீண்டும் மனைவிக்கு அழைத்து விட்டான். அப்போதுதான் சாப்பிட அமர்ந்த வேதா, அழைப்பை ஏற்க, அவளின் கணவன்தான் என தெரிந்து கொண்ட வாசுகி மகளை முறைத்தார். சிரித்த சந்திரன், “நீ போய் பேசிட்டு வாம்மா” என சொல்லி மகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார். “அதென்னங்க உங்க மாப்ள ஒரே திரியா ஏறிக்கிறார், இல்லைனா தலை குப்புற படுத்திடுறார்” என கிண்டல் செய்தார் வாசுகி. “வேதா மேல அன்பா இருக்கான், அதுதானே நமக்கு வேணும்? உன் வாயை வச்சுக்கிட்டு நீ சும்மா இல்லைனா ஒரேயடியா விலகி போயிடுவான், ஒழுங்கா இரு” என மனைவிக்கு அறிவுறுத்தினார் சந்திரன். “ம்க்கும்! எனக்கு மட்டும் அந்த பையன் கூட சண்டை போட ஆசை பாருங்க. இவ்ளோ நாள்ல இப்பதான் இவ பூரிப்பா இருக்கா” “கண்ணு வைக்காதடி!” என சந்திரன் சொல்ல, கணவரை முறைத்து விட்டு பின் சிரித்தார் வாசுகி. விஷ்வா தன் மனைவியிடம் தன் மன நிலையை சொல்லி புலம்ப, “பேசாம வீட்டுக்கு போங்க, நல்லா படுத்து தூங்கிட்டு அத்தைய பார்க்க வரலாம்” என்றாள் வேதா. “நீயும் வர்றியா?” “நான் எதுக்கு?” “என்னை தூங்க வைக்க” “ஆமாம் பாப்பாவை தாலாட்டு பாடித்தான் தூங்க வைக்கணும்” “அது பாப்பாக்குடி, உனக்கு பாப்பாவை தர போறவனை அந்த பாப்பாவை எப்படி சேர்ந்து உருவாக்குறதுன்னு டிஸ்கஸ் பண்ணிட்டே தூங்க வைக்கணும்” “விஷ்வா!” என அவள் கண்டனமாக அழைக்க, “வேதாக்குட்டி..” என வழிந்தான் அவன். “ம்ம்… நான் உங்கள்ட்ட வந்திட்டா, அத்தைகிட்ட யார் போய் பேசுவா?” “ஆமாம்ல? நீ இரு, நான் இங்கேயே இருக்கேன்” “நல்லா மூச்சு இழுத்து விட்டு ரிலாக்ஸ் ஆகுங்க, வேலை ஏதாவது இருந்தா பாருங்க, சும்மா சும்மா கால் பண்ணி நொச்சு பண்ணிகிட்டே இருந்தீங்க… நேர்ல வந்து நாலு சாத்து சாத்திடுவேன்” “திட்டாதடி” “திட்டாத படி நடந்துக்கோங்க” “ம்ம்…” “ஏன் குரல் உள்ள போகுது? அவங்க உங்க அம்மா, அவங்க எலும்பு, தசை, இரத்தத்திலேருந்து உருவானவர் நீங்க, உங்களை எதுக்காகவும் அவங்களால வெறுக்க முடியாது, அவங்க பக்கத்துல நீங்க போனாலே தானா எல்லாம் சரியாகிடும், புரியுதா?” என அவள் எடுத்து சொல்ல, நெஞ்சை தட்டிக் கொண்டே தன் பதற்றத்தை குறைத்துக் கொள்ள முயன்றான். அவளும் இன்னும் சில நிமிடங்கள் ஆதரவாக பேசி விட்டே வைத்தாள். மகளுக்கு பிடித்ததாக எல்லாம் சமைத்திருந்த வாசுகி, அவள் வரவும், “ஒழுங்கு மரியாதையா அந்த ஃபோனை தள்ளி வச்சிட்டு உட்கார்டி!” என அதட்டல் போட்டார். “முடியாதும்மா” என வேண்டுமென்றே வம்பு செய்தாள் வேதா. வாசுகி முறைக்க, “என் ஹஸ்பண்ட்கிட்டதானே பேசுறேன், அதுக்கு கூட தடை போடுவியா நீ? நீங்க சொல்லுங்கப்பா” என தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள். சந்திரன் தன் மனைவியையும் மகளையும் அமைதியாக பார்த்திருந்தாரே தவிர, ஏதும் சொல்லவில்லை. “வேலை மெனெக்கெட்டு எல்லாம் சமைச்சு வச்சிருக்கேன், சூடா இருக்கும் போதே சாப்பிட்டிட்டு அப்புறம் அவரோட பேசு, பாட்டு பாடு இல்ல டான்ஸ் கூட ஆடு” என நொடிப்பாக சொன்ன வாசுகி, “கல்யாணம் ஆனதும் பெத்தவளையே அந்நியம் ஆக்கிடுவாளுங்க, அதே என் பையன்னா இப்படி செய்வானா?” என புலம்பினார். அம்மாவின் உரிமையான கோவத்தை ரசித்துக் கொண்டே சாப்பிட்டாள் வேதா. சாப்பிட்டு முடித்திருந்த சந்திரனும் மகளுடனே அமர்ந்திருந்தார். சர்க்கரை மாங்காய் செய்ய பட்டிருக்கவும், “அத்தைக்கு ரொம்ப பிடிக்கும்லம்மா, நான் அத்தை வீட்டுக்கு போய் கொடுத்திட்டு வர்றேன்” என்றாள். “உடனே போகணுமா? சாயந்தரம் டான்னு வந்து உன் புருஷன் உன்னை அழைச்சிட்டு போக போறார், அது வரைக்கும் என்கிட்ட பேசிட்டு இருக்கலாம்ல? உன் அப்பா கடைக்கு கிளம்பறப்ப இதை உன் அத்தைகிட்ட கொடுத்திட்டு போவார்” என்றார் வாசுகி. அத்தையை பார்க்க வேண்டும் போல இருக்கிறது, நானும் அப்பாவுடன் கிளம்புகிறேன் என வேதா உறுதியாக சொல்ல, வாசுகிக்கு முகம் சுண்டி விட்டது. வேதாவுக்கும் அம்மாவை புரிந்ததுதான், ஆனால் இன்று அவள் அத்தையை காண வேண்டியதின் முக்கியத்துவம் உணர்ந்து அம்மாவை சமாதானம் செய்யாமல் அப்படியே விட்டாள். சொன்னது போலவே அப்பாவுடனே புறப்பட்டு விட்டாள். மகளை தங்கையின் வீட்டில் விட்டு கடைக்கு சென்று விட்டார் சந்திரன். மருமகளை எதிர் பார்த்திருக்காத அகல்யா அவளை அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார். குணா இப்போதுதான் உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார், சித்தார்த் மாலையில்தான் வீடு வருவான் என தகவல் சொன்னார் அகல்யா. அத்தையுடன் தனிமை கிட்டியதில் அவளுக்கு அப்பாடா என இருந்தது. அகல்யா இன்னும் சாப்பிட்டிருக்காத காரணத்தால் அவர் சாப்பிடும் வரை சாதாரணமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள் வேதா. தான் எடுத்து வந்திருந்த சர்க்கரை மாங்காயையும் கொடுத்தாள். கொஞ்சமாக மருமகளுக்கு ஊட்டி விட்டுத்தான் தான் சாப்பிட ஆரம்பித்தார் அகல்யா. மகன் சண்டையிட்டு வேதாவை அழைத்து சென்றது அவருக்கு தெரியும். அண்ணனிடம் பேசி அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தார். அவர் மூலமாகவே இவர்கள் கொடைக்கானல் சென்றதும் அவருக்கு தெரிந்திருந்தது. “கொடைக்கானலேருந்து எப்ப வந்தீங்க? ட்ரிப் எப்படி போச்சு?” என விசாரிக்கவும் செய்தார்.